Sunday, November 27, 2016

பஞ்சுமிட்டாய் ...

பெங்களூரில் அப்பார்ட்மெண்ட் சிறுவர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் கடந்துவிட்டது. மகிழ்வைப் பகிர ஒரு பதிவு தேவைப்படுகிறது.

வாசிப்பு பழக்கம்  புதிய நண்பர்களை அறிமுகம் செய்கிறது , நகர வாழ்வின் தொடர் ஓட்டத்தின் நடுவில் மர நிழலாய் இருக்கிறது . தேடலின் விதையை தூவுகிறது . வரலாற்றின் முக்கியத்தை சொல்கிறது . இன்னும் எங்கெங்கோ அழைத்து செல்கிறது.அப்படித் தான் எங்கள் பகுதி சிறுவர்களுக்கு குழுவாக கதை சொல்லலாம் என்ற ஆசையும் வந்தது.

வெறும் மூன்று கதைகளை மூலத‌னமாக வைத்தே குருட்டு நம்பிக்கையில் ஆரம்பித்தது தான்.  சிறுவர்களுக்கான கதைகளை தேடி வாசிப்பு பழக்கம் நகர்ந்தது . தேட தேட தடையில்லாமல் கதைகள் கிடைத்துக் கொண்டேயிருந்தது. முதலில் நான் மட்டும் கதை சொல்ல பின்னர் நண்பர்கள் சிலரும் ஆர்வத்துடன் சேர்ந்துக்கொண்டனர்.  ஆனால் அனைத்து கதைகளிலும் நீதிப் போதனைகள் தூக்கலாகவே இருந்தது. சிறுவர்களுக்கு எப்பொழுதுமே நீதிப் போதனைகளுடன் தான் கதை சொல்ல வேண்டுமா ? அதுவும் கதையின் கடைசி வரி "Moral of the story is" என்று தான் முடிய வேண்டுமா ?

மெல்ல மெல்ல கதைகள் பற்றி பேசினோம் , கதைகளில் இது தான் நீதி என எதுவும் சொல்ல வேண்டாம் , நீதி என்பது கதைக்கு அத்தியாவசயமான ஒன்றல்ல . கதையின் போக்கில்  நல் கருத்துக்கள் இருக்கலாம் , அதை சிறுவர்களாகவே சிந்திக்க இடம் தருவோம் என்று முடிவு செய்தோம்.தற்பொழுது நீதிக்காக கதைகள் ஏதும் சொல்வதில்லை . கதையில் கருத்துக்கள் இருக்கிறதா என்பது பற்றி கூட அவ்வளவாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை.

வாரம் ஒரு நாள் அனைவராலும் நேரம் ஒதுக்க முடியுமா ? என்ற கேள்வி அடுத்து வந்தது . ஆனால் தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்வதன் மூலமே நாம் அதில் பயிற்சி பெற முடியும். சிறுவர்களுக்கும்  அவர்களது வாழ்வியலில் இது ஒரு அங்கமாக இருக்கும்.ஆதலால் அனைவராலும் பங்கெடுக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து செய்வோம் என முடிவெடுத்தது தான் இந்த ஒரு வருடத்தின் கிட்டதட்ட 28 நிகழ்வுகள் நடத்த முடிந்தது.இந்த 28 என்பது எண் மட்டுமல்ல , அது அழகிய அனுபவம்.

சென்னையில் கடந்த சனவரி மாதம் , எழுத்தாளர் விழியன் அவர்கள் தனது இல்லத்தில் சிறுவர் இலக்கியம் சார்ந்து பட்டறை ஒன்றை நடத்தினார்.அதில் நிறைய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது . நிறைய புத்தகங்கள் அறிமுகமானது , வெவ்வேறு தளங்களில் சிறுவர்களுக்காக இயங்கும் நண்பர்களின் அனுபங்கள் பகிரப்பட்டது.கத்துக்குட்டியாக நானும் சில நண்பர்களும் அங்கு இருந்தோம் என்று சொல்லலாம்.பாரம்பரிய விளையாட்டு , விளையாட்டு மூலம் அறிவியல் சோதனைகள் , கூத்துப் பாடல் , பொம்மலாட்டம் , இயற்கை சார்ந்து இயங்குவது என அனைத்து அனுபங்களும் பகிரப்பட்டது.எனக்கு உற்சாக பாணமாக அமைந்தது.அப்பொழுது தான் தமிழின் தற்கால சிறுவர் இலக்கியம் பற்றி சுகுமாரன் அவர்களது புத்தகம் அறிமுகமானது.அவரும் நிகழ்விற்கு வந்திருந்தார்.அந்தப் புத்தகம் சிறுவர் இலக்கியம் சார்ந்து நிறைய பேசியது.ஒரு காலத்தில் தமிழில் மாதம் 50 சிறுவர் இதழ்கள் வந்திருந்ததாம் , தற்பொழுது வெறும் 10 இதழ்கள் கூட வருகிறதா ? என்ற கேள்வி மனதை உருத்திக் கொண்டேயிருந்தது.எங்களது குழுவில் நண்பர் ஒருவர் தான் விகடன் மாணவர் பத்திருக்கையில் இயங்கியதாக சொன்னார் , இந்த இரண்டு விஷயங்கள் தான் பஞ்சுமிட்டாய் இதழ் என்று உருமாறியது. முதல் இதழில் பெரியவர்களின் படைப்பே அதிகம் இருந்தது . இரண்டாம் இதழில் சிறுவர்களின் படைப்பு  நுழைந்தது . சமீபத்தில்வெளியான் மூன்றாம் இதழில் சிறுவர்களின் படைப்பே அதிகம்.இனி வரும் இதழ்களும் அப்படியே அமைந்திடும்.

நிகழ்வு சார்ந்தே இதழை உருவாக்குகிறோம்.நிகழ்விலே சிறுவர்கள் கதைகள் சொல்கின்றனர்,தங்களது பயண அனுபவங்களை பகிர்கின்றனர்.நாங்கள் சொல்லும் கதைகளுக்கோ , புத்தகத்தில் வாசித்த கதைகளுக்கோ ஓவியம் வரைகின்றனர்.ஆக இதழுக்கு தேவையான அனைத்தும் எங்களுக்கு நிகழ்விலே கிடைத்துவிடுகிறது.இதழை வடிவமைக்கும் பணி மட்டும் எங்களுடையது.

கதைகள் அல்லாது , அவ்வப்பொழுது craft சார்ந்த நிகழ்வுகளையும் , தமிழ் எழுத்துக்கள் மூலம் புது புது விளையாட்டுகளையும் அறிமுகம் செய்தோம் . தேவையில்லாத ஆங்கில கலப்பு , சினிமா மற்றும்  தொழில்நுட்பம் மூன்றையும்  இந்தப் பயணத்தில் தவிர்த்திருக்கிறோம். இன்று திரும்பி பார்கையில் கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது.இன்றைய பெற்றோர்கள் சிறுவர்களுக்கு என்றதும் தங்களது கூச்சங்களை தவிர்த்து சிறுவர்களாய் மாற தயாராக இருக்கின்றனர். சிறுவர்களின் கை கோர்த்து "ஒரு குடம் தண்ணி ஊத்தி" விளையாடுகின்றனர் , ஆண் பெண் என்று பேரமெல்லாம் பாராமல் கும்மி பாடலுக்கு கும்மி அடித்து சிறுவர்களுடன் வட்டமிடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து பாடுகின்றனர் . ஒரு குழுவாக சேர்ந்து செய்கையில் இவை அனைத்துமே சாத்தியமாகிறது.

பஞ்சுமிட்டாய் 3ம் இதழ் வெளியீட்டு  நிகழ்வில் அப்படித் தான் சிறுவர்கள் நாடகமும் , சிறுவர் பாடலுக்கு (சினிமா பாடல்கள் அல்ல) ஆட்டமும் அரங்கேறியது. நிகழ்வின் முடிவில் புதிதாய் வந்த சிறுவர்கள் அடுத்த நிகழ்வு எப்பொழுது என்று கேட்கும் போது மனம் எங்கோ சிறகை விரித்து பறந்தது.

Monday, November 7, 2016

தனி ஒருவர்....அழ.வள்ளியப்பா!

அழ.வள்ளியப்பா...சென்ற தலைமுறை தமிழ் பெற்றோருக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் சிறு வயதில் கேட்ட வள்ளியப்பா பாடல் ஒன்றை சொல்கின்றனர். இந்தத் தலைமுறை பெற்றோர் பல‌ருக்கு (எனை சுற்றியுள்ள) அழ.வள்ளியப்பா யாரென தெரியவில்லை. 90களில் டிவியின் தாக்கம் அதிகமானது ஒரு பெரிய காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு  "அணிலே அணிலே ஓடி வா"  , "தோ தோ நாய் குட்டி" , " மாம்பழமாம் மாம்பழம் " போன்ற பாடல்கள் நன்கு அறிந்திருக்கின்றனர் . அவர்களுக்கு  , சினிமா அல்லாத சிறுவர்களுக்கான‌ தமிழ் பாடல்கள் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது வள்ளியப்பாவின் பாடல்கள் தான்.

