Thursday, July 4, 2013

யார் நீ..?

இரை தேடும் உன்னை
சிறை பிடிக்க எவருக்கும் துணிவில்லை

என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்...

என் மீதும் நீ உண்ணிப் போல் ஒட்டிக் கொண்டதை
நான் அறியாமல் ஒன்றுமில்லை
உனை எதிர்க்க துணிவின்றி
தினம் உனை தவிர்க்கவே முயல்கிறேன்

தேசியம்,மொழி,கல்வி என வெவ்வேறு அடையாளங்கள்
எனக்கு..நீயும் தான் அதில் உண்டு.
உனை தவிர,ஒவ்வொன்றையும்
விரும்பியே ஏற்றுக் கொண்டேன் .

என்ன செய்தாய் என உனக்கு இவ்வளவு கர்வம்....

சிறுவன் தலையில் செருப்பு வைத்தாய்
சிலரது முதுகெலும்பை வளைத்தாய்
பேரூந்து கண்ணாடிகளை கற்களுக்கு பரிசளித்தாய்
விபத்தை கண்டு அஞ்சாத‌
ஓட்டுநரையும் உன் உருவும் காட்டி கவசம் அணிய செய்தாய்
மக்களை பயணத்திலும் பயம் கொள்ள செய்தாய்
வீடுகளை எரித்தாய்
காடுகளை அழித்தாய்
வரிபணத்தை கரியாக்கினாய்

இத்தனை பாவத்திலும் அடங்கவில்லையா உன் தாகம்

சமுதாய நன்மை போராட்டங்களை கண்டால்
புறமுதுகை காட்டி ஓடும் நீ...
அப்பாவிகள் அகப்பட்டால்
ஏன் இப்படி
வருஞ்சிக் கட்டிக்கொண்டு வருகிறாய்....

ஆளவும் அடிப்பணியவும் தான்
கற்று தருவாயோ..?
சமமாக வாழ்ந்தால்
உனக்கு அரிப்பு எடுத்து விடும்

 "அவன் நம்மாளா"
என்ற வார்த்தைகளை உதிர்த்துவிடுவாய்..
உடனே சமூகத்தை பிரித்துவிடுவாய்

உனை வாழ வைக்கும் வார்த்தைகள்..
உனக்கு போதை தரும் வார்த்தைகள்....
இவை தானே....

இதை கொண்டு தான் என் நட்பில் கூட‌
சிறு விரிசல் போட துணிந்தாய்...
நானும் கண்டும் காணாது விட்டுவிட்டேன்..

இருந்தும் உன் போதை அடங்கவில்லை

என் வாழ்கை துனையை தேர்வு செய்ய
நீயே நிற்கிறாய் முன்னே...
காதல் கீதல் செய்யாமலிருந்ததால்..
நானோ இன்று உயிர் பிழைத்தேன்...

இல்லையெனில் எனது புகைப்படத்துடன் வந்திருக்கும்
ஓர் தற்கொலை செய்தி...............

19 வயதில் காதல்..அது காதலில்லை ... காமம்..இது தானே உன் வாதம்..

சரி ..

திருமண வயதில் காதலித்தால் நீ முன் நின்று நடத்திருப்பாயோ..?

அதை விடு...

இன்று இல்லாத அந்த இரு உயிர்களுக்கு தான் பதில் என்ன...

உனக்கு உசிரெல்லாம்
சலூனில் வெட்டும் மசிரோ ..?

இரு மரணத்திற்கு காரணம்

தற்கொலை எனில் கோழகளை நீ உருவாக்கினாய்
கொலை எனில் தீவிரவாதிகளை நீ உருவாக்கினாய்

இது தான் நீ....சாதி என்ற நீ....

உன் பலம் யாதென அறிந்துக் கொண்டேன்..
தலைமுறை தாவல் தான் உன் பலம்...
என்னுடன் நீ இருந்தாலும்
எனது அடுத்த தலைமுறைக்கு உனை மறைப்பேன்
உன் பலம் குறைப்பேன்....

உன் வேட்டையில்
இரைகள் சிந்திய இரத்த கறைகளை
என் மொழிக் கொண்டு துடைக்கிறேன்
என் ஆதங்கம்,கோபம்,சோகம் யாவையும்
என் எழுத்துக் கொண்டு குறைக்கிறேன்
வேறு வழியின்றி..!

No comments:

Post a Comment