Friday, February 14, 2014

பைக்கில் பறந்த பட்டாம்பூச்சி

"ஒன்னு,ரெண்டு,மூனு" என சுவரில் ஒட்டிய பல்லி போல் மின் கம்பத்தில் ஒட்டிக்கொண்டு சதீஸ் வேகமாக எண்ணத் துவங்கினான்.கண்ணாம்பூச்சி விளையாட்டு தான் இது என சொன்னால் சண்டை பிடிப்பார்கள் அந்த தெருவின் வாண்டுகள்.இந்த ஆட்டத்தின் பெயர்  "ஐஸ் பாய்". பெப்பே,7ஸ்டோன் , கவட்டை,கரண்ட் என மாறிக் கொண்டே இருக்கும் அந்த தெருவின் தற்பொதைய‌ சீசன் இந்த ஜஸ் பாய் தான்.மணி அடித்தார் போல சரியாக 9மணிக்குத் துவங்கும் இவர்களது ஆட்டம், சித்திரை வெயில் கத்திரி கொண்டு உடலை கிழித்தாலும் முடிவதேயில்லை.தாகம்,பசி,சோர்வு என எதுவும் அவர்களை நிறுத்தியதில்லை.

பழகிய இடங்கள் ஐஸ் பாய் விளையாட சுவாரஸ்யமாக இருக்காததால் இடத்தை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள்.புதிதாக கட்டும் கட்டிடங்கள் தான் ஒளிந்துக் கொள்ள தோதுவாக இருக்கும்.சமையல் அறை மாடம்,பரணி,செப்டிக் டாங்க் குழிகள்,மாடிப்படியின் இடுக்கு என விதவிதமாக ரகசிய இடங்கள் நிறைந்திருக்கும்.தேனை தேடி அலையும் வண்டை போல இவர்களும் அவ்வப்போது புது கட்டிடங்களை தேடி அலைவார்கள்.ரொம்ப நாள் கழித்து விளையாட ஒரு ரகளையான வீடு மாட்டியது.அதில் தான் அன்றைய ஆட்டம்அரங்கேறியது.
90 வந்ததும் அதுவரை தாழ்ந்திருந்த சதீஸின் டெசிபெல் மெல்ல மெல்ல உயர்ந்து 100 ல் உச்சத்தை தொட்டது.நூறு என்று முடித்ததும் வேகமாக தனது தேடலைத் துவங்கினான்.ஜஸ் பாய் ஆட்டத்தில் சிம்ம சொப்பணமாக இருப்பது குமாரசாமி தான்.குமாரசாமியால் மாடியிலிருந்து மணல் மேட்டின் மீது எளிதாக குதிக்க முடியும்,மரக்கிளையின் நுனி வரை செல்ல முடியும்.இன்னும் பல வித்தைகள் அவனிடமிருந்ததால் சதீஸ்,  ரகு அல்லது சுரேஷை முதல் ஐஸாகஅடிக்க திட்டம் தீட்டிருந்தான். எங்கு ஒளிந்திருந்தாலும் முதல் ஐஸாக அகப்பட்டு அடிக்கடி மாட்டித்தவிப்பது இவர்கள் தான்.ரகு தான் இந்த முறை எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்பதில் உறதியாக இருந்தான்.மாடிப்படி இடுக்கு அவனது மெல்லிய தேகத்திற்கு ஏற்றதாக இருந்தது.சதீஸ் கொஞ்சம் குண்டு , ஆதலால் அவன் குனிந்து பார்த்தாலும் கண்டுப்பிடிப்பது கடினம் என்று ரகு ஒரு கணக்குப் போட்டிருந்தான்.ரகுவின் கணக்கும்பொய்க்கவில்லை..

“சுரேஷ் 1 ஜஸ்” என்ற சதீஸின் சத்தம் கொள்ளபுரத்திலிருந்து வந்தது.
எப்படியோ தான் தப்பித்ததை நினைத்து மன ஆறுதல் அடைந்தாலும் சுரேஷை காப்பாற்ற வேண்டுமென எண்ணினான்.அதுதான் அந்த ஆட்டத்தின் மரபும் கூட.சதீஸ் கொள்ளைபுரத்திலிருந்து மாடிப்பக்கம் சென்றான்.மாடியில் ஒளிந்திருந்த குமாரசாமி, ஜஸ் அடிக்க தயாராக இருந்தான்.ஆனால் சதீஸ் விவரமாக பாதி படி ஏறியதும் சுவற்றினை பிடித்து தாவி எட்டிப் பார்த்தான்அங்கு ஒளிந்திருந்த குமாரசாமியை "2 ஐஸ் குமாரசாமி " என்றான்.எப்பொழுதும் கடைசி ஐஸாக மாட்டும் குமாரசாமி,ஐஸ் பாய் வரலாரிலே முதல் முறையாகஇரண்டாவது ஐஸாக பிடிப்பட்டான்.குமாரசாமியை பிடித்து விட்டோம்,மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம் என சதிஸ் எண்ணினான்,அவனது எண்ணமும் கைகூடியது.1௦ நபர்களில் ரகுவை தவிர அனைவரும் மாட்டிக்கொண்டனர். ரகுவிற்கு ஐஸ் அடித்துவிடும் ஆர்வம் அதிகமானது,இத்தனை நாட்கள் ஐஸ் பாய் விளையாட்டில் தான் சம்பாதிக்காதபெயரினை எடுக்க ஓர் அறிய வாய்ப்பாக கருதினான்.தனது ஜம்புலங்களையும் ஐஸ் அடிப்பதற்காக தயார் செய்தான்.

சில காலடி சப்தங்கள் கேட்டது , வருவது யாரென தெரியவில்லை.வருவது யாராக இருந்தாலும் சற்று தன்னை கடக்கட்டும் என்றிருந்தான்.கடந்தது சதீஸ் இல்லை மற்றொரு நண்பன் பாலு தான் அது.ரகுவிற்கு புழுக்கத்தில் வியர்த்துக் கொட்டியது.ஒரு கல்லை எடுத்து பாலு மீது வீசினான்.பாலுவிடம் சதீஸின்இடம்,பொருள்,ஏவல் பற்றின தகவல்களை செய்கையில் கேட்டு பரிமாறிக் கொண்டான்.பாலு,சதீஸின் வருகையை உறுதி செய்துவிட்டு ஏதும் தெரியாதது போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.சதீஸும் , ரகுதானே என கொஞ்சம் மேம்போக்காக தான் தேடினான், சதீஸ் அருகில் வர ரகு தயார் நிலையில் இருந்தான்.சதீஸ் டக்கென படிகளின் எதிர்ப்பக்கம் உள்ள ஓர் மறைவில் தேடினான்.தக்க தருணம் இது தான் என வேகமாக வெளியே வர முயன்றான்.அவ்வளவு நேரம் குனிந்திருந்த அவன் நிமிர்ந்து எழுந்தான்.

