Showing posts with label கனவு. Show all posts
Showing posts with label கனவு. Show all posts

Wednesday, July 3, 2013

கனவில் மரணம்

இந்த சினிமால தான் குடும்பத்துல யாரு செத்தாலும் அடுத்த செகண்ட்ல டூயட் பாட முடியும்..ஆனா நிஜ வாழ்கையில கனவுல ஏதாச்சும் மரணம் சம்மந்தமா வந்தால் கூட அன்றைக்கு கொஞ்சம் disturbed  ஆ இருக்கும்...கொஞ்ச நேரத்திற்காவது...அப்படி தான் ஒரு நாள்....


அலுவலக தேனீர் இடைவேளையின் போது ...புதிதாக நியமித்த coffe day தானியங்கி இயந்திரத்தில் விஜய் காலையிலிருந்து 10 வது முறையாக அங்கு காபி பிடித்துக்கொண்டிருந்தான்...

என்ன தம்பி , "எத்தனாவது கப்.." என்று கேட்க...

"இன்னைக்கு கம்மி தான் ணா..இந்த CCTV camera recording மட்டும் யாராச்சும் பார்த்தாங்க...என்னை இனிமே இந்த காபி மெஷின் பக்கமே விடமாட்டாங்க ணா.." ..என்றான் என்னிடம்..

அவன் எதிர்ப்பார்த்த reaction ஏதும் நான் கொடுக்காததால்..."என்ன ணா வீட்ல அண்ணிக்கூட சண்டையா..ரொம்ப டல்லா இருக்கீங்க..?"..என்றான்.

"ஆமாம் தம்பி ..காலைல ஒரு கனவு கண்டேன்..அதுனால தான் பிரச்சனையே"..என்று என கனவால் வந்த சண்டையை பற்றி விவரிக்க ஆரம்பித்தேன்...


தஞ்சை பெரிய ஆஸ்பத்திரிக்கு நானும் என் நண்பன் சுந்தரும் வண்டியில் செல்ல....அங்கு என் தெரு மக்கள் ராஜி அக்காவும் , அவர்களுது அம்மாவும்,சுரேஸ் அம்மாவும் மற்றும் சிலர் அமர்ந்திருக்க ..சற்றே தூரத்தில் எனது பாட்டியும் அமர்ந்திருந்தார்கள்.மாலை பொழுது போலும் , வெளிச்சம் குறைவாகவே இருந்தது.யாருக்கோ உடல் நிலை சரியில்லை,அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.நான் விசாரிக்க வந்ததை நினைத்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.இவர்களுக்கு சுந்தர் அறிமுகமில்லாததால் அவன் வாசலில் காத்திருந்தான்.நான் சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு கிளம்பினேன்.அப்போது , ஏதோ அவர்களுக்கு பணப் பிரச்சனை.என்னிடம் தயங்கி தயங்கி பணம் கேட்க முயன்றனர்.அவர்கள‌து தயக்கம் எனக்கு புரிந்தது.அப்பொழுது எனது பர்ஸில் 1000ரூ இருந்தது.இது தான் என்னிடம் இருக்கு என்று அவர்களிடம் நீட்ட , அவர்களும்  பண முடைக்கு ஏதோ காரணம் சொல்லிவிட்டு என்னிடமிருந்து வாங்கி கொண்டனர்.அப்பொழுது அங்கிருந்த ஒருவன் (இவர்களுக்கு தெரிந்தவன் போல) .... "பணம் கொடுத்ததுக்கு ஏதாச்சும் ரசீது மாதிரி வாங்கிக்குங்க" என்று சொன்னான்..

