Showing posts with label Short Story. Show all posts
Showing posts with label Short Story. Show all posts

Monday, March 17, 2014

விழித்தும் கலையாத கனவு

அலைச்சலில் படுத்தவுடன் உறங்கிப் போயிருந்தேன்.ஏதோ ஓர் சப்தம் என் உறக்கத்தின் நிசப்தத்தை  சோதித்தது.அருகில் நண்பன் எனது கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் சப்தம் தான் அது.

"ஏதாவதுனா எனக்கு போன் பண்ணுங்க, நான் காலையில‌ 7 மணிக்கு வந்துட்றேன்.அவங்களே சாப்பாடு,மாத்திரை எல்லாம் கொடுத்திடுவாங்க."
என்று மருத்துவமனையில் மணியின் அப்பாவிடம் சொல்லிவிட்டு விடைபெற்றது  நினைவிற்கு வந்தது.இமைகள் இரண்டும் போராடிக்கொண்டிருக்க ,நண்பன் மூலம் சட்டென எரிந்த‌ ட்யூப் லைட் வெளிச்சத்தில் பட்டென என் உறக்கம் கலைந்தது.

"யாரு டா இந்த நேரத்துல , மணி அப்பாவா ?"

"இல்லை..கவி தான் பேசினாள்,அங்க ரமாக்கு ஏதோ பிரச்சனையாம்..நம்மளை உடனே கூப்பிடறாங்க" என்றான் பதட்டத்துடன்.

கவியிடம் விபரங்கள் ஏதும் கேட்க முடியாமல் அவன் தவித்தான்.அவள் அவனிடம் சொன்னது.."சீக்கிரம் கிளம்பி வாங்க" என்பது மட்டும் தான்.அங்குள்ளப் பிரச்சனை என்னவென்று புரியாது இங்கு இருவரும்  காலில் சுடு நீரை கொட்டாத குறையிலிருக்க , மற்றொரு நண்பன் எகிப்து மம்மி போல் உறங்கிக் கொண்டிருந்தான்.புளுக்கத்திலும் ,கண் கூசும் விளக்கின் வெளிச்சத்திலும் ,உரையாடலின் சப்தத்திலும் துளிக்கூட‌ கலையாத அவனது உறக்கம் அவனது புட்டத்தில் நான் கொடுத்த உதையில் கலைந்தது.

"டேய் , அங்க உன் தங்கச்சிங்களுக்கு என்னமோ பிரச்சனையாம்...உடனே வர சொல்றாங்க, நாங்க முன்னாடி போறோம்..நீ வீடெல்லாம் பூட்டிட்டு கிளம்பி வா.."என்று சொல்லிவிட்டு , அவனது கேள்விகள் எதையும் காதில் வாங்காமால் தோழிகளின் விடுதியை நோக்கி இருவரும் கிளம்பினோம் .மனதிற்குள் ஆயிரம் பதட்டம் இருந்த போதும் நண்பன் என்னிடம்..

"உன்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேற போகுது போல‌" என்றான்.எனது சின்ன சின்ன ஆசைகளின் ஒன்றான மகளிர் விடுதிற்குள் நுழைய வேண்டுமென்ற அந்த ஆசையை பற்றி தான் அவன் நினைவுகூர்ந்தான்.. "டேய் அதுக்கு இதுவாடா நேரம்.நல்ல நேரம் பாத்து சொல்ற பாரு" என்று அவனை கடிந்துக்கொண்டேன்.

எங்கள் வீட்டிலிருந்து விடுதி  3 தெருக்கள் தள்ளியுள்ளது.ஆதலால் முடிந்த வரை ஓடியும்,தெரு நாய்களை காணும்போதெல்லாம் நடந்தும் தூரத்தினை குறைத்தோம்.இதே போல் தான் நேற்றும் ஓடிக்கொண்டிருந்தோம் மணியிடமிருந்து செல் அழைப்பு வந்ததும்.தற்பொழுது போல் நேற்று  ஓடியது தெரிவிலும் அல்ல இரவிலும் அல்ல.நேற்று காலை ரயில் தண்டவாளத்தில் தான் ஓடினோம். நேற்று காலை வழக்கம் போல் அனைவரும் அலுவலகத்திற்கு செல்வதற்காக ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தோம். இது எங்களுக்கு முதல் வேலை , படித்து முடித்து ஒரு வருடம் கடந்த பிறகும் வேலை கிடைக்காத எங்களுக்கு மும்பை தனது அன்புக் கரங்களை நீட்டியது.புதிய இடம் , அறியாத மொழி என்ற போதும் மும்பை எங்களுக்கு சிறிது நாட்களிலே பழகியிருந்தது.பெண்கள் இருவரும் எங்கள் நால்வரின்  நட்பின் மீது கொண்டிருந்த  நம்பிக்கை ஓர் புதிய அடையாளத்தை தந்திருந்தது.5 ஸ்டார் படத்தில் வருவது போல்  ஓர் அழகிய நட்பு பிடித்திருந்தது.எங்களில் நானும் மணியும்  பள்ளி பருவத்திலிருந்து நண்பர்கள் . பள்ளியில் துவங்கிய நட்பு பணியில் அமரும் வரை தொடர்வ‌து அனைவருக்கும் அதிசியமாக இருந்தது. மும்பை வடாப்பாவ் , மரைன் ட்ரைவ் , பானிப் பூரி , வேற்று மொழி நண்பர்கள் என வாழ்வின் புதிய பரிமாணத்தை சுவாசிக்க ஆரம்பித்திருந்தோம். மும்பை லோக்கல் ரயிலை தவிர மற்ற அனைத்தும் இனிதாகவே இருந்தது.எங்களுக்கு மட்டுமல்ல மும்பையில் யவருக்குமே ரயில் பயணம் இனிதாக இருந்ததில்லை.அப்படி ஒரு நெரிசல்.நெரிசல் என்றால் , அதை நாம் தமிழகத்தில் கண்டிருக்க முடியாது.3-4 நிமிடத்திற்கு ரயில் வந்துக்கொண்டேயிருந்தாலும் , மக்களின் கூட்டம் இருந்துக்கொண்டேயிருக்கும்.மும்பை ரயிலில் புட் போட் அடிப்பதெல்லாம் ஒரு கலை.நம்மால் அதெல்லாம் கனவில் கூட நினைத்து பார்க்க‌ முடியாது.நமக்கு பின், புட் போர்டில் ஒருவரிசையில் சிலர் இருந்தால் மட்டுமே ரயிலில் ஏறிட வேண்டும்.அப்படிப்பட்ட‌ கடைசி வரிசை இல்லாத போதும் மணி துணிந்து ஏறினான்.அவனது துணிவு 2நிமிடத்திலே முடிந்தது.விழுந்த தகவல் கிடைத்தும் தோழிகள் இருவரையும் விடுதிக்கு போக சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் ஓடத்துவங்கினோம்.அவனை தேடிப்பிடித்தது, மருத்துவமனையில் சேர்த்தது எல்லாம் ஓர் பெரிய கதை.அதை பற்றி யோசித்தாலே எனது மண்டை வெடித்துவிடும் போல இருக்கிறது. அன்பு கரம் நீட்டி வரவேற்ற மும்பை நகரம் ஏனோ  கடந்த இரு தினங்களாக எங்களை ஓட வைக்கிறது.நேற்றைய  ஓட்டத்திலும் , அதன் பின் நடந்த நிகழ்வுகளிலும் என் மனமும், உடலும் என்னை விட்டு தனியே நின்றுவிட்டது போலும்.அவை இரண்டுமே என்னுடன் இல்லாது உறக்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட உறக்கத்தை இறக்கமின்றி  கலைத்து தான் த‌ற்பொழுது தோழியின் விடுதியை தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன்.

அவளது அறை 4வது மாடியிலிருந்தது,இதை ஏற்கனவே அறிந்திருந்தாலும் , அங்கு எறிந்த மின் விளக்குகள் உறுதி செய்தது.நாங்கள் அவளது அறைக்கு நுழையும்பொழுது சில வேற்று மொழியினர் சூழ்ந்திருந்தனர்,

கவி ரமாவின் தோளை பிடித்து  "ஏய் என்ன பாருடி " என்று உலுக்கிக் கொண்டிருந்தாள்.

எங்கள் வருகையை அறிந்ததும்கவி அங்கிருந்து எழுந்து வந்து நடந்தவற்றை சொல்ல முயற்சித்தாள் . கை தவறிய பொருட்களை பிடிக்க முடியாமல் தவிப்பது போல , வார்த்தைகள் தவறி அழத் துவங்கினாள்.சொல்ல முடியாமல் தவித்தால்.ரமாவை சுற்றி சிலர் நின்றதால் , அவளது முகத்தை எங்களால் பார்க்கவும் இயலவில்லை,நண்பன் சிலரை நகர சொல்லிவிட்டு ரமாவை காணச் சென்றான்.அருகிலிருந்தோர் ஆங்கிலத்திலும்,ஹிந்தியிலும் என்னிடம் பேசினர்.அந்த அர்த ராத்திரியில் வேற்று மொழியினை எனது மூலை எற்றுக்கொள்ளவில்லை.தமிழ் மட்டுமே அதன் நுழைவாயிலில் அனுமதிக்கப்பட்டது.

கவியின் அழுகை அடங்கிருந்தது.."என்னான்னு தெரியல டா ..தூக்க‌த்தில‌ எழுந்து அழுதுக்கிட்டே இருக்கா..ஏதேதோ மொனவுறாள்..எனக்கு என்ன பன்றதுனு தெரியல..பயமா இருக்கு " என்றாள். "ஏய் , அழுகையை நிறுத்து,இங்க என்னை பாரு " என்று நண்பன் ரமாவிடன் பேசினான்.. நானும் அவள் அருகே சென்றேன்,அவளது கண்கள் விழித்திருந்தது , அந்த பார்வையில் பயம் மட்டுமே இருந்தது.அவளுக்கு முன் இத்தனை பேர் நிற்பதை அவள் அறிந்திருக்கவில்லை.அவள் அழுதுக்கொண்டே ஏதோ முணுகினாள்...

"மணி, ட்ரேன் , நாய் ..."என்ற வார்த்தைகளை மட்டும் கேட்க முடிந்தது.அவளது வார்த்தைகளின் அர்த்தம் எங்களுக்கு புரிந்திருந்தது.முன்தினம்  மருத்துமனையில் ரத்தத்தில் நினைந்த மணியின் சட்டையை பார்த்தவுடனே மயக்கம் போட்டிருந்தாள்.அவள் கண்களில் பயம் அங்கேயே தொற்றிக் கொண்டிருந்தது.அவளது நினைவுகளை நண்பர்கள் ஏதேதோ சொல்லி மாற்றியிருந்த போதும்.அவளது ஆழ்மனதிலிருந்து அது நீங்கவில்லை .கனவிலும் நினைவுகளின் பிம்பங்களை பார்த்திருக்க கூடும், ஆதலால் தான் நினைவிழுந்து மீண்டும் மீண்டும் மணியின் பெயரையே உச்சரித்தாள்.அவளை அந்த நினைவிலிருந்து மீட்டிட நண்பன் போராடிக் கொண்டிருந்தான், நான் திடிரென நண்பனை விலக சொல்லிவிட்டு ..அவளை பலாரென அறைந்தேன்...

ஆங்கில வார்த்தைகளும் , ஹிந்தி வார்த்தைகளும் அந்த பலார் சப்தத்தில் ஒதுங்கிச் சென்றன.ரமாவின் பார்வையும் மாறியது. "நான் எங்க இருக்கேன்" என மொக்கையாக கேட்காமல் "நீங்க ஏன்டா இங்க வந்தீங்க " என்றாள்,பின் சுற்றமும் உணர்ந்தாள்.அவள் ஒருவாறு என்ன நடந்திருக்கும் என கனித்தாள்.மற்றவர்களை பேசி அனுப்பிவிட்டு நாங்க நால்வர் மட்டும் வரவேற்பரை என்று பெயர் மட்டும் சூட்டப்பட்டிருந்த  இடத்திற்கு வந்தோம்.

நாங்கள் வரவேற்பரைக்கு வரவும் மற்றொரு நண்பன் அங்கு வந்த சேரவும் நேரம் சரியாக இருந்தது.ஒவ்வொரு நண்பர்கள் வட்டத்திலும் , பெண்களுக்கு அண்ணனாக ஒரு அப்பாவி தத்தெடுக்கப்படுவான்.ரக்க்ஷாபந்தனுக்கு அவன் கையில் அனைத்து வண்ணங்களிலும் கயிறுகள் இருக்கும்.கயிறுகள் நிறைந்த வேகத்தில் அவன் பர்ஸ் கரைந்திருக்கும்.அப்படி எங்கள் குழுவில் இருக்கும் தத்து அண்ணன் தான் அவன்.

