Thursday, December 13, 2012

புத்தகம் : மேலும் ஒரு குற்றம்


புத்தகம் : மேலும் ஒரு குற்றம்...

ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 100 [குத்துமதிப்பா]
ஒரு வரியில் : படிக்கலாம்,சுவாரசியமாக இருந்தது.
செலவிட்ட நேரம் : 2 மணி நேரம்.

பெங்களூரில் தமிழ் புத்தகம் [நான் வசிக்கும் இடத்தின் அருகில்] கிடைப்பதில்லை.ITPL (http://www.parksquaremall.com/) Reliance time out ல் சுற்றும் போது , புத்தகங்களில் தமிழ் பிரிவு இருந்தது.அனைத்தும் சமையல் புத்தகங்கள் [தமிழ்நாடு நா சாப்பாடுனு முடிவு பண்ணிடாங்களோ ? ]. அதில் இரு புத்தகங்கள் மட்டும் , சமையல் புத்தகங்களோடு சேராமல் தனிமையில் தவித்து கொண்டிருந்தது.அதில் ஒன்று தான் இந்த புத்தகம்...

கதை சுவாரசியமாக இருந்தது.எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை.4-5 கதாப்பாதிரங்கள் தான்...கொஞ்ச நாளா கலைஞர் டிவி யில் வரும் ராஜேஸ் குமார் நாவல் குறும்படம் பார்கிறேன்.இதுவும் அதே ஸ்டைலில் இருந்தது.முடிவு இப்படி தான் இருக்கும் என்று ஒரு யூகம் இருந்தது.அதை போல் முடிந்ததில் ஒரு சிறு வருத்தம்.கதை நடக்கும் இடம் பெங்களூர் அருகில் என்பதால் இடத்தை பற்றி அவர் சொல்லும் போது பிடித்திருந்தது.

குறிப்பு : இதில் வரும் கணேஷ்-வஸந்த் ...  பல தொடர் கதைகளில் வருவார்களாம்..[நான் இதுவரை 2-3 சுஜாதா புக் தான் படிச்சிருக்கேன்..அதனால் என்னால் அதை பற்றின விஷயம் ஏதும் சொல்ல முடியவில்லை]

இரவு கொஞ்ச நேரம் படித்து , மறுநாள் படித்து முடித்து தான் மற்ற வேலையை துவங்கினேன்...

நீங்களும் படிச்சிட்டு சொல்லுங்க...

Monday, August 13, 2012

பொன்னியின் செல்வனும் நானும்....


நம்ம மணி, இருந்தாலும் இப்படி பண்ணிருக்கக் கூடாது...பொசுக்குன்னு பொருளாதாரத்தைக் காரணம் காட்டி பொன்னியின் செல்வன் ப்ராஜக்ட்டை வேண்டாம்னு சொல்லிட்டார்.என்னடா இவன் பழைய செய்தியை வாசிக்கிறான்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. அந்த படம் அவருக்கு மட்டுமில்ல ; பொன்னியின் செல்வன் படிச்ச எல்லோருக்குமே டிரீம் ப்ராஜக்ட் தான். அதான் ஒரே ஃபீலிங். சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்துல நிறைய வரலாற்று படங்கள் வந்திச்சு,ஆனா இப்போ  வரலாற்று  படம்னா க்ராஃபிக்ஸ் , பிரம்மாண்டம் தேவைன்னு நினைக்கிறாங்க.ஆனா ரசிகனா எனக்கு அது ரெண்டும் முக்கியம்னு தோனல.

சரி அதை விடுங்க,எனக்கு...நான் எப்படி பொன்னியின் செல்வன் படிச்சேன்னு சொல்லனும்னு ஒரு சின்ன ஆசை...அதான் ஒரு பதிவு போடலாம்னு....

8-9ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தபோது , பாஸ்கர் மாமா வீட்டில் தான்( என் எதிர் வீடு) முதல் தடவையா "பொன்னியின் செல்வன்.............கல்கி............." என்ற வார்த்தையை கேள்வி பட்டேன்.

"என்ன மாமா , இவ்வளவு பெரிய புக்?" என்று நான் கேட்க..

"அது கல்கியில் 2-3 வருஷமா  தொடரா வந்த                                       'பொன்னியின் செல்வன்',அதை சேர்த்து பைன்ட் பண்ணி வெச்சிருக்கேன்" என்றார்.

Magazine
Kalki Magazine
"கல்கி" என்றால் ஒரு பத்திரிக்கை ..அது தான் எனக்கு தெரியும்.என்னால‌ இந்த ஸ்கூல் புக்ஸையே படிக்க முடிய‌ல.. இவ்வளவு பெரிய புத்தகத்தை எப்ப‌டி தான் படிக்கிறாங்களோ என்று அலுத்துக் கொண்டேன்.நான் மார்க் எடுக்கிறதுக்காக படிக்கிறேன்,ஏன் இவுங்கள்ளாம் படிக்கிறாங்கன்னு சில சமயம் தோனியதும் உண்டு.

10,+2 முடிந்தது.முடிவில் புத்தகத்தின் மீது அதிகம் வெறுப்பு உருவாகி இருந்தது .உள்ளுக்குள்ள‌. எப்டியாவது 4 வருஷம் ஓட்டிட்டா , அப்புறம் புத்தகத்துக்கும் நமக்கும் சம்மந்தம் குறைஞ்சிடும் , அதுக்க‌ப்புறம் ஜாலியா இருக்கலாம் என்ற எண்ணம் அவ்வப்போது மகிழ்வை தந்து கொண்டே இருந்தது.

கடந்த 12 வருடகங்களா என்னை ஆட்டி படைத்த புத்தகங்களை நான் ஆட்டி படைத்தேன் கல்லூரி வாழ்வில்.தேர்வு நேரம் தவிர மற்ற நேரங்களில் அதற்கு மதிப்பு  கொடுத்த‌தே இல்லை.

பொன்னியின் செல்வன் மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டது நண்பன் சுந்தர்  வீட்டில்.அவனது தந்தையும் பாஸ்கர் மாமா சொன்ன அதே கதையை சொன்னார்.என்னை போல் சுந்தருக்கும் புத்தகத்தின் மீது  ஆர்வமில்லாததால்,அவர் சொன்னதை நாங்கள் கண்டுகொள்ளவேயில்லை.

யதார்த்தமாக வகுப்பில் மாண்டி (பட்டப் பெயர்) என்ற நண்ப‌ன் ஒருவனிடம்  "பொன்னியின் செல்வன்" புக் நம்ம "thermo dynamics"  விட பெருசு டா .. என்று சுந்தர் வீட்டில் பார்த்ததை பற்றி சொல்லுகையில்..

"மச்சி  எனக்கு அந்த புக் வாங்கி தாடா..ரொம்ப நாளா தேடிட்டிருக்கேன்..படிச்சிட்டு குடுத்திடுறேன்.."என்றான்..

"என்ன இது வம்பா போச்சு" என்றானது எனக்கு..அவன் புத்தகம்  படிப்பான் என்பதே அப்போது தான் தெரிந்தது...

Kalki
அவனுக்காக அதை சுந்தரிடம் கேட்டு வாங்கிக் கொடுத்தேன் ( பத்திரமாக திருப்பி கொடுக்க வேண்டும் என்ற சுந்தர் அப்பா கண்டிப்புடன் சொல்லி இருந்தார்) .அப்போது கூட அந்த புத்தகத்தைப் புறட்டிப் பார்க்க எனக்கு தோனவில்லை.அவன் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும் வரை  எனக்கு பக்-பக் என இருந்தது.மாண்டி மூலமா தான் கல்கி என்பது அதை எழுதியவர் என்பதே எனக்குத் தெரியவந்தது.

அதுவரை வகுப்பில் திருட்டுத் தனமாக சாப்பிடுவது,பாடங்களை கவனிப்பது போல் உறங்குவது,புக் கிரிக்கெட் விளையாடுவது போன்ற பல முக்கியமான வேலையில் என்னுடன் துனை நின்ற மாண்டி , வகுப்பில் யாருக்கும் தெரியாமல்  'பொன்னியின் செல்வன்' படிக்கத் துவங்கினான்.எனக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது.மீண்டும் அவனது கூட்டனி எப்போது கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.தினமும் அவன் எத்தனை பக்கம் முடித்தான் என்று பார்ப்பேன்.அவனது வேகம் என்னை பிரம்மிக்கச் செய்தது.வெறும் 1 மாத காலத்திற்குள் படித்து முடித்தான்.அவன் semester க்கு கூட இப்படிப் படித்து நான் பார்த்த‌தேயில்லை.

"பாரேன் ..நம்ம பய புள்ளைக்குள்ளையும் ஒரு தெறம இருக்கு...நமக்கு தெரியாம போச்சு " என்று அடிக்கடிஅவனை கிண்டல் செய்வதும் உண்டு..

கல்லூரி முடிந்து , மும்பையில் வேலை கிடைத்து சுமார் 8 மாத காலம் ஓடியது...அதிகம் பேசும் குணமுள்ள எனக்கு , சரியான ரூம் மெட் கிடைக்கவில்லை.அலுவலகத்தில் தமிழ் பேசுவோரும் இல்லை, ரூமில் டிவி கிடையாது.குறைந்த சம்பளம் ஊருக்கும் அடிக்கடி போன் பேச முடியாது,எனது மொபைலில் பாட்டு கேட்கும் வசதி கூட கிடையாது.இப்படி தமிழுடன் இருந்த அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டது. தனிமை நிறைய கிடைத்தது.ஏதோ ஒரு கடையில் ஆனந்த விகடன் பார்க்க , வார‌ந்தோறும் தொடர்ந்து வாங்க‌த் துவங்கினேன்.அதுவரை அதிகம் படித்தது பத்திரக்கையில் வந்த ஜோக் மட்டும் தான்.செய்தித்தாள் படிக்கும் பழக்கம் கூட எனக்குக் கிடையாது.திடீரென ஆனந்த விகடன் படிக்கத் துவங்கினேன்.சேரனின் டூரிங் டாக்கீஸ்,சத்குருவின் அத்தனைக்கும் ஆசை படு...இவை இரண்டும் எனக்குள் இருந்த படிக்கும் ஆர்வத்தை உணர்த்தியது.சில அன்றாட‌ பிரச்சனைகளில் தவிக்கும் போது புத்தகம் நல்ல துனையாக இருந்தது.முதல் முறையாக எந்தவித கட்டாயமுமின்றி படித்தேன்..ரசித்துப் படித்தேன்...ஏதோ சில காரணங்களால் தொடர்ந்து ஆனந்த விகடன் வாங்க முடியாமல் போனது.ஒரு முறை சென்னையில் உள்ள தோழி ஒருத்தியிடம் தொலைபேசியில் இதை பற்றி சொல்ல.எனக்கு அந்த இரு தொடர்களும் புத்தக வடிவில் பிறந்த நாள் அன்பளிப்பாக கிடைத்தது.என் வாழ்நாளில் மிகச் சிறந்த அன்பளிப்பு என்றே சொல்ல வேண்டும். மூன்றே நாட்க‌ளில் இரு புத்தகங்களையும் முடித்தேன்.

வேலையிலும் ,பொருளாதாரத்திலும் மாற்றம் ஏற்பட்ட‌து. தமிழ் நண்பர்க‌ள் வட்டம் கிடைத்தது. 20 பேர் , 3 ரூம் வாடகைக்கு அருகருகில் எடுத்திருந்தோம். தமிழ் சாப்பாடு ,டி.வி,இனையதளம் என மீண்டும் தமிழுடன்  தொடர்பு கிடைத்தது.20 பேரில் ஒருவன் நந்தா.கொஞ்சம் கோவக்காரன்..ஆனால் பாசக்காரன்.அவனிடம் தமிழ் புத்தகம் இருப்பது தெரிய வந்தது.

"டேய் , அவன்கிட்ட‌ கேட்காத டா..ஓவரா பேசுவான்" என்ற மற்றவர்களின் எச்சரிக்கையையும் மீறி.....
"மச்சி.. ஏதாச்சும் புக் இருந்தா தாடா" என்று அவனிடம் கேட்டேன்

அதுவரை அவனை நான் அதிகம் ஓட்டாத காரணத்தினால்,கண்டிப்பு இல்லாமல் சிறு எச்சரிக்கையுடன் கொடுத்தான்...
"புக்குக்கு ஏதாச்சும் ஆச்சு உன்னை தான் கேட்பேன்!"  என்று

Sandiliyan
"கடல் புறா(சாண்டிலியன் எழுதியது)..படி...சூப்பரா இருக்கும்" என்று  கொடுத்தான்...அதுவும் 3 பாகமும்  கொடுக்காமல் ஒன்றைத் திருப்பிக் கொடுத்தபின் அடுத்த பாகத்தைக்  கொடுப்பதாகச் சொல்லி ஒவ்வொன்றாகக் கொடுத்தான்.

வரலாற்றில் அதிகம் ஈடுபாடு கிடையாது எனக்கு.10வது முடிக்கும் போது "அப்பாடா இனிமே வரலாறு பாடம் கிடையாது " என்று சந்தோஷப் பட்டுக் கொண்டேன்...கடல் புறா படிக்கும் போது வரலாற்றைப் பற்றிய‌ எண்ணங்கள் யாவும்   மாறியது.
சுவாரஸ்யம்,பெண் வர்ணனை,வீரம் அனைத்தையும் திரைப்படம் மூலம் உணர்ந்த எனக்கு எழுத்தின் மூலம் உணர்வது புதுமையாய் இருந்தது.சோழர்களின் கதை என்பதால் இன்னும் ஆர்வம் அதிகரித்தது.எனது ஆர்வத்தின் விளைவால் மற்ற நண்பர்களும் படிக்கத் துவங்கினர்.சோழர்களின் பெருமைகளை விவாதித்தோம்.அப்போது...

"மச்சி ..எப்டியாவது பொன்னியின் செல்வன் படிக்கனும் டா..நந்தா வெச்சிருக்கானானு கேளுடா" என்றான் மற்றொரு நண்பன்..

