Tuesday, July 30, 2013

அந்த மரண அடி

அலுவலகத்தில் dead end ல் நிற்க வைத்து க்ளைண்ட் கொடுக்கும் dead line அடிகள் , வீட்டில் ஒரு பக்கம் அம்மா ; மறுப்பக்கம் மனைவி என்று திடிரென விழும் sentimental  அடிகள், மாதம் 10ம் தேதியானால் துவங்கும் பொருளாதார அடிகள் , சரி இதை மறக்கலாம் என்று  சமூக வலைபக்கம் சென்றால் பிரபலங்களின் சண்டைகளிலும் , இலக்கியவாதிகளின் சண்டைகளிலும் முரண்பட்ட கருத்துக்களால் விழும் comment அடிகள்.விதவிதமான அடிகள் பதமாக விழுந்தாலும் சரி,திடமாக விழுந்தாலும் சரி... நானும் உங்களை போல தான் ; எவ்வளவு அடிச்சாலும் அமைதியாக வாங்கிக் கொண்டு ,விடுகதையா பாடலில் வரும் ரஜினி போல் சிரித்துக் கொள்வேன்.இங்கு நான் எழுத வந்தது இந்த கைப்புள்ள வாழ்வில் வாங்கும் அடிகளை பற்றியத‌ல்ல,சிறுபிள்ளையாய் வெள்ளை சட்டையும் , சிகப்பு டவுசரும் போட்டுத் திரிந்த காலத்தின் போது வாங்கிய ஓர் அடியினை பற்றி.

அந்த பள்ளிப் பருவத்தில் ; தேர்வின் போது விளையாடுவது,விளையாட்டின் போது நண்பர்களுடன் சண்டை பிடிப்பது,ஆர்வ கோளாரில் ஏதாவது பொருளினை உடைத்து விடுவது என வீட்டில் அடிக்கடி அடி வாங்குவதற்கு இதில் ஏதாவது ஒன்று தான் காரணமாக  இருக்கும்.அந்த அடிகளின் நினைவுகள் கூட; அப்பா ஆசையாக வாங்கி வரும் தின் பண்டங்களிலோ ,அம்மாவின் கொஞ்சலிலோ மறந்து போய்விடும்.ஆனால் இந்த பள்ளியில் தேவையில்லாமல் வாங்கிய அடி ...நினைவில் ஓர் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும் .அப்படிப்பட்ட ஓர் அடி எனக்கும் விழுந்திருந்த‌து...

4ம் வகுப்பு 'C' பிரிவில் படித்துக் கொண்டிருந்தேன்', காலாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது.ஆட்டோக்காரர் அன்று வராததால் ;  சைக்களில் அப்பாவுடன் பள்ளிக்கு 8 மணிக்கே வந்துவிட்டேன்.9.30 மணி க்கு தான் தேர்வு.தேர்விற்காக வகுப்பறைகள் யாவும் ஒன்றாக்கப்பட்டிருந்தன.சீக்கரம் வந்ததால் அந்த பெரிய ஹாலில் நான் மட்டும் அமர்ந்திருந்தேன்.அந்தப் பள்ளியில் ஓர் அண்ணன் இருப்பார்,அவர் பெயர் நினைவில் இல்லை ஆனால் அவரது சிரிப்பு மட்டும் நினைவில் இருக்கிறது அது ரஜினியின் சிரிப்பை போல வசீகரமாக இருக்கும்.அவர் அந்த ஹாலின் வாசலில் நின்று கொண்டிருந்தார்.தேர்வுக்காக புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன்.அப்பொழுது 'D' பிரிவிலிருந்த ஓர் மாணவி அங்கு வந்தாள்.அவளைப் பார்த்தவுடன் ஒரு சின்ன புன்னகையுடன் ஏதோ பேச முயன்றேன்.

அவ்வளவு தான் நடந்தது...உடனே வாசலில் இருந்த அந்த அண்ணன் என் பெயரை குறித்துக் கொண்டார்.ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.தேர்வு ஆரம்பிக்கும் வரை ஹாலில் படிக்காமல் பேசுவோர்களை பிடித்துக்  கொடுக்கும் உளவாளி அவர் என்பது பின்னர் தான் எனக்கு புரிந்தது.சரியாக 9 மணிக்கு என்னை "Big sir" அறைக்கு அழைத்துச் சென்றார்.அவரோட முகத்திலிருந்த அந்த வசீகரிப்பு காணாமல் போயிருந்தது.ரஜினி படங்களின் வரும் வில்லன்களாக அவர் தெரிந்தார்.

அந்த பள்ளியின் முதல்வர் Big Sir தான் , அவரை பார்க்கும் போதெல்லாம் சலாம் போடுவேன்.திங்கள் தோறும் நடக்கும் ப்ரேயர் முடிந்ததும் "GOD BLESS YOU" என்று அவரை கடக்கும் போது சொல்லுவார்.இதை தவிரஅவருக்கும் எனக்கும் எந்தவித பேச்சுகள் இருந்ததில்லை.அவரது அறைக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டால் அது அடிக்காக மட்டுமே.அவர் அடியை பற்றி அரசபுரசலாக கேள்விப்பட்டிருக்கேன்.ஆனால் அப்பொழுது தான் முதல் முறையாக அடி வாங்க அவரது அறைக்கு சென்றேன்.மனதிற்குள் அவரிடம் சமாளிக்க வசனங்களை தயார் செய்தேன்..அவரிடம் பேசினால் விட்டுவிடுவார் என்று நினைத்தேன்.அவருக்காக வாசலில் காத்திருந்தோம்.ஆம் அந்த உளவாளி வேறு இருவரையும் கடைசி நிமிடத்தில் பிடித்திருந்தார்(ன்).அறைக்குள் நுழைந்தார்  Big Sir, முதல் ஆளை வரச் சொன்னார்..முதல் ஆள் வேறு யாரு..நான் தான்...

நான் கொஞ்சம் முகத்தை சோகமாக மாற்றிக் கொண்டேன்,மனதிற்குள் பயமும் இருந்தது."sorry sir.."என்று நான் ஆரம்பிக்க.அவரோ என் காதை திருகி , குணிய வைத்து மளாரென்று இரண்டு அடியை முதுகில் போட்டார்.எனக்கு ஏனோ கொஞ்சம் படபடத்தது.சுவாசிக்க சிரமமாக இருப்பது போல் தோன்றியது.என் முகத்தைக் கூட பாராமல் என்னை போக சொல்லிவிட்டு அடுத்தவனை உள்ளே அனுமதித்தார்.எதிரே வரும் அடுத்த மாணவனின் கண்கள் எனக்கு விழுந்த அடியின் சத்தத்தில் கலங்கியிருந்தது.வேறு யாரும் நான் அடி வாங்கியதை பார்க்காத போதும் எனக்கு ஏனோ அவமானமாக இருந்ததுஇது ஓரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும் எனக்கு விழுந்த அடி நியாயமற்றதாகவே தோன்றியது.தேர்வின் போது கூட அதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் , வெறுப்பின் உச்சம் என்று கூட சொல்லலாம்.அந்த தேர்வை சரியாக எழுதவில்லை.."ஒழுங்கா படிக்காததுக்கு இப்படி ஒரு பிட்டா"  என்று நீங்கள் நினைத்தால் அதுக்கு  நான் ஒன்றும் செய்ய முடியாது.

அதன் பிறகு அந்த அண்ண‌ணையும்,Big Sir யும் கடக்கும் போதெல்லாம் வெறுப்பா இருக்கும். எனக்கு அந்த பள்ளியை சுத்தமாக பிடிக்காமலிருந்தது.அடுத்த வருடம் வேறு பள்ளிக்கு மாறிவிட்டேன்.மாறியதற்கு வேறு பல காரணங்களிருந்தாலும் , வாங்கிய அந்த அடியும் ஒரு முக்கிய காரணம்.நண்பர்களை விட்டு பிரியும் சோகத்தை விட , பள்ளியை விட்டு போவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இது தான் நான் வாங்கிய அந்த மரண அடி...அன்று எனக்கு பெரிய அவமாணமாக இருந்தது.அந்த அடிக்காக feel பண்ணது கொஞ்சம் அதிகபடின்னு இப்போ தோன்றினாலும்  Big Sir ன் அடிகளில் நியாய‌ம் ஏதும் இருப்பதாக எனக்கு இன்றும் தோன்ற‌வில்லை.ஆசிரியரின் பார்வையிலே ஓர் அடி என்பது மிகச் சாதரணமாக இருக்கலாம் , ஆனால் ஒரு சிறுவர்வனின் பார்வையில் அது அவனுக்கு பயமும் , அவமானமும்.

அடிகள் தவறு செய்ததற்கு என்ற போது என் மனது (சிறுவனாக இருந்தபோதும்) அதனை ஏற்றுக் கொண்டது அதுவே தேவையில்லாத போது கசப்புணர்வாகவும் , சுற்றியுள்ளோர் மீது வெறுப்பாகவும் மாறியதை அன்று என்னால் தவிர்க்கவே முடியவில்லை.இன்றைய கால கட்டங்களில் பள்ளியில் யாரும் அடிப்பதில்லை என்று நினைக்கிறேன்.ஆனால் அதற்கு பதிலாக இது அது என்று பாடசுமைகள் அதிகமாக்கப் ப‌ட்டிருப்பதாக உணர்கிறேன்...தஞ்சையில் என் எதிர் வீட்டு சிறுமி U.K.G படிக்கிறாள்..ஓர் சனிக்கிழமையில் ..அவளிடம் .. பாப்பா வந்திருக்கா விளையாட வரியா என்று கேட்டதற்கு..tuition,special class இருக்கு என்கிறாள்...நான் அந்த வயதில் இந்த இரு வார்ததைகளையும் கேள்வி பட்டிருந்ததாகக் கூட ஞாபகமில்லை.

இப்படி நான் பள்ளி நினைவுகளை பகிர்வதற்கும் , பள்ளிகளை பற்றிப் பேசுவதற்கும் காரணம்..ஓர் வித்தியசமான பள்ளியை பற்றி தெரிந்துக் கொண்டதால் தான்...

அந்த பள்ளியை பற்றி .."ஜன்னலில் ஓர் சிறுமி" என்ற புத்தகத்தில் படித்தேன்.அதனால் தான் என் பள்ளியின் நினைவுகள் மீண்டும தலை தூக்கியது.சின்ன புத்தகம் தான்...கதையின் போக்கு அங்கு பயின்ற ஒர் சிறுமியின் பார்வையில்அமைந்திருக்கும்.சிறுமியின் பார்வையில் அந்த பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் , அவளது பயணங்கள், வேற்பட்ட மனிதர்கள்,நண்பர்கள்,பேய் கதைகள் , வருமை என கதை பல இடங்களில் பயணிக்கும்.படிக்கும் போது  குழந்தைகளாக நாம் செய்தது யாவும் நினைவில் வரும்.அதுமட்டுமில்லாது ,அடுத்த தலைமுறையின் வளர்ச்சியில் நாம் கவனிக்க வேண்டிய‌ விஷயங்கள் நிறைய இருப்பதாகவும் தோன்றும்.சரி feelings ஜ இங்கேயே நிறுத்திட்டு கதைக்கு வருவோம்...

அந்தப் பள்ளியின் அமைப்பே வித்தியசமானது , ரயில் பெட்டிகளைக் கொண்டு வகுப்புறைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும்,மாணவர்கள் சுதந்திரமாக உலாவினர்.பொறுமையாக உண்டனர் இன்னும் பல அதிசிய நிகழ்வுகள்...அங்கு நடந்தது. அனைத்து விஷயங்களையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் , அந்தப் பள்ளி மாணவர்களுக்காக எவ்வளவு நுண்ணியமாக ஒவ்வொரு விஷயங்களையும் அனுகியுள்ளதை நினைத்து வியக்காமல் இருக்க முடியாது.அந்த சிறுமி சின்ன சின்ன தவறுகள் செய்தபோதும் , முந்தைய பள்ளியிலிருந்து  அவளை நிறுத்திய போதும் அந்த சிறுமியின் அன்னை ;தனது மகளின் தன்னம்பிக்கை கெடாமல் பாத்துக்கொள்வார்.(இங்கு ஓர் வருத்தமிருந்தது அப்பாக்களை out of focus லே வைத்திருப்பார்கள்).பள்ளியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் வீட்டிற்கு தெரிவிக்கப்படும் , அவை அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் ஆளாக அந்த சிறுமியின் அன்னையிருந்தாள்.

அந்த பள்ளியில் தினமும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உண்பது வழக்கம்.முதல்வரும் தான்.முதல்வர் அவர்களைப் பார்த்து  "கடலிருந்து கொஞ்சம் , மலையிலிருந்து கொஞ்சம்" எடுத்து வந்தீர்களா ? என்று கேட்பார்.ஒவ்வொருவரும் தங்களது உணவை பற்றி சொல்ல வேண்டும்.அது கடலிலிருந்து வந்ததா (அதாவது மீன் போன்ற கடல் உணவுகள்) இல்லை மலையிலிருந்து வந்த்தா(கிழங்கு வகைகள்) என்று சொல்ல வேண்டும்.குழந்தைகளுக்கு உணவை தெரியாத பட்சத்தில் முதல்வர் அந்த உணவைப் பற்றியும்,செய்த முறைப் பற்றியும் விவரிப்பார்.இது மாணவர்களுக்கு உணவின் மீது ஒரு ஈடுப்பாட்டினை உருவாக்கியது.உணவிற்கு பிறகு யார் முதல்வர் முதுகில் உப்பு மூட்டை ஏறுவதென பெரிய போட்டி இருக்குமாம்..இது ஒரு பக்கமிருக்க ; கதையின் மற்றொரு  இடத்தில் , மாணவன் ஒருவன் பெற்றோர்களின் கட்டாயத்தால்  பள்ளியை விட்டு வெளியேறுகிறான், அப்போ அவன் அந்த பள்ளியின் முதல்வர் முதுகில் ஏறிக்கொண்டு பெற்றோரிடம் செல்ல‌ மறுக்கிறான்.

அதை பற்றி படித்த போது எனக்கு என் முதல்வர் என் முதுகை உரித்த கதை தான் ஞாபகம் வந்தது..(எப்படி முதுகை link கொடுத்து ரெண்டு கதையையும் sync பண்ணோம் பாத்தீங்கள‌..).அதன் விளைவு தான் இந்த போஸ்ட்...

ஒவ்வொரு பெற்றோரும் , ஆசிரியரும் படிக்க வேண்டிய புத்தகம் கண்டிப்பா படிங்க..அந்த சிறுமியின் பார்வையில் கதை நகரும் போது நமக்கும் பள்ளியின்  நிகழ்வுகள் ஞாபகத்தில் வரும்.

இதை படித்த அந்த பள்ளியில் உடனே அடிமிஷன் கிடைக்குமானு கேட்காதீங்க...அந்த பள்ளி நமது நாட்டிலுமில்லை,நமது காலத்திலுமில்லை...ஜப்பானில் இரண்டாம் உலக யுத்தம் நடந்த போது அங்கிருந்த ஓர் பள்ளி அது...

இந்த புத்தகத்தை படித்த பிறகு எனக்கு ஏனோ taree zameen par பார்க்க தோனியது , தங்க மீன்கள் trailer பாக்கவும் வாய்ப்பு கிடைத்தது.இரண்டிலும் common ஆக ஒரு  காட்சி இருந்தது .பள்ளி புத்தகத்தை அதீதமான வெறுப்பில் தூக்கி எறிவது போலவும்...தூக்கி எறிந்ததும் ஓர் முகமலர்ச்சி அடைவது போலவும் இருக்கும்...செம க்ளாஸா இருக்கும்...

Pdf in tamil : http://blog.balabharathi.net/wp-content/uploads/2012/10/totto-tamil.pdf
pdf in English : http://www.arvindguptatoys.com/arvindgupta/Tottochan.pdf
About Author : http://en.wikipedia.org/wiki/Tetsuko_Kuroyanagi

Thursday, July 11, 2013

தத்கல்

வேகம்,விவேகம் யாவும் தோற்றது
உன் முன்னால்....
3 பேர் கொண்ட குழு
ஒவ்வொருவரும் 2-3 லாகின்
விவரங்களை தானாக நிரப்பும் வகையில் ஏற்பாடு என‌
உனக்கு ஆட்டம் காட்ட‌
போடாத திட்டங்கள் இல்லை

பயபக்தியுடனும் , பசியுடனும்
1மணி நேரமாக  உன் முன்...
வேண்டுகிறேன் உன்னை,
இனி இப்படி உனை கேட்க மாட்டேன்
இம்முறை மட்டும்...
இந்த பக்தன் மீது கருணை கொள்...
உனக்காக வெள்ளி அன்று
முகப்புத்தகம்  துறந்து
விரதம் இருப்பேன்

இப்படியே நான் புலம்ப
நூற்று சொச்சத்திலிருந்த தத்கல்
ஏதேதோ காரணம் சொல்லி
என் முயற்சிகளை முறித்து
பூஜியத்திற்கு வந்தது..

Thursday, July 4, 2013

யார் நீ..?

இரை தேடும் உன்னை
சிறை பிடிக்க எவருக்கும் துணிவில்லை

என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்...

என் மீதும் நீ உண்ணிப் போல் ஒட்டிக் கொண்டதை
நான் அறியாமல் ஒன்றுமில்லை
உனை எதிர்க்க துணிவின்றி
தினம் உனை தவிர்க்கவே முயல்கிறேன்

தேசியம்,மொழி,கல்வி என வெவ்வேறு அடையாளங்கள்
எனக்கு..நீயும் தான் அதில் உண்டு.
உனை தவிர,ஒவ்வொன்றையும்
விரும்பியே ஏற்றுக் கொண்டேன் .

என்ன செய்தாய் என உனக்கு இவ்வளவு கர்வம்....

சிறுவன் தலையில் செருப்பு வைத்தாய்
சிலரது முதுகெலும்பை வளைத்தாய்
பேரூந்து கண்ணாடிகளை கற்களுக்கு பரிசளித்தாய்
விபத்தை கண்டு அஞ்சாத‌
ஓட்டுநரையும் உன் உருவும் காட்டி கவசம் அணிய செய்தாய்
மக்களை பயணத்திலும் பயம் கொள்ள செய்தாய்
வீடுகளை எரித்தாய்
காடுகளை அழித்தாய்
வரிபணத்தை கரியாக்கினாய்

இத்தனை பாவத்திலும் அடங்கவில்லையா உன் தாகம்

சமுதாய நன்மை போராட்டங்களை கண்டால்
புறமுதுகை காட்டி ஓடும் நீ...
அப்பாவிகள் அகப்பட்டால்
ஏன் இப்படி
வருஞ்சிக் கட்டிக்கொண்டு வருகிறாய்....

ஆளவும் அடிப்பணியவும் தான்
கற்று தருவாயோ..?
சமமாக வாழ்ந்தால்
உனக்கு அரிப்பு எடுத்து விடும்

 "அவன் நம்மாளா"
என்ற வார்த்தைகளை உதிர்த்துவிடுவாய்..
உடனே சமூகத்தை பிரித்துவிடுவாய்

உனை வாழ வைக்கும் வார்த்தைகள்..
உனக்கு போதை தரும் வார்த்தைகள்....
இவை தானே....

இதை கொண்டு தான் என் நட்பில் கூட‌
சிறு விரிசல் போட துணிந்தாய்...
நானும் கண்டும் காணாது விட்டுவிட்டேன்..

இருந்தும் உன் போதை அடங்கவில்லை

என் வாழ்கை துனையை தேர்வு செய்ய
நீயே நிற்கிறாய் முன்னே...
காதல் கீதல் செய்யாமலிருந்ததால்..
நானோ இன்று உயிர் பிழைத்தேன்...

இல்லையெனில் எனது புகைப்படத்துடன் வந்திருக்கும்
ஓர் தற்கொலை செய்தி...............

19 வயதில் காதல்..அது காதலில்லை ... காமம்..இது தானே உன் வாதம்..

சரி ..

திருமண வயதில் காதலித்தால் நீ முன் நின்று நடத்திருப்பாயோ..?

அதை விடு...

இன்று இல்லாத அந்த இரு உயிர்களுக்கு தான் பதில் என்ன...

உனக்கு உசிரெல்லாம்
சலூனில் வெட்டும் மசிரோ ..?

இரு மரணத்திற்கு காரணம்

தற்கொலை எனில் கோழகளை நீ உருவாக்கினாய்
கொலை எனில் தீவிரவாதிகளை நீ உருவாக்கினாய்

இது தான் நீ....சாதி என்ற நீ....

உன் பலம் யாதென அறிந்துக் கொண்டேன்..
தலைமுறை தாவல் தான் உன் பலம்...
என்னுடன் நீ இருந்தாலும்
எனது அடுத்த தலைமுறைக்கு உனை மறைப்பேன்
உன் பலம் குறைப்பேன்....

உன் வேட்டையில்
இரைகள் சிந்திய இரத்த கறைகளை
என் மொழிக் கொண்டு துடைக்கிறேன்
என் ஆதங்கம்,கோபம்,சோகம் யாவையும்
என் எழுத்துக் கொண்டு குறைக்கிறேன்
வேறு வழியின்றி..!

Wednesday, July 3, 2013

கனவில் மரணம்

இந்த சினிமால தான் குடும்பத்துல யாரு செத்தாலும் அடுத்த செகண்ட்ல டூயட் பாட முடியும்..ஆனா நிஜ வாழ்கையில கனவுல ஏதாச்சும் மரணம் சம்மந்தமா வந்தால் கூட அன்றைக்கு கொஞ்சம் disturbed  ஆ இருக்கும்...கொஞ்ச நேரத்திற்காவது...அப்படி தான் ஒரு நாள்....


அலுவலக தேனீர் இடைவேளையின் போது ...புதிதாக நியமித்த coffe day தானியங்கி இயந்திரத்தில் விஜய் காலையிலிருந்து 10 வது முறையாக அங்கு காபி பிடித்துக்கொண்டிருந்தான்...

என்ன தம்பி , "எத்தனாவது கப்.." என்று கேட்க...