அவனது பேச்சுக்கு மற்றவர்களும் ஆமாம் சாமி போட , எனக்கு ஏனோ தயக்கமாகவே இருந்தது.எனக்கு தெரிஞ்சவங்க தான் என்று நான் சொல்ல முயன்றும் அதனை யாருமே பொருட்படுத்தேவேயில்லை.ஒரு வெள்ளை தாளில்  எழுதி வாங்கிக் கொண்டனர்.நான் கிளம்பி வெளியே வந்துவிட்டேன்.சுந்தரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது.."டேய் எனக்கு ஏதோ doubt ஆ இருக்கு டா"என்றேன்.அப்போது அந்த ஆசாமியும் அங்கு வந்தான்.அந்த இடம் ஆஸ்பத்திரியாக இல்லாமல் ஏதோ பஜார் போல தோற்றம் அளித்தது.சற்று பகல் போல வெளிச்சம் இருந்தது.அந்த ஆசாமியை நிறுத்தி , அந்த ரசிதை திருப்பிக் கேட்டேன்.அவன் முதலில் ஏதேதோ மழுப்பினான்.எங்களுக்குள் வாக்குவாதம் சூடேறியது."யோவ் நீ வட்டிக்கு என்கிட்ட வாங்கி அந்த அம்மாவுக்கு கொடுத்திருக்க ..ஒழுங்கா வட்டியோட பணத்தை கொடுத்திட்டு இந்த பேப்பரை வாங்கிக்கோ"என்று இரண்டு மூன்று கெட்ட வார்த்தைகளுடனும் அடியாட்களுடனும் சொன்னான்.

அருகில் சுந்தர் இருக்கும் தைரியத்தில்  நான் கை ஓங்கிவிட்டேன்....சுந்தரும் களத்தில் இற‌ங்கிவிட்டான்..சிங்கம் மீசையோடு என்னை பின்னால் அடிக்க வந்த ஒருவனை பலார் என்று அடித்தான்.திடிரென ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர்.ஒருவன் அருவாளுடன் என்னை வெட்ட வர,சுந்தர் அருகிலிருந்த பெரிய டயரை உருட்டிவிட்டு என்னை காப்பாற்றினான்.அரிவாள் வெட்டு அந்த டயருக்கு விழுந்தது.

எங்களால் சிறிது நேரம் தான் தாக்குபிடிக்கு முடிந்தது...சுந்தர் சற்று தூரத்தில் ஒருவனை அடித்துக் கொண்டிருக்க.என்னை ஒருவன் அரிவாளால் வெட்டினான்...

"இதான் நடந்தது ..அப்போ தான் நீ போன் பண்ண" என்று பொறுப்புடன் ஊரிலிருந்து என்னை எழுப்பிவிட்ட மனைவியிடம் நான்  சொல்ல...

"உங்களுக்கு காலையில எழுப்பிவிடறதுக்கு ஒரு ஆளு..அலாரம் வைச்சு எழுந்துருக்க வேண்டியது தானே..இப்படி ஏன் செவ்வாய் கிழமை அதுவுமா சாவு அது இதுனு சொல்லிறீங்க" என்று கோபத்தில் பட்டென போனை வைத்தாள்.

என்று எனது flashback விஜயிடம் சொல்ல..

"அண்ண..உங்க கனவுல பிழை இருக்கு .." என்றான்

"என்னடா சொல்ற..போன தடவை மாதிரி ..இது கனவே இல்லை ...subconscious நு ஏதாச்சும் சொல்ல போறியா?" என்றேன்

"கனவுல நமக்கு சாவே வராது.." என்றான்...

அவன் சொன்ன பிறகு தான் எனக்கு என் கனவின் climax ஞாபகம் வந்தது.அந்த அரிவாள் வெட்டிற்கு பிறகு நான் சுந்தராக மாறினேன்...சுந்தர் கதாபாத்திரத்தில் நான்..நான் இறந்ததிற்காக அழுகிறேன்..அப்பொழுது தான் போன் வந்து என்னை எழுப்பிவிட்டது.

மதனின் மனிதனும் மர்மங்களும் புத்தகத்தில் கனவை எழுந்தவுடன் re-call பண்ணுங்க முடிஞ்சா ஒரு நோட்,பேனா பக்கத்துல வைச்சிக்கிட்டு தூங்குங்க.எழுந்த உடனே எழுதிடுங்கன்னு சொல்லுவார்.சரி நாம யாருகிட்டையாச்சு சொல்லி வைப்போம் என்ற உயரிய நோக்கத்தில் தான் அதை வீட்டில் சொன்னேன்...எதனால் அந்த கடைசி காட்சியை நான் மறந்தேன் என்று தெரியவில்லை.

கனவின் அடிப்படை

சுந்தர் ஊரிலிருந்து வந்திருந்தான் , நானும் ஆவனும் தஞ்சையில் "master check-up" பற்றி விசாரிக்க சில ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தோம்

ராஜி அக்கா , சுரேஸ் அம்மா பற்றி வீட்டில் அம்மா சொல்லி கொண்டிருந்தார்கள்

முதல் நாள் தான் நான் ஏ.டி.ம் யில் 1000 எடுத்திருந்தேன்..


சரி போஸ்ட் ரெடி பண்ணியாச்சு..இதை வைச்சு தான் வீட்ல சமாதானாம் செய்ய முயற்சி பண்ணனும்..ஒரு கனவால எவ்வளவு confusion.

Friday, June 14, 2013

கனவில் கலர் வருமா

நண்பர் மதி எழுதிய முதல் போணி நூலில் "கனவில் கலர் வருமா" என்று ஒரு சிறுகதை....ஒரு அறிவியல் புத்தகத்தில் (http://en.wikipedia.org/wiki/The_Interpretation_of_Dreams) கனவில் வண்ணங்கள் வராது என்று படிக்கிறார்....அதனை பற்றிய சிந்தனைகள் அவர் மனதில் பதிந்துவிட ...சில நாட்களுக்கு பிறகு அவர் கனவில் , அவருக்கு பிடித்த பெண்  ஒருத்தி கனவில் வருகிறாள்..அவரது அம்மாவிடம் ,இவள் தான் என் காதலி என்று அறிமுகம் செய்கிறார்...கனவு கலைகிறது....கனவில் வந்த அம்மாவின் நெற்றி குங்குமம்,காதலியின் பச்சை சுடிதார் என்ற வண்ணங்கள் யாவும் அவர் ஞாபகத்தில் வர..ஒரு வேளை கலர் (பெண்) வந்தால் கனவில் கலர் வருமோ ...அதோடு வண்ணங்கள் பற்றின நினைப்பு தான் அவ்வாறு செய்ததோ  என்று முடிக்கிறார்...

இதனை படித்ததிலிருந்து..எனக்கு ஒரு குற்ற உணர்வு..கனவில்லா தூக்கமே எனக்கு மிகவும் குறைவு..அதுவும் வகுப்பில் உறங்கும் பழக்கம் 11ம் வகுப்பில் துவங்கியது..அந்த‌ பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து எனது கல்லூரியில் "வகுப்பில் உறங்கும் கலை"க்கு தனியாக பட்டம் பெற்றிருக்கிறேன்...வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்த துவங்கிய 5வது நிமிடத்தில் உறங்கி ..அதே வாத்தியார் என் கனவில் வந்து நடத்திய‌ பாடத்தினை நோட்ஸ் எடுத்துள்ளேன்....இந்த சாதனையை கின்னஸ் ரிகார்டில் பதிய முடியமா என்று தெரியவில்லை ஆனால் இது போன்று கனவு காண்பதில் பல சாதனைகள் செய்த எனக்கு..கனவில் கலர் வருமா?என்ற‌ கேள்வி ஓர் பெரிய உறுத்தலாகவே இருந்தது...

கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு பிறகு இந்த‌ கேள்விக்கு விடையாக ஓர் கனவு வந்தது இரு தினங்களுக்கு முன்பு....

அன்று...காலையில் 6.30க்கு எழுந்தேன்..சே..6.30 தான் ஆகுது ஒரு 7 மணி வரைக்கும் தூங்கலாம் என்று மீண்டும் உறங்க....கனவில்....