"சரி என்ன ஆச்சு அத முதல சொல்லுங்க..நான் வழி தெரியாம அங்கையும் இங்கையும் சுத்திட்டிருந்தேன்..இதுல இந்த தெரு நாய் வேற..:"என்றான்.. அவனிடம் நடந்த அனைத்தையும் எனது ஆசை உள்பட சொல்லி முடித்தோம்.

"ஆனா மச்சி இவளோட கனவுல ஒரே ஒரு லாஜிக் தான்டா இடிக்குது..மணி,ட்ரேன் எல்லாம் ஓ.கே ..நாய் எங்கேந்து வந்துச்சுன்னு தெரியல.." என்று அவளது நினைவுகளை புத்திசாலித்தனமாக திருப்புதவாக நினைத்துக் கொண்டு தெரியாமல் அவளிடம் கேட்டுவிட்டேன். சாப்பிட்டு திரும்பனப்போ..ஒரு நாய் என்ன பாத்து ஊல விட்டிச்சு..அது பாக்கவே ரொம்ப பயமா இருந்திச்சு" என்று சிறுபிள்ளை போல் பேசினாள்...அவளிடம் மீண்டும் பயம் தொற்றிவிடுமோ என்று தோன்றியது.எனது ஆசைகளை பற்றி பேச்செடுத்து , அங்கு கூடியிருந்த பெண்களை பற்றி விளையாட்டாக விசாரித்தோம்.ஏதேதோ பேசி அவள் முகத்தில் சிறு புன்னைகையை முளைக்கச் செய்தோம்.அவளை  பேசி பேசியே தேற்றினோம்.எங்களால் அந்த சூழலில் முடிந்ததும் அது மட்டும் தான்.நேரம் 12ஆகியிருந்தது.ஒருவாறு ரமா பயத்தினை விட்டு விலகியிருந்தாள்.ரமாவிடமும் கவியிடமும் சிறு ஆறுதல் வார்த்தைகளை தூவ‌விட்டு நாங்கள் மூவரும் கிளம்பினோம்.

மறுநாள் நடக்கயிருக்கும் மணியின் அறுவைசிகிச்சை பற்றியும் , நாளையும் இவள் அங்கு வந்தாள் என்ன ஆகும் என்பதை பற்றியும் நண்பர்கள் புலம்பிக்கொண்டிருக்க , எனது நினைவுகள் மட்டும் கவியின் கனவை பற்றியே இருந்தது.அவள் விழித்திருந்தாள் , ஆனால் கனவிலிருந்து வெளியேரவில்லை.திரைப்படங்களில் வரும் தூக்கத்தில் நடக்கும் கதாப்பாத்திரம் போலயிருந்தது.விழித்தும் கலையாத கனவு அது என்று என்னுள் நான் சொல்லிக்கொண்டேன்.

மும்பை ரயில் அவளது நினைவுகளை தூண்டிக்கொண்டேயிருந்தது , சில நாட்களுக்கு கலையாத கனவுகள் தொடர்ந்தன .மணியின் விபத்தும் , இவளது கனவும் பெற்றோர்களுக்கு பெரிதும் மன உளைச்சலை தந்தது. நான் ரசித்த மும்பையும் , நான் நேசித்த இந்த நண்பர் வட்டமும் எனது அடுத்த சில வருடங்களை வண்ணங்கள் பல பூசப்போவதாக நான் கண்ட கனவு அவளது கலையாத கனவால் மெல்ல மெல்ல கலைந்தது.

Friday, February 14, 2014

பைக்கில் பறந்த பட்டாம்பூச்சி

"ஒன்னு,ரெண்டு,மூனுஎன சுவரில் ஒட்டிய பல்லி போல் மின் கம்பத்தில் ஒட்டிக்கொண்டு சதீஸ் வேகமாக எண்ணத் துவங்கினான்.கண்ணாம்பூச்சி விளையாட்டு தான் இது என சொன்னால் சண்டை பிடிப்பார்கள் அந்த தெருவின் வாண்டுகள்.இந்த ஆட்டத்தின் பெயர்  "ஐஸ் பாய்". பெப்பே,7ஸ்டோன் கவட்டை,கரண்ட் என மாறிக் கொண்டே இருக்கும் அந்த தெருவின் தற்பொதைய‌ சீசன் இந்த ஜஸ் பாய் தான்.மணி அடித்தார் போல சரியாக 9மணிக்குத் துவங்கும் இவர்களது ஆட்டம்சித்திரை வெயில் கத்திரி கொண்டு உடலை கிழித்தாலும் முடிவதேயில்லை.தாகம்,பசி,சோர்வு என எதுவும் அவர்களை நிறுத்தியதில்லை.

பழகிய இடங்கள் ஐஸ் பாய் விளையாட சுவாரஸ்யமாக இருக்காததால் இடத்தை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள்.புதிதாக கட்டும் கட்டிடங்கள் தான் ஒளிந்துக் கொள்ள தோதுவாக இருக்கும்.சமையல் அறை மாடம்,பரணி,செப்டிக் டாங்க் குழிகள்,மாடிப்படியின் இடுக்கு என விதவிதமாக ரகசிய இடங்கள் நிறைந்திருக்கும்.தேனை தேடி அலையும் வண்டை போல இவர்களும் அவ்வப்போது புது கட்டிடங்களை தேடி அலைவார்கள்.ரொம்ப நாள் கழித்து விளையாட ஒரு ரகளையான வீடு மாட்டியது.அதில் தான் ன்றைய ஆட்டம்அரங்கேறியது.
90 வந்ததும் அதுவரை தாழ்ந்திருந்த சதீஸின் டெசிபெல் மெல்ல மெல்ல உயர்ந்து 100 ல் உச்சத்தை தொட்டது.நூறு என்று முடித்ததும் வேகமாக தனது தேடலைத் துவங்கினான்.ஜஸ் பாய் ஆட்டத்தில் சிம்ம சொப்பணமாக இருப்பது குமாரசாமி தான்.குமாரசாமியால் மாடியிலிருந்து மணல் மேட்டின் மீது எளிதாக குதிக்க முடியும்,மரக்கிளையின் நுனி வரை செல்ல முடியும்.இன்னும் பல வித்தைகள் அவனிடமிருந்ததால் சதீஸ்,  ரகு அல்லது சுரேஷை முதல் ஐஸாகஅடிக்க திட்டம் தீட்டிருந்தான். எங்கு ஒளிந்திருந்தாலும் முதல் ஐஸாக அகப்பட்டு அடிக்கடி மாட்டித்தவிப்பது இவர்கள் தான்.ரகு தான் இந்த முறை எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்பதில் உறதியாக இருந்தான்.மாடிப்படி இடுக்கு அவனது மெல்லிய தேகத்திற்கு ஏற்றதாக இருந்தது.சதீஸ் கொஞ்சம் குண்டு ஆதலால் அவன் குனிந்து பார்த்தாலும் கண்டுப்பிடிப்பது கடினம் என்று ரகு ஒரு கணக்குப் போட்டிருந்தான்.ரகுவின் கணக்கும்பொய்க்கவில்லை..

சுரேஷ் ஜஸ்” என்ற சதீஸின் சத்தம் கொள்ளபுரத்திலிருந்து வந்தது.
எப்படியோ தான் தப்பித்ததை நினைத்து மன ஆறுதல் அடைந்தாலும் சுரேஷை காப்பாற்ற வேண்டுமென எண்ணினான்.அதுதான் அந்த ஆட்டத்தின் மரபும் கூட.சதீஸ் கொள்ளைபுரத்திலிருந்து மாடிப்பக்கம் சென்றான்.மாடியில் ஒளிந்திருந்த குமாரசாமி, ஜஸ் அடிக்க தயாராக இருந்தான்.ஆனால் சதீஸ் விவரமாக பாதி படி ஏறியதும் சுவற்றினை பிடித்து தாவி எட்டிப் பார்த்தான்அங்கு ஒளிந்திருந்த குமாரசாமியை "2 ஐஸ் குமாரசாமி " என்றான்.எப்பொழுதும் கடைசி ஐஸாக மாட்டும் குமாரசாமி,ஐஸ் பாய் வரலாரிலே முதல் முறையாகஇரண்டாவது ஐஸாக பிடிப்பட்டான்.குமாரசாமியை பிடித்து விட்டோம்,மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம் என சதிஸ் எண்ணினான்,அவனது எண்ணமும் கைகூடியது.1௦ நபர்களில் ரகுவை தவிர அனைவரும் மாட்டிக்கொண்டனர். ரகுவிற்கு ஐஸ் அடித்துவிடும் ஆர்வம் அதிகமானது,இத்தனை நாட்கள் ஐஸ் பாய் விளையாட்டில் தான் சம்பாதிக்காதபெயரினை எடுக் ஓர் அறிய வாய்ப்பாக கருதினான்.தனது ஜம்புலங்களையும் ஐஸ் அடிப்பதற்காக தயார் செய்தான்.

சில காலடி சப்தங்கள் கேட்டது வருவது யாரென தெரியவில்லை.வருவது யாராக இருந்தாலும் சற்று தன்னை கடக்கட்டும் என்றிருந்தான்.கடந்தது சதீஸ் இல்லை மற்றொரு நண்பன் பாலு தான் அது.ரகுவிற்கு புழுக்கத்தில் வியர்த்துக் கொட்டியது.ஒரு கல்லை எடுத்து பாலு மீது வீசினான்.பாலுவிடம் சதீஸின்இடம்,பொருள்,ஏவல் பற்றின தகவல்களை செய்கையில் கேட்டு பரிமாறிக் கொண்டான்.பாலு,சதீஸின் வருகையை உறுதி செய்துவிட்டு ஏதும் தெரியாது போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.சதீஸும் ரகுதானே என கொஞ்சம் மேம்போக்காக தான் தேடினான், தீஸ் அருகில் வர ரகு தயார் நிலையில் இருந்தான்.சதீஸ் டக்கென படிகளின் எதிர்ப்பக்கம் உள்ள ஓர் மறைவில் தேடினான்.தக்க தருணம் இது தான் என வேகமாக வெளியே வர முயன்றான்.அவ்வளவு நேரம் குனிந்திருந்த அவன் நிமிர்ந்து எழுந்தான்.

தனது தலை எதிலோ முட்டியதை உணர்ந்தான் ரகு.சத்தம் கேட்டதும் சதீஸ் ,மற்றும் அனைவரும் அந்த வேங்கையின் திடீர் பாய்ச்சலின் பக்கம் திரும்பினர்.

"ரகு 1௦ ஐஸ் " என வாயெடுத்த சதீஸ் .. "அவனை பிடிங்க டா விழுந்திர போறான் " என்று கத்திக் கொண்டே ஒடி வந்தான்.
ரகுவின் ஊதா நிற சட்டை மெல்ல கருமையாகிக் கொண்டிருந்தது.மாதுளையை உடைக்கும் போது வரும் சாரைப் போல் அவன் தலையிலிருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.முதலுதவி என்ற வார்த்தையை கேட்டிராத அந்த பிஞ்சுகள் அனைத்தும் முதலுதவி செய்துக் கொண்டிருந்தன.ஒருவன் ரகுவின் சட்டையை கட்டினான்,இன்னொருவன் தனது சட்டையால் ரகுவிற்கு கட்டுப்போட முயற்சித்துக் கொண்டிருந்தான்.ரத்தம் படிந்த சட்டையை பார்த்ததிலிருந்து பாலுவிற்கு மயக்கம் வருவது போலிருந்தது.பாலு அந்த சட்டையை எடுத்துக் கொண்டு ரகுவின் வீட்டிற்கு ஓட்டம் பிடித்தான்.

வீட்டின் வேலைகளை முடித்து விட்டு கொள்ளபுரத்தின் வழியே பிள்ளைகள் எப்போதும் விளையாடும் மைதானத்தை எட்டிப் பார்த்தாள்...அங்கு யாரையும் காணவில்லை..


"இன்னைக்கு எங்க போச்சுங்க எல்லாம்..க்ரவுண்ட்ல யாரையும் காணும் " என்று பக்கத்து வீட்டு சுரேஷ் அம்மாவிடம் கேட்டாள் ரகுவின் அம்மா.


"தெரியலையங்க..பசங்களோட பெரிய தொல்லையா போச்சு..ஒரு இடத்துல விளையாடுதுங்ளா இனிமே காலையில போறப்பவே இடத்த கேட்டிடனும்.."என்று புலம்பிவிட்டு தங்களது அன்றாட கூட்டத்தை துவங்க ஆயத்தம் ஆனார்கள்.

அப்பொழுது பாலு அறக்க பறக்க ஓடி வந்து..

"அத்தை விளையாடும் போது ரகுவிற்கு அடிப்பட்டுச்சு ..நீங்க உடனே வாங்க"என்றான்...அவன் கையிலிருந்த சட்டையை பார்த்தவுடன்..

"அய்யோ...அய்யோஎன பதட்டத்தில் கத்தினாள் ரகுவின் அம்மா..

அக்கம் பக்கமிருந்த அனைத்து அம்மாக்களும் கூடிவிட்டனர்.பாலு அழுது கொண்டே அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். ரகுவை தன் மடியில் போட்டுக் கொண்டு...
"என்னைப் பாருடா..என அவனிடம் அழுதுக் கொண்டே ஏதோ உளறினாள்.அவளது கேள்விக்கும் ரகுவும் பயத்துடன் பதிலளித்தான்.

அதற்குள் மெயின் ரோட்டிலுள்ள E.B ஆபிஸிக்கு சென்று தனது கணவரை அழைத்து வந்தார் சுரேஷின் அம்மா.ரகு அவரை பார்த்தவுடன்

"ஒண்ணுமில்லை மாமா ..லேசா தான் அடிப்பட்டுச்சுஎன்றான்.

அவர் ஆபிஸிலிருந்து வண்டி ஒன்றை கடன் வாங்கி வந்திருந்தார் .ரகுவை பின்னால் உட்கார வைத்து,அவனுக்கு பின்னால் சுரேஷை அமரவைத்து மெடிக்கல் நோக்கி கிளம்பினார்.வண்டி தெருவின் முனையை தாண்டியதும் ஐஸ் பாய் விளையாடிய மற்ற அனைவரையும் அவர்களது அன்னைமார்கள் துரத்திக் கொண்டிருந்தனர்.விதவிதமான அடிகளும் திட்டுகளும் விழுந்தது.துடப்பம் தோசை கரண்டி,ஸ்கேல் மரக்கம்பு என தேர்விற்குப் பின் வேலையில்லாமல் இருந்த அனைத்து ஆயுதங்களுக்கும் அன்று திகட்ட திகட்ட வேலை கொடுத்தனர்.அடுத்த மணி நேரத்திற்கு பிள்ளைகளின் அழு குரல்கள் அந்த தெருவை நிரப்பியது.ரகுவின் சட்டையை பார்த்து அவனது அம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.

இங்கு இப்படி இருக் வண்டியில் சென்ற ரகு தலையில் தையல் போடுவதற்காக மருத்துவமனையில் காத்துக் கொண்டிருந்தான்.மருத்துவமனைக்கு நுழையும் போது OP யில் மருத்துவர் இருந்ததால் முதல் உதவி செய்துவிட்டு தையல் போட காத்திருக்க செய்தார்.தலையில் வலி குறைந்திருந்தது.சுரேஷ் அவனது கையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.வண்டியில் வரும் வழியெல்லாம் 

பத்திரமா பிடிச்ச்சிக்கோ “ “மயக்கம் வர மாதிரி இருந்தா சொல்லு “ இந்த இரண்டையும் சுரேஷின் தந்தை சொல்லிக்கொண்டே   இருந்தார்.

சுரேஷிடமும்  “அவனை நல்லா பிடிச்சிக்கோ “ என்று பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருந்தார்.


கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும் என்றவுடன் சாப்பிட ஏதாவது வாங்கிவரவெளியே சென்றிருந்தார்.மருத்துவமனையின் வாடையும் அந்த சுழலும் கொஞ்சம் பயம் தருவதாக இருந்தது.மக்கள் அங்கும் இங்குமாக நடந்துக்கொண்டிருந்தனர்.


சுரேஷ் “அங்க பாருடா... “ என ஏதாவது காட்டி பேசுவான்.அவனுக்கு தெரிஞ்ச திரைப்பட மருத்துவ காட்சிகளை சொந்த பாணியில் சொல்லுவான்.நடுவேவலிக்குதா ? “ என கேட்பான். ஆனால் ரகுவின் சிந்தனை முழுவதும் தற்பொழுது வந்த தனது முதல் பைக் பயணத்தை பற்றியே இருந்தது .அவன் அன்று வரை ஸ்டான்ட் போட்ட வண்டியில் ஏறி வாயால் “ட்ரூரூ” என்று கூறி தான் கற்பனையில் பயணித்திருக்கிறான்.ரகுவின் அப்பாவிடம் சைக்கிள் மட்டும் தான் உள்ளது அவனது தாத்தாவிடம் கூட சைக்கிள் மட்டும் தான்.வண்டியில் செல்வதை பற்றி பல நாள் யோசித்திருக்கிறான்.ஒரு முறை அம்மாவிடம் கூடஅப்பா வண்டி எப்ப மா வாங்குவாங்க “ என்று கேட்டிருக்கிறான்.ரகுவின் அப்பாவிற்கு வண்டி ஓட்ட தெரியாததால் இப்போதைக்கு அது நடக்காது என அறிந்திருந்தான்.சுரேஷின் அப்பாவிடமும் வண்டியில்லை ஆனால் அவருக்கு வண்டி ஓட்ட தெரியும்.ஓரிருமுறை நண்பரின் வண்டியில் வீட்டிற்கு மதிய இடைவேளையில் வருவார்;அப்போது சுரேஷை ஒரு ரவுண்டு அழைத்துச்செல்வார்.ரகு இதை அவ்வப்போது கவனித்திருக்கிறான்.ஒரு நாள் சுரேஷ் வீட்டிற்கு சென்று தானும் அவனுடன் செல்லாம் என்று நினைத்திருந்தான்.அவன் நினைத்தது  இன்று கைகூடியது அவனுக்கு மகிழ்வாக இருந்தது.வண்டியில் வரும் போது காற்றில் அவன் முடி ஆடியது அடிப்பட்ட வலிக்கு இதமாக இருந்தது.துணியால் கட்டு போடப்பட்டிருந்ததால் அங்கும் இங்குமாக தலையில் அரிக்கச் செய்ததது.வண்டியை அவன் கெட்டியமாக பிடித்திருந்ததால் என்ன செய்வதென்று தவித்தான்.கையை எடுத்தால் விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.


திரும்பி செல்லும் போது எப்படி பிடிக்க வேண்டும் வரும் போது சரியாக அமராததால் சரிக்கிக்கொண்டே போவதாக உணர்ந்தான் ஆதலால் சரியாக ஏறும்போதே உட்கார வேண்டும் .என வீடு திரும்புவதை பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். அவனது முதல் பைக் பயண  அனுபவத்தின் அடிப்படையில் தனது கனவை வடிவமைத்துக் கொண்டிருந்தான்.சுரேஷின் அப்பா கையில் பிஸ்கட்டடுடன் நுழைந்தார்,அவருடன் ரகுவின் அப்பாவும் வந்தார்.ரகுவின் அப்பாவும் E.B யில் தான் வேலை பார்க்கிறார்.ஆனால் வேறு டிவிஷன் சுரேஷ் அப்பாஅவருக்கு எப்படியாவது தகவல் கொடுக்கும்படியாகவும் உடனே மெடிக்கலுக்கு வரும்படியாகவும் அலுவலக நண்பர்களிடம் சொல்லி வந்தார்.


தந்தையை பார்த்தவுடன் ரகுவிற்கு பயத்தில் கண்கள் கலங்கின அப்பா திட்டுவாரென எதிர்பார்த்தான் அனால் அவர் அவனது காயத்தின் வலியை பற்றியே பேசினார்.அவனுக்கு அப்பாவின் வார்த்தைகள் தைரியத்தை அதிகரித்தது.தையல் போடும் போது எந்தவித அழுகையும் இன்றி அமர்ந்திருந்தான் அவ்வப்போது “ஸ்என்ற சத்தம் மட்டும் தந்தான்.மருத்துவர் தையல் போட்டுவிட்டு அவன் முகத்தை அணைத்தவாறு வெள்ளை நிறத்தில் கட்டினை போட்டார்.


வேற கலர் இருக்கா “என்று கேட்கலாமா என யோசித்து முடிப்பதற்க்குள்


வீட்டில அடங்கவே மாட்டேங்கிறாங்க நீங்களாச்சும் சொல்லுங்க டாக்டர் “ என்று தகப்பன்மார்களின் கோரிக்கைளை ஏற்று.


இனிமே ஜாக்கிறதையா விளையாடனும் “ என்று துவங்கி அவர் பாட்டிற்கு அறிவுரை மலர்களை பிள்ளைகளின் மேல் அள்ளி வீசினார்..இதற்கு அவர் போட்ட ஊசியின்  வலியே தேவலை என தோன்றியது.ரகுவை பார்த்து சுரேஷ்சரியான ப்ளேடு்”  என கையை கழுத்துப்பக்கம் வைத்து அறுப்பது போல சைகை காட்டினான்.ரகுவிற்கு சுரேஷின் திருட்டுதனமான அந்த சைகை  சிரிப்பு மூட்டியது,இருந்தும் அடக்கிக் கொண்டான்.


ஒரு வழியாக சிறிது நேரத்தில் விடைபெற்று  மருத்துவமனையை விட்டு அனைவரும் வெளியே வர,அப்பாவின் சைக்ககிளை பார்த்ததும் ரகுவிற்குபுரிந்தது .தனது பைக் கனவு நிறைவேறாது என்று. அதுவரை அவனுக்கு உணராத வலிகள் யாவும் அவனை வாட்டியது.உடலாலும் மனதாலும் சோர்ந்து போனான்.


ராஜு நான் பசங்கள கூட்டிட்டு போறேன்..நீ சைக்கிள்ள பின்னாடி வாஎன சுரேஷின் அப்பா ரகுவின் அப்பாவை பார்த்து சொன்னார்.

பைக்கின் உறுமல் சத்தம் துவங்கியது....


காற்றில் சிறகை விரித்து இரு பட்டாம்புச்சிகள் பறந்தன அதில் ஒன்று தலையில் சிங் போல கட்டுப் போட்டிருந்தது.

Wednesday, May 22, 2013

என் தனிமை


"மணியாச்சு கிளம்பினீயா இல்லையா"..என்று வீட்டுக்குள் நுழைந்தேன் சாக்ஸை கூட கழட்டாமல்...

"உங்களுக்கென்ன ஆபிஸ்லேந்து வந்தவுடனே கிளம்பு கிளம்புன்னு  சொல்வீங்க.இந்த குட்டீஸை வெச்சுகிட்டு என்னால எதுவுமே எடுத்து வைக்க முடியல.கொஞ்ச நேரம் இவளை பாத்துகோங்க  நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன். "என்றாள் என் வீட்டு எஜமானி...

"சரி சரி..எடுத்து வை"....என்றதோடு ..சிறிது நேரத்தில் எடுத்து வைக்க வேண்டிய அனைத்தையும் சரி பார்த்துவிட்டு ரோலிங் பேகோடு கிளம்பினோம்.

ரயிலடிக்கு இரண்டு பேருந்துகள் மாறி போக வேண்டும்.பேருந்திற்காக காத்திருந்தோம்.ஏனோ பெங்களூரில் ஏ.சி ப‌ஸ் தான் அதிகம் இருக்கிறது.நாங்களும் இரண்டு பேருந்தை விட்டு பார்த்தோம் சாதா பேருந்து வருவதாக தெரியவில்லை.

"ம்ஹூம் ..இதல்லாம் சரியா வராது போல .. பேசாம ஏ.சி பஸ்லேயே போயிடலாம்" என்றாள்..

"இதை தான் நான் அப்பவே சொன்னேன்..எங்க கேட்ட..." என்றேன் அவளிடம் பொய் கோபத்துடன்..அடுத்து வந்த ஏ.சி பேருந்தில் ஏறினோம்...

நகர பேருந்து ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது ஏதாவது சொல்லி தர தவறுவதில்லை....என் ஒரு வயது அழகிய தேவதை இப்பொழுது தான் வெளி ஆட்களை கண்டாள் சிரிக்கிறாள்.என் மனைவியும்,குழந்தையும் அமர நான் அவர்கள் அருகில் நின்று பையை காலால் பேலன்ஸ் செய்து கொண்டுருந்தேன்.என் மகள் அருகில் அமர்ந்த ஒருவரின் முகத்தினை பார்த்து அழகாக சிரித்தாள்.அவரோ அதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.அது என்னவோ தெரியவில்லை , சிறுப்பிள்ளைக்களுக்கு தன்னை கண்டுகொள்ளாதவரை தான் அதிகம் பிடிக்கும் போலிருக்கிறது.அவரை தனது கையால் சீண்டி அழைக்கிறாள்.அப்பொழுதும் அந்த டிப்டாப் ஆசாமி கண்டுகொள்ளவேயில்லை.அவளும் அந்த பேருந்தில் தன்னை சுற்றி இருக்கும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்ச்சித்து முயற்ச்சித்து தோற்றே போகிறாள்.சிறுப்பிள்ளையின் சிரிப்பில் இல்லாதது அப்படி என்னதான் அந்த ஸ்மார்ட் போனில் இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.

சென்ற முறையும் இப்படி தான் ; காலை வேலை ஊரிலிருந்து ரயில் விட்டிறங்கி வீடு திரும்பி கொண்டிருந்தோம் ஏசி பஸ்ஸில்.அதிகாலையிலே சிரலாக்(cerelac) ஊட்டியிருந்தோம்.தொடர் பயணத்தினால் செறிக்கவில்லை போலும் ;பேருந்தில்  என் மீது முழுவதுமாக வாந்தி எடுக்க , உதவிக்கு ஒருவர் கூட வரவில்லை.நானும் என் மனைவியும் தட்டுத் தடுமாறி அனைத்தையும் சரி செய்தோம்.அருகில் இருப்போரிடம்"ஏன்டா இப்படி இருக்கீங்க?"என்று கேட்க வேண்டுமென்று தோனியது.அன்று நடத்துநர் மட்டும் ஏசி பக்கத்தில் அமர வைக்காதீர்கள்;குழந்தைக்கு ஒத்துக்காது என்று கன்னடத்தில் சொல்ல.கன்னடத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாத போதும் அதை புரிந்துக்கொண்டேன். அவர் சொன்னவுடன் ... ஒரு ஆளாச்சும் கண்டுக்கொள்ள‌ இருக்காரே என்று சற்றே சமாதானம் அடைந்தேன்.இவ்வாறு சென்ற முறை நடந்தவை என் மனதிற்குள் ஓட அதற்குள் நாங்கள் இறங்கும் இடம் வந்தது.இறங்கி அடுத்த பேருந்திற்காக காத்திருந்தோம்.அந்த இடத்திற்கு சாதா பேருந்து மட்டும் தான் செல்லும்.சற்று நேரத்தில் வந்ததும் ஏறினோம்.இங்கு என் தேவதைக்கு தோல்வியே இல்லை.பொருளாதார தகுதிக்கும் ; யதார்த்த அன்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற எனது நம்பிக்கை ஒரு கேள்விகுறியானது.

இறுதியாக ரயிலடிக்கு வந்து சேர்ந்தோம்.இன்னும் சிறிது தாமதமாக கிளம்பியிருக்கலாம் என்று எனது நேரக் கனிப்பினை குறை சொல்லிக்கொண்டிருந்தாள் என் மனைவி.போக்குவரத்து நெரிசலில் இதுவரை சிக்காத‌ அவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல்.அவள் பேசுவதை கேட்டும் கேளாதவாறு ஆண்கள் பொதுவாக கையாளும் யுக்தியை பயண்படுத்திக் கொண்டிருந்தேன்.

சின்ன ஸ்டேஷன் என்பதால்,என் குட்டி தேவதை தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தாள்.அனைவரும் இவளது சேட்டையை ரசித்தவாறு இருந்தனர்."ஊருக்கு போய் முதல்ல சுத்தி போடனும் " என்ற என் மனைவியின் மனக்குரல் எனக்கு கேட்க...ஒரு மெல்லிய புன்னகை சிந்தினேன்.திடீர் புன்னகைக்கு காரணம் என்னவென்று அவள் கண் அசைவால் எனைக்கேட்க.நான் ஒன்றுமில்லை என்று தலை அசைத்தேன்.

நானும் என் மகளுடன் சிறிது நேரம் நடை பழக;திடிரென பசியில் அவள் சினுங்கினாள்,அவள் அன்னை பால் ஆற்றும் வரை நான் விளையாட்டு காட்ட அவளை தூக்கி முதல் முறையாக நிலவை காட்டி  "நிலா பாரு" என்று அவள் கவனத்தை திசை திருப்பினேன். என் ஒரு வயது நிலவு;நிலவை கண்ட அதிசியத்தில் கையை உயர்த்தி "ஊஊ..." என்று அர்த்தமில்லா சொற்களை சிந்த...எங்களுக்கு அவளது செய்கைகள் அதிசயமாக இருந்தது.அன்று முதல் "நிலா எங்கே?" என்று கேட்டால் உடனே வானத்தை பார்ப்பாள்.இது போல் அவள் செய்யும் ஒவ்வொன்றையும் அருகில் இருந்து ரசித்திட வேண்டும் என்று என் மனதில் தோன்றிய மறுகனம் இப்பொழுது ஊருக்கு செல்வதே அவளை இரண்டு வாரத்திற்கு அவளது  தாத்தா பாட்டியிடம் விட்டு வருவதற்காக தான் என்பதை உணர்ந்தேன்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் பணி புரிகிறோம்,அவள் தஞ்சையில் , நான் பெங்களூரில்.அவள் இதுவரை விடுப்பில் இருந்தாள்.இன்னும் ஓரிறு  மாதங்களில் பணியில் சேர வேண்டும்.பெங்களூருக்கு பணி இடம் மாற்றம் கிடைக்கும் வரை,இருவரும் இங்கும் அங்குமாக பயணம் செய்ய நேரிடும்.ஆதலால் எங்களது பெற்றோர்களிடம்  இருக்கும் அளவுக்கு என் மகளை பழக்கம் செய்ய வேண்டுமென்று , ஊரில் விட்டுவர எண்ணினோம்.அதற்காகத் தான் இந்த இரு வார ஒத்திகை.இதை பற்றி மேலும் சிந்திக்க ;அதற்குள் ரயில் வந்தது....