நந்தாவிடமும் இல்லை..அவனும் இன்னும் பொன்னியின் செல்வன்  படித்தது இல்லை..என்று கேட்ட‌றிந்தேன்.
அடுத்த முறை ஊருக்கு போகும் போது வாங்கி வருவது என நண்பர்கள் சேர்ந்து முடிவு செய்தோம்.ஆனால் இது போன்ற முடிவுகள் எப்போதும் நிறைவேறுவது இல்லை.பையில் இடம் இல்லை ,நேரமில்லை,காசில்லை,ஞாபகம் இல்லை என்று ஏதோ ஒரு "இல்லை" காரணமாக இருந்து கொண்டே இருந்தது .நான் ஊருக்கு செல்லும் தருணம் வந்தது.வீட்டில் தடபுடலான விருந்து(ரொம்ப நாள் கழித்து சென்றேன்).தஞ்சை அதே அழகுடன்  இருந்தது.புத்தகம் வாங்க செல்வதா வேண்டாமா என்ற சிந்தனை."யாருமே வாங்கிட்டு வரல‌ நாம மட்டும் ஏன் வாங்கிட்டு போனும்" என்ற குறுகிய எண்ணம் இருந்தும் புத்தகத்தின் மீது இருந்த ஆர்வம் என்னை புத்தகத்தை பார்வையிட இழுத்துச் சென்றது.

பொன்னியின் செல்வன் 500ரூ மேல் விலை இருந்ததாலும், வேறு சில‌ புத்தகத்தின் மீது நாட்டம் இருந்தததாலும்  பொன்னியின் செல்வனை வாங்க முடியாமல் போனது.வேறு சில புத்தகங்களை(மதனின் மனிதனுக்குள் மிருகம்,கிமு.கிபி) வாங்கிச் சென்றேன்.ரூமில் எல்லோரும் படித்தோம்.நந்தாவிடம் பகிர , அவன் நிறைய சாண்டில்யன் புத்தகங்களைக் கொடுக்க ஆரம்பித்தான்.ஆனால் நான் நண்பர்களிடம் புத்தகங்களை பகிரும் போது எந்தவித கண்டிப்போ  ,எச்சரிக்கையோ தரவில்லை.அதனால்தான் என்னவோ அந்த புத்தக‌ங்கள் எங்கு போனது என்று கண்டுப்பிடிக்க முடியாமலே போனது.நந்தாவும்,சுந்தர் அப்பாவும் ;புக் கொடுக்கும் போது ஏன் கண்டிப்பாக இருந்தார்கள் என்பது அப்போது தான் புரிந்தது.

விலை ராணி,சேரன் செல்வி,பல்லவ திலகம்,ராஜ முத்திரை,மன்னன் மகள்,சேரன் செல்வி போன்ற‌ புத்தகங்கள்(அனைத்தும் சரித்திர நாவல்) நந்தாவிடமிருந்து கிடைத்தன .ரூமே படிக்கும் படலமாய் மாறியது.படுத்து உருண்டு படித்தோம்.சில வேலை உணவை கூட த‌விர்த்தோம்.வார இறுதிக்காக காத்திருந்தோம் புக் படிக்க.இந்த புத்தகம் யாவும் பொன்னியின் செல்வன் மீது என‌து  நாட்ட‌த்தைத் திருப்பியது.

மீண்டும் ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.இம்முறை எந்தவித  தயக்கமுமின்றி பொன்னியின் செல்வன் 5 பாகத்தையும் வாங்கினேன்.வீட்டில்  "ஏன்டா இப்டி காச‌ வீணாக்குற‌" என்று பெற்றோர்  திட்டியதையும் நான்  பொருட்படுத்தவேயில்லை.மும்பை திரும்பிய போது , ரூமுக்குள் ஒரே கலவரம் ..யார் முதலில் படிக்க ஆரம்பிப்பது என்று.எங்களுக்குள் சிறு சண்டை கூட வந்தது.எப்படியோ நானே முதலில் படிக்கத் துவங்கினேன்...

பொதுவாக எனக்குப் படிக்கத் துவங்கியதும்  கண்கள் சொக்கிவிடும்.இம்முறையும் அப்படித்தான்.5 அத்தியாயம் தாண்டிய‌ பின்புதான் சூடு பிடித்தது.கல்கி ஒவ்வொரு முறையும் தஞ்சையைப்பற்றி வர்ணிக்கும் பொழுதெல்லாம்...கண் முன்னே நான் சுற்றிய இடங்கள் தோன்றும்.முதல் அத்தியாயம் , ஆடி பெருக்குடன் துவங்கும்.நான் சிறு வயதில் ஆடிப்பெருக்கிற்கு ஆற்றில் பூஜை பொருட்களை விட்ட ஞாபகம் தொட்டுப் போகும். நதிகள்,நதியோற மரங்கள்  பற்றி வரும் பொழுதெல்லாம் கரூர் வழியே தஞ்சை வரும் மார்கம் தான் நினைவிற்கு வரும்.

கதையின் நாயகன் வந்தியதேவன்,சோழ நாட்டின் வளமையைப் பார்த்து வர்ணிக்கும் பொழுது, திருவாரூர் செல்லும் சாலை, அதுவும் , அந்த பச்சை போர்வை போற்றிக்கொண்டு அழகாய் சிரிக்கும் வயல் வர‌ப்புகள் தான் நமது கண்முன்னே வரும்.நாயகன் தஞ்சையை விட்டு வெளியில் சென்று மீண்டும் ஊருக்குள் வரும் போது , தூரத்திலிருந்து ரசிக்கும் காட்சி , மாரியம்மன் கோவில் சாலையிலிருந்து நான் பார்த்த‌ பெரிய கோவிலை நினைவிற்குக் கொண்டு வரும்.

ரவிதாசனின் வில்லத்தனம்,நந்தினியின் சதித்திட்டம்,குந்தவையின் அரசியல் முடிவுகள்,சுந்தர சோழனின் த‌விப்பு,பழுவுடையாரின் வீரம்,கரிகாலனின் மனக்குழப்பம்,சிதம்பர இளவர‌சனின் துரோகம்,படகோட்டும் பூங்குழலி,ஊமைராணியின் தியாகம் போன்றவை  இன்னும் என் நினைவிற்குள் (கதாபாத்திரங்கள்) சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது.

கடம்பூர் மாளிகை(நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள கடம்பூரா?),சிதம்பரம் கோவில் ,நாகப்பட்டினம் புத்தமடம்,உறையூர்,இலங்கை... போன்ற இடங்கள் கதையின் முக்கிய அம்சமாக அமைந்ததை படிக்கும் போது ,அந்த இடத்திற்கு நமது நினவுகளை கொண்டு செல்லும்.

நாகப்பட்டினம் புத்தமடம் 
கதையின் சுவாரஸ்யம் எனது உறக்கங்களை பிடுங்கிக் கொண்டது.வார இறுதியில் மட்டும் படிக்க நினைத்தது முடியாமல் போனது.தினமும் கிடைக்கும் நேரமெல்லாம் படிக்க தோன்றியது.சில சமயம்  பாரதி சொன்ன‌து போன்று காலை எழுந்தவுடன் படிப்பு என்றானது.என்னை விட எனது நண்பன் ஒரு படி மேலே சென்று , இரவு முழுவ‌தும் படித்தான் .மேலும் கதையின் தொடர்ச்சி அவனை மறுநாள் அலுவலகத்திற்கு மட்டம்  போட வைத்தது.