குழந்தை வளர்ப்பில் எப்படி சிறுவர் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டோ , அதே போன்று தான் தமிழ் சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சியில் வள்ளியப்பாவிற்கு பெரும் பங்குண்டு.அவர் இன்றி சிறுவர் இலக்கியம் உரு பெற்றிருக்காது என்று சொல்லலாம். தமிழ் சிறுவர் இலக்கியத்தின் பொற்காலம் எனும் கூறப்படும் 1950ம் ஆண்டு வள்ளியப்பா வாழ்ந்த காலம் தான். அந்த ஆண்டில் தான் குழந்தை எழுத்தாளர்கள் சங்கத்தை அமைத்தார். இதில்
குழந்தைக்களுக்கான படைப்புகளை உருவாக்கும் அனைவரையும் ஒன்று திரட்டினார் . அதன் செயல்பாடுகளின் ஒன்றாக , "குழந்தை எழுத்தாளர் யார் எவர்?" என்று ஒரு தொகுப்பை 1961ல் உருவாக்கியுள்ளனர் .  சங்கத்தின் சார்பில் தொடர்ந்து மாநாடுகள் நடந்திருக்கின்றன.

வள்ளியப்பா புதுக்கோட்டையை சேர்ந்தவர் , ஆனால் சென்னையில் வங்கி பணியிலிருந்தார் . சென்னையிலிருந்துக்கொண்டே புதுக்கோட்டையிலிருந்து சிறுவர் இதழ் வெளிவர அனைத்து வகையிலும் இயங்கியிருக்கிறார் . அச்சு வடிவத்திற்கான முன்னாலுள்ள அனைத்து வேலைகளையும் முடித்து புதுக்கோட்டைக்கு அனுப்பிவைத்துள்ளாராம். கிட்டத்தட்ட மாதம் 10 இதழ்களை கொண்டு வர ஈடுப்பட்டிருந்திருக்கிறார். இப்படித் தான் அவரது சிறுவர் இதழியலுக்கான பணி இப்படித் தான் சில ஆண்டுகள் சென்றிருக்கிறது. சிறுவர்களுக்கான பல படைப்புகள் மட்டுமல்ல , பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளார்.

சிறுவர்களுடன் நெருங்கி பழகும் போது தான் புரிகிறது , அவர்கள் முற்றிலும் பெரியவர்களை கவனமாக பின்பற்றுகிறார்கள் என்பது. அதுப்போல் அவர்களுக்கான படைப்புகளும் மிக முக்கியமான இடத்தை பெருகிறது. படைப்புகளில் சிறுவர்களை திசைத் திருப்பும் எண்ணங்கள் எதுவும் வந்துவிட கூடாது என்பதில் வள்ளியப்பா கவனமாக இருந்திருக்கிறார்.ஒரு முறை தமிழ் சிறுவர் இலக்கியத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். (அதன் எதிர்ப்பு எப்படி முடிவுற்றது என்பதை தேடிட வேண்டும்.) வள்ளியப்பா தான் மட்டும் இயங்காமல் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தையும் பெரிதாக உருவாக்கியுள்ளார். அவர் வாழ்ந்த காலம் வரை சிறுவர் இலக்கிய மாநாடுகள் தொடர்ந்து நடந்திருக்கிறது. அவர் இறக்கும் போது சிறுவர் இதழான கோகுலத்திற்கு ஆசிரியராக இருந்துள்ளார்.

பூவண்ணன் எழுதிய வள்ளியப்பா பற்றின சிறு நூலை வாசித்தப் பொழுது மனதில் ஓடிய எண்ணம் இது தான் , தனி மனிதராய் மனுஷன் எப்படியெல்லாம் இயங்கியிருக்கிறார். நமது விருப்பங்களை நல்ல நண்பர்கள் கொண்டு கண்டிப்பாக உருமாற்றிக் கொள்ள முடியும் என்று வள்ளியப்பாவின் வாழ்வு எனக்கு சொல்வதாக இருந்தது.

இன்று நவம்பர் 7 , வள்ளியப்பா பிறந்த தினம் , வள்ளியப்பாவின் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் . அவரது நினைவாக சற்று டிவி யை அனைத்துவிட்டு வள்ளியப்பா பாடல்களை பிள்ளைகளுக்கு பாடி , சிறுவர்களை ஆட்டம் போட செய்வோம் . சிறுவர்களின் சிரிப்பொலியில் நன்றிகள் பல சிந்த செய்வோம்.

வள்ளியப்பாவின் படைப்புகள் மின்நூலாக : http://thamizhagam.net/nationalized%20books/Azha%20Valliyappaa.html

மலரும் உள்ளம் முதல் தொகுதியில் துவங்குகள் !

There was an error in this gadget