தனது தலை எதிலோ முட்டியதை உணர்ந்தான் ரகு.சத்தம் கேட்டதும் சதீஸ் ,மற்றும் அனைவரும் அந்த வேங்கையின் திடீர் பாய்ச்சலின் பக்கம் திரும்பினர்.

"ரகு 1௦ ஐஸ் " என வாயெடுத்த சதீஸ் .. "அவனை பிடிங்க டா விழுந்திர போறான் " என்று கத்திக் கொண்டே ஒடி வந்தான்.
ரகுவின் ஊதா நிற சட்டை மெல்ல கருமையாகிக் கொண்டிருந்தது.மாதுளையை உடைக்கும் போது வரும் சாரைப் போல் அவன் தலையிலிருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.முதலுதவி என்ற வார்த்தையை கேட்டிராத அந்த பிஞ்சுகள் அனைத்தும் முதலுதவி செய்துக் கொண்டிருந்தன.ஒருவன் ரகுவின் சட்டையை கழட்டினான்,இன்னொருவன் தனது சட்டையால் ரகுவிற்கு கட்டுப்போட முயற்சித்துக் கொண்டிருந்தான்.ரத்தம் படிந்த சட்டையை பார்த்ததிலிருந்து பாலுவிற்கு மயக்கம் வருவது போலிருந்தது.பாலு அந்த சட்டையை எடுத்துக் கொண்டு ரகுவின் வீட்டிற்கு ஓட்டம் பிடித்தான்.

வீட்டின் வேலைகளை முடித்து விட்டு கொள்ளபுரத்தின் வழியே பிள்ளைகள் எப்போதும் விளையாடும் மைதானத்தை எட்டிப் பார்த்தாள்...அங்கு யாரையும் காணவில்லை..


"இன்னைக்கு எங்க போச்சுங்க எல்லாம்..க்ரவுண்ட்ல யாரையும் காணும் " என்று பக்கத்து வீட்டு சுரேஷ் அம்மாவிடம் கேட்டாள் ரகுவின் அம்மா.


"தெரியலையங்க..பசங்களோட பெரிய தொல்லையா போச்சு..ஒரு இடத்துல விளையாடுதுங்களா ? இனிமே காலையில போறப்பவே இடத்த கேட்டிடனும்.."என்று புலம்பிவிட்டு தங்களது அன்றாட கூட்டத்தை துவங்க ஆயத்தம் ஆனார்கள்.

அப்பொழுது பாலு அறக்க பறக்க ஓடி வந்து..

"அத்தை விளையாடும் போது ரகுவிற்கு அடிப்பட்டுச்சு ..நீங்க உடனே வாங்க"என்றான்...அவன் கையிலிருந்த சட்டையை பார்த்தவுடன்..

"அய்யோ...அய்யோ" என பதட்டத்தில் கத்தினாள் ரகுவின் அம்மா..

அக்கம் பக்கமிருந்த அனைத்து அம்மாக்களும் கூடிவிட்டனர்.பாலு அழுது கொண்டே அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். ரகுவை தன் மடியில் போட்டுக் கொண்டு...
"என்னைப் பாருடா.." என அவனிடம் அழுதுக் கொண்டே ஏதோ உளறினாள்.அவளது கேள்விக்கும் ரகுவும் பயத்துடன் பதிலளித்தான்.

அதற்குள் மெயின் ரோட்டிலுள்ள E.B ஆபிஸிக்கு சென்று தனது கணவரை அழைத்து வந்தார் சுரேஷின் அம்மா.ரகு அவரை பார்த்தவுடன்

"ஒண்ணுமில்லை மாமா ..லேசா தான் அடிப்பட்டுச்சு" என்றான்.

அவர் ஆபிஸிலிருந்து வண்டி ஒன்றை கடன் வாங்கி வந்திருந்தார் .ரகுவை பின்னால் உட்கார வைத்து,அவனுக்கு பின்னால் சுரேஷை அமரவைத்து மெடிக்கல் நோக்கி கிளம்பினார்.வண்டி தெருவின் முனையை தாண்டியதும் ஐஸ் பாய் விளையாடிய மற்ற அனைவரையும் அவர்களது அன்னைமார்கள் துரத்திக் கொண்டிருந்தனர்.விதவிதமான அடிகளும் , திட்டுகளும் விழுந்தது.துடப்பம் , தோசை கரண்டி,ஸ்கேல் , மரக்கம்பு என தேர்விற்குப் பின் வேலையில்லாமல் இருந்த அனைத்து ஆயுதங்களுக்கும் அன்று திகட்ட திகட்ட வேலை கொடுத்தனர்.அடுத்த 2 மணி நேரத்திற்கு பிள்ளைகளின் அழு குரல்கள் அந்த தெருவை நிரப்பியது.ரகுவின் சட்டையை பார்த்து அவனது அம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.

இங்கு இப்படி இருக்க , வண்டியில் சென்ற ரகு ; தலையில் தையல் போடுவதற்காக மருத்துவமனையில் காத்துக் கொண்டிருந்தான்.மருத்துவமனைக்கு நுழையும் போது OP யில் மருத்துவர் இருந்ததால் முதல் உதவி செய்துவிட்டு தையல் போட காத்திருக்க செய்தார்.தலையில் வலி குறைந்திருந்தது.சுரேஷ் அவனது கையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.வண்டியில் வரும் வழியெல்லாம் 

“பத்திரமா பிடிச்ச்சிக்கோ “ “மயக்கம் வர மாதிரி இருந்தா சொல்லு “ இந்த இரண்டையும் சுரேஷின் தந்தை சொல்லிக்கொண்டே   இருந்தார்.

சுரேஷிடமும்  “அவனை நல்லா பிடிச்சிக்கோ “ என்று பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருந்தார்.


கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும் என்றவுடன் சாப்பிட ஏதாவது வாங்கிவரவெளியே சென்றிருந்தார்.மருத்துவமனையின் வாடையும் , அந்த சுழலும் கொஞ்சம் பயம் தருவதாக இருந்தது.மக்கள் அங்கும் இங்குமாக நடந்துக்கொண்டிருந்தனர்.