படித்து முடித்தவுடன் எனக்குள்ளே ஒரு பெருமிதம் இருந்தது .பெரிய கோவிலை மீண்டும் பார்வையிட வேண்டும் என்று ஓர் ஆசையும் வந்தது.அடுத்த  ஊர் பயணத்துக்காக காத்திருந்தேன்.இனையதளத்தின் மூலம் பொன்னியின் செல்வன் பேரவையில் வரும் கலந்துரையாடல்கள் மற்றும் இதர பொன்னியின் செல்வன் சம்மந்தமான ப்ளாக் படிப்பது,

(
1.பொன்னியின் செல்வன் பேரவை
2.பொன்னியின் செல்வன் கதை விளக்கும் படங்கள்
3.பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்
4.பொன்னியின் செல்வன் புதினம் என்னும் புதுமை 
)


மின் புத்தகம் எனக்குப் பிடிக்காத போதும் புத்தகத்தை  வாங்க முடியாதோருக்கு மின் புத்தகம் தருவது, த‌மிழ்  படிக்கத் தெரியாத நண்பர்களுக்கு ஆங்கில மின்புத்தகத்தைத் தருவது என்று எனது எண்ணமும் செயலும் பொன்னியின் செல்வனை சுற்றியே இருந்தது.


(இப்பொழுது 4 வருட மும்பை  வாழ்க்கை முடிந்து இரண்டு வருடமாக‌ பெங்களூரு வாழ்க்கை தொட‌ர்கிறது.ஒர் இரவுப் பயணம்.சனிக்கிழமை காலை தஞ்சையில் தான் விடியும்)

பொன்னியின் செல்வன் 5வது புக்கில் , 30வது அத்தியாத்தில் ராஜராஜன் அவனது அன்னைக்குக்  கட்டிய  கோவில் பற்றிய‌ குறிப்பிருக்கும்.அதுவும் தஞ்சையில் உள்ளோருக்கு நன்றாகத் தெரியும் என்றிருக்கும்.


நம்ம குந்தவை கல்லூரிக்கு முன் உள்ள ஒரு சிறு கோவில் என்று எண்ணுகிறேன்..சரியாகத் தெரியவில்லை...அது பூட்டியிருப்பதால் , அதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளவும் முடியாமல் போனது(யாருக்காவது தெரிந்திருந்தால் பகிரவும்).

ஒருமுறை 7ம் வகுப்பு வரலாறு புத்தகம் கிடைத்தது,சரி நம்ம சோழர்களை பற்றி என்ன சொல்றாங்கன்னு பாத்தா...10 மதிப்பென் கேள்விக்கு விடையாக மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது.கல்கி,சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்கள் எழுதியிருந்தால் கண்டிப்பாக வரலாற்றின் முக்கியத்துவம் எனக்குள் எப்பொழுதோ வந்திருக்கும்.(உங்களுக்கும் அப்படி தானே..?)

 பொன்னியின் செல்வனின் தொட‌ர்ச்சியை படிக்க வேண்டும் என்ற ஆசை , அனுசா வெங்கடேஷ் எழுதிய காவேரி மைந்தனை படிக்க செய்தது.கொஞ்சம் தமிழ் சினிமா பார்ப்பது போல் இருந்தாலும்,படிக்க சுவாரஸ்ய‌மாகவே இருந்தது.

Anusha Venkatesh's Kavirimainthan
அடுத்து பாலகுமாரனின் உடையார்  பற்றி முகபுத்தக நண்பர்கள் சொன்னதிலிருந்து அதைப் படிக்க ஆசை வந்துள்ளது.காத்துக்கொண்டிருக்கிறேன்.

நான் படித்ததை ,எனது  வீட்டில் உள்ளோரும் படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன்.எனது பாட்டியை முதல் பாகம் படிக்க வைத்தேன்.எனது அன்னையும்,தந்தையும் டி.வி சீரியலுக்குக் காட்டும் முக்கியதுவத்தை இதற்குக் காட்டுவதே இல்லை."இப்போ நாங்க படிச்சு என்ன பண்ண போறோம் " என்று பதில் சொல்லுவார்கள்.அவர்கள் என்ன சொன்னாலும் எனது முயர்சியை நான் கைவிடுவதாக இல்லை.எப்படியாவது படிக்கச் செய்வேன்....

எனது நண்பர்கள் வட்டமும் படித்து ரசிக்க வேண்டும் என்று எண்ணியதின் விளைவு தான் இந்த போஸ்ட்.நீங்க படிக்கும் முன்பு ,முடிந்தால் திருவாருர்-தஞ்சை(மாரியம்ம்ன் கோவில் வழியாக போகும் போது பெரிய கோவிலை பார்கவும்),தஞ்சை-கும்பகோண்ம்,கரூர்-தஞ்சை வழி பயணித்து பாருங்கள்.படிக்கும் போது கற்பனைகளுக்குக் கண்டிப்பாக உறுதுனையாக இருக்கும்.


என்றும் அன்புடன்,
பிரபுFriday, July 13, 2012

சுவடு
                                                  சுவடு

எப்படியோ அம்மாகிட்டேந்து வாட்ச் கிஃப்டா வாங்கியாச்சு,கொஞ்சமாவது மார்க் கூட எடுத்திருக்கலாம்.இப்படி ஜஸ்ட் பாஸ் ஆனது தான் ஒரு மாதிரி இருக்கு.அம்மா ஒன்னும் சொல்லலை அது வரைக்கும் சந்தோஷம் .ஆனா சார் என்ன சொல்லுவாரோ ?அந்த‌ மாமி வேற , படிக்கிற பையன்னு நினைச்சுக்கிட்டாங்க , அவுங்க கேட்டா என்ன பதில் சொல்றதுனு தெரியலை.ரெண்டு பேரும் ஒன்னா தான் படிச்சோம் ,ஆனா கவிதா மட்டும்  ஃபர்ஸ்ட் கிளாஸ் ல பாஸ் பண்ணிடுச்சு.ஒரு வேளை அது நிஜமாவே படிக்கிறப் புள்ளையோ.நம்மல மாதிரியில்லையோ.

கவிதா கண்ணுல படாம  எப்படியாச்சும்  அவுங்க வீட்டத் தாண்டிடனும்,இல்லாட்டி மார்க் ஏன் குறைஞ்சுது,அது இதுனு கேட்டு கொடுமை பன்னுவா.சத்தம் இல்லாம தான் நடந்தேன் , இருந்தும் எப்படியோ என்னை பாத்துட்டா.

"பிரகாஷ்!நில்லு டா, ஹிந்தி சார் வீட்டுக்கு தானே போற ,5 நிமிஷம் இரு நானும் வரேன்"

"சரி சீக்கிரம் வா."

"என்னடா புது வாட்ச்,சூப்பரா இருக்கே."

நல்ல வேலை பாத்துட்டு , அதோட நிருத்திட்டா,ப்ராத்மிக் பாஸ் ஆனதுக்கு தான் வாங்கிக் குடுத்ததுன்னு தெரிஞ்சா ஓட்டி எடுத்திடுவா.அதனால நானும் வாட்ச் பத்தி எதுவும் பேசாம நடந்தேன்.

"கவி , சார் மார்க் சீட் வாங்க வரும் போது ஏதாச்சும் கிப்ட் குடுக்கனும்னு சொன்னாரே , ஏதாச்சும் வாங்கனுமா..?"

"சர்டிஃபிகேட் வாங்கும்போது நல்ல கிஃப்டா  வாங்கி குடுப்போம்.என்ன வாங்கலாம்னு யோசிச்சு வைடா..எனக்கு ஏதாச்சும் தோனுச்சுனா சொல்றேன்.

"ம்ம்..."

"சரி நீ ஏன் மார்க் ரொம்ப கம்மியா எடுத்தே? நல்லா எழுதிருக்கேன்னு சொன்னீயே டா....என்ன ஆச்சு.."

"உன் கூட சேர்ந்து படிச்சேன்ல அதான்னு நினைக்கிறேன்.நானே சாரும் , மாமியும் கேட்டா என்ன சொல்றதுன்னு யோசிச்சிட்டிருக்கேன் , இதுல நீ வேற..."

"கோவப்படாதே...நான் எதுவும் கேட்கல‌ப்பா..ஆனா நீ சார் வீட்ல ரொம்ப பாப்புலர்...சார் வீட்ல கொளு வெச்சப்போ உன் ஸ்கூல் ப்ரேயர்லாம் பாடி கலக்குன...கண்டிப்பா மாமி கேட்பாங்க‌ அப்ப என்ன சொல்ல‌ப்போற‌ "

"அதான் ஏன் பாடுனேன்னு யோசிச்சுட்டிருக்கேன்..என்ன சொல்லறதுன்னு தெரியலை".

"மத்தியமாலக் கண்டிப்பா நல்ல மார்க் எடுக்குறேன்னு சொல்லு டா"

"ம்ம்..வேற வழி..?"

சார் வீடு வந்துடுச்சு.....

'சார்..!"  நானும் , கவிதாவும் கோரசா கூப்பிட்டோம்...

மாமி தான் வந்தாங்க.எங்களைப் பாத்து...

"யாரு நீங்க!என்ன வேனும்?சார் திருச்சி வரைக்கும் போயிருக்காரு,வர நேரம்தான்.உட்காருங்கோ...என்ன ..? டியுஷன் சேர வந்தீங்களா..?"

மாமி இப்படிக் கேட்டதும் , எண்ணையில போட்ட கத்திரிக்காய் மாதிரி எங்க ரெண்டு பேரு மூஞ்சும் சுருங்கிப் போச்சு.

"இல்லை மாமி , மார்க் ஸீட் வாங்களாம்னு வந்தோம்.." 

நாங்க சொன்னதை ஒழுங்கா கேட்டாங்களானு தெரியல..."சார் வர நேரம் தான்..அப்ப்டி உட்காருங்கோனு" மட்டும் சொல்லிட்டு எங்களை திண்ணையில உட்கார சொல்லிட்டு வீட்டுக்குள்ள‌ போயிட்டாங்க.

நாங்க டியுடஷல தினமும் உட்கார இடமும் அதுதான். மாமி எப்படி நம்ம முகத்தையல்லாம் மறந்தாங்க...கடந்த 6 மாசமா தினமும் சாயுங்காலம் இங்க தான் இருப்போம்.பரீட்ச்சை முடிஞ்சு 1.5 மாசம் தான் ஆகுது.அதுக்குள்ள எப்படி மறந்தாங்க.ரெண்டு பேரும் இதைத்தான் யோசிச்சோம்,தவிச்சோம்.பேசுனா கேட்கிற தூரத்திலத் தான் மாமி இருந்தாங்க.அதனால ஏதும் பேச முடியாம தவிச்சோம்.

சார் வரது வழக்கம் போல அந்த டிவிஎஸ் 50 சத்தத்துலேந்து தெரிஞ்சுது.வ்ண்டியை நிப்பாட்டிட்டு , எங்களப் பாத்து .."என்ன மார்க் சீட் வாங்க வந்தீங்களானு கேட்டதும்.அப்பாடி இவராச்சும் ஞாபகம் வைச்சிருக்கிராரேனு ஒரு சந்தோசம்.உள்ளே போய் மார்க் சீட் எடுத்துட்டு வந்து உன் பேரு என்னானு கேட்டாரு...

"முகத்தை ஞாபகம் வைச்சுக்கிட்டதே பெரிசு. இதுல எங்கப் பெயரெல்லாம் ஞாபகம் வெச்சிப்வபீங்கன்னு எதிர் பாக்கலை" அவளோட மைன்ட் வாய்ஸ் எனக்குப் புரிஞ்சிது.

'எஸ்.பிரகாஷ் ,டி.கவிதா" னு எங்க பெயரை சொன்னதும் ,

கையில் இருந்த 20-30 அட்டையில எங்களோடத தேடி எடுத்துட்டாரு.எங்களை குருகுருனு பார்த்தாரு."மத்தியமால கண்டிப்பா நல்ல மார்க் வாங்குரேனு சொல்ல‌லாம்னு வாயைத்திற‌ந்தா...அதுக்குலல அவரு..

"எங்க ஏதும் கானும்.குரு தட்சனை தரனும்னு சொல்லிருக்கேன்ல...இன்னும் 2 வாரத்துல‌ சர்டிஃபிகேட் வந்துடும்.தட்சனை குடுத்துட்டு ரெண்டையும் சேத்து வாங்கிட்டுப் போங்கோ.புரியுதா?"

அவரு இப்படி சொன்னதும் , என்ன சொல்றதுனு தெரியாம,"சரி நாங்க அடுத்த வாரம் வரோம்னு" சொல்லிட்டு கிளம்பினோம்.

"நான் அப்பவே சொன்னேன்ல.ஏதாச்சும் வாங்கிட்டு வந்திருக்கலாம்.இவ்வளவு தூரம் ந்டந்து வந்தது வீனாப் போச்சு"

"அவரு இப்படித் திருப்பி அனுப்புவார்னு எனக்கு என்ன தெரியும்."

இருவரும் சண்டைப்  பிடிக்க,கொஞ்ச நேரம் ஏதும் பேசாமல் நடந்தோம்...

"யாரு அது பிரகாஸா..?" அப்படினு ஒரு குரல் ..என்ன பாத்து  கேட்டுச்சு...

"நல்லா இருக்கியா ராசா...உன் அண்ணன் எப்படியிருக்கான்...எத்துனாவது படிக்குற"...

என்னோட பால்வாடி ஆயம்மா தான் அவுங்க.தினமும் அவுங்க தான் பால்வாடிக்கு கூட்டிட்டு போயிட்டு , சாயிங்காலாம் வீட்டுலையும் விடுவாங்க.அவுங்க முகம் அந்த அழகிய சிரிப்போட‌ எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.

நல்லா இருக்கேன்..7ம் வகுப்பு படிக்குறேன்..என்று அவுங்க கேட்டதுக்கலாம் பதில் சொல்லிட்டு ."ஆயம்மா நீங்க எப்படி இருகீங்க? னு கேட்டேன்.

"நல்லாயிருக்கேன் கண்ணு..நல்லா படிக்கனும்..இந்த ஆயம்மாவை மறந்துடாதே" னு சொல்லி ..என் முகத்த சுத்தி திருஷ்டி எடுத்துட்டு கிளம்புனாங்க‌...

அவுங்க அந்த தெருவை விட்டு போற‌ வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் வெச்ச கண்ணு வாங்கமா அவுங்களையே பாத்துட்டிருந்தோம்.

