Saturday, January 3, 2015

2014 வாசிப்பு - வரலாறுஇந்தப் பதிவுகளை தொடர்ந்து....

“அப்பாடா இனிமே வரலாறு பக்கமே போக தேவையில்லை”, பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் எனக்கு மனத்தில் தோன்றியது இதுதான். அந்த அளவிற்கு வரலாற்றுடன் எனக்குத் தகராறு. சமீபகாலமாக வாசிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. அதுவே என்னை வரலாற்றின் பக்கம் இழுத்தும் சென்றது. அப்படி வரலாற்று சம்மந்தமான நான் படித்த சிலப் புத்தகங்கள் பற்றி..

17.இந்தியப் பிரிவினை - மருதன் 


பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்புகள் என்னென்ன எவ்வாறு பிரிக்கப்பட்டது மற்றும் பிரிவினையில் ஜின்னா, நேரு, மவுண்ட் பேட்டன் போன்ற தலைவர்களின் நிலை என மூன்று தளங்களில் இந்த புத்தகம் பயணிக்கிறது.Mad House: இதுதான் இந்தியப் பிரிவினையின் பொறுப்பை மவுண்ட்பேட்டனிடம் ஒப்படைக்கும்போது சொல்லப்பட்ட வார்த்தைகள். அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் துவங்கிய புத்தகம் மெல்ல மெல்ல பிரிவினையின் ஆரம்பப் புள்ளிக்கு நம்மை இழுத்துச் செல்கிறது. காங்கிரஸ் எவ்வாறு எதற்காகத் துவங்கப்பட்டது, எந்த சூழ்நிலையில் எப்பொழுது யாரால் பாகிஸ்தான் எனும் தனி நாடு கோரிக்கை வைக்கப்பட்டது, ஜின்னா ஏன் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தார் என நகர்கிறது. ஒரு கட்டத்தில் காந்தி “ஏன் இரண்டாக பிரிக்க வேண்டும், முஸ்லீன் லீகிடமே இந்தியாவை ஒப்படைத்துவிடலாம்” என்றாராம். காந்திக்கு பிரிப்பதில் கடைசிவரை விருப்பம் இருந்ததேயில்லை. பிரிவு என்ற முடிவு வந்ததும் இங்கு கலவரங்கள் வெடிக்கும் என்ற பயம் அவருக்கு மட்டுமே இருந்தது. ஏனோ ஜின்னாவிற்கும் நேருவிற்கும் அப்படி தோன்றவில்லை. சுதந்திரப் போராட்டம் பற்றிய நிகழ்வுகள் பள்ளிப் பாடங்கள் மூ
லமாகவும் சில‌ திரைப்படங்களின் மூலமாகவும் மட்டுமே நம்மிடம் பதிந்திருக்கிறது. நம்மை சுற்றி தகவல்கள் நிறைந்திருக்கிறது, அதைத் தேடும் ஆர்வம் மட்டும் தான் இங்கு குறைவாக இருக்கிறது, அப்படி ஆர்வம் ஏற்படும் போது அதைத் தூண்டிக்கொண்டே இருத்தல் வேண்டும் பசியைத் தூண்டும் starters போல. அப்படி எனக்கு அமைந்த starters தான் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகம் பற்றி மதிப்புரை தளத்தில் வெளியான எனது கட்டுரை. இங்கே.


18.குஜராத் 2002 கலவரம் - சரவண‌கார்த்திகேயன்குஜராத் என்றதும் நினைவிற்கு வருவது காந்தி, மதுவிலக்கு, பூகம்பம், மோடி மற்றும் 2002 கலவரமுமாகத்தான் இருக்கும். அந்தக் க‌லவரத்திற்கு அடித்தளமாக‌ அமைந்ததுதான் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம். 2002 ல் நடந்தது கலவரம் அல்ல அது திட்டமிட்ட இன ஒழிப்பு என்ற நடுநிலை ஆய்வாளர்களின் கருத்துடன் இந்தப் புத்தகம் துவங்குகிறது.இந்தக் கலவரத்தில் வன்முறையாளர்களின் தீவிரங்களை அறிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசின் மெத்தனம். விசாரிப்பின்போது அவர்கள் சொல்லும் காரணம், போதுமான போலிஸ் இல்லை, அதிகாரம் இன்னும் கிடைக்கவில்லை போன்றவை. அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி, பெஸ்ட் பேக்கரி, காந்தி நகர் என வெவ்வேறு இடங்களில் நடந்த கலவரங்கள். உமர்ஜி ஹீசைன், மூத்த காங்கிரஸ் தலைவர் இஷான் ஜாஃபிரி போன்ற தலைவர்களின் நிலையே கேள்விகுறியானது. உதவிய சில நல்லுள்ளங்கள், கலவரத்தில் பெண்களின் ஈடுபாடு என இந்தப் புத்தகம் நகர்கிறது.சில பத்திரிக்கைகளின் மூலம் கலவரங்கள் தூண்டப்பட்டிருக்கிறது. ஆனால் வேறு சில பத்திரிகைகளின் மூலம்தான் இந்தக் கலவரத்தின் உண்மையான விவரம் வெளியுலகத்திற்கே வந்திருக்கிறது. தருண் தேஜ்பாலின் பத்திரிகை நடத்திய ரகசியப்  புலனாய்வு “The Truth : Gujarat 2002″ வெளியானது. இதுபோன்ற வேறு சில குழுக்கள் செய்த விசாரனை பற்றியும், அவர்களை மீட்க போராடியவர்கள் பற்றியும் என அனைத்தையும் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. சம்பவம் சார்ந்த சில ஆவணங்களும், தகவல்கள் திரட்ட உதவிய இணையத்தளங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் என இறுதியில் இணைக்கப்பட்டப் பட்டியல் வாசகரின் தேடலுக்கு உதவியாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது மதம் பிடித்த யானையின் பிடியில் சிக்கி மாண்டு போகும் பாகனின் உருவம் நினைவிற்கு வருகிறது. ஏனென்று தெரியவில்லை.


இந்தப் புத்தகம் பற்றி  மதிப்புரை தளத்தில் வெளியான எனது கட்டுரை. இங்கே.


19.மெளன வசந்தம் - ரேச்சல் கார்சன்  [ தமிழில் - பூவுலகின் நண்பர்கள்]


Silent Spring என்ற ஆங்கிலப் புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு மற்றும் சுருங்கிய வடிவமே இந்தப் புத்தகம்.ரேச்சல் கார்சன் பற்றியும் அவரது படைப்பும் (ஆங்கிலத்தில்) இந்தத் தளத்தில் கிடைக்கிறது.நந்தா படத்தின் கடைசி காட்சி ஞாபகம் இருக்கா,விஷத்தை சோத்துல கலந்து மகனுக்கு தர கொடூரமான‌ காட்சி.அந்தக் காட்சி தான் இப்போ நம்ம வீட்டிலும் நடந்துக் கொண்டிருக்கிறது(கொஞ்சம் மாறுதலுடன்) என‌ முதல் முதலில் இந்த உலகத்திற்கு எடுத்துரைத்த புத்தகம் தான் Silent Spring .நம்ம நம்மாழ்வாரின் கட்டுரை மூலமே  எனக்கு இந்த புத்தகம் அறிமுகமானது.
இந்த புத்தகம் பூச்சி மருந்துக்களின் ஆபத்து பற்றியும் ,பூச்சிகளிலிருந்து விளைச்சலை காப்பாற்ற‌ மாற்று வகை முறைகளின் அவசிய‌த்தையும் உணர்த்துகிறது.அமெரிக்க மண்ணில் தடை செய்யப்பட்ட சில பூச்சிக்கொள்ளி மருந்துக்கள் ஏற்றுமதிகளுக்கு அனுமதிக்கப்படுகிறதாம்...இந்த வரி படித்ததும்..வடிவேலுவின் வசனம் தான் ஞாபகம் வந்தது.."உங்களுக்கு வந்தா இரத்தம் , எங்களுக்குனா தக்காளி சட்டினியா"...

இந்தப் புத்தகத்தில் வரும் சில வரிகள்..
இம்மாதிரி விஷயங்களை யார் தீர்மானித்தது?மரணத்தை பரப்பும் இந்த நடவைக்கையை யார் அங்கீகரித்தது?தராசில் ஒரு தட்டில் வண்டுக்கள் தின்றழிக்க கூடிய இலைகளையும் அடுத்த தட்டில் விஷத்தால் இறந்த பறவைகளின் உடல்களையும் யார் வைத்தது,சடசடக்கும் சிறகு ஒலிகள் இல்லாத ஒரு உலகம் தான் மனிதனின் இறுதி இலட்சியம் என்று யார் தீர்மானித்தது?வசந்தத்தை மெளனமாக்கியே தீருவேன் என்று முடிவு செய்தது யார்?இதில் சாதாரண மனிதனின் பங்கென்ன?
இதில் சாதாரண மனிதனின் பங்கென்ன?

விடை தெரியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறோம்...வேறென்ன சொல்ல..


இந்தப் புத்தகத்தின் முழு மொழிப்பெயர்ப்பும் கிடைக்கிறது.


20.கனவுகளின் விளக்கம் - சிக்மென்ட் ஃப்ராய்ட் [தமிழில் - நாகூர் ரூமி]


இது முழு தமிழாக்கம் அல்ல , interpretation of dreams என்ற புத்தகத்தின் அறிமுகமே.ஃப்ராய்ட் என்பவர் யார் , அவர் மருத்துவ துறையில் என்ன செய்தார்.அவருடைய புத்தகம் என்ன சொல்கிறது.உலகினை மாற்றிய புத்தகம் என சொல்வதெற்கு காரணம் என்ன? இந்த கேள்விகளுக்கு விடையாக இந்தப் புத்தகம் இருக்கும்.அதிகாலை கனவு பலிக்கும்  , கனவில் பாம்பு வந்தால் நல்லதோ கெட்டதோ நடக்கப் போகிறது.இதுப் போல நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.நமது கலாச்சாரத்தில் கனவு என்பது எதிர்காலத்தின் குறியீடாகவே பார்த்திருக்கிறோம்.ஆனால் இவர் எல்லாமே(அதிகப் பட்சமான கனவுகளை) மனதில் பதிந்திருக்கும் காம ஆசையை வைத்துச் சொல்கிறார்.அதற்கு சில எதிர்ப்புகளும் இருக்கிறது.ஒரு பெண் தனது கனவில் ஒரு கண்ணாடி மேஜையின் மேல் ஒரு கேக் இருப்பதையும் அதில் மூன்று மலர்கள் இருப்பதையும் காண்கிறாள்,அதனைக் கூட அவளோட திருமண ஆசையால் வந்தது என விளக்கம் சொல்கிறார்.இதுப் போல பல விளக்கங்கள் உள்ளது.சில விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததுதாக இருக்கும்.இருந்தும் சவாசிக்கும் போது அதை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும். வாய்ப்புக் கிடைத்தால் முழு மொழிப்பெயர்ப்பையும் படிக்க வேண்டும்.

21.எனது இந்தியா - எஸ்.ராமிக முக்கியமான புத்தகம் . இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளை சுவாரஸ்யமாகவும் , சில அரிய தகவல்களுடனும் சொல்லியிருப்பார் எஸ்.ரா. சில கட்டுரைகள் இணையத்திலும் கிடைக்கிறது.பொறுமையாக படிக்க வேண்டிய புத்தகம்.காந்திக் கொலை வழக்கு , செண்பக ராமன் , அக்பர் , திப்புசுல்தானின் வாரிசு,வாஞ்சிநாதன்,ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு பலி வாங்க லண்டன் வரை சென்றவர் பற்றின தகவல்கள்,மலேரியா காச்சல் வந்த போது ஆங்கில‌ அரசு எப்படி நடந்துக் கொண்டது,புலிகளின் வேட்டை,சில‌ கொள்ளையர்கள் பற்றின தகவல்கள், உப்புக்காக நடந்த போராட்டம் என நீண்ட பட்டியல் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.சிறுவர்களுக்கும் படித்துக்காட்டி வரலாற்றின் மீது ஆர்வத்தை தூண்ட இந்தப் புத்தகம் உதவும்.இதன் தொடர்ச்சியாக மறைக்கப்பட்ட இந்தியா என்ற புத்தகம் வந்திருக்கிறது.

மேலும் தொடரும்...

No comments:

Post a Comment