"இன்னைக்கு கம்மி தான் ணா..இந்த CCTV camera recording மட்டும் யாராச்சும் பார்த்தாங்க...என்னை இனிமே இந்த காபி மெஷின் பக்கமே விடமாட்டாங்க ணா.." ..என்றான் என்னிடம்..

அவன் எதிர்ப்பார்த்த reaction ஏதும் நான் கொடுக்காததால்..."என்ன ணா வீட்ல அண்ணிக்கூட சண்டையா..ரொம்ப டல்லா இருக்கீங்க..?"..என்றான்.

"ஆமாம் தம்பி ..காலைல ஒரு கனவு கண்டேன்..அதுனால தான் பிரச்சனையே"..என்று என கனவால் வந்த சண்டையை பற்றி விவரிக்க ஆரம்பித்தேன்...


தஞ்சை பெரிய ஆஸ்பத்திரிக்கு நானும் என் நண்பன் சுந்தரும் வண்டியில் செல்ல....அங்கு என் தெரு மக்கள் ராஜி அக்காவும் , அவர்களுது அம்மாவும்,சுரேஸ் அம்மாவும் மற்றும் சிலர் அமர்ந்திருக்க ..சற்றே தூரத்தில் எனது பாட்டியும் அமர்ந்திருந்தார்கள்.மாலை பொழுது போலும் , வெளிச்சம் குறைவாகவே இருந்தது.யாருக்கோ உடல் நிலை சரியில்லை,அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.நான் விசாரிக்க வந்ததை நினைத்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.இவர்களுக்கு சுந்தர் அறிமுகமில்லாததால் அவன் வாசலில் காத்திருந்தான்.நான் சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு கிளம்பினேன்.அப்போது , ஏதோ அவர்களுக்கு பணப் பிரச்சனை.என்னிடம் தயங்கி தயங்கி பணம் கேட்க முயன்றனர்.அவர்கள‌து தயக்கம் எனக்கு புரிந்தது.அப்பொழுது எனது பர்ஸில் 1000ரூ இருந்தது.இது தான் என்னிடம் இருக்கு என்று அவர்களிடம் நீட்ட , அவர்களும்  பண முடைக்கு ஏதோ காரணம் சொல்லிவிட்டு என்னிடமிருந்து வாங்கி கொண்டனர்.அப்பொழுது அங்கிருந்த ஒருவன் (இவர்களுக்கு தெரிந்தவன் போல) .... "பணம் கொடுத்ததுக்கு ஏதாச்சும் ரசீது மாதிரி வாங்கிக்குங்க" என்று சொன்னான்..

அவனது பேச்சுக்கு மற்றவர்களும் ஆமாம் சாமி போட , எனக்கு ஏனோ தயக்கமாகவே இருந்தது.எனக்கு தெரிஞ்சவங்க தான் என்று நான் சொல்ல முயன்றும் அதனை யாருமே பொருட்படுத்தேவேயில்லை.ஒரு வெள்ளை தாளில்  எழுதி வாங்கிக் கொண்டனர்.நான் கிளம்பி வெளியே வந்துவிட்டேன்.சுந்தரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது.."டேய் எனக்கு ஏதோ doubt ஆ இருக்கு டா"என்றேன்.அப்போது அந்த ஆசாமியும் அங்கு வந்தான்.அந்த இடம் ஆஸ்பத்திரியாக இல்லாமல் ஏதோ பஜார் போல தோற்றம் அளித்தது.சற்று பகல் போல வெளிச்சம் இருந்தது.அந்த ஆசாமியை நிறுத்தி , அந்த ரசிதை திருப்பிக் கேட்டேன்.அவன் முதலில் ஏதேதோ மழுப்பினான்.எங்களுக்குள் வாக்குவாதம் சூடேறியது."யோவ் நீ வட்டிக்கு என்கிட்ட வாங்கி அந்த அம்மாவுக்கு கொடுத்திருக்க ..ஒழுங்கா வட்டியோட பணத்தை கொடுத்திட்டு இந்த பேப்பரை வாங்கிக்கோ"என்று இரண்டு மூன்று கெட்ட வார்த்தைகளுடனும் அடியாட்களுடனும் சொன்னான்.

அருகில் சுந்தர் இருக்கும் தைரியத்தில்  நான் கை ஓங்கிவிட்டேன்....சுந்தரும் களத்தில் இற‌ங்கிவிட்டான்..சிங்கம் மீசையோடு என்னை பின்னால் அடிக்க வந்த ஒருவனை பலார் என்று அடித்தான்.திடிரென ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர்.ஒருவன் அருவாளுடன் என்னை வெட்ட வர,சுந்தர் அருகிலிருந்த பெரிய டயரை உருட்டிவிட்டு என்னை காப்பாற்றினான்.அரிவாள் வெட்டு அந்த டயருக்கு விழுந்தது.

எங்களால் சிறிது நேரம் தான் தாக்குபிடிக்கு முடிந்தது...சுந்தர் சற்று தூரத்தில் ஒருவனை அடித்துக் கொண்டிருக்க.என்னை ஒருவன் அரிவாளால் வெட்டினான்...

"இதான் நடந்தது ..அப்போ தான் நீ போன் பண்ண" என்று பொறுப்புடன் ஊரிலிருந்து என்னை எழுப்பிவிட்ட மனைவியிடம் நான்  சொல்ல...

"உங்களுக்கு காலையில எழுப்பிவிடறதுக்கு ஒரு ஆளு..அலாரம் வைச்சு எழுந்துருக்க வேண்டியது தானே..இப்படி ஏன் செவ்வாய் கிழமை அதுவுமா சாவு அது இதுனு சொல்லிறீங்க" என்று கோபத்தில் பட்டென போனை வைத்தாள்.

என்று எனது flashback விஜயிடம் சொல்ல..

"அண்ண..உங்க கனவுல பிழை இருக்கு .." என்றான்

"என்னடா சொல்ற..போன தடவை மாதிரி ..இது கனவே இல்லை ...subconscious நு ஏதாச்சும் சொல்ல போறியா?" என்றேன்

"கனவுல நமக்கு சாவே வராது.." என்றான்...

அவன் சொன்ன பிறகு தான் எனக்கு என் கனவின் climax ஞாபகம் வந்தது.அந்த அரிவாள் வெட்டிற்கு பிறகு நான் சுந்தராக மாறினேன்...சுந்தர் கதாபாத்திரத்தில் நான்..நான் இறந்ததிற்காக அழுகிறேன்..அப்பொழுது தான் போன் வந்து என்னை எழுப்பிவிட்டது.

மதனின் மனிதனும் மர்மங்களும் புத்தகத்தில் கனவை எழுந்தவுடன் re-call பண்ணுங்க முடிஞ்சா ஒரு நோட்,பேனா பக்கத்துல வைச்சிக்கிட்டு தூங்குங்க.எழுந்த உடனே எழுதிடுங்கன்னு சொல்லுவார்.சரி நாம யாருகிட்டையாச்சு சொல்லி வைப்போம் என்ற உயரிய நோக்கத்தில் தான் அதை வீட்டில் சொன்னேன்...எதனால் அந்த கடைசி காட்சியை நான் மறந்தேன் என்று தெரியவில்லை.

கனவின் அடிப்படை

சுந்தர் ஊரிலிருந்து வந்திருந்தான் , நானும் ஆவனும் தஞ்சையில் "master check-up" பற்றி விசாரிக்க சில ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தோம்

ராஜி அக்கா , சுரேஸ் அம்மா பற்றி வீட்டில் அம்மா சொல்லி கொண்டிருந்தார்கள்

முதல் நாள் தான் நான் ஏ.டி.ம் யில் 1000 எடுத்திருந்தேன்..


சரி போஸ்ட் ரெடி பண்ணியாச்சு..இதை வைச்சு தான் வீட்ல சமாதானாம் செய்ய முயற்சி பண்ணனும்..ஒரு கனவால எவ்வளவு confusion.

Monday, July 1, 2013

சிங்கள நாச்சியார் கோவில் - பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழரி என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது "ஈழத்து ராணி" என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காக தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார்.அது சில காலம் "சிங்கள நாச்சியார் கோவில்" என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது.நாளடைவில் அதன் பெயர் திரிந்து "சிங்காச்சியார் கோவில்" என்று ஆயிற்று.

என்று கல்கி பொன்னியின் செல்வன் 5ம் பகுதியில் சொல்லுகின்றார்.அவர் சாதரணமாக இதை சொல்லி இருந்தால் கூட எனக்கு ஒன்றும் தோன்றிருக்காது...

"இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் சிங்காச்சியார் கோவில் என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சைக்கு செல்லுகிற‌வர்கள் விசாரித்துத் தெரிந்துக் கொள்ளலாம்."

என்று சொல்லி அந்த பத்தியை முடித்திருக்கிறார்.இந்த வரி நானும் தஞ்சையை சேர்ந்தவன் என்ற முறையில் ஒரு சின்ன உறுத்தலை ஏற்ப‌டுத்தியது...

நான் மும்பையில் இருக்கும் போது படித்ததால்..எனது ஆர்வத்தை சற்று silent mode ல் போட்டிருந்தேன்.பின்னர் பெங்களூர் பக்கம் வந்த பிறகு தான் தஞ்சை செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது.நானே தேடினேன் என்று சொல்வதை விட , நான் ஊர் சுற்றும் போது கடக்கும் கோயில்களின் பெயர்களை பார்த்துக் கொள்வேன்.அதுவரை கோயில் பெயர்களை படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

அப்பொழுது தான் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே ஒரு கோயிலைப் பார்த்தேன் "செங்கமல நாச்சியார்" கோயில் என்றிருந்தது.அதுவரை நான் மனதில் நினைத்திருந்த கோயில் போல அல்ல அது.சரி எதற்கும் உள்ளே சென்று பார்த்தேன்.கோயில் பூசாரி இல்லாததால் உள்ளே இருந்த சாமியை பார்க்க முடியவில்லை.கோயினுள் கோழி,ஆடு எல்லாம் இருந்தது.நேந்துவிட்டது போல் இருந்தது.ராஜராஜ சோழன் தன் அன்னைப் போல் பாவித்த ஈழத்து ராணி கோயில் இப்படி இருக்காது எனவும் , இந்த கோயில் சமீக காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என என்ணி கிளம்பிவிட்டேன்.

காலம் சிறிது கடந்தது...facebook ல் தஞ்சைக்கென ஒரு க்ரூப் ..அங்கு கேட்டுப்பார்ப்போம் என ஒரு post போட்டேன்.அங்கும் தேவையான பதில்கள் கிடைக்கவில்லை...மீண்டும் 1 வருட காலம் கடந்தது.தஞ்சை க்ரூப்பில் தற்பொழுது பல தரப்பட்ட மக்கள் இருந்தனர்.மீண்டும் பதிவு செய்தேன்.நான் ஏறகனவே பார்த்த கோயில் தான் அது என சில நண்பர்கள் சொல்ல..இல்லை என நானும் மற்றும் சிலரும் சொல்ல...சரி நேரே சென்று பார்ப்பதென முடிவானது.இது போன்ற facebook முடிவுகள் facebook ஓடு முடிந்து விடும்.

அதில் இரு நண்பர்கள் எனது பள்ளி நண்பர்கள் என்பதாலோ என்னவோ இந்த‌ முறை அப்படி முடியவில்லை...தஞ்சைக்கு சென்ற‌ போது நண்பன் ஒருவனை "போய்வருவோமா" என்று  கேட்க உடனே கிளம்பினோம்.மற்றொரு நண்ப‌னையும் பிடித்துக் கொண்டு மூவரும் சென்றோம்...


கோயில் உள்ளே சென்றதும் , பூசாரி எங்களை பார்த்ததும் உள்ளே வந்து சாமிக்கு தீபம் காட்டினார்.சிறிய அம்மன் சிலைப் போல இருந்தது.கால மாற்றத்தில் கோயில் தனது அடையாளங்களை மாற்றிக் கொண்டது போலும்.சோழன் தனது அன்னைக்கு நிகரான ஒருவளுக்கு கட்டிய கோயில் என்று சொல்லும் எந்தவித அடையாளமும் இல்லை.தீபத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டிருந்தோம்...அப்போது நண்பன்.."கோயிலை பற்றி தெரிஞ்சக்கனும்னா யாருக்கிட கேட்கனும்"என்று பூசாரியிடம் கேட்க...அவரோ பொன்னியின் செல்வன்ல ஒரு குறிப்பு வரும் என பட்டென்று எனது சந்தேகத்தை தீர்த்தார்...

Click to see in Google maps

பிறகு நண்பர்களுடன் சில நேரம் கதைகள்  பேசிவிட்டு வீட்டிற்கு வந்தேன்...எனது அன்னையிட கோயிலை பற்றி கேட்க வேண்டும் என்று தோன்றியது..காரணம் அம்மா படித்தது குந்தவை கல்லூரியில் தான்...ஆனால் அவர்களுக்கும் தெரியவில்லை.

கால மாற்றத்தில் எதையெல்லாம் மறந்திவிடுகிறோம்.நமது அடையாளங்கள் இவை.அதனை தெரிந்துக் கொண்டதிலும்,அதனை மற்றவர்களோடு பகிரும் போது ஒரு வித மகிழ்ச்சி , ராஜராஜ சோழன் இந்த கோயிலை கட்டி முடித்ததும் அவன் கொண்ட மகிழ்ச்சி.இரண்டும் ஒன்றோ..?

குறிப்பு : இதிலுள்ள தகவல்கள் ஏதேனும் தவறாக இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்


There was an error in this gadget