Monday, February 3, 2014

உள்ளேன் ஐயா

இந்த வாசிப்பு அனுபவமிருக்கே,அது பல நேரங்களில் வாழ்வில் நடந்த சம்பவங்கள்,பள்ளி/கல்லூரி நினைவுகள்,சந்தித்த‌ சில மனிதர்கள் எனச் சும்மா இருந்த மனதை கிள்ளி விட்டுச் சென்றுவிடும்.அடுத்த சில தினங்களுக்கு அதே நினைப்பாகவே இருக்கும்.வாழ்வின் கருப்புப் பக்கங்களாக இல்லாத பட்சத்தில் அஃது ஒரு சுக அனுபவமே,அதிலும் குறிப்பிடத்தக்கது பள்ளி ஆசிரியர்களின் நினைவு என்பது.அப்படித் தற்பொழுது என் நினைவில் அடிக்கடி வந்து "உள்ளேன் ஐயா" என்று சொல்லிக் கொண்டிருப்பவர்...என் 11 & 12 ம் வகுப்புத் தமிழ் ஐயா சுப்பிரமணி அவர்கள்.ஆசிரியர்களில் சிலருக்கு மட்டும் மரியாதை என்பது எந்தவிதக் கட்டாயமுமின்றி மாணவர்களிடமிருந்து கிடைக்கும்,அப்படிப்பட்ட ஆசிரியர் தான் இவர்.நான் அவர் மீது கொண்டிருந்த மரியாதைக்குக் காரணம் ,அவரது திருக்குறள் குப்புத் தான்.

திருக்குறளுக்கு மனப்பாடப் பகுதியில் வெறும் 4 மதிப்பெண்கள்,100ல் 4 குறைந்தால் பெரிய பாதிப்பில்லை,அதிக மதிப்பெண் கேள்வியாக வந்தாலும் choice ல் விட்டுவிடலாம்.இந்த இரு எண்ணங்களும் எனது கண்களை ஒரு போதும் திருக்குறள் பக்கம் செல்ல அனுமதித்ததில்லை.கவிதாலயா விளம்பரமும், பேருந்துப் பலகையிலும் மற்றும் வகுப்பில் கட்டாயத்தின் பேரிலும் திருக்குறளை வாசித்ததோடு சரி.நானாக ஒரு போதும் விருப்பத்தோடு வாசித்ததில்லை.இதற்குக் காரணம் , ஒன்று நான் . மற்றப்படி எல்லாப் பாவமும் வெவ்வேறு காலக்கட்டத்தில் எனக்குப் பாடமெடுத்த தமிழ் ஆசிரியர்களையேச் சேரும்.அவர்களைப் பொருத்தவரை புரிகிறதோ இல்லையோ மாணவன் ஒருவனை எழுப்பிவிட்டு ஒரு முறை குறளை வாசிக்கச் சொல்லிவிட்டால்,திருக்குறளை portionல் முடித்துவிட்டதாக டிக் போட்டுவிடுவார்கள்.திருக்குறளுக்கு மட்டுமல்ல மொத்த செய்யுள் பகுதிக்கும் இதே நிலைத் தான்.

11ம் வகுப்புத் தஞ்சை தொன்பாஸ்கோ பள்ளியில்(மெட்ரிக்) சேர்ந்திருந்தேன்,அங்கு தமிழ் ஐயா சுப்பிரமணி அவர்கள்.ஆசிரியராக அவரது பலம் என்று சொன்னால் , அவரது தமிழ் உச்சரிப்பும் , அவர் நடத்தும் செய்யுள் பகுதியும் தான்.குறிப்பாகத் திருக்குறளை அவர் நடத்திய வித‌ம் இன்றும் என் நினைவிலிருக்கிறது.வகுப்பு ஒரு குருங்கதையுடன் துவங்கும் , அதிகப்பட்சம் ராஜா கதையாக இருக்கும்,கதையின் முடிவில் விளக்கத்துடன் திருக்குறளை மேற்கோள் காட்டுவார்.இது தான் அவரது பாணி.திருக்குறள் வகுப்பு மட்டும் இரு வாரங்களுக்குக் குறையாமல் செல்லும்.இப்படி என் நினைவுகள் தற்பொழுது திருக்குறள் வகுப்பின் பக்கம் உலாத்திக் கொண்டிருப்பதற்கு காரணமாக இருந்த்து நாமக்கல் கவிஞரின் "என் கதை"(இது ஓர் சுயசரிதை புத்தகம்) புத்தகம் தான்.சுயசரிதை புத்தகம் என்றதும் மொக்கையாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றிய புத்தகம் இது.ஒரு சில பக்கங்களைத் தவிர சுவாரஸ்யங்கள் நிறைந்த புத்தகம் இது.அதில் ஒரு பகுதி அவர் எழுதிய "திருக்குறள் புது உரை" புத்தகம் பற்றி வரும்.அதை எழுதிட வித்தாக அமைந்த நிகழ்வை பகிர்ந்திருப்பார்.கவிஞர் சிறையிலிருந்த காலத்தில் ஏதாவது உபயோகமாக நேரத்தை செலவு செய்யலாம் எனத் தோன்றியுள்ளது.உடனே திருக்குறள் பற்றிப் பேசலாம் என முடிவெடுக்கிறார்.அது திருக்குறள் வகுப்பாக மாறுகிறது. விளக்கங்கள் தர அவருக்கு உறுதுனையாக இருந்தது பரிமேலழகர் உரை மட்டுமே.ஆனால் சில குறளுக்கான விளக்கங்களில் லாஜிக் இடிப்பதாகத் தோன்றியுள்ளது.அப்படி லாஜிக் இடித்த குறளில் இதுவும் ஒன்று

உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு

இதற்கு அதிலிருந்த விளக்கம்(சுருக்கமாக இருவரியில் நான் எழுதியது இது),

அசைவம் உண்டால் ஜீவராசிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் ,நரகம் உண்டவனை விழுங்கி வாயை திறவாது மூடிக்கொள்ளும்

இடிப்பட்ட லாஜிக் : பிற உயிரை கொல்வது ஒருவனின் ஆன்ம வளர்ச்சியைத் தடுக்கும் என்று சொல்லாமல் ஜீவராசின்னின் எண்ணிக்கை பற்றிக் குறிப்பிட்டிருந்த்தும் , “எப்படிப்பட்ட பாவம் செய்தவனுக்கும் பிராயச்சித்தம் உண்டுஎன்ற வாதமும் இரண்டாம் வரியில் அடிப்பட்டுப் போவதாக அவருக்குத்  தோன்றியுள்ளது.திருவள்ளுவர் வேறு மாதிரியும் சொல்லிருக்க வாய்ப்புள்ளது என்ற சிந்தனையில் அடிப்படையில் அவர் எழுதிய புது உரை..

உண்ணாமை உள்ள துயிர்நிலை

புலால் உண்ணுவதால் கிடைக்கும் சத்து மற்ற உணவிலும்(வெஜ்) உள்ளது.உடல் நலனுக்காகப் புலால் உண்ணுதல் தேவையற்றது.

ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு
அளறு நகரம்

நரகம் கூடப் பாவம் செய்தவனுடைய ஆன்மாவை உள்ளேவிடக் கதவு திறக்குமே தவிர உடலுக்காக அல்ல.நரகமே உயிர் இல்லாத உடலை உள்ளே அனுமதிக்காத போது ஆறு அறிவு படைத்த மனிதன் ஏன் அனுமதிக்க வேண்டும்.

இப்படி அவர் புரியாத குறட்களை விளக்கங்கள் தேட ஆரம்பித்து , முடிவில் அது அனைத்து உரைகளுடன் புத்தகமாக வருகிறது.இப்படி திருக்குறள் உரை பற்றி அவரது அனுபங்களை வாசிக்கும் போது மெல்ல மெல்ல எனது நினைவில் சுப்பிரமணி ஐயா நுழைந்துக்கொண்டார்.

நான் அறிந்துப் பள்ளி வகுப்பில் மாணவர்கள் தமிழுக்குக் குறிப்பெடுத்தது அவரது வகுப்பில் மட்டும் தான்.எனது 11,12ம் வகுப்பு தமிழ் புத்தகங்களில்;செய்யுள் பகுதியில் கதைகளின் குறிப்புகள் நிறைந்திருக்கும்.12வது படிக்கும் போதே அவர் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார்.நல்ல வேளை அவர் செல்வதற்குள் செய்யுள் பகுதியை முழுவதுமாக முடிந்திருந்தார்.அவரது வகுப்புக்கள் என்ன பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும் என நீங்கள் கேட்டால் என்னிடம் இருக்கும் பதில் இது தான்.12வது பொதுத்தேர்வில் நான் எழுதிய 16 மதிப்பெண் கேள்வி திருக்குறள் பற்றியது தான்.கோனார் உரையில் இல்லாத வரிகள் அவை.இதை பெரும் புரட்சி என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை.ஆனால் நான் அறியாமலே என்னுள் ஏற்பட்ட ஓரு நல்ல மாற்றம் எனச் சொல்வேன்.


2 comments:

  1. வள்ளுவன் சொற்களை விளக்கம் சொல்லி ஈர்க்க நல்ல ஆசிரியர் வேண்டும் என்பதை இந்த கட்டுரை சொல்கிறது அருமை பிரபு இதுபோல் ஒவ்வொரு துறைக்கும் நல்ல ஆசிரியர்கள் இருத்தல் அவசியம்!!

    ReplyDelete
  2. அதே காலகட்டத்தில்தான் எனக்கு ஒரு தமிழாசிரியர் துணைப்பாடப் புத்தகத்தை எப்படி அணுக வேண்டும் என்று புரிய வைத்து அதிலிருந்து கிளைத்து விரிந்து புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா என்று இலக்கியங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.. இந்தப் பதிவைப் படிக்கும்போது எனக்கு அவர் நினைவு வருகிறது. நல்ல ஆசிரியர்கள் நினைவில் அழிவதே இல்லை

    ReplyDelete