"நல்ல ஆட்டம் போட்டிருக்கா சீக்கிரம் தூங்கிடுவா" என்ற என்னவளின் கனிப்பை பொய் ஆக்கினாள் என் மகள்.சேலையில் தொட்டில் கட்டி , செல்போனில் பாட்டு போட்டு;விளக்குகளை சீக்கிரம் அனைத்து என்று நாங்கள் ஏதேதோ செய்ய ; அவளோ இருட்டில் கூட விளையாடிக் கொண்டிருந்தாள்.

அருகிலிருந்த ஒருவர்.."குழந்தைங்களை நாம‌ வளர்க்கிறதுல தாங்க இருக்கு..நீங்க தினமும் லேட்டா வந்து விளையாடி பழக்கப் படுத்தியிருப்பீங்க.அதனாலதான் தூங்க மாட்டேங்குது.நீங்க தினமும் சீக்கிரமே லைட்டைலாம் அனைச்சிட்டு தூங்கப் போட்டு பழக்குங்க.." என்று எனக்கு அறிவுரை செய்ய....நான் ஏதும் சொல்லாமல்.."எங்க தூங்க முடியாம போய்விடுமோ.." என்று அவர் கண்களில் தெரிந்த பயத்தினை பார்த்துக்கொண்டிருந்தேன்.என்னைப்போல் இரண்டு மூன்று அப்பாக்கள் கதவருகே உலாவ.நானும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டேன்.அனைவரும் பிள்ளைகளின் பெருமைகளை  ஆசை தீர பேசி தீர்த்தோம்.அப்படி இப்படி என 1 மணியானது அவள் உறங்க.கலைப்போடு இருந்த போதும் அவ்வெப்போது எழுந்து பார்த்துகொண்டே  உறங்கினேன்.ரயில் சற்றே தாமதமாக தஞ்சை வந்து சேர்ந்தது.

அன்று மாலை ; நெருங்கிய உறவனரின் திருமண அழைப்பு;முதல் நாள் திருமணத்திற்கு செல்லாததால் சீக்கிரமே சென்றுவிட்டோம்.திருமண அழைப்பு முடிந்ததும் எனது மாமாவும் அத்தையும் எனது மகளை அழைத்து போக திட்டமிட்டிருந்தனர்.நான் பந்தியில் பறிமாரிக் கொண்டிருந்த வேலையில் ; அவர்கள் எனது மகளை அழைத்துச் சென்றிருந்தனர்.எனது மனைவியோ பிரிவின் வலியை தாளாமல் கண்கள் களங்க அமர்ந்திருக்கிறாள்.அனைவரும் சுற்றி இருந்த போதும் யாரும் கவனிக்கவில்லை.நான் யதார்த்தமாக அங்கு செல்ல ; என்னை கண்டவுடன் அடை மழையென அழத் துவங்கினாள்....அனைவரும் ஒன்று கூடிவிட்டனர்.ஒவ்வொருவிடமும் நிலைமையை எடுத்துச்சொல்ல‌ எனக்கு அறிவுரைகள் வந்தவண்ணமிருந்தது.

"இதோ பத்து நிமிஷம்.... உங்க வீடு வந்துடும் ஏன் இப்படி அழற""என்று ஆறுதல் செய்து வண்டியில் அழைத்து சென்றேன்..கொஞ்ச தூரத்திலே தொடர் செல் அழைப்பு.நிறுத்தி பேச;"பாப்பா ரொம்ப அழுவுது சீக்கிரம் வாங்க"என்றார் மாமா.ரயில் பயணத்தின் கலைப்பு;இடம் மாற்றம்;பல கைகள் தூக்கியது ; என பல்வேறு சிற‌மங்களால் அவள் அழுதிருக்கலாம்.நாங்கள் விரைந்து சென்றோம்.எங்களை கண்டவுடன் சிறிது அமைதியானாள்.இங்கும் நிலவினை காட்டித்தான் அவள் அழுகையை நிறுத்தினேன்.மறுநாள்.....

இரண்டு வாரத்தில் பணியில் திரும்ப சேருவதே சரி என்று ஓர் திடிர் முடிவை என் மனைவி எடுக்க;தாயும் சேயும் ஊரிலே தங்க நான் மட்டும் பெங்களூர் திரும்புவதாக முடிவாயிற்று.இப்பொழுது என் மனம் கலங்க துவங்கியது.அவள் வேலைக்கு சேர்ந்த பிறகு நாங்கள் பிரியத்தான் வேண்டும்.ஆனால் அதனை நான் திடிரென எவ்வாறு எதிர்கொள்வது என்று அறியாது தடுமாறினேன்.யாரிடமும் காட்டிக் கொள்ளாமல்.

ஆணிற்கு பிரிவுகளும் , தனிமையும் சகஜமென்றும் ; அது புருஷ லட்சணமாகவும் கருதப்படும் சமூகத்தில்;நான் அதனை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறேன்.எனது தனிமை பற்றின கவலை மற்றவர்களால் உணவு பூர்வமாக மட்டும் கருதப்படுகிறதே தவிற உணர்வுப்பூர்வமாக அது கறுதப்படுவதேயில்லை.வெளிநாடுகளில் பிள்ளையை விட்டுப் பிரிந்து தனியே வாழ்போரை எடுத்துகாட்டி ஆறுதல் சொல்வோரிடம்.....ஆணிற்கும்,பெண்ணிற்கும் பிள்ளை விட்டு பிரியும் வலி ஒன்றுதான்;பெண் அழ தெரிந்தவள் ; ஆண் அழ தெரியாதவன் என்பதே ஒரே வித்தியாசம் என்று நினைத்ததை சொல்லாமல் எனக்கு இதெல்லாம் பிரச்சனை இல்லையென்று ஒரு பொய்யான முகமூடியை அணிந்து கொண்டேன்.வெறும் மெளனத்துடன் இரவு ரயில் ஏறி சற்று என் சுற்றம் உணரும் போது;என் அருகில் மகனை ரயில் ஏற்றிவிட வந்த தந்தை ;அவனிடம் "தம்பி இப்படி ஏன்யா தனியா கஷ்டப்பட்ற நீ உம் நு ஒரு வார்த்தை சொல்லு உடனே உனக்கு பொண்ணுப் பாத்துடலாம்" என்றார்...

எனக்கு என் ப்ளாஷ்பேக் ஞாபகம் வந்தது......