Monday, February 24, 2014

காலங்கள் மாறும்....காட்சிகள் ???


"மஹாபாரதம்......"என்று சங்கு ஒலியுடன் மெல்லியதாய் பாடலின் சத்தம் காதில் விழ

"டேய் மஹாபாரதம் போட்டாங்க...இன்னைக்கு கத்தி சண்டை கண்டிப்பா இருக்கும்..பாத்துட்டு வந்து ஆடலாம்" என்று ரகு சொல்ல.தென்னை மட்டையும்,முருங்கை குச்சியும் கொண்டு துவங்கிய அந்த மாபெரும் கிரிக்கெட் ஆட்டம் எந்தவித அறிவிப்புமின்றி பாதியில் நிறுத்தப்பட்டது.

"அப்பா .. புள்ளி புள்ளியா வருது..ஆண்டனாவை அட்ஜஸ் பண்ணுங்கப்பா " என்று  ரகு அவனது தந்தையின் பின்பு சுற்றிக் கொண்டிருந்தான்.தொந்தரவு தாளாமல் அவரும் வீட்டின் கொம்பாக முளைத்திருந்த அந்த ஆண்டனாவை சரி செய்ய மாடிக்கு சென்றார்.

"இப்போ நல்லா தெரியுதா " என்று மாடியிலிருந்து அவர் கத்த...ரகு மாடிக்கும் கீழுமாக தொலைக்காட்சி துல்லியமாகதெரியும் வரை ஓடிக் கொண்டிருந்தான்.

வெள்ளிக்கிழமை என்றால் ஒலியும் ஒளியும் , சனிக்கிழமையில் சக்திமான்,கேப்டன் வியோம், ஞாயிறு என்றால் மகாபாரதம் , ஜங்கிள் புக்  ,மதியம்  வேற்று மொழித் திரைப்படம்,மாலை தமிழ் திரைப்படம்  இது தான் ரகுவின் அட்டவனை. தொலைக்காட்சிகள் தொல்லை காட்சிகளாக மாறாத காலத்திலும் பிள்ளையின் படிப்பு கெட்டுவிடும் என்று ரகுவின் அன்னை தேர்வு நேரங்களில் தொலைக்காட்சியை தொட அனுமதிப்பதில்லை.மற்ற நேரங்களில் அவள் ஏதும் சொல்வதில்லை.ஆனால் அன்று ஏனோ படிப்பை பற்றியும் தொலைகாட்சி பற்றியும் பெற்றோருக்கிடையில் சூடாக விவாதம் நடந்துக் கொண்டிருந்தது.

"அவன் நல்லா  தானே படிக்கிறான்.அப்புறம் என்ன..?"

"உங்களுக்கென்ன கவலை...அவனை டிவியை நிறுத்த வெச்சிட்டு படிக்க வைக்கிறதுக்குள்ள நான் டு பாடு..டிவி பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு தூக்கம் வராது..ஆனா புக்கை எடுத்த உடனே கண்ணு எரியுது , தூக்கம் வருதுன்னு உடனே தூங்கிட்றான்.அதுவும் பரிட்சை நேரத்தில் தான் கிரிக்கெட் போட்றாங்க..நீங்களும் அவன் கூட சேர்ந்துட்டு பாக்குறீங்க...இது போதாதுன்னு இப்போ கேபிள் போடுறேன்னு ஒத்த கால்ல நிக்குறீங்க" என்று வரை திட்டிக் கொண்டிருந்தாள்.

கேபிளை பற்றி ஓரிறு மாதத்திற்கு முன்பு பள்ளியில் யாரோ சொல்ல கேளிவிப்பட்டிருந்தான் ரகு.பெற்றோரின் பேச்சில் தலையிடாமல் அவன் மகாபாரதத்தின் கத்தி சண்டையில் தன்னையே மறந்து கொண்டிருந்தான்.

"டேய் ரகு..இங்க வா...வீட்ல கேபிள் கொடுக்கலாமா..? உங்க அம்மா வேண்டாம்னு சொல்றா..கேட்டா நீ தான் பொழுதனைக்கும் டி.வி பாக்குறியாம்..கேபிள் போட்டா உன் படிப்பு கெட்டுப் போயிடும்னு சொல்றா..நீ ஒழுங்கா படிக்கிறதுன்னா சொல்லு.நான் கேபிள் போடுறேன்" என்று தந்தை கேட்க

"நான் ஒழுங்கா படிப்பேன் பா " என்றான் ரகு.அதன் பின் தொலைக்காட்சி பார்க்க தந்தையும் மகனும் வீட்டின் எஜமானியிடம் ஏதேதோ  சட்டதிட்டங்களை தாங்களே வகுத்து அதற்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் ஒருமனதாக கூறினர்.அவளும் வேறுவழியின்றி..

"ஏதாச்சும் பண்ணுங்க..அவன் ராங்க் குறைஞ்சா நீங்க தான் பொறுப்பு " என்று அரைமனதாக கேபிளுக்கு ஒற்றுக்கொண்டாள்.

உணவிலும் சரி , படிப்பிலும் சரி எவ்வளவு சிறப்பாக குழைந்தைகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் தாய்மார்களுக்கு அது திருப்தி தருவதேயில்லை.ரகுவின் அன்னையும் அப்படி தான் , எப்பொழுதும் அவனது படிப்பை பற்றி குறை சொல்லிக்கொண்டிருந்தாள்.அவளை பொறுத்த வரை தொலைக்காட்சி ரகுவின் படிப்பிற்கு ஓர் எதிர்முனையாக இருந்தது.ரகு எப்படியாவது 10வது ராங்கிற்குள் வந்துவிடுவதால் அவனது தந்தை ஏதும் ண்டுகொள்வதில்லை.அடுத்த முறை இன்னும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று மட்டும் சொல்லுவார்.தேர்வு,விளையாட்டு,தொலைக்காட்சி  என சுமூகமாக சென்ற அந்த சிறுவன் ரகுவிற்கு சூராவளியாக வந்தது அவனது புதியபள்ளியின் தேர்வு தாள்கள்.6ம் வகுப்பு மெட்ரிக் பள்ளியில் சேர்ந்திருந்தான் , முதல் தேர்வு நடந்து தாள்கள் அனைத்தும் தரப்பட்டிருந்தது.அவன் பயந்தது போல இரண்டு பாடங்களில் ஃபெயிலாகிருந்தான்.

அம்மாவிடம் எப்படியோ பயந்து கொண்டே சொல்லிவிட்டான் .

"எல்லாம் இந்த டி.வி யால தான் , நான் அவ்வளவு சொல்லியும் ரெண்டு பேரும் சேர்ந்து தான் கேபிள் கொடுத்தீங்க எனக்கு ஏதும் தெரியாது .. நீயே அப்பாக்கிட்ட சொல்லி கையெழுத்தும் வாங்கிக்கோ " என்று சொல்லிவிட்டாள்.

அலுவலகத்திலிருந்து  தந்தை வந்தாயிற்று,இரவு உணவு முடித்து சன் செய்திகள் பார்ப்பது அவரது வழக்கம்.செய்தியின் இடைவேளையில் சானல்களை மாற்றி WWF பார்க்கும் ரகு அன்று அமைதியாக இருந்ததும் ,

"என்னடா WWF பாக்கலையா..?" என்றார்..

"அப்பா...அப்பா " என்று இழுத்து இழுத்து கெஞ்சும் தோரணையில் தனது தேர்வு தாள்களை நீட்ட...அதை பார்த்தவுடன்.தனது பொருளாதார எல்லைக்கு மீறி ரகுவை மெட்ரிக் பள்ளியில் சேர்த்தாலோ என்னவோ அதுவரை ஒருபோதும் அடித்திறாததந்தை அன்று அவனது முதுகை பதம் பார்த்தார்.

"வர வர மாமியா கழுதை போன ஆனாளாம்..அப்படி தான் போச்சு உன் படிப்பும் ..நானும் ஒன்னும் சொல்ல கூடாதுன்னு பொறுமையா இருந்தா ..ஏதோ கொஞ்ச நேரம் டிவி பார்தோமானு இல்லாம இப்படி பொழுதனைக்கும் பார்த்தா ஃபெயில் தான் ஆவ.புக்கெல்லாம் பாரு வாங்கினப்ப வெச்சது அப்படியே அதே இடத்துல தூங்குது" என்று ஆவேசமாக அவனை ஏசினார்.

"இனிமே அவன் ஒழுங்கா படிப்பான்..மெட்ரிக் அதனாலதான் அவன் கொஞ்சம் தடுமாறிட்டான்...அடுத்த தடவை நல்ல ராங்க எடுப்பான்..புள்ளைய அடிக்காதீங்க.." என்று  குவிற்கு அடிகள் பலமாக விழுந்ததும் மனம் மாறி அவன் பக்கம் பேசினாள்.

அடுத்த ஒரு மாதத்திற்கு தொலைக்காட்சி;செய்திக்களுக்காக மட்டுமே செயல்பட்டது.கார்ட்டூன்  , கிரிக்கெட் , WWF , சன்டிவியின் விடாது கருப்பு யாவும் அந்த டிவியின் வழியே எட்டிப்பார்க்கவேயில்லை.அன்று முதல் பள்ளி , கல்லூரி படிப்பு முடியும் வரை தேர்வு நேரங்களை விட , தேர்வின் முடிவு வரும் போதெல்லாம் ரகுவும் , தொலைகாட்சியும் வீட்டில் புதிதாய் வாங்கிய  non-stick பாத்திரத்திலுள்ள உணவு போல  பட்டும் படாமலேயே இருந்தது.

காலங்கள் ஓடியது , அப்பா வாங்கித் தரும் சாமி டாலர்களின் மூலம் கிடைத்த ஆனந்தத்தை அமெரிக்கன் டாலரகள் மூலம் திரும்பப் பெற முயற்சித்திக் கொண்டிருந்தான்.காலம் அவனை மென்பொருள் பொறியாளாராக மாற்றி வெளிநாட்டிற்கு அனுப்பி அழகு பார்க்க நினைத்து கடைசியில் தனிமையில் வதைத்துக் கொண்டிருந்தது.சமூகவளைதளம் , மின் அரட்டை , சமையல் , ஜிம் என அவ்வப்போது தனிமையை தவிர்த்தாலும் சில நேரங்களில் அவனுக்கு னிமையில் அழத் தோன்றியது , யாரிடமாவது மணிக்கணக்கில் பேச வேண்டுமென்று தோன்றியது.என்ன செய்தாலும் அவனது மனம் நிம்மதி அடையவேயில்லை.அப்பொழுது தான் நண்பன் ஒருவன் மூலம் வாசிப்பின் வாசனை அவனுக்கு வீசியது.பள்ளிக்குப் பிறகு தமிழை எங்கும் படித்ததாகநினைவில் இல்லை.நண்பன் மூலம் தமிழ் புத்தகம் சில அவனுக்கு கிடைத்தது , அதன் பின் இணையத்தில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் சேர்க்கத் துவங்கினான்.அவனது இலக்கியத் தேடல் சரித்திர நாவல்களில் துவங்கியது.அதை படிக்கும் போதெல்லாம் கற்பனைகள் எல்லையின்றி திரிந்ததை உணர்ந்தான்.தான் பார்த்த சரித்திர திரைப்படங்கள் , தான் சுற்றிய இடங்கள் என கற்பனைகளில் காட்சிகள் ஒவ்வொன்றும் வந்தன.அவனது தேடல் மேலும் பல எழுத்தாளர்களின் படைப்புகளின் அறிமுகம் செய்த்தது.ஒரு குறிப்பிட்ட மக்கள் இனத்தின் துயரங்களை எடுத்துரைக்கும் நாவல்களை படிக்கும் போதெல்லாம் நரகம் யாதென உணர்ந்தான் , சில இடங்களில் படிக்க முடியாமல் தவித்துக் கூடப் போனான்.மொழி அவனுக்குள் பல்வேறு உணர்ச்சிகளை  அள்ளி வீசியது.தனிமையின் பொழுதைத் தமிழுடன் அனுபவித்தான்.தனிமையின் தோழன் இலக்கியம் என அறிந்தான்.அவனது இலக்கிய எல்லை விரிந்துக் கொண்டேயிருந்தது.வெளிநாடுகளில் தங்க பெரிதாக  ஆசை ஏதுமில்லாