Monday, August 13, 2012

பொன்னியின் செல்வனும் நானும்....


நம்ம மணி, இருந்தாலும் இப்படி பண்ணிருக்கக் கூடாது...பொசுக்குன்னு பொருளாதாரத்தைக் காரணம் காட்டி பொன்னியின் செல்வன் ப்ராஜக்ட்டை வேண்டாம்னு சொல்லிட்டார்.என்னடா இவன் பழைய செய்தியை வாசிக்கிறான்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. அந்த படம் அவருக்கு மட்டுமில்ல ; பொன்னியின் செல்வன் படிச்ச எல்லோருக்குமே டிரீம் ப்ராஜக்ட் தான். அதான் ஒரே ஃபீலிங். சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்துல நிறைய வரலாற்று படங்கள் வந்திச்சு,ஆனா இப்போ  வரலாற்று  படம்னா க்ராஃபிக்ஸ் , பிரம்மாண்டம் தேவைன்னு நினைக்கிறாங்க.ஆனா ரசிகனா எனக்கு அது ரெண்டும் முக்கியம்னு தோனல.

சரி அதை விடுங்க,எனக்கு...நான் எப்படி பொன்னியின் செல்வன் படிச்சேன்னு சொல்லனும்னு ஒரு சின்ன ஆசை...அதான் ஒரு பதிவு போடலாம்னு....

8-9ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தபோது , பாஸ்கர் மாமா வீட்டில் தான்( என் எதிர் வீடு) முதல் தடவையா "பொன்னியின் செல்வன்.............கல்கி............." என்ற வார்த்தையை கேள்வி பட்டேன்.

"என்ன மாமா , இவ்வளவு பெரிய புக்?" என்று நான் கேட்க..

"அது கல்கியில் 2-3 வருஷமா  தொடரா வந்த                                       'பொன்னியின் செல்வன்',அதை சேர்த்து பைன்ட் பண்ணி வெச்சிருக்கேன்" என்றார்.

Magazine
Kalki Magazine
"கல்கி" என்றால் ஒரு பத்திரிக்கை ..அது தான் எனக்கு தெரியும்.என்னால‌ இந்த ஸ்கூல் புக்ஸையே படிக்க முடிய‌ல.. இவ்வளவு பெரிய புத்தகத்தை எப்ப‌டி தான் படிக்கிறாங்களோ என்று அலுத்துக் கொண்டேன்.நான் மார்க் எடுக்கிறதுக்காக படிக்கிறேன்,ஏன் இவுங்கள்ளாம் படிக்கிறாங்கன்னு சில சமயம் தோனியதும் உண்டு.

10,+2 முடிந்தது.முடிவில் புத்தகத்தின் மீது அதிகம் வெறுப்பு உருவாகி இருந்தது .உள்ளுக்குள்ள‌. எப்டியாவது 4 வருஷம் ஓட்டிட்டா , அப்புறம் புத்தகத்துக்கும் நமக்கும் சம்மந்தம் குறைஞ்சிடும் , அதுக்க‌ப்புறம் ஜாலியா இருக்கலாம் என்ற எண்ணம் அவ்வப்போது மகிழ்வை தந்து கொண்டே இருந்தது.

கடந்த 12 வருடகங்களா என்னை ஆட்டி படைத்த புத்தகங்களை நான் ஆட்டி படைத்தேன் கல்லூரி வாழ்வில்.தேர்வு நேரம் தவிர மற்ற நேரங்களில் அதற்கு மதிப்பு  கொடுத்த‌தே இல்லை.

பொன்னியின் செல்வன் மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டது நண்பன் சுந்தர்  வீட்டில்.அவனது தந்தையும் பாஸ்கர் மாமா சொன்ன அதே கதையை சொன்னார்.என்னை போல் சுந்தருக்கும் புத்தகத்தின் மீது  ஆர்வமில்லாததால்,அவர் சொன்னதை நாங்கள் கண்டுகொள்ளவேயில்லை.

யதார்த்தமாக வகுப்பில் மாண்டி (பட்டப் பெயர்) என்ற நண்ப‌ன் ஒருவனிடம்  "பொன்னியின் செல்வன்" புக் நம்ம "thermo dynamics"  விட பெருசு டா .. என்று சுந்தர் வீட்டில் பார்த்ததை பற்றி சொல்லுகையில்..

"மச்சி  எனக்கு அந்த புக் வாங்கி தாடா..ரொம்ப நாளா தேடிட்டிருக்கேன்..படிச்சிட்டு குடுத்திடுறேன்.."என்றான்..

"என்ன இது வம்பா போச்சு" என்றானது எனக்கு..அவன் புத்தகம்  படிப்பான் என்பதே அப்போது தான் தெரிந்தது...

Kalki
அவனுக்காக அதை சுந்தரிடம் கேட்டு வாங்கிக் கொடுத்தேன் ( பத்திரமாக திருப்பி கொடுக்க வேண்டும் என்ற சுந்தர் அப்பா கண்டிப்புடன் சொல்லி இருந்தார்) .அப்போது கூட அந்த புத்தகத்தைப் புறட்டிப் பார்க்க எனக்கு தோனவில்லை.அவன் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும் வரை  எனக்கு பக்-பக் என இருந்தது.மாண்டி மூலமா தான் கல்கி என்பது அதை எழுதியவர் என்பதே எனக்குத் தெரியவந்தது.

அதுவரை வகுப்பில் திருட்டுத் தனமாக சாப்பிடுவது,பாடங்களை கவனிப்பது போல் உறங்குவது,புக் கிரிக்கெட் விளையாடுவது போன்ற பல முக்கியமான வேலையில் என்னுடன் துனை நின்ற மாண்டி , வகுப்பில் யாருக்கும் தெரியாமல்  'பொன்னியின் செல்வன்' படிக்கத் துவங்கினான்.எனக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது.மீண்டும் அவனது கூட்டனி எப்போது கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.தினமும் அவன் எத்தனை பக்கம் முடித்தான் என்று பார்ப்பேன்.அவனது வேகம் என்னை பிரம்மிக்கச் செய்தது.வெறும் 1 மாத காலத்திற்குள் படித்து முடித்தான்.அவன் semester க்கு கூட இப்படிப் படித்து நான் பார்த்த‌தேயில்லை.

"பாரேன் ..நம்ம பய புள்ளைக்குள்ளையும் ஒரு தெறம இருக்கு...நமக்கு தெரியாம போச்சு " என்று அடிக்கடிஅவனை கிண்டல் செய்வதும் உண்டு..

கல்லூரி முடிந்து , மும்பையில் வேலை கிடைத்து சுமார் 8 மாத காலம் ஓடியது...அதிகம் பேசும் குணமுள்ள எனக்கு , சரியான ரூம் மெட் கிடைக்கவில்லை.அலுவலகத்தில் தமிழ் பேசுவோரும் இல்லை, ரூமில் டிவி கிடையாது.குறைந்த சம்பளம் ஊருக்கும் அடிக்கடி போன் பேச முடியாது,எனது மொபைலில் பாட்டு கேட்கும் வசதி கூட கிடையாது.இப்படி தமிழுடன் இருந்த அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டது. தனிமை நிறைய கிடைத்தது.ஏதோ ஒரு கடையில் ஆனந்த விகடன் பார்க்க , வார‌ந்தோறும் தொடர்ந்து வாங்க‌த் துவங்கினேன்.அதுவரை அதிகம் படித்தது பத்திரக்கையில் வந்த ஜோக் மட்டும் தான்.செய்தித்தாள் படிக்கும் பழக்கம் கூட எனக்குக் கிடையாது.திடீரென ஆனந்த விகடன் படிக்கத் துவங்கினேன்.சேரனின் டூரிங் டாக்கீஸ்,சத்குருவின் அத்தனைக்கும் ஆசை படு...இவை இரண்டும் எனக்குள் இருந்த படிக்கும் ஆர்வத்தை உணர்த்தியது.சில அன்றாட‌ பிரச்சனைகளில் தவிக்கும் போது புத்தகம் நல்ல துனையாக இருந்தது.முதல் முறையாக எந்தவித கட்டாயமுமின்றி படித்தேன்..ரசித்துப் படித்தேன்...ஏதோ சில காரணங்களால் தொடர்ந்து ஆனந்த விகடன் வாங்க முடியாமல் போனது.ஒரு முறை சென்னையில் உள்ள தோழி ஒருத்தியிடம் தொலைபேசியில் இதை பற்றி சொல்ல.எனக்கு அந்த இரு தொடர்களும் புத்தக வடிவில் பிறந்த நாள் அன்பளிப்பாக கிடைத்தது.என் வாழ்நாளில் மிகச் சிறந்த அன்பளிப்பு என்றே சொல்ல வேண்டும். மூன்றே நாட்க‌ளில் இரு புத்தகங்களையும் முடித்தேன்.

வேலையிலும் ,பொருளாதாரத்திலும் மாற்றம் ஏற்பட்ட‌து. தமிழ் நண்பர்க‌ள் வட்டம் கிடைத்தது. 20 பேர் , 3 ரூம் வாடகைக்கு அருகருகில் எடுத்திருந்தோம். தமிழ் சாப்பாடு ,டி.வி,இனையதளம் என மீண்டும் தமிழுடன்  தொடர்பு கிடைத்தது.20 பேரில் ஒருவன் நந்தா.கொஞ்சம் கோவக்காரன்..ஆனால் பாசக்காரன்.அவனிடம் தமிழ் புத்தகம் இருப்பது தெரிய வந்தது.

"டேய் , அவன்கிட்ட‌ கேட்காத டா..ஓவரா பேசுவான்" என்ற மற்றவர்களின் எச்சரிக்கையையும் மீறி.....
"மச்சி.. ஏதாச்சும் புக் இருந்தா தாடா" என்று அவனிடம் கேட்டேன்

அதுவரை அவனை நான் அதிகம் ஓட்டாத காரணத்தினால்,கண்டிப்பு இல்லாமல் சிறு எச்சரிக்கையுடன் கொடுத்தான்...
"புக்குக்கு ஏதாச்சும் ஆச்சு உன்னை தான் கேட்பேன்!"  என்று

Sandiliyan
"கடல் புறா(சாண்டிலியன் எழுதியது)..படி...சூப்பரா இருக்கும்" என்று  கொடுத்தான்...அதுவும் 3 பாகமும்  கொடுக்காமல் ஒன்றைத் திருப்பிக் கொடுத்தபின் அடுத்த பாகத்தைக்  கொடுப்பதாகச் சொல்லி ஒவ்வொன்றாகக் கொடுத்தான்.

வரலாற்றில் அதிகம் ஈடுபாடு கிடையாது எனக்கு.10வது முடிக்கும் போது "அப்பாடா இனிமே வரலாறு பாடம் கிடையாது " என்று சந்தோஷப் பட்டுக் கொண்டேன்...கடல் புறா படிக்கும் போது வரலாற்றைப் பற்றிய‌ எண்ணங்கள் யாவும்   மாறியது.
சுவாரஸ்யம்,பெண் வர்ணனை,வீரம் அனைத்தையும் திரைப்படம் மூலம் உணர்ந்த எனக்கு எழுத்தின் மூலம் உணர்வது புதுமையாய் இருந்தது.சோழர்களின் கதை என்பதால் இன்னும் ஆர்வம் அதிகரித்தது.எனது ஆர்வத்தின் விளைவால் மற்ற நண்பர்களும் படிக்கத் துவங்கினர்.சோழர்களின் பெருமைகளை விவாதித்தோம்.அப்போது...

"மச்சி ..எப்டியாவது பொன்னியின் செல்வன் படிக்கனும் டா..நந்தா வெச்சிருக்கானானு கேளுடா" என்றான் மற்றொரு நண்பன்..

நந்தாவிடமும் இல்லை..அவனும் இன்னும் பொன்னியின் செல்வன்  படித்தது இல்லை..என்று கேட்ட‌றிந்தேன்.
அடுத்த முறை ஊருக்கு போகும் போது வாங்கி வருவது என நண்பர்கள் சேர்ந்து முடிவு செய்தோம்.ஆனால் இது போன்ற முடிவுகள் எப்போதும் நிறைவேறுவது இல்லை.பையில் இடம் இல்லை ,நேரமில்லை,காசில்லை,ஞாபகம் இல்லை என்று ஏதோ ஒரு "இல்லை" காரணமாக இருந்து கொண்டே இருந்தது .நான் ஊருக்கு செல்லும் தருணம் வந்தது.வீட்டில் தடபுடலான விருந்து(ரொம்ப நாள் கழித்து சென்றேன்).தஞ்சை அதே அழகுடன்  இருந்தது.புத்தகம் வாங்க செல்வதா வேண்டாமா என்ற சிந்தனை."யாருமே வாங்கிட்டு வரல‌ நாம மட்டும் ஏன் வாங்கிட்டு போனும்" என்ற குறுகிய எண்ணம் இருந்தும் புத்தகத்தின் மீது இருந்த ஆர்வம் என்னை புத்தகத்தை பார்வையிட இழுத்துச் சென்றது.

பொன்னியின் செல்வன் 500ரூ மேல் விலை இருந்ததாலும், வேறு சில‌ புத்தகத்தின் மீது நாட்டம் இருந்தததாலும்  பொன்னியின் செல்வனை வாங்க முடியாமல் போனது.வேறு சில புத்தகங்களை(மதனின் மனிதனுக்குள் மிருகம்,கிமு.கிபி) வாங்கிச் சென்றேன்.ரூமில் எல்லோரும் படித்தோம்.நந்தாவிடம் பகிர , அவன் நிறைய சாண்டில்யன் புத்தகங்களைக் கொடுக்க ஆரம்பித்தான்.ஆனால் நான் நண்பர்களிடம் புத்தகங்களை பகிரும் போது எந்தவித கண்டிப்போ  ,எச்சரிக்கையோ தரவில்லை.அதனால்தான் என்னவோ அந்த புத்தக‌ங்கள் எங்கு போனது என்று கண்டுப்பிடிக்க முடியாமலே போனது.நந்தாவும்,சுந்தர் அப்பாவும் ;புக் கொடுக்கும் போது ஏன் கண்டிப்பாக இருந்தார்கள் என்பது அப்போது தான் புரிந்தது.

விலை ராணி,சேரன் செல்வி,பல்லவ திலகம்,ராஜ முத்திரை,மன்னன் மகள்,சேரன் செல்வி போன்ற‌ புத்தகங்கள்(அனைத்தும் சரித்திர நாவல்) நந்தாவிடமிருந்து கிடைத்தன .ரூமே படிக்கும் படலமாய் மாறியது.படுத்து உருண்டு படித்தோம்.சில வேலை உணவை கூட த‌விர்த்தோம்.வார இறுதிக்காக காத்திருந்தோம் புக் படிக்க.இந்த புத்தகம் யாவும் பொன்னியின் செல்வன் மீது என‌து  நாட்ட‌த்தைத் திருப்பியது.

மீண்டும் ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.இம்முறை எந்தவித  தயக்கமுமின்றி பொன்னியின் செல்வன் 5 பாகத்தையும் வாங்கினேன்.வீட்டில்  "ஏன்டா இப்டி காச‌ வீணாக்குற‌" என்று பெற்றோர்  திட்டியதையும் நான்  பொருட்படுத்தவேயில்லை.மும்பை திரும்பிய போது , ரூமுக்குள் ஒரே கலவரம் ..யார் முதலில் படிக்க ஆரம்பிப்பது என்று.எங்களுக்குள் சிறு சண்டை கூட வந்தது.எப்படியோ நானே முதலில் படிக்கத் துவங்கினேன்...

பொதுவாக எனக்குப் படிக்கத் துவங்கியதும்  கண்கள் சொக்கிவிடும்.இம்முறையும் அப்படித்தான்.5 அத்தியாயம் தாண்டிய‌ பின்புதான் சூடு பிடித்தது.கல்கி ஒவ்வொரு முறையும் தஞ்சையைப்பற்றி வர்ணிக்கும் பொழுதெல்லாம்...கண் முன்னே நான் சுற்றிய இடங்கள் தோன்றும்.முதல் அத்தியாயம் , ஆடி பெருக்குடன் துவங்கும்.நான் சிறு வயதில் ஆடிப்பெருக்கிற்கு ஆற்றில் பூஜை பொருட்களை விட்ட ஞாபகம் தொட்டுப் போகும். நதிகள்,நதியோற மரங்கள்  பற்றி வரும் பொழுதெல்லாம் கரூர் வழியே தஞ்சை வரும் மார்கம் தான் நினைவிற்கு வரும்.

கதையின் நாயகன் வந்தியதேவன்,சோழ நாட்டின் வளமையைப் பார்த்து வர்ணிக்கும் பொழுது, திருவாரூர் செல்லும் சாலை, அதுவும் , அந்த பச்சை போர்வை போற்றிக்கொண்டு அழகாய் சிரிக்கும் வயல் வர‌ப்புகள் தான் நமது கண்முன்னே வரும்.நாயகன் தஞ்சையை விட்டு வெளியில் சென்று மீண்டும் ஊருக்குள் வரும் போது , தூரத்திலிருந்து ரசிக்கும் காட்சி , மாரியம்மன் கோவில் சாலையிலிருந்து நான் பார்த்த‌ பெரிய கோவிலை நினைவிற்குக் கொண்டு வரும்.

ரவிதாசனின் வில்லத்தனம்,நந்தினியின் சதித்திட்டம்,குந்தவையின் அரசியல் முடிவுகள்,சுந்தர சோழனின் த‌விப்பு,பழுவுடையாரின் வீரம்,கரிகாலனின் மனக்குழப்பம்,சிதம்பர இளவர‌சனின் துரோகம்,படகோட்டும் பூங்குழலி,ஊமைராணியின் தியாகம் போன்றவை  இன்னும் என் நினைவிற்குள் (கதாபாத்திரங்கள்) சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது.

கடம்பூர் மாளிகை(நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள கடம்பூரா?),சிதம்பரம் கோவில் ,நாகப்பட்டினம் புத்தமடம்,உறையூர்,இலங்கை... போன்ற இடங்கள் கதையின் முக்கிய அம்சமாக அமைந்ததை படிக்கும் போது ,அந்த இடத்திற்கு நமது நினவுகளை கொண்டு செல்லும்.

நாகப்பட்டினம் புத்தமடம் 
கதையின் சுவாரஸ்யம் எனது உறக்கங்களை பிடுங்கிக் கொண்டது.வார இறுதியில் மட்டும் படிக்க நினைத்தது முடியாமல் போனது.தினமும் கிடைக்கும் நேரமெல்லாம் படிக்க தோன்றியது.சில சமயம்  பாரதி சொன்ன‌து போன்று காலை எழுந்தவுடன் படிப்பு என்றானது.என்னை விட எனது நண்பன் ஒரு படி மேலே சென்று , இரவு முழுவ‌தும் படித்தான் .மேலும் கதையின் தொடர்ச்சி அவனை மறுநாள் அலுவலகத்திற்கு மட்டம்  போட வைத்தது.

படித்து முடித்தவுடன் எனக்குள்ளே ஒரு பெருமிதம் இருந்தது .பெரிய கோவிலை மீண்டும் பார்வையிட வேண்டும் என்று ஓர் ஆசையும் வந்தது.அடுத்த  ஊர் பயணத்துக்காக காத்திருந்தேன்.இனையதளத்தின் மூலம் பொன்னியின் செல்வன் பேரவையில் வரும் கலந்துரையாடல்கள் மற்றும் இதர பொன்னியின் செல்வன் சம்மந்தமான ப்ளாக் படிப்பது,

(
1.பொன்னியின் செல்வன் பேரவை
2.பொன்னியின் செல்வன் கதை விளக்கும் படங்கள்
3.பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்
4.பொன்னியின் செல்வன் புதினம் என்னும் புதுமை 
)


மின் புத்தகம் எனக்குப் பிடிக்காத போதும் புத்தகத்தை  வாங்க முடியாதோருக்கு மின் புத்தகம் தருவது, த‌மிழ்  படிக்கத் தெரியாத நண்பர்களுக்கு ஆங்கில மின்புத்தகத்தைத் தருவது என்று எனது எண்ணமும் செயலும் பொன்னியின் செல்வனை சுற்றியே இருந்தது.


(இப்பொழுது 4 வருட மும்பை  வாழ்க்கை முடிந்து இரண்டு வருடமாக‌ பெங்களூரு வாழ்க்கை தொட‌ர்கிறது.ஒர் இரவுப் பயணம்.சனிக்கிழமை காலை தஞ்சையில் தான் விடியும்)

பொன்னியின் செல்வன் 5வது புக்கில் , 30வது அத்தியாத்தில் ராஜராஜன் அவனது அன்னைக்குக்  கட்டிய  கோவில் பற்றிய‌ குறிப்பிருக்கும்.அதுவும் தஞ்சையில் உள்ளோருக்கு நன்றாகத் தெரியும் என்றிருக்கும்.


நம்ம குந்தவை கல்லூரிக்கு முன் உள்ள ஒரு சிறு கோவில் என்று எண்ணுகிறேன்..சரியாகத் தெரியவில்லை...அது பூட்டியிருப்பதால் , அதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளவும் முடியாமல் போனது(யாருக்காவது தெரிந்திருந்தால் பகிரவும்).

ஒருமுறை 7ம் வகுப்பு வரலாறு புத்தகம் கிடைத்தது,சரி நம்ம சோழர்களை பற்றி என்ன சொல்றாங்கன்னு பாத்தா...10 மதிப்பென் கேள்விக்கு விடையாக மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது.கல்கி,சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்கள் எழுதியிருந்தால் கண்டிப்பாக வரலாற்றின் முக்கியத்துவம் எனக்குள் எப்பொழுதோ வந்திருக்கும்.(உங்களுக்கும் அப்படி தானே..?)

 பொன்னியின் செல்வனின் தொட‌ர்ச்சியை படிக்க வேண்டும் என்ற ஆசை , அனுசா வெங்கடேஷ் எழுதிய காவேரி மைந்தனை படிக்க செய்தது.கொஞ்சம் தமிழ் சினிமா பார்ப்பது போல் இருந்தாலும்,படிக்க சுவாரஸ்ய‌மாகவே இருந்தது.

Anusha Venkatesh's Kavirimainthan
அடுத்து பாலகுமாரனின் உடையார்  பற்றி முகபுத்தக நண்பர்கள் சொன்னதிலிருந்து அதைப் படிக்க ஆசை வந்துள்ளது.காத்துக்கொண்டிருக்கிறேன்.

நான் படித்ததை ,எனது  வீட்டில் உள்ளோரும் படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன்.எனது பாட்டியை முதல் பாகம் படிக்க வைத்தேன்.எனது அன்னையும்,தந்தையும் டி.வி சீரியலுக்குக் காட்டும் முக்கியதுவத்தை இதற்குக் காட்டுவதே இல்லை."இப்போ நாங்க படிச்சு என்ன பண்ண போறோம் " என்று பதில் சொல்லுவார்கள்.அவர்கள் என்ன சொன்னாலும் எனது முயர்சியை நான் கைவிடுவதாக இல்லை.எப்படியாவது படிக்கச் செய்வேன்....

எனது நண்பர்கள் வட்டமும் படித்து ரசிக்க வேண்டும் என்று எண்ணியதின் விளைவு தான் இந்த போஸ்ட்.நீங்க படிக்கும் முன்பு ,முடிந்தால் திருவாருர்-தஞ்சை(மாரியம்ம்ன் கோவில் வழியாக போகும் போது பெரிய கோவிலை பார்கவும்),தஞ்சை-கும்பகோண்ம்,கரூர்-தஞ்சை வழி பயணித்து பாருங்கள்.படிக்கும் போது கற்பனைகளுக்குக் கண்டிப்பாக உறுதுனையாக இருக்கும்.


என்றும் அன்புடன்,
பிரபுThere was an error in this gadget