(சஞ்சிகை இதழில் சில மாற்றங்களுடன் இந்தக் கட்டுரை வெளியானது)
”1729” இந்த நம்பர் பற்றித் தெரியுமா உங்களுக்கு.உடனே “கேட்டதும் கொடுப்பவனே...” என்று கூகுளாண்டவரிடம் போய் நிற்காதீங்க.கொஞ்சம் யோசிச்சுத்தான் பாருங்களேன்... . .
”1729” இந்த நம்பர் பற்றித் தெரியுமா உங்களுக்கு.உடனே “கேட்டதும் கொடுப்பவனே...” என்று கூகுளாண்டவரிடம் போய் நிற்காதீங்க.கொஞ்சம் யோசிச்சுத்தான் பாருங்களேன்... . .
.
”இந்த நம்பர்ல ஒன்னும்
சுவாரஸ்யம் இருப்பதா தெரியலைல” .இப்படித்தாங்க அவரும் நம்ம ராம் கிட்ட கேட்கிறவரைக்கும்
நினைச்சாரு.
லண்டன்
நகரின் குளிரும், அந்நகரில் கிடைத்த உணவு வகைகளும் ராமிற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்த ஒவ்வாமை அவரை மருத்துவமனையில் நோயாளியாகப் படுக்க வைத்தது. அவரைக் காண டாக்சியில் சென்று கொண்டிருந்தார் அந்த ஆசாமி. மருத்துவமனை வாசலில்
இறங்கியதும், தான் வந்த டாக்ஸியின் எண்ணை பார்த்தார். 1729 என்று இருந்தது. அந்த எண்ணை வைத்து ராமை சீண்டிப்பார்க்கலாம் என்று அவருக்கு ஒரு
எண்ணம் அவர் மனதில் உதித்தது. ராமை உள்ளே சென்று பார்த்து, நலன் விசாரிப்பை முடித்துவிட்டு, எண்களை பற்றி பேச
துவங்கினார். 1729 என்ற எண்ணை பற்றி ஆரம்பித்தார்.
“இந்த நம்பர்ல ஒன்னும்
சுவாரஸ்யம் இருக்கிற மாதிரி தெரியல.இது ஒரு டல் நம்பர் போலத் தான் இருக்கு”
எண்களைப் பற்றிப் பேசியதும்
சோர்ந்த உடல் சுறுசுறுப்பானது.பிள்ளையின் பெருமையை பேசி பூரிப்படையும் தகப்பனைப் போல் , 1729 எண்ணின்
பெருமைகளை பாடினார் ராம்.
”யார் சொன்னது?அந்த நம்பரில் ஒரு சின்னச் சூட்சமம் இருக்கு” என்று அதற்கான விளக்கத்தையும் சொன்னார்...
அவரது விளக்கம்... [இரண்டு , மூன்று தடவை பொறுமையாக படிக்கவும்]
”it
is the smallest number expressible as the sum of two cubes in two different
ways”
1729
= 13 + 123 = 93 + 103.
a3 + b3 = x3 + y3
இந்தக் condition பூர்த்தியானால் நமக்கு கிடைக்கும் சிறிய ( முதல் எண்
) எண் 1729.
அவரோட இந்தக் கண்டுப்பிடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய
வெகுமதி என்ன தெரியுமா ? பொதுவாக எண்கள் தான் ஒரு
மனிதனனின் அடையாளமாக இருக்கும்.பள்ளி,கல்லூரியில் ஏன்
அலுவலகத்தில் கூட எண்கள் தான் நமது அடையாளம்.ஆனால் 1729 என்ற எண்ணிற்கு ஒரு நபரின் பெயரை அடையாளமாகச்
சூட்டியிருக்கிறார்கள்.ஆமாம் ,அந்த எண்ணின் பெயர் ”ராமானுஜன் எண்”.
ராமானுஜன் பிறந்த
நாளையொட்டி (டிசம்பர் 22) , இணையத்தில் சில பகிர்வுகள்
வந்தது.அப்பொழுது உலாவியதில் கிடைத்த தகவல்தான் இது.தகவல் எனக்குப் புதிதாக
இருந்தது.என்னை மாதிரி சிலர் இருப்பார்கள் என்ற நோக்கத்துடனே இதைப் பகிர்கிறேன்.அவரை
பற்றின புத்தகங்களை தேடியபோது கிடைத்த
புத்தகங்கள் தான் இவை.
ராமானுஜம் 125 - ஆயிஷா நடராஜன்
சிறுவர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் - 125 பாயிண்ட்களாக அவரது வாழ்வை கொடுத்திருக்கிறார்.ஒரு புத்தகத்துடனான உறவு அத்துடன் முடிவதில்லை,அது நேராகவோ அல்லது மறைமுகமாவோ
மற்றொரு புத்தகத்தை கைக்காட்டிவிடுகிறது.அப்படித் தான் முடிவில் ராமனுஜம் பற்றின
சில ஆங்கிலப் புத்தகங்களின் பெயரையும் கொடுத்திருக்கிறார்.
- The Man who knew Infinity
- The Indian Clerk
- The First Class man(Drama)
- A disappearing Number
- Srinivasa Ramanujan and his Number
கணித மேதை ராமானுஜன் -
பத்ரி
ராமானுஜன் வாழ்வினை சுருக்கமாகவும்,முழுவதுமாகவும்,சுவாரஸ்யமாகவும் சொல்கிறது
இந்த புத்தகம்.நமது கல்வித் திட்டம் , வறுமை , கால்கட்டு போட நினைக்கும் தாய் என template
வாழிவின் சிக்கல்களை மீறி எப்படி அவரது திறமைகள் வெளிவந்தது என்பதை சுவாரஸ்யமாக
சொல்லும் புத்தகம். Infinity மீது அவருக்கு தீரா மோகம் இருந்தது.வறுமையும் , குடும்ப
பொறுப்புக்களும் அவரை அவ்வப்போது துறத்துவதும்.அதனை அவர் மீட்பதுமாகவே அவரது
வாழ்கை செல்கிறது.லண்டனிலிருந்து அவருக்கு அழைப்பு வரும்போதுக் கூட கடல் தாண்டி
செல்வது சாமி குற்றம் என்று தடை வருகிறது.கோவிலில் உத்தரவு கிடைத்தப் பின்னரே அவரது பயணம்
துவங்குகிறது.நமது நாட்டில் பட்டம் பெற முடியாமல் தவித்த அவருக்கு லண்டனில் உயரிய
பட்டம் கிடைக்கிறது என்பதை நாம் வாசிக்கும் போது , நமது கல்வி சட்டங்கள் மீது
வெறுப்பே வருகிறது.
அவரது கண்டுப்பிடிப்புகள் நமக்கு புரியாமல் போகலாம் ஆனால் அவரது தேடலும்,ஆற்றலும்
நமக்கு தெள்ளத் தெளிவாக புரிகிறது.இது போன்று நமது மண்ணில் வாழ்ந்த மாமேதைகளை
பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் ஒருவித சுகத்தை அனுபவிக்கிறது.ஹீரோக்களாக நாம் கொண்டாட வேண்டியது இவர்களை தானே.
எனது ஊர் தஞ்சை என்ற போதிலும் 2 வருடத்திற்கு முன்பு தான்
கும்பகோணத்திலுள்ள ராமனுஜன் இல்லத்திற்கு சென்றேன்.வெளியே மழை சோவென பெய்ததுக் கொண்டிருந்தது , வாசலில்
செக்யூரிட்டி தனது கைபேசியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.உள்ளே ராமானுஜத்தின்
நினைவுகள் தாங்கிய பொருட்கள் சில அவர் துளைத்த இரவிற்கும் சேர்த்து உறங்கிக்
கொண்டிருந்தது.நான் மெளனமாக பார்த்துவிட்டு மழையில் நனைந்தவாரே திரும்பினேன்.
Good information machi....Padikanomnu thonuthu...aaana book eduthale thookam varuthu....
ReplyDelete