Friday, January 2, 2015

புத்தகம் : குஜராத் 2002 கலவரம்

(மதிப்புரை தளத்தில் வெளியானது) 

சிறுவயதில் எனக்கு ரயில் எப்பொழுதும் ஆனந்தத்தின் குறியீடாகத்தான் இருந்திருக்கிறது. முதல் ரயில் பயணம் இன்றும் நினைவில் உள்ளது. பயணச் சீட்டு கொடுக்குமிடம், ரயிலுக்காக காத்திருக்கும் தருணம், ஜன்னல் வழியே தெரியும் காட்சிகள் என ஒவ்வொன்றும் அழகாகத் தோன்றியது. ஆனால் ரயில் என்பது மதக்கலவரங்கள் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களின் தளமாக‌ இருப்பது இந்திய வரலாற்றை எட்டிப் பார்க்கும்போதுதான் புரிகிறது. இந்தியப் பிரிவினையின்போது இரு நாட்டிற்கும் இடையே பயணித்த உயிரற்ற உடல்கள், மும்பை ரயில் குண்டு வெடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு என பட்டியில் ஒன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது.
குஜராத் என்றதும் நினைவிற்கு வருவது காந்தி, மதுவிலக்கு, பூகம்பம், மோடி மற்றும் 2002 கலவரமுமாகத்தான் இருக்கும். அந்தக் க‌லவரத்திற்கு அடித்தளமாக‌ அமைந்ததுதான் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம். 2002 ல் நடந்தது கலவரம் அல்ல அது திட்டமிட்ட இன ஒழிப்பு என்ற நடுநிலை ஆய்வாளர்களின் கருத்துடன் இந்தப் புத்தகம் துவங்குகிறது. அத்துடன் ஆசிரியர் வாசகருக்கு எச்சரிக்கை ஒன்றையும் முன்வைக்கிறார். அது, “இந்தப் புத்தகம் இந்து மதம் அல்லது நரேந்திர மோடிக்கு எதிரான அல்லது காங்கிரஸூக்கு ஆதரவானது அல்ல. ” இந்த எச்சரிக்கையை மனத்தில் கொண்டு வாசிப்பது அவசியமானது. 
குஜராத் நகரத்தின் வரலாறு, இந்து- முஸ்லீம் இடையே வெவ்வேறு காலத்தில் ஏற்பட்ட கலவரங்கள், ஆர். எஸ். எஸ்ஸின் வளர்ச்சி பற்றின மெல்லிய அறிமுகங்கள் போன்றவை வாசகரின் தேவையறிந்து பகிரப்படுகிறது. குஜராத் 2002 கலவரத்திற்கு ஒரு துவக்கப் புள்ளியாக இருக்கிறது கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம். சபர்மதி ரயிலில், அயோத்தியில் யாகம் ஒன்றை முடித்துவிட்டு 2000 க்கும் மேலான இந்துக்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் சக முஸ்லீம் பயணிகளுடன் சில தகராறுகள் நடந்திருக்கின்றன. கோத்ரா நிலையத்திற்கு மிகவும் தாமதமாகத்தான் ரயில் வந்தது. அந்தப் பகுதி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி, அங்கு இருக்கும் முஸ்லீம் வியாபரிகளிடனும் தகராறு நடந்திருக்கிறது. ஆதலால் பதட்டமான சூழ்நிலை உருவாகி, ரயிலின் மீது கல் எரிதல் நிகழ்வும் நடந்துள்ளது. ரயில் கிளம்பியும், ரயிலின் சங்கிலி அடிக்கடி பிடித்து இழுக்கப்பட்டதால் சங்கிலியால் கட்டப்பட்ட யானை போல் ரயில் நகரமுடியாமல் தவித்தது.
ரயிலின் சங்கிலி பலமுறை இழுக்கப்பட்டு நிலையத்தைத் தாண்டி நிற்கிறது. அப்பொழுது இரண்டு பெட்டிகளில் திடிரென தீ பரவுகிறது. யார் வைத்தது, எப்படி பற்றியது என இதுவரை ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் அப்பொழுதே உடனுக்குடன் சில உள்ளூர்ப் பத்திரைக்கைகளில் முஸ்லீம்கள்தான் செய்தனர் என்றும்,  பெண்கள் மீதும் அவர்கள் வன்முறை நடத்திருக்கின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்தது. மழைக்காகக் காத்திருந்த காளான் போல வன்முறை ஊரெங்கும் முளைக்கத் துவங்கிவிட்டது. ஆனால் அந்த காலான்களுக்கு எந்த இடத்தில் முளைக்க வேண்டும் என்பது நன்கு தெரிந்திருக்கிறது ஏனென்றால் அவர்கள் கையில் வாக்காளர் பட்டியலும், கேபிள் டி. வி வாடிக்கையாளர் பட்டியலும் இருந்த‌தாம். அரசியல், பணம், பாலினம், வ‌யது என எந்தவிதப் பாகுபடுமின்றி வன்முறைகள் நடந்திருக்கின்றன.
இந்தக் கலவரத்தில் வன்முறையாளர்களின் தீவிரங்களை அறிவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசின் மெத்தனம். விசாரிப்பின்போது அவர்கள் சொல்லும் காரணம், போதுமான போலிஸ் இல்லை, அதிகாரம் இன்னும் கிடைக்கவில்லை போன்றவை. அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி, பெஸ்ட் பேக்கரி, காந்தி நகர் என வெவ்வேறு இடங்களில் நடந்த கலவரங்கள். உமர்ஜி ஹீசைன், மூத்த காங்கிரஸ் தலைவர் இஷான் ஜாஃபிரி போன்ற தலைவர்களின் நிலையே கேள்விகுறியானது. உதவிய சில நல்லுள்ளங்கள், கலவரத்தில் பெண்களின் ஈடுபாடு என இந்தப் புத்தகம் நகர்கிறது, வேறு சில முக்கியமான செய்திகளும் பகிரப்படுகிறது அதிலொன்று, கலவரத்தின்போது சமையல் எரிவாயு ஆயுதமாக‌ப் பயன்படுத்தப்பட்டது இங்குதானாம்.
சில பத்திரிக்கைகளின் மூலம் கலவரங்கள் தூண்டப்பட்டிருக்கிறது. ஆனால் வேறு சில பத்திரிகைகளின் மூலம்தான் இந்தக் கலவரத்தின் உண்மையான விவரம் வெளியுலகத்திற்கே வந்திருக்கிறது. தருண் தேஜ்பாலின் பத்திரிகை நடத்திய ரகசியப்  புலனாய்வு “The Truth : Gujarat 2002″ வெளியானது. இதுபோன்ற வேறு சில குழுக்கள் செய்த விசாரனை பற்றியும், அவர்களை மீட்க போராடியவர்கள் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது. கலவரத்தைப் பற்றி விசாரனை செய்த நானாவதி கமிஷன் சொல்வதென்ன. பதியப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட தீர்ப்புகள், அதன் விபரங்கள், மாறும் சாட்சியங்கள் என அனைத்தையும் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது. சம்பவம் சார்ந்த சில ஆவணங்களும், தகவல்கள் திரட்ட உதவிய இணையத்தளங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் என இறுதியில் இணைக்கப்பட்டப் பட்டியல் வாசகரின் தேடலுக்கு உதவியாக இருக்கும்.
இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது மதம் பிடித்த யானையின் பிடியில் சிக்கி மாண்டு போகும் பாகனின் உருவம் நினைவிற்கு வருகிறது. ஏனென்று தெரியவில்லை.
குறிப்பு ; சில இடங்களில் 2012 என அச்சிடப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment