Monday, July 1, 2013

சிங்கள நாச்சியார் கோவில் - பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழரி என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது "ஈழத்து ராணி" என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காக தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார்.அது சில காலம் "சிங்கள நாச்சியார் கோவில்" என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது.நாளடைவில் அதன் பெயர் திரிந்து "சிங்காச்சியார் கோவில்" என்று ஆயிற்று.

என்று கல்கி பொன்னியின் செல்வன் 5ம் பகுதியில் சொல்லுகின்றார்.அவர் சாதரணமாக இதை சொல்லி இருந்தால் கூட எனக்கு ஒன்றும் தோன்றிருக்காது...

"இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் சிங்காச்சியார் கோவில் என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சைக்கு செல்லுகிற‌வர்கள் விசாரித்துத் தெரிந்துக் கொள்ளலாம்."

என்று சொல்லி அந்த பத்தியை முடித்திருக்கிறார்.இந்த வரி நானும் தஞ்சையை சேர்ந்தவன் என்ற முறையில் ஒரு சின்ன உறுத்தலை ஏற்ப‌டுத்தியது...

நான் மும்பையில் இருக்கும் போது படித்ததால்..எனது ஆர்வத்தை சற்று silent mode ல் போட்டிருந்தேன்.பின்னர் பெங்களூர் பக்கம் வந்த பிறகு தான் தஞ்சை செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது.நானே தேடினேன் என்று சொல்வதை விட , நான் ஊர் சுற்றும் போது கடக்கும் கோயில்களின் பெயர்களை பார்த்துக் கொள்வேன்.அதுவரை கோயில் பெயர்களை படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

அப்பொழுது தான் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே ஒரு கோயிலைப் பார்த்தேன் "செங்கமல நாச்சியார்" கோயில் என்றிருந்தது.அதுவரை நான் மனதில் நினைத்திருந்த கோயில் போல அல்ல அது.சரி எதற்கும் உள்ளே சென்று பார்த்தேன்.கோயில் பூசாரி இல்லாததால் உள்ளே இருந்த சாமியை பார்க்க முடியவில்லை.கோயினுள் கோழி,ஆடு எல்லாம் இருந்தது.நேந்துவிட்டது போல் இருந்தது.ராஜராஜ சோழன் தன் அன்னைப் போல் பாவித்த ஈழத்து ராணி கோயில் இப்படி இருக்காது எனவும் , இந்த கோயில் சமீக காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என என்ணி கிளம்பிவிட்டேன்.

காலம் சிறிது கடந்தது...facebook ல் தஞ்சைக்கென ஒரு க்ரூப் ..அங்கு கேட்டுப்பார்ப்போம் என ஒரு post போட்டேன்.அங்கும் தேவையான பதில்கள் கிடைக்கவில்லை...மீண்டும் 1 வருட காலம் கடந்தது.தஞ்சை க்ரூப்பில் தற்பொழுது பல தரப்பட்ட மக்கள் இருந்தனர்.மீண்டும் பதிவு செய்தேன்.நான் ஏறகனவே பார்த்த கோயில் தான் அது என சில நண்பர்கள் சொல்ல..இல்லை என நானும் மற்றும் சிலரும் சொல்ல...சரி நேரே சென்று பார்ப்பதென முடிவானது.இது போன்ற facebook முடிவுகள் facebook ஓடு முடிந்து விடும்.

அதில் இரு நண்பர்கள் எனது பள்ளி நண்பர்கள் என்பதாலோ என்னவோ இந்த‌ முறை அப்படி முடியவில்லை...தஞ்சைக்கு சென்ற‌ போது நண்பன் ஒருவனை "போய்வருவோமா" என்று  கேட்க உடனே கிளம்பினோம்.மற்றொரு நண்ப‌னையும் பிடித்துக் கொண்டு மூவரும் சென்றோம்...


கோயில் உள்ளே சென்றதும் , பூசாரி எங்களை பார்த்ததும் உள்ளே வந்து சாமிக்கு தீபம் காட்டினார்.சிறிய அம்மன் சிலைப் போல இருந்தது.கால மாற்றத்தில் கோயில் தனது அடையாளங்களை மாற்றிக் கொண்டது போலும்.சோழன் தனது அன்னைக்கு நிகரான ஒருவளுக்கு கட்டிய கோயில் என்று சொல்லும் எந்தவித அடையாளமும் இல்லை.தீபத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டிருந்தோம்...அப்போது நண்பன்.."கோயிலை பற்றி தெரிஞ்சக்கனும்னா யாருக்கிட கேட்கனும்"என்று பூசாரியிடம் கேட்க...அவரோ பொன்னியின் செல்வன்ல ஒரு குறிப்பு வரும் என பட்டென்று எனது சந்தேகத்தை தீர்த்தார்...

Click to see in Google maps

பிறகு நண்பர்களுடன் சில நேரம் கதைகள்  பேசிவிட்டு வீட்டிற்கு வந்தேன்...எனது அன்னையிட கோயிலை பற்றி கேட்க வேண்டும் என்று தோன்றியது..காரணம் அம்மா படித்தது குந்தவை கல்லூரியில் தான்...ஆனால் அவர்களுக்கும் தெரியவில்லை.

கால மாற்றத்தில் எதையெல்லாம் மறந்திவிடுகிறோம்.நமது அடையாளங்கள் இவை.அதனை தெரிந்துக் கொண்டதிலும்,அதனை மற்றவர்களோடு பகிரும் போது ஒரு வித மகிழ்ச்சி , ராஜராஜ சோழன் இந்த கோயிலை கட்டி முடித்ததும் அவன் கொண்ட மகிழ்ச்சி.இரண்டும் ஒன்றோ..?

குறிப்பு : இதிலுள்ள தகவல்கள் ஏதேனும் தவறாக இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்


7 comments:

  1. அன்புடன் பிரபு இராசேந்திரனுக்கு வணக்கம். நானும் தஞ்சாவூர்க்காரன்தான். அந்தக் கோவிலுக்குப் பின்புறத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்தேன். அதைக் காட்டுக் கோவில் என்று சொல்வார்கள். கொஞ்ச காலத்திற்கு முன்னால் திருவிழாக் காலங்களில் மட்டும்தான் அங்கே கூடுவார்கள். மற்ற நேரத்தில் அந்தப் பக்கம் செல்லவே பயப்படும் நிலை இருந்தது. காடுகளும் புதர்களும் மண்டிக் கிடந்தன.

    தாங்கள் எண்ணுவது போல் தங்களுக்காகவும் தங்கள் உறவுகளுக்காகவும் பிரம்மாண்டங்களைச் செய்வது இன்றைய அரசியல்வாதிகளின் கேவலமான செயல். மாமன்னாகிய இராசராசன் தன்னுடைய அரண்மனையைவிட தான் வணங்கும் சிவனையே முன்னிலைப்படுத்தியதால்தான் தென் கைலாயம் என்று போற்றத்தக்க பெருவுடையார் கோவிலைக் கட்டினார்.

    தங்களுடைய தேடுதலும் ஆர்வமும் வாழ்க.

    ReplyDelete
  2. அருமை நண்பா இன்னும் தேடி கொண்டுதான் இருக்கிறாயா......

    ReplyDelete
  3. இந்தக் கோயில் ராஜப்பா நகருக்கும் குந்தவை நாச்சியார் கல்லூரிக்கும் இடையில் உள்ளது. கோயில் கட்டடக் கலை மராத்தியர் காலத்து கட்டடமாகத் தெரிகிறது. சிங்களநாச்சியம்மன், செங்கமல நாச்சியம்மன் என்றெல்லாம் பெயர் வழங்குகிறது. இது குறித்து பேசப்படும் ஒரு செவிவழிச் செய்தி. இலங்கையில் பதவி இழந்து விரட்டப்பட்ட மன்னர் ஒருவர் தன் மனைவியுடன் தஞ்சைக்கு வந்து அடைக்கலம் கேட்க அரண்மனைக்குச் சென்றவர் அங்கு என்ன காரணத்தாலோ கொல்லப்பட்டார் என்றும், அவர் மனைவி காட்டில் தங்கியிருந்த நேரத்தில் கணவன் கொல்லப்பட்ட செய்தி கிடைத்ததும், நியாயம் கேட்டு வனத்திலேயே உணவு உட்கொள்ளாமல் இருந்து இந்த இடத்தில் இறந்து போனதாகவும், அந்த இடத்தில் கட்டப்பட்ட கோயிலே இது என்றும் ஒரு வரலாறு உண்டு. தஞ்சையில் கண்டிராஜா அரண்மனை என்றொரு பகுதி உண்டு. இலங்கை கண்டியிலிருந்து பதவி இழந்து வந்த அரச குடும்பத்தாருக்காகக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் பகுதி கீழவீதிக்கும் கீழ அலங்கம் வெள்ளைப் பிள்ளையார் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. அங்கு நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட நரசிம்ம மூர்த்திக்கு கோயிலும் ஒன்று உண்டு. இது குறித்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் மந்தாகினி ஒரு கற்பனைப் பாத்திரம் என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். ராஜராஜ சோழன் கட்டிய ஒரு கோவிலை ஒரு கற்பனைப் பாத்திரத்துடன் இணைப்பது எப்படி?
    உண்மையான வரலாறு இதோ.
    சோழர் குல கண்ணகி பாண்டிய நாட்டில் நீதி நிலைநாட்டிய பின் சேர நாடு சென்றாள். அங்கே அவள் பத்தினி தெய்வம் என்று கொண்டாடப்பட்டாள். இலங்கையிலிருந்து சேரநாட்டு பத்தினி விழாவுக்கு வந்த கஜபாகு மன்னன் (இவனை 'கடல் சூழிலங்கை கயவாகு மன்னன்' என சிலப்பதிகாரம் கூறும்.) இலங்கையிலும் இந்த விழாவை அறிமுகப்படுத்தினான். அதிலிருந்து இலங்கையில் பத்தினி தெய்வ வழிபாடு இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
    ராஜராஜ சோழன் ஈழத்தை வெற்றிக்கொண்டு அங்கு ஆட்சியில் இருந்த ஐந்தாவது மகிந்தனை அவனது குடும்பத்தோடு சிறை பிடித்து வந்தான். அவர்களை சகல மரியாதையோடு ஒரு மாளிகையில் குடியிருக்க வைத்தான். ஆனால் மகிந்தனின் மனைவி சோகமாக இருந்தாள். ராஜராஜன் அதற்கான காரணத்தைக் கேட்டபோது அந்த சிங்கள ராணி, தான் இலங்கையில் பத்தினி தெய்வத்தை வணங்கி வந்தவள் என்றும் இங்கே பத்தினி தெய்வத்துக்குக் கோவில் இல்லாமையால் தன்னால் வழிபட முடியாமல் இருக்கிறது என்றும் கூறினாள். அதனால் பத்தினி தெய்வத்துக்கு ராஜராஜன் கோவில் காட்டினான். சோழ, பாண்டிய நாடுகளில் கண்ணகி கோவில்கள் இல்லை. அதனால் அது என்ன கோவில் என்று மக்களுக்குத் தெரியவில்லை. சிங்கள அரசி ஒவ்வொரு நாளும் அந்தக் கோவிலுக்குப் போய் வணங்கி வந்ததால் அது ஏதோ சிங்களத் தெய்வம் என மக்கள் நினைத்து சிங்கள நாச்சியார் கோவில் என்று பெயர் வந்துவிட்டது. அதுவே காலக்கிரமத்தின் சிங்காச்சியார் கோவில் என திரிபு அடைந்தது.

    ReplyDelete
  5. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி

    ReplyDelete