தஞ்சையில் என் வீட்டு பலா மரத்தில் ஏறி , ஓர் பலாப் பழத்தை பறிக்கிறேன்.அப்பொழுது அருகிலிருந்த மற்றொரு பழம் கீழே விழுந்து உடைகிறது..அதன் சுளைகள் சில‌ மண்ணில் விழுகிறது...சரி அதை கழுவிக்கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்கிறேன்..வீட்டிற்கு வந்து நான் பறித்த பலாவை அறுக்கிறேன்...சுளைகள் அனைத்தும் பச்சை நிறத்தில் கொய்யா வடிவத்தில் இருந்தது..என்னடா ஆச்சரியமா இருக்கு என்று அருகிலிருந்த அம்மாவிடம் கேட்கிறேன்..அம்மா எந்தவித ஆச்சரியமும் இல்லாமல் ,"சாப்பிடு நல்லா இருக்கும்" என்கிறாள்.அதன் தோல் கொஞ்சம் கடினமாக இருப்பதை உணர்கிறேன்..."அம்மா, 50 சுளை எடுத்து வை..ஊருக்கு எடுத்திட்டு போறேன்.."என்று சொல்கிறேன்....

எழுகிறேன்...கனவின் பிம்பங்கள் சிதற....அதற்குள் அனைத்தையும் நினைவுக்குள் கொண்டு வந்தேன்...

கனவில் கீழே விழுந்த மஞ்சள்  நிற‌ பலா சுளைகளும் ,விழுந்தபோது சுளைக‌ளில் ஒட்டிய மண்ணும் , ஆச்சரியம் தந்த பச்சை நிற சுளைகளும் உறுதி செய்தது கனவில் கலர் வருமென்று....கலா மட்டுமில்லை பலா வந்தால் கூட கனவுல கலர் வரும் என்று எதுகை மோனையா ஒரு facebook status யோசிக்க...

சரி...என் கனவின் அடிப்படையாக இருந்தது என்ன என்று சற்று எனது யோசனையை மாற்றினேன்

1.உற‌ங்குவதற்கு முன்  , எஸ்.ரா வின் "எனக்கு ஏன் கனவு வருது" என்ற சிறுவர் நூல் ஒன்றை படித்தேன்
2.ஊரில் என் வீட்டில் பலா காய்த்து, அப்பா அதனை அறுத்திருந்தார்
3.அடுத்த முறை அலுவலக நண்பர்களுக்கு பலா சுளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது
4.முதல் நாள் வீட்டில் சமைக்கும் போது செளசெள சாம்பார் செய்கிறேன்..அதற்கு குக்கரில் எத்தனை விசில் வைக்க வேண்டும் என்று தெரியவில்லை..1 விசிலில் நிறுத்தி எடுக்க..அதனை தொட்டு பார்த்தேன்...கொஞ்சம் கடினமாக இருந்தது
5.சென்ற முறை ஊருக்கு சென்ற போது , என் மகளுக்கு கொய்யா பழம் பறித்து விளையாட தந்தேன்...

இதை பற்றி அலுவலக நண்பன் ஒருவனிடம் தேனீர் இடைவேளையில் சொல்ல..

"அண்ண,நீங்க கண்டது கனவேயில்லை அது உங்க subconscious mind..."என்று அவன் எனக்கு ஏதோ பதில் சொல்ல...

"தம்பி ..இத்தனை வருசமா கனவு காண்றோம் எங்களுக்கு தெரியாதா..வா..ரெண்டு பேரும் ரொம்ப நேரமா மொக்கை போட்டது போதும்..போய் பொழ‌ப்ப பாப்போம் வா.."என்று கிளம்ப...

எனக்குள் மீண்டும் ஓர் புது கேள்வி எழும்பியது...அப்போ நான் கண்டது கனவேயில்லையா..?