சுரேஷ் “அங்க பாருடா... “ என ஏதாவது காட்டி பேசுவான்.அவனுக்கு தெரிஞ்ச திரைப்பட மருத்துவ காட்சிகளை சொந்த பாணியில் சொல்லுவான்.நடுவே“வலிக்குதா ? “ என கேட்பான். ஆனால் , ரகுவின் சிந்தனை முழுவதும் தற்பொழுது வந்த தனது முதல் பைக் பயணத்தை பற்றியே இருந்தது .அவன் அன்று வரை ஸ்டான்ட் போட்ட வண்டியில் ஏறி வாயால் “ட்ரூரூ” என்று கூறி தான் கற்பனையில் பயணித்திருக்கிறான்.ரகுவின் அப்பாவிடம் சைக்கிள் மட்டும் தான் உள்ளது , அவனது தாத்தாவிடம் கூட சைக்கிள் மட்டும் தான்.வண்டியில் செல்வதை பற்றி பல நாள் யோசித்திருக்கிறான்.ஒரு முறை அம்மாவிடம் கூட“அப்பா வண்டி எப்ப மா வாங்குவாங்க “ என்று கேட்டிருக்கிறான்.ரகுவின் அப்பாவிற்கு வண்டி ஓட்ட தெரியாததால் இப்போதைக்கு அது நடக்காது என அறிந்திருந்தான்.சுரேஷின் அப்பாவிடமும் வண்டியில்லை ஆனால் அவருக்கு வண்டி ஓட்ட தெரியும்.ஓரிருமுறை நண்பரின் வண்டியில் வீட்டிற்கு மதிய இடைவேளையில் வருவார்;அப்போது சுரேஷை ஒரு ரவுண்டு அழைத்துச்செல்வார்.ரகு இதை அவ்வப்போது கவனித்திருக்கிறான்.ஒரு நாள் சுரேஷ் வீட்டிற்கு சென்று தானும் அவனுடன் செல்லலாம் என்று நினைத்திருந்தான்.அவன் நினைத்தது  இன்று கைகூடியது அவனுக்கு மகிழ்வாக இருந்தது.வண்டியில் வரும் போது காற்றில் அவன் முடி ஆடியது , அடிப்பட்ட வலிக்கு இதமாக இருந்தது.துணியால் கட்டு போடப்பட்டிருந்ததால் ; அங்கும் இங்குமாக தலையில் அரிக்கச் செய்ததது.வண்டியை அவன் கெட்டியமாக பிடித்திருந்ததால் என்ன செய்வதென்று தவித்தான்.கையை எடுத்தால் விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.


திரும்பி செல்லும் போது எப்படி பிடிக்க வேண்டும் , வரும் போது சரியாக அமராததால் சரிக்கிக்கொண்டே போவதாக உணர்ந்தான் ஆதலால் சரியாக ஏறும்போதே உட்கார வேண்டும் .என வீடு திரும்புவதை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். அவனது முதல் பைக் பயண  அனுபவத்தின் அடிப்படையில் தனது கனவை வடிவமைத்துக் கொண்டிருந்தான்.சுரேஷின் அப்பா கையில் பிஸ்கட்டடுடன் நுழைந்தார்,அவருடன் ரகுவின் அப்பாவும் வந்தார்.ரகுவின் அப்பாவும் E.B யில் தான் வேலை பார்க்கிறார்.ஆனால் வேறு டிவிஷன் ; சுரேஷ் அப்பா, அவருக்கு எப்படியாவது தகவல் கொடுக்கும்படியாகவும் உடனே மெடிக்கலுக்கு வரும்படியாகவும் அலுவலக நண்பர்களிடம் சொல்லி வந்தார்.


தந்தையை பார்த்தவுடன் ரகுவிற்கு பயத்தில் கண்கள் கலங்கின ; அப்பா திட்டுவாரென எதிர்பார்த்தான் அனால் அவர் அவனது காயத்தின் வலியை பற்றியே பேசினார்.அவனுக்கு அப்பாவின் வார்த்தைகள் தைரியத்தை அதிகரித்தது.தையல் போடும் போது எந்தவித அழுகையும் இன்றி அமர்ந்திருந்தான் அவ்வப்போது “ஸ்”என்ற சத்தம் மட்டும் தந்தான்.மருத்துவர் தையல் போட்டுவிட்டு , அவன் முகத்தை அணைத்தவாறு வெள்ளை நிறத்தில் கட்டினை போட்டார்.


“வேற கலர் இருக்கா “என்று கேட்கலாமா என யோசித்து முடிப்பதற்க்குள்


“வீட்டில அடங்கவே மாட்டேங்கிறாங்க நீங்களாச்சும் சொல்லுங்க டாக்டர் “ என்று தகப்பன்மார்களின் கோரிக்கைகளை ஏற்று.


“இனிமே ஜாக்கிறதையா விளையாடனும் “ என்று துவங்கி அவர் பாட்டிற்கு அறிவுரை மலர்களை பிள்ளைகளின் மேல் அள்ளி வீசினார்..இதற்கு அவர் போட்ட ஊசியின்  வலியே தேவலை என தோன்றியது.ரகுவை பார்த்து சுரேஷ்“சரியான ப்ளேடு்”  என கையை கழுத்துப்பக்கம் வைத்து அறுப்பது போல சைகை காட்டினான்.ரகுவிற்கு சுரேஷின் திருட்டுதனமான அந்த சைகை  சிரிப்பு மூட்டியது,இருந்தும் அடக்கிக் கொண்டான்.


ஒரு வழியாக சிறிது நேரத்தில் விடைபெற்று  மருத்துவமனையை விட்டு அனைவரும் வெளியே வர,அப்பாவின் சைக்ககிளை பார்த்ததும் ரகுவிற்குபுரிந்தது .தனது பைக் கனவு நிறைவேறாது என்று. அதுவரை அவனுக்கு உணராத வலிகள் யாவும் அவனை வாட்டியது.உடலாலும் மனதாலும் சோர்ந்து போனான்.


“ராஜு நான் பசங்கள கூட்டிட்டு போறேன்..நீ சைக்கிள்ள பின்னாடி வா" என சுரேஷின் அப்பா ரகுவின் அப்பாவை பார்த்து சொன்னார்.

பைக்கின் உறுமல் சத்தம் துவங்கியது....


காற்றில் சிறகை விரித்து இரு பட்டாம்புச்சிகள் பறந்தன அதில் ஒன்று தலையில் சிங் போல கட்டுப் போட்டிருந்தது.

Thursday, February 13, 2014

1729

(சஞ்சிகை இதழில் சில மாற்றங்களுடன் இந்தக் கட்டுரை வெளியானது)

”1729” இந்த நம்பர் பற்றித் தெரியுமா உங்களுக்கு.உடனே “கேட்டதும் கொடுப்பவனே...” என்று கூகுளாண்டவரிடம் போய் நிற்காதீங்க.கொஞ்சம் யோசிச்சுத்தான் பாருங்களேன்... . . 
. 
”இந்த நம்பர்ல ஒன்னும் சுவாரஸ்யம் இருப்பதா தெரியலைல” .இப்படித்தாங்க அவரும் நம்ம ராம் கிட்ட கேட்கிறவரைக்கும் நினைச்சாரு. 

லண்டன் நகரின் குளிரும், அந்நகரில் கிடைத்த உணவு வகைகளும் ராமிற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்த ஒவ்வாமை அவரை மருத்துவமனையில் நோயாளியாகப் படுக்க வைத்தது. அவரைக் காண டாக்சியில் சென்று கொண்டிருந்தார் அந்த ஆசாமி. மருத்துவமனை வாசலில் இறங்கியதும், தான் வந்த டாக்ஸியின் எண்ணை பார்த்தார். 1729 என்று இருந்தது. அந்த எண்ணை வைத்து ராமை சீண்டிப்பார்க்கலாம் என்று அவருக்கு ஒரு எண்ணம் அவர் மனதில் உதித்தது. ராமை உள்ளே சென்று பார்த்து, நலன் விசாரிப்பை முடித்துவிட்டு, எண்களை பற்றி பேச துவங்கினார். 1729 என்ற எண்ணை பற்றி ஆரம்பித்தார்.

“இந்த நம்பர்ல ஒன்னும் சுவாரஸ்யம் இருக்கிற மாதிரி தெரியல.இது ஒரு டல் நம்பர் போலத் தான் இருக்கு” 

எண்களைப் பற்றிப் பேசியதும் சோர்ந்த உடல் சுறுசுறுப்பானது.பிள்ளையின் பெருமையை பேசி பூரிப்படையும் தகப்பனைப் போல் , 1729 எண்ணின் பெருமைகளை பாடினார் ராம்.

”யார் சொன்னது?அந்த நம்பரில் ஒரு சின்னச் சூட்சமம் இருக்கு” என்று அதற்கான விளக்கத்தையும் சொன்னார்... 

அவரது விளக்கம்... [இரண்டு , மூன்று தடவை பொறுமையாக படிக்கவும்] 

”it is the smallest number expressible as the sum of two cubes in two different ways” 

1729 = 13 + 123 = 93 + 103. 

a3 + b3 = x3 + y3

இந்தக் condition பூர்த்தியானால் நமக்கு கிடைக்கும் சிறிய ( முதல் எண் ) எண் 1729.

அவரோட இந்தக் கண்டுப்பிடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி என்ன தெரியுமா ? பொதுவாக எண்கள் தான் ஒரு மனிதனனின் அடையாளமாக இருக்கும்.பள்ளி,கல்லூரியில் ஏன் அலுவலகத்தில் கூட எண்கள் தான் நமது அடையாளம்.ஆனால் 1729 என்ற எண்ணிற்கு ஒரு நபரின் பெயரை அடையாளமாகச் சூட்டியிருக்கிறார்கள்.ஆமாம் ,அந்த எண்ணின் பெயர் ”ராமானுஜன் எண்”. 

ராமானுஜன் பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 22) , இணையத்தில் சில பகிர்வுகள் வந்தது.அப்பொழுது உலாவியதில் கிடைத்த தகவல்தான் இது.தகவல் எனக்குப் புதிதாக இருந்தது.என்னை மாதிரி சிலர் இருப்பார்கள் என்ற நோக்கத்துடனே இதைப் பகிர்கிறேன்.அவரை பற்றின புத்தகங்களை தேடியபோது கிடைத்த புத்தகங்கள் தான் இவை.

ராமானுஜம் 125 - ஆயிஷா நடராஜன்
சிறுவர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் - 125 பாயிண்ட்களாக அவரது வாழ்வை கொடுத்திருக்கிறார்.ஒரு புத்தகத்துடனான உறவு அத்துடன் முடிவதில்லை,அது நேராகவோ அல்லது மறைமுகமாவோ மற்றொரு புத்தகத்தை கைக்காட்டிவிடுகிறது.அப்படித் தான் முடிவில் ராமனுஜம் பற்றின சில ஆங்கிலப் புத்தகங்களின் பெயரையும் கொடுத்திருக்கிறார். 

  • The Man who knew Infinity
  • The Indian Clerk
  • The First Class man(Drama)
  • A disappearing Number
  • Srinivasa Ramanujan and his Number

கணித மேதை ராமானுஜன் - பத்ரி
ராமானுஜன் வாழ்வினை சுருக்கமாகவும்,முழுவதுமாகவும்,சுவாரஸ்யமாகவும் சொல்கிறது இந்த புத்தகம்.நமது கல்வித் திட்டம் , வறுமை , கால்கட்டு போட நினைக்கும் தாய் என template வாழிவின் சிக்கல்களை மீறி எப்படி அவரது திறமைகள் வெளிவந்தது என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் புத்தகம். Infinity மீது அவருக்கு தீரா மோகம் இருந்தது.வறுமையும் , குடும்ப பொறுப்புக்களும் அவரை அவ்வப்போது துறத்துவதும்.அதனை அவர் மீட்பதுமாகவே அவரது வாழ்கை செல்கிறது.லண்டனிலிருந்து அவருக்கு அழைப்பு வரும்போதுக் கூட கடல் தாண்டி செல்வது சாமி குற்றம் என்று தடை வருகிறது.கோவிலில் உத்தரவு கிடைத்தப் பின்னரே அவரது பயணம் துவங்குகிறது.நமது நாட்டில் பட்டம் பெற முடியாமல் தவித்த அவருக்கு லண்டனில் உயரிய பட்டம் கிடைக்கிறது என்பதை நாம் வாசிக்கும் போது , நமது கல்வி சட்டங்கள் மீது வெறுப்பே வருகிறது.

அவரது கண்டுப்பிடிப்புகள் நமக்கு புரியாமல் போகலாம் ஆனால் அவரது தேடலும்,ஆற்றலும் நமக்கு தெள்ளத் தெளிவாக புரிகிறது.இது போன்று நமது மண்ணில் வாழ்ந்த மாமேதைகளை பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் ஒருவித சுகத்தை அனுபவிக்கிறது.ஹீரோக்களாக நாம் கொண்டாட வேண்டியது இவர்களை தானே.

 
எனது ஊர் தஞ்சை என்ற போதிலும் 2 வருடத்திற்கு முன்பு தான் கும்பகோணத்திலுள்ள ராமனுஜன் இல்லத்திற்கு சென்றேன்.வெளியே மழை சோவென பெய்ததுக் கொண்டிருந்தது , வாசலில் செக்யூரிட்டி தனது கைபேசியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.உள்ளே ராமானுஜத்தின் நினைவுகள் தாங்கிய பொருட்கள் சில அவர் துளைத்த இரவிற்கும் சேர்த்து உறங்கிக் கொண்டிருந்தது.நான் மெளனமாக பார்த்துவிட்டு மழையில் நனைந்தவாரே திரும்பினேன்.












Tuesday, February 4, 2014

வாமா மின்னல்..

சிலரது எழுத்துக்கள் நம்முடன் நெருங்கிவிடுகின்றன.அப்படி அடிக்கடி என்னுடன் நெருக்கத்தில் இருப்பது எஸ்.ரா வின் எழுத்துக்கள்.அவரது துணையெழுத்து,சிறிது வெளிச்சம்,தேசாந்திரி புத்தகங்கள் என்னுடன் எளிமையுடன் பேசுவதை உணர முடிகின்றது.அப்படி என்னுடன் தினம் பேசுவது வா.மணிகண்டனின் நிசப்தம் தளத்தின் எழுத்துக்கள்.பி.இ முடித்துவிட்டு மென்பொருள் துறையில் வேலை,பெங்களூரில் வசிக்கும் தமிழர்,தினம் 30-40 கி.மி பயணம்,நகரத்தின் cost of living பற்றினப் புரிதல் எனச் சில common factors.அவரது எழுத்துகளும் இந்த common factors களை பேசுவதால் அந்த நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம்.கடந்த ஒரு வருடமாக அவரது தளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்,அதனால் அவரது லிண்ஷேலோகன் w/oமாரியப்பன் புத்தகத்தின் அறிவிப்பு என்னுள் எதிர்பார்பை ஏற்படுத்திவிட்டது.அந்த எதிர்பார்ப்பு எத்தனை சதவீதம் பூர்த்தியானது என்பதே இந்தப் பதிவு.

சிறு சிறு கதைகளாக 25 கதைகள் , ஒவ்வொரு கதைகளும் 2-3 பக்கங்களே.”வாமா மின்னல்..” என்பதை மனதில் வைத்துத் தான் மின்னல் கதைகள் என்று sub-title வைத்தாரோ என்னவோ..? கதை துவங்குவதும் , நம்மைக் கடந்து செல்வதும், முடிவதும் மின்னல் போல இருக்கிறது.இந்த மின்னல் கதைகள் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் படிக்க ஏதுவாக இருக்கும்.அப்போ வாசிப்புப் பழக்கம் இருக்கிறவர்களுக்கு எப்படி இருக்கும்னு நீங்க கேட்கிறது என் காதில் விழாமலில்லை…

சிறுகதைகள் வாசிக்கும் போது ,அந்தக் கதாப்பாத்திரங்கள் நம்முடன் பயணிப்பது போன்ற அனுபவம் இதில் சற்று குறைவாக எனக்குத் தோன்றியது.எனது பள்ளி,கல்லூரி நினைவுகளை தூண்டியபோதும் அத்துடன் பயணம் செய்யப் போதுமான இடம் இல்லாது போலத் தோன்றியது.

படித்து முடித்த இரு தினங்கள் ஆகிறது ,தற்பொழுது நினைவில் இருக்கும் கதைகள் என்று சொல்வதை விட மனதைத் தொட்ட சில கதைகள் என்று சொன்னால் அவை சரோஜா,துலுக்கன்,நீதானே என் பொன் வசந்தம், லிண்ஷேலோகன் w/o மாரியப்பன்,காமத் துளி (இன்னும் இருக்கு..எனக்கு பிடித்த முதல் 5 மட்டும் இவை) போன்ற கதைகள்.என்னிடம் பெஸ்ட் ஆஃப் மின்னல் கதையைத் தேர்வு செய்யச் சொன்னால்,நான் தேர்வு செய்வது ”சில்க் ஸ்மிதா” கதையாகத் தான் இருக்கும்.

2-3 கதைகள் சுவாரஸ்யமாக எனக்குத் தோன்றவில்லை.குறிப்பாக என்கவுண்டர் கதை.லூஸ் பால்ல ஏன் மனுஷன் 6 அடிக்காம விட்டாருன்னு தோனிச்சு.ஆனால் அதிகப்பட்சக் கதைகள் பட்டயைக் கிளப்பியது.அதுவும் கடைசிப் பத்துக் கதைகளில் எழுத்தின் முதிர்ச்சியை உணர முடிந்தது.

ஆகமொத்தம் எனது எதிர்பார்ப்பு 80 சதவிதம் பூர்த்தியானது என்று சொல்வேன்.

கடைசியாக: கதைகளின் தலைப்பை மட்டும் படிச்சுப் பாருங்க. ஏதோ பசங்களை மட்டும் டார்கெட் செய்வது போல இருக்கு.மணி சார் அப்படி ஏதாச்சும் யோசிச்சு வைச்சிங்களா..?


Disclaimer : இவை அனைத்தும் ஒரு வாசகனாக எனது கருத்து மட்டுமே.நீங்க இந்த புக்கை படிக்கும் போது முரன்படலாம்.(நிசப்தம் வாசகர் சங்கம்னு ஒன்னு இருக்காம்,அவுங்களுக்காக இது)


Monday, February 3, 2014

உள்ளேன் ஐயா

இந்த வாசிப்பு அனுபவமிருக்கே,அது பல நேரங்களில் வாழ்வில் நடந்த சம்பவங்கள்,பள்ளி/கல்லூரி நினைவுகள்,சந்தித்த‌ சில மனிதர்கள் எனச் சும்மா இருந்த மனதை கிள்ளி விட்டுச் சென்றுவிடும்.அடுத்த சில தினங்களுக்கு அதே நினைப்பாகவே இருக்கும்.வாழ்வின் கருப்புப் பக்கங்களாக இல்லாத பட்சத்தில் அஃது ஒரு சுக அனுபவமே,அதிலும் குறிப்பிடத்தக்கது பள்ளி ஆசிரியர்களின் நினைவு என்பது.அப்படித் தற்பொழுது என் நினைவில் அடிக்கடி வந்து "உள்ளேன் ஐயா" என்று சொல்லிக் கொண்டிருப்பவர்...என் 11 & 12 ம் வகுப்புத் தமிழ் ஐயா சுப்பிரமணி அவர்கள்.ஆசிரியர்களில் சிலருக்கு மட்டும் மரியாதை என்பது எந்தவிதக் கட்டாயமுமின்றி மாணவர்களிடமிருந்து கிடைக்கும்,அப்படிப்பட்ட ஆசிரியர் தான் இவர்.நான் அவர் மீது கொண்டிருந்த மரியாதைக்குக் காரணம் ,அவரது திருக்குறள் வகுப்புத் தான்.

திருக்குறளுக்கு மனப்பாடப் பகுதியில் வெறும் 4 மதிப்பெண்கள்,100ல் 4 குறைந்தால் பெரிய பாதிப்பில்லை,அதிக மதிப்பெண் கேள்வியாக வந்தாலும் choice ல் விட்டுவிடலாம்.இந்த இரு எண்ணங்களும் எனது கண்களை ஒரு போதும் திருக்குறள் பக்கம் செல்ல அனுமதித்ததில்லை.கவிதாலயா விளம்பரமும், பேருந்துப் பலகையிலும் மற்றும் வகுப்பில் கட்டாயத்தின் பேரிலும் திருக்குறளை வாசித்ததோடு சரி.நானாக ஒரு போதும் விருப்பத்தோடு வாசித்ததில்லை.இதற்குக் காரணம் , ஒன்று நான் . மற்றப்படி எல்லாப் பாவமும் வெவ்வேறு காலக்கட்டத்தில் எனக்குப் பாடமெடுத்த தமிழ் ஆசிரியர்களையேச் சேரும்.அவர்களைப் பொருத்தவரை புரிகிறதோ இல்லையோ மாணவன் ஒருவனை எழுப்பிவிட்டு ஒரு முறை குறளை வாசிக்கச் சொல்லிவிட்டால்,திருக்குறளை portionல் முடித்துவிட்டதாக டிக் போட்டுவிடுவார்கள்.திருக்குறளுக்கு மட்டுமல்ல மொத்த செய்யுள் பகுதிக்கும் இதே நிலைத் தான்.

11ம் வகுப்புத் தஞ்சை தொன்பாஸ்கோ பள்ளியில்(மெட்ரிக்) சேர்ந்திருந்தேன்,அங்கு தமிழ் ஐயா சுப்பிரமணி அவர்கள்.ஆசிரியராக அவரது பலம் என்று சொன்னால் , அவரது தமிழ் உச்சரிப்பும் , அவர் நடத்தும் செய்யுள் பகுதியும் தான்.குறிப்பாகத் திருக்குறளை அவர் நடத்திய வித‌ம் இன்றும் என் நினைவிலிருக்கிறது.வகுப்பு ஒரு குருங்கதையுடன் துவங்கும் , அதிகப்பட்சம் ராஜா கதையாக இருக்கும்,கதையின் முடிவில் விளக்கத்துடன் திருக்குறளை மேற்கோள் காட்டுவார்.இது தான் அவரது பாணி.திருக்குறள் வகுப்பு மட்டும் இரு வாரங்களுக்குக் குறையாமல் செல்லும்.இப்படி என் நினைவுகள் தற்பொழுது திருக்குறள் வகுப்பின் பக்கம் உலாத்திக் கொண்டிருப்பதற்கு காரணமாக இருந்த்து நாமக்கல் கவிஞரின் "என் கதை"(இது ஓர் சுயசரிதை புத்தகம்) புத்தகம் தான்.சுயசரிதை புத்தகம் என்றதும் மொக்கையாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றிய புத்தகம் இது.ஒரு சில பக்கங்களைத் தவிர சுவாரஸ்யங்கள் நிறைந்த புத்தகம் இது.அதில் ஒரு பகுதி அவர் எழுதிய "திருக்குறள் புது உரை" புத்தகம் பற்றி வரும்.அதை எழுதிட வித்தாக அமைந்த நிகழ்வை பகிர்ந்திருப்பார்.கவிஞர் சிறையிலிருந்த காலத்தில் ஏதாவது உபயோகமாக நேரத்தை செலவு செய்யலாம் எனத் தோன்றியுள்ளது.உடனே திருக்குறள் பற்றிப் பேசலாம் என முடிவெடுக்கிறார்.அது திருக்குறள் வகுப்பாக மாறுகிறது. விளக்கங்கள் தர அவருக்கு உறுதுனையாக இருந்தது பரிமேலழகர் உரை மட்டுமே.ஆனால் சில குறளுக்கான விளக்கங்களில் லாஜிக் இடிப்பதாகத் தோன்றியுள்ளது.அப்படி லாஜிக் இடித்த குறளில் இதுவும் ஒன்று…

“உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு”

இதற்கு அதிலிருந்த விளக்கம்(சுருக்கமாக இருவரியில் நான் எழுதியது இது),

“அசைவம் உண்டால் ஜீவராசிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் ,நரகம் உண்டவனை விழுங்கி வாயை திறவாது மூடிக்கொள்ளும்”

இடிப்பட்ட லாஜிக் : பிற உயிரை கொல்வது ஒருவனின் ஆன்ம வளர்ச்சியைத் தடுக்கும் என்று சொல்லாமல் ஜீவராசின்னின் எண்ணிக்கை பற்றிக் குறிப்பிட்டிருந்த்தும் , “எப்படிப்பட்ட பாவம் செய்தவனுக்கும் பிராயச்சித்தம் உண்டு” என்ற வாதமும் இரண்டாம் வரியில் அடிப்பட்டுப் போவதாக அவருக்குத்  தோன்றியுள்ளது.திருவள்ளுவர் வேறு மாதிரியும் சொல்லிருக்க வாய்ப்புள்ளது என்ற சிந்தனையில் அடிப்படையில் அவர் எழுதிய புது உரை..

உண்ணாமை உள்ள துயிர்நிலை

புலால் உண்ணுவதால் கிடைக்கும் சத்து மற்ற உணவிலும்(வெஜ்) உள்ளது.உடல் நலனுக்காகப் புலால் உண்ணுதல் தேவையற்றது.

ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு
அளறு – நகரம்

நரகம் கூடப் பாவம் செய்தவனுடைய ஆன்மாவை உள்ளேவிடக் கதவு திறக்குமே தவிர உடலுக்காக அல்ல.நரகமே உயிர் இல்லாத உடலை உள்ளே அனுமதிக்காத போது ஆறு அறிவு படைத்த மனிதன் ஏன் அனுமதிக்க வேண்டும்.

இப்படி அவர் புரியாத குறட்களை விளக்கங்கள் தேட ஆரம்பித்து , முடிவில் அது அனைத்து உரைகளுடன் புத்தகமாக வருகிறது.இப்படி திருக்குறள் உரை பற்றி அவரது அனுபங்களை வாசிக்கும் போது மெல்ல மெல்ல எனது நினைவில் சுப்பிரமணி ஐயா நுழைந்துக்கொண்டார்.

நான் அறிந்துப் பள்ளி வகுப்பில் மாணவர்கள் தமிழுக்குக் குறிப்பெடுத்தது அவரது வகுப்பில் மட்டும் தான்.எனது 11,12ம் வகுப்பு தமிழ் புத்தகங்களில்;செய்யுள் பகுதியில் கதைகளின் குறிப்புகள் நிறைந்திருக்கும்.12வது படிக்கும் போதே அவர் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார்.நல்ல வேளை அவர் செல்வதற்குள் செய்யுள் பகுதியை முழுவதுமாக முடிந்திருந்தார்.அவரது வகுப்புக்கள் என்ன பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும் என நீங்கள் கேட்டால் என்னிடம் இருக்கும் பதில் இது தான்.12வது பொதுத்தேர்வில் நான் எழுதிய 16 மதிப்பெண் கேள்வி திருக்குறள் பற்றியது தான்.கோனார் உரையில் இல்லாத வரிகள் அவை.இதை பெரும் புரட்சி என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை.ஆனால் நான் அறியாமலே என்னுள் ஏற்பட்ட ஓரு நல்ல மாற்றம் எனச் சொல்வேன்.


Thursday, October 17, 2013

பண்டிகை கொண்டாட்டம்

சஞ்சிகை இதழுக்காக எழுதியது : http://goo.gl/wHwwBW
பண்டிகை கொண்டாட்டம் என்றால் தீபாவளியும் பொங்கலும் தான். தீபாவளி என்றதும் மனம் ஒரு மாதத்திற்கு முன்னமே அதற்கான கனவுகளை காண துவங்கிவிடுவது வழக்கம். புத்தாடை , பலகாரம் , பட்டாசு என ஒவ்வொன்றிற்கும் நாட்கள் குறிக்கப்படும் போது வீட்டிலுள்ள அனைவரும் பண்டிகையின் வாசத்தை நுகர துவங்கிவிடுகின்ற‌னர். யார் வீட்டில் முதல் சரம் வெடிப்பது, பட்டாசு வெடித்த‌ குப்பைகள் யார் வீட்டில் அதிகம் உள்ளது என சிறுவர்கள் மனமும்; புதிய திரைப்படம், நண்பர்கள் வட்டமென இளைஞர்களின் மனமும் கொண்டாட்டங்களில் மூழ்கி விடும். அன்றைய தினம் அதிகாலை முதல் இரவு வரை வீட்டில் நடைபெறும் ஒவ்வொன்றும் அழகிய தருணங்கள். இது போன்ற அழகிய தருணங்களை தரும் நாட்களுக்காக தான் வருடத்தின் அனைத்து நாட்களும் படைக்கப் பட்டதென சில நேரம் மனதினுள் பிம்பங்கள் தோன்றும்.
இதெல்லாம் 10 வருடங்களுக்கு முந்தைய நிலைமை தான். வீட்டிற்கு ஒருவரை மென்பொருள் துறைக்கு நேந்து விட்ட அனைத்து குடும்பங்களின் இன்றைய‌ நில‌மை வேறு. பண்டிகை கொண்டாட்டங்களை மெல்ல மெல்ல தொலைக்காட்சி முன் மறந்தது முந்தைய தலைமுறை என்றால், பண்டிகைகளை முழுவதுமாக தொலைத்துக் கொண்டிருக்கிறது மென்பொருளின் துறையில் இருக்கும் இன்றைய தலைமுறையின் ஒரு பகுதி.
மென்பொருள் துறையில் அதிகமானோர் வெளிநாட்டினர்களுக்காகவே வேலை செய்கின்றனர் குறிப்பாக அமெரிக்காவிற்காக‌. நம்மவர்களின் குறைந்த சம்பளமும் , “around the clock” கிடைக்கும் வேலை நேரமும் அவர்களுக்கு மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. நம்மவர்களின் துணையோடு 24X7 அவர்களுக்கு வேலை நடக்கிறது. மென்பொருள் துறையில் வேலை என்பது கிரிக்கெட் போல தான் , டெஸ்ட் மாட்ச் என்பது முற்றிலும் இல்லாது போயிற்று , அவ்வெப்போது ஒரு நாள் போட்டி இருக்கும் ஆனால் எப்போதும் T20 தான். அனைத்து வேலைகளயும் உடனுக்குடன் முடிப்பதையே அனைவரும் விரும்புகின்றனர். வேகத்திற்கே இங்கு முக்கியத்துவம். வருடத்திற்கு ஒரிரு முறை என்றால் பராவாயில்லை , ஆனால் வருடம் முழுவது இங்கு அதீத ஈடுபாடுகளும், அதீத உழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவன் நாள் ஒன்றிற்கு குறைந்தது 10-11 மணி நேரம் அலுவலகத்தில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் தனது அதிகாரிகளிடம் தகவல்களை பகிர இவை தேவையாக இருக்கிறது. நமக்கு மாலை, அவர்களுக்கு காலை.. நாள் முடிவின் கலைப்பும் நாள் துவக்கத்தின் ஈர்ப்பும் மோதிக்கொள்கிறது. மோதலில் கலைத்தவன் தோற்கிறான். மறுநாள் காலை இங்கு தாமதமாகவே விடிகிறது. காலை உணவும் தவிர்க்கப்படுகிறது. இப்படி ஒரு நாளின் அதிகப்படியான நேரத்தை அலுவலகத்தில் கழித்திட , மீதியை உறக்கத்திலும், போக்குவரத்திலும் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிற‌து. வார நாட்களில் குடும்பம், குழந்தைகள், பொழுதுப்போக்கு, வாசிப்பு என்ற பேச்சுக்குக்கள் செல்லாது போகிறது. அலுவலகத்தில் கிடைக்கும் நேரத்தில் வேண்டுமானால் இனையத்தில் உலா வரலாம். அவ்வளவு தான் முடியும்.
ஒரு நாள் பொழுதில் ஏற்பட்ட இந்த பாதிப்பு மெல்ல நமது பண்டிக்கை கொண்டாட்டங்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. கலாச்சாரம் வேறுபாடுகளை இரு தரப்பில் அறிந்திருந்த போதும் , நமது தியாகிகள் பண்டிகை கொண்டாட்டங்களை அவர்களுக்காக தியாகம் செய்ய துவங்கிவிட்டனர். மதங்கள் தாண்டி கொண்டாடப்பட்ட தீபத்திருநாள் மெல்ல அதன் பொலிவை இழந்துக்கொண்டிருக்கிறது. தீபாவளி என்றதும் ஒரு மாத முன்பே வந்த பண்டிகை உணர்வு இப்பொழுதெல்லாம் தீபாவளி அன்று மட்டும் வந்துப்போகிறது. அமெரிக்காவில் டிசம்பர் மாத இறுதியில் பண்டிக்கை கொண்டாட்டங்கள் அதிகம் இருப்பதால், அப்பொழுது தான் பண்டிகை உணர்வு இங்கு எழுகிறது. சில அலுவலகங்களில் கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளிக்கு விருப்ப விடுமுறை (optional holiday) மட்டுமே தரப்படுகிறது. வருடத்திற்கு மொத்தம் 10 நாட்கள் மட்டுமே பொது விடுமுறை, அதையும் மீறி வரும் பொது விடுமுறை நாட்களை நமது விருப்பபடி இரண்டினை தேர்வு செய்துக் கொள்ளலாம். அதில் தான் தீபாவளி விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது. இந்திய சுதந்திர தினத்தினை விட அமெரிக்க சுதந்திர தினத்தில் தான் இங்கு அதிகமானோர் சுதந்திரமாக (விடுமுறையில்) இருக்கின்றனர். அமெரிக்காவின் thanks giving day பற்றி தெரிகிற நம்மவர்களுக்கு நம்மூர் பண்டிகை தினங்கள் பற்றின விவரங்கள் மறக்க துவங்கி இருக்கிறது.
நமது நேரம் , கலாச்சாரம் , உறக்கம், உணவு முறைகள் என்று நாம் பறிகொடுத்த பட்டியலில் பண்டிக்கை கொண்டாட்டங்களும் சேர்ந்துக்கோன்டுவிட்டது. கொண்டாட்டங்கள் இல்லாத ஒரு வாழ்கை முறையை உருவாக்கிக்கொண்டிருக்கிற‌து. பண்டிகை என்பது நமது அடையாளமாக இல்லாமல் வெறும் நினைவுகளாக மட்டும் மாறிக்கொண்டிருக்கிறது.குற்றம் யாருடையது , தீர்வுகள் என்ன என்பதெல்லாம் அடுத்தக்கட்டம்.முதலில் இது போல நடப்பதை உணர்வோம்.

Friday, August 2, 2013

Walletமீகி

சின்ன புள்ளைல கேட்ட கதை ஒன்னு...

ஒரு ஊருல ஒரு களவாளி பய இருந்தானாம்...அந்த ஊரு பக்கத்துல ஒரு காடு.இவன் அந்த காட்ட தாண்டி யாராச்சும் இராவுல கடந்தா அவுங்கள வழி மறைச்சு கொள்ள அடிப்பான்.ஊர்ல இருக்கிறவங்களுக்கு அடையாளம் தெரியாம இருக்க ..மச்சம் , மீசை , தாடி வைக்கிறதுன்னு நம்ம சினிமா மாதிரி அவனும் ஏதேதோ மாறுவேஷம் போட்டுகிட்டாம்.ஊருல யாராலும் கண்டுப்பிடிக்க முடியல.இவனும் நல்லா கொள்ள அடிச்சு அவன் குடும்பத்த காப்பாத்தி வந்தான்.திடிருனு அந்த ஊர்ல recession டைம் போல...யாருகிட்டையும் துட்டு இல்ல..இவனுக்கும் என்ன பண்றதுனு புரியல...அப்போ அந்த காட்டு வழியா ஒரு சாமியார் க்ராஸ் ஆனாரு.நம்ம சாமியார்களுக்கு தான் recession  கிடையாதே...இவனுக்கு கொஞ்சம் உறுத்தலா இருந்தாலும் வேறு வழியில்லன்னு...அவர மறைச்சு...

"கைல இருக்குறத துட்டை கொடுத்துட்டு அப்படியே ஓடிடு..இல்லாட்டி கொண்டே புடுவேன்னு" மிரட்ட...அந்த சாமியார் லைட்டா சிரிச்சாப்ல..இவனுக்கு ஒன்னுமே புரியல..என்னடா இவன் கத்திய பாத்து பயப்படாம சிரிக்கிறானேன்னு ..அப்படியே shock ஆயிட்டான்.

அப்புறம் அந்த சாமியார் அவன்ட..தம்பி..என்கிட்ட இருக்கிறத கொடுத்துட்றேன் ஆனால் நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுன்னு சொன்னாரு..சரின்னு அவனும் ஒத்துக்கிட்டான்..

"நீ யாருக்காக கொள்ள அடிக்கிற"

"எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும்"

"சரி ..நீ தர காசுல பங்குப் போட்ற உன் குடும்பம் .. உன் பாவத்தில பங்கு போட்டுப்பாங்களா"

"ஏன் மாட்டாங்க..எனக்காக எதுனாலும் செய்வாங்க"

"சரி..இந்த காசை வச்சிக்கோ..வீட்டுக்கு போய்..அவுங்கள்ட கேளு..."

அந்த சாமியார் போகும் போது சும்மா போகாமல் இப்படி கொளுத்திப் போட்டு போனதிலிருந்து..இவனுக்கும் ஏதோ உறுத்தலகாவே இருந்தது...

வீட்டிற்கு போனதும் ..காசை கொடுத்துவிட்டு தனியே பெற்றோரிடமும்,மனைவியிடமு,குழந்தையிடமும் பாவத்தின் ஷேர்ஸ் பற்றி கேட்டான்..

பெற்றோர் : உன்னை கஷ்டப்பட்டு வளத்தோம் ..அதுனால காப்பாத்த வேண்டியது உன் கடமை..

மனைவி : நான் உங்கள நம்மி தான் வந்தேன்..என்னை காப்பாத்திறது தான் புருஷ லட்சணம்..

குழந்தை : அதுக்கு ஒன்னும் புரியல..இருந்த போதும் வளர்ப்பது தந்தையிம் கடமையென தோன்றியது அவனுக்கு..

இப்படி பாவ பங்கு என்றதும் அனைவரும் ஜகா வாங்க..நம்ம ஹீரோவுக்கு மண்டைக்கு மேல ஒரு குண்டு பல்பு எரிந்தது..

ஆதங்கத்தில் கடகடவென ஏதோ எழுதினான்..பார்த்தா அது தான் நம்ம இராமாயணம்..அவன் வேறுயாருமில்ல நம்ம வால்மிகி தான்.

ஆக ..இந்த கதையிலிருந்து என்ன சொல்ல வரேன்னா அந்த காலம் முதல் இந்த காலம் வர ..ஆம்புளைங்க ஒரு ஏ.டி.ம் மிஷின் தான்.

சோ..ஏ.டி.ம் மிஷினா இருங்க..இல்லாடி ஒரு நோட்டும் பேனாவும் வாங்குங்க...walletமீகியா...இல்ல...வால்மீகியா..?

குறிப்பு [Original Story] : http://nadanagopalanayaki.blogspot.in/2005/10/blog-post_22.html