இது நடந்து பல வருசம் ஓடிப் போச்சு .என்னை ஞாபகம் வெச்சிகிட்டு உரிமையா விசாரிப்பாங்கன்னு எதிர்பாத்து ஏமாந்து போன சாயம் வடியரத்துக்குள்ள  , உன்னை விசாரிக்கிறதுக்கு நான் இருக்கேன் டா , நீ ஏன் கவலை படுரேன்னு சொன்ன மாதிரி இருந்தது அந்த நிகழ்வு.என் வாழ்வில்,காலம் தன் விரல்களை நீட்டி அழிக்க முடியமால் போன  சுவடுகளில் இதுவும் ஒன்று.

இன்னும் கொஞ்ச நாள்ல என் குழந்தையை பால்வாடியில சேக்கனும்.இப்போலாம் அதுக்கு பேரு பால்வாடியான்னு எனக்கு தெரியல . ப்ரீ ஸ்கூல் , ப்ளே ஸ்கூல் , டே கேர் னு என்னனென்ன‌மோ இருக்கு.எதுவாக இருந்தாலும் , அங்க கொண்டு போய் என் குழந்தையை சேக்கும் போது கண்டிப்பா என் ஆயம்மாவின் சாயல் யாரிடமாவது இருக்குதான்னு தேடுத் தோனும்.

Wednesday, May 16, 2012

ங்ங்கா


                                                                                           ங்ங்கா


"அனு! ஒரு 5 நிமிஷம் இங்க வாயேன்..!"

"நீங்க தான் வெட்டியா ஃபேஸ் புக் ல நேரத்த வீணாக்குரீங்கனா,என்னையும் ஏன் இந்த போட்டோ பாரு , வீடியோ பாருனு தொந்தரவு பன்றீஙக?"

"சரி!சரி! இங்க வா, இதான் கடைசி..இனிமே தொந்தரவு பண்ண மாட்டேன்"

"உங்க ப்ளாக்கா(http://idaivaellai.blogspot.in/2012/04/blog-post.html) ..? "நீங்க எழுதுனதா..?" சொல்லிட்டு போக்கிரி வடிவேலு மாதிரி லாப்டாப் முன்னாடி இருந்த என்னை நகர்த்திட்டாள்.

கொஞ்சம் சிரிச்ச அவள் முகம் , முடிக்கும் போது சுண்டைக்கா போல‌ சுருங்கி இருந்தது,

"என்னா ? எப்படி இருக்கு..?"

"நான் சொன்ன மாதிரியே எழுதிருக்கலாம்ல...முடிவ ஏன் மாத்துனீங்க..?"

"இதான் நல்லா இருக்கும்,எதார்த்தமா...!"

"போங்க ...! என்க்கு முடிவு பிடிக்கல...மொட்டையா இருக்கு.."

"போ .. ! உனக்கு ரசனையே இல்ல.."

"அதெல்லாம்..எங்களுக்கு இருக்கு..நீங்க ரசனையா எழுதலைனு சொல்லுங்க..!என்னோட கதையை சுட்டுட்டு , அதுல மானே,தேனை,பொன் மானே லாம் சேத்துட்டு..என்னமோ சொந்தமா எழுதின மாதிரி பில்ட் அப் குடுக்குறீங்க‌?ஏகப்பட்ட எழுத்து பிழை வேற..நீங்கலாம் என்ன தான் தமிழ் படிச்சீங்களோ..?"

"இவ்வுளவு பேசுரியே..இன்னும் கொஞ்ச‌ நாள் ல குழந்தை பிறக்க போகுது.. ஒரு தாலாட்டாச்சும் உனக்கு தெரியுமா?"

"அதென்ன பெரிய கம்ப சூத்திரமா.லுலுலுலாயினு பாடுனா போச்சு!"

"சும்மா நாக்கை ஆட்டுனா..அது பேரு தாலாட்டா..?

"ஆமாம் அதுக்கு பேரு தான் தாலாட்டு..?

"என்னடீ சொல்ற..?"

"தால் + ஆட்டு =  தாலாட்டு ..  தால் என்றால் நாக்கு.நாக்கை ஆட்டி ஆட்டி பாடுவதால் அதற்கு தாலாட்டு என்று பெயர்.
எப்புடி..? " என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள்.

"நல்லா தான் கடம் அடிச்சிருக்கே..ஒரு 2 மார்க்கை ஒப்பிச்சிட்டு சும்மா சீன் போடாதே...முடிஞ்சா ஒரு கவிதை எழுதுடி..ஒத்துக்குறேன்..?

சிறிது யோசித்தவளாய்....

"எவ்வளவோ பண்றோம்.இதை பண்ண‌ மாட்டோமா?என்ன தலைப்பு..?"என்றாள் சவால் விடும் தோரணையில்.

"நம்ப ஜுனியர் பத்தி எழுதனும்.நானும் எழுதுறேன்..நீயா ..? நானானு? பாத்துடலாம்..."

மறுநாள்.....

"இந்தா இதை படி.."என்றேன் எனது கவிதையை நீட்டி...


"உனக்காக காத்திருக்கிறோம் கண்ணே !
இல்லறம் எனும் ஆலயம் கட்டி 
உன் திருவடி பூஜிப்பதிற்காக !

பத்து மாதம் கருவாசம் கொண்டு ..
தாய்மை வரம் தந்தாய் உன் அன்னைக்கு ..
மெல்லிய அசைவுகள் தந்து 
கோடி இன்பம் கொடுத்தாய் இந்த தந்தைக்கு ..


பசி ,ருசி ,உறக்கம் யாவும் கலைந்தாள்
உண்பதெல்லாம் மசக்கையில் உமட்டினாள்
பூ போல் பாதம் பதித்து நடந்தாள்
பயணம் செய்ய மறுத்தாள்
முகம் துவண்டு , பலம் குறைந்து வாடினாள்
உன் அன்னை !
இன்னல்கள் யாதாயினும் 
மின்னல் என ஜொலிப்பால் 
உன் முகம் காணும் தருணம் நினைத்து .

அவள் துவண்ட பொழுதெல்லாம் நான் துடித்தேன் 
அவள் மனம் வாடாமல் காத்திட நினைத்தேன் 
அவள் புசிக்க மறுத்த போதும் 
உன் பெயர் சொல்லியே ஊட்டினேன்
உனக்காக செய்த ஓவ்வொன்றையும்..
அவளுக்காக என்று சிறு பொய்யும் உரைத்தேன் 

தூரத்தில் உனை காணுகின்றேன் 
சில சொப்பனத்திலே 
சில கற்பனையிலே!

அவ்வப்பொழுது சிறு கேள்வியும் 
எழுந்தது மனதுக்குள்ளே 
சொல் பேச்சு கேளாத சுட்டி பையனா நீ 
இல்லை
தந்தையின் மடி தேடும் தேவதையா நீ ..
நாட்கள் ஓவ்வொன்றையும் எண்ணுகின்றேன்
இந்த அழகிய ரகசியத்தை எண்ணியே ...


உனக்காக காத்திருக்கிறோம் கண்ணே ! "


"என்ன எப்படி...?"

"ம்ம்...பரவால...நல்லாயிருக்கு!"

"ம்ம்....சரி..சரி...உன்னோடுது எப்போ....?"

"தரோம்..தரோம்..."

மாலை பொழுது வந்தது.ஞாயறு மாலை மீண்டும் எங்களின் பிரிவிற்காக காத்துக்கொண்டிருந்தது.

"பேசாம இந்த வாரத்திலேந்து லீவு போட்டிருக்கலாம்..!"என்றென் அவளிடம்.

"அதெல்லாம் வேண்டாம்.பாப்பா பிறந்தப்புறம் லீவு போடுங்க போதும்.இப்போ கிளம்புங்க ..நேரம் ஆயிடுச்சு.."என்று வற்புறுத்தி அவளும் மனமில்லாமல் என்னை அனுப்பிவைத்தாள்.

ஆமை என கடந்தது இரு தினங்கள்.இன்று தான் கடைசி செக்-அப் , அவளது அழைப்புக்காக காத்துக்கொண்டிருந்தேன்.

"ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க‌.நீங்க உடனே கிளம்பி வாங்க...."
அவளுடைய குருஞ்செய்தி கண்ட பிறகு..அவசரமாக தஞ்சை பயணம்....போற வழியெல்லாம்..இறைவனிடம் வேண்டிக்கொண்டேச் சென்றேன்....பாதி பயணத்திலே தேவதை வந்த செய்தி எட்டியது.படபடப்பில் எட்டாத உறக்கம்,மகிழ்விழும் எட்டவில்லை.

விடிகாலை..தஞ்சை தொட்டது பேரூந்து....உச்சத்தை  எட்டியது என் படபடப்பு.அடுத்த 10 நிமிடத்தில் அவள் முன்னால் நான்.அன்னையின் கதகதப்பில் அழகாய் உறங்கிய அவள் இப்போது என் மடியில்.

மயக்கத்திலிருந்து எழுந்தாள் என்னவள் ....சிறிய உரையாடலுக்குப் பின்..

"உங்க பொண்ணுட்ட சொல்லிட்டேன்....நீங்க கேட்டூகுங்க....."என்றாள்.

"என்னது..?" என்றேன் ஒன்றும் புறியாமல்...

"ங்ங்கா..." என்றது அந்த அழகிய சிவந்த உதடு....

என்ன வார்த்தை இது..எந்த மொழி இது...

ஒரு சொல்ல கவிதை சொல்லனும்னா .. "அம்மா" என்று எங்கையோ கேட்ட ஞாயபகம்...

ஒரு சொல்ல இன்னொரு கவிதை சொல்லனும்னா ..அதுவும் எல்லா மொழிக்கும் பொதுப்படையா சொல்லனும்னா

"ங்ங்கா..."  என்று சொல்லுவேன்....

மெலிதாய் என்னவள் சிந்திய புன்னகை ... என் தோல்வியை எனக்கு உணர்த்தியது.

Friday, May 11, 2012

காதல் நாடகம்

செங்கடலில் நீராடி

பால் வண்ணப் பட்டுடுத்தி
வருகிறாள் நம் தலைவி ......

இருள் எனும் மெத்தை விரித்து
நட்சத்திர மலர் தூவி
காத்திருக்கும் தலைவன் தேடி...

வான் எனும் தலைவன்
தென்றல் கரம் நீட்டி
அவள் பூ உடல் தீண்டினான்!

அவளோ
மேகம் கொண்டு தேகம் மூடி
துடித்திட்டாள் நாணத்தில்

தலைவனோ
அணைத்திட்டான் மோகத்தில்

அவனது தேகத்தில்
மீண்டும் குடியேறியது அவளது குங்குமம் ...

இரவெனும் மஞ்சத்தில் ..
நித்தம் அரங்கேறுதோ இந்த காதல் நாடகம் ..?
Wednesday, May 9, 2012

என்றும் நீயே என் முதல் காதல்


என்றும் நீயே என் முதல் காதல்
வான் நீலம் தொட்ட ஆலயம்
மண்ணின் நிறம் காக்கும் விவசாயம்
மழலையாய் தத்தி தாவும் ஆறுகள்
கரையோரம் நெடுந்து நிற்கும் மரங்கள்
உரையாடும் தலை ஆட்டி பொம்மைகள்
தமிழுக்கு
உரம் போடும் கலாச்சார முறைகள்
சொல்வது அறியாது விழிக்கிறேன் உன் அழகை கண்டு
நாதம் தந்தாய் வீணை கொண்டு
கலை வளர்த்தாய் ஓவியம் தந்து
குலம் காத்தாய் சோழனை படைத்து
தஞ்சை தட்டு , தவில் , போகம் தரும் நிலம் ,இசை மேதைகள் , நாட்டிய கலைகள் ..
நான் மிளிர கேளாமல் மென்மேலும் கொடுத்தாய் …..
உன் மடி மீது பிறந்தேன்
உன் துணை கொண்டு வளர்ந்தேன்
உன்னை பிரிந்த போதிலும்
உன் புகழ் பாட துடிக்கிறேன்
என் காதல் சொல்ல தவிக்கிறேன்
இந்த வலைதளத்தை உனக்காக சமர்பிக்கிறேன்


Thursday, April 26, 2012

சாலை


                        சாலைஇன்னைக்காவது பஸ்ல போயேன் டீ.இந்த வெயில்ல ஏன் சைக்கிள் ல போற?அக்னி நட்சத்திரம் வேற ஆரம்பிக்கப் போகுது.சொன்னா கேளேன்"

"அது ஆரம்பிக்கட்டும் , அப்போ பாத்துக்கலாம் மா!"

"அப்புறம் கறுத்துப் போய்ட்டா , ஓருத்தவனும் கட்ட வர மாட்டான்.ஏங்க நீங்களாச்சும் சொல்ல கூடாதா? இவள் மத்தியானம் காலேஜ்லேந்து வரும் போது ஏதோ ஒட்டடை குச்சிக்கு சுடிதார் போட்ட மாரி இருக்கு.சரியாவும் சாப்ட மாட்டரா!"

"அம்மா .. ! ஆரம்பிச்சிட்டியா ! ..மே மாசத்துலேந்து  பஸ் ல போறேன் .. ஒகே வா ?"

"ம்ம்ம்ம்...."

"சரி ... என்ன டிபன் ? காலேஜ்க்கு நேரம் ஆச்சு மா...! "

"உப்புமா தான் செஞ்சேன் ! நீங்களும் வாங்க புள்ளையோட சேந்து உட்காந்து சாப்டுங்க ! "

"யாருப்பா இந்த உப்புமா வ கண்டுப்பிடிச்சா ? "

"கண்டிப்பா உங்க அம்மா வோட பூர்வீகமா தான் இருக்கும்"

"ஆமாமா .... சொல்லிக்கிட்டாங்க .... ! பேசாம ரெண்டு பேரும் சாப்டுங்க !"

"அம்மா .. ! நான் கிளம்புறேன் ; அப்பா .. வரும் போது வெஜ்.  பப்ஸ் வாங்கிட்டு வாங்க!"

"சரி பத்திரமா போயிட்டு வா .." சமையல் அறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது"

அது என்னமோ தெரிய‌ல , காலேஜ்கு சைக்கிள் ல போறது தான் பிடிக்குது.அது அப்பாவுக்கும் தெரியும்.அத‌னால தான் அப்பா எதுவுமே சொல்லலே.பிடிச்சதுக்கு முக்கியமான காரணம் இந்த ரோடு தான்.நானும் பஸ் ல  ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணி பாத்தேன் .சரியான போர்.கச கசன்னு இருக்கும் , மெதுவா ஊர்ந்து போகும் வேற.அப்பா வண்டிலையும் போய் பாத்தாச்சு,அப்பா சீக்கிரமே கிளம்பிடுவாங்க.நான் மட்டும் தனியா காலேஜ் ல உட்காந்திருக்கனும்.எனக்கு சைக்கிள் தான் சரி.இப்டி எனக்கு நானே பேசிக்கிட்டு போனேன்,மெயின் ரோடு வந்திடுச்சு.
இவ்வுளவு அமைதியா இருந்த சாலை திடீர்னு கூப்பாடு போட ஆரம்பிச்சிடுச்சு.திருவாரூர் , வேளாங்கண்ணி , பட்டுக்கோட்டை ரூட் பஸ்லாம் தஞ்சாவூர்க்கு நுழையற‌ இடம்.வேகத்த குறைக்காம வருவங்க,எனக்கு கொஞம் பயமா தான் இருக்கும்.ஏன் இப்டி வராங்களோ... ? ஸ்பீட் ப்ரேக்கரையும் மதிக்காம வரத பாக்கும் போது கோவமா வரும்.அதுவும் ஹாரன் சத்தம் காதையே பிச்சிடும்.தொம்பங்குடிசையிலேந்து ரயிலடி வரைக்கும் பஸ் கூடவே போக வேண்டியதா இருக்கும்.ரோடு குண்டு குழியுமா இருக்கும்.இந்த ரோட பல முறை சரி செஞ்சும் திரும்பி அதே நிலைமை தான்.எவ்வளவு  fair & lovely போட்டும் வெள்ளையாகாத முகம் மாதிரி தான் இதுவும்.

இந்த வண்டிக்கார தெருவோட speciality ஒன்னு இருக்கு.இந்த மெயின் ரோடுக்கு நிறையா சந்து ரோடு சேரும்.கடையும் நிறையா.ரோடும் சின்னது.மக்கள் கூட்டம் எப்போதும் அதிகம்.அதுனால கன்னாபின்னானு க்ராஸ் பண்ணுவாங்க..
என் வண்டிக்கு முன்னாடி எத்தனை பேரு குறுக்க  போனாங்கனு எண்றது தான் என் வேலை.இன்னைக்கு கம்மி , 8 பேரு தான்.

ரயிலடி வந்தாச்சு , தூங்கி எழுந்து , லக்கேஜ்யோட பஸ்டாப் தேடி நிறைய புது முகங்கள்.வரவங்களுக்காக காத்திருக்கும் சொந்தகாரங்க.ரயில பிடிக்க வழக்கம் போல் ஓடும்  சில பேர்.இந்த கூட்டத்துல ஊருக்க புதுசா வரவங்கள‌ சுலபமா கண்டுப்பிடிச்சுருவேன்.ரெயிலடி வழியா காலேஜ் போறது சுத்து ; இருந்தாலும் அப்டி போனா மேம்பாலத்தை ஏறி எறங்கலாம்;பெரியக்கோயிலப் பாக்கலாம்.இந்த 2 விஷயத்துக்காக எப்போதும் இந்த வழியா போறது.அதுவும் மேம்பாலத்திலிருந்து பெரியக்கோயிலப் பாக்கும் போது பிரமிப்பு கொஞ்ச‌ம் அதிகமாவே இருக்கும்.
ஆனா மேம்பாலாம் ஏறும் போது தான் மூச்சு வாங்கும்.இனிமே இந்த வழியா வரக்கூடாதுனு தோனும்.ஆனா இறக்கத்துல போகும் போது அந்த எண்ணமெல்லாம் காத்தோட் போயிடும்.அப்டி இறங்கும் போது சின்னப்புள்ளைல சருக்கு மரத்துல இறங்குற மாறியே இருக்கும்.மேம்பாலதுக்கு கீழ ரயில்வே லைன்;இன்னைக்கு ரயில் போகுது ; ஒரு அப்பா பிள்ளைக்கு
ரயில் காட்டுறாரு , அந்த குழந்தை அழகா டாட்டா காட்டுது;அதை பாக்கும் போது நானும் சிரிக்கிறேன் என்னை அறியாமலே.அப்டியே ப்ரகத்தீஸ்வரர்க்கு ஒரு வணக்கம் போட்டுட்டு , கொஞ்சம் ப்ரேக்கையும் போட்டு ரோட்ட க்ராஸ் பண்ணேன்.

ஸ்டேடியம் தாண்டி முதல் லப்ட் எடுத்தா காலேஜ் ரோடு .மேம்பாலாம் -  ஸ்டேடியம் ரோட்ல‌ அநாதை இல்லம் , ரெட் கிராஸ் , காதுக கேளாதோர் பள்ளி , கண் தெரியாதோர் பள்ளி, ஒரு அரசு பள்ளியும் இருக்கும் .இது எல்லாம் ஏன் ஒரே இடத்தச் சுத்தி இருக்குனு அக்டிகடி  யோசிப்பேன்.அநாதை இல்லம் கடக்கும் போது வழக்கம் போல சைக்கிளை ஏறி மிதிச்சு எட்டிப் பாத்தேன் ஒரு சோகமான அமைதி  இன்னைக்கும் இருந்துச்சு. ஸ்டேடியம் கிட்ட ப்ஸ் ஸடாப் , ஸ்கூல் பிள்ளைங்க கூட்டம் நிறையா இருக்கும் .அதுவும் பிள்ளைங்க "அக்கா  அக்கா இருங்கன்னு" சொல்லி ரோட்டக் கிராஸ் பண்ணுங்க .தினமும் அந்த பிள்ளைங்க பஸ் லேந்து இறக்கி விடறதுக்குக் கண்டக்டர்  பட்ற பாடு ...பாவுமா இருக்கும் .ஒரே சத்தமா இருக்கும் ; இருந்தாலும் அந்தச் சத்தம் நல்லாவே இருக்கும் .இப்போ ஸ்கூல் லீவ் ,  அந்த இடமே வெறிச்சோடியிருந்தத்து. 

காலேஜ் ரோடு வந்துடுச்சு.சில பேரு நடந்தும் , சில பேரு ஸ்கூட்டிலயும் வருவாங்க .என்ன மாதிரி சைக்கிள்ல‌ வந்த என் ப்ரண்ட்ஸ் கூட சேந்துக்கிட்டேன் .வெளிப் போக்குவரத்து அதிகமில்லாத சாலை,கொஞ்சம் குண்டும் குழியுமாயிருந்தாலும் ;இது எங்க ரோடுன்னு உரிமை  கொண்டாடலாம்.ஆமாம் சாலை பூராவும் அதிகமாப் போறது எங்க காலேஜ் பொண்ணுங்க தான் .ஏதோ அரட்டை அடிச்சிட்டு காலேஜ்க்குள்ள நுழைஞ்சேன் .

எனக்காக அது வரை துணை வந்த சாலை , மீண்டும் என் வரவுக்காக வாசலிலே காத்துக் கொண்டிருந்தது.!


There was an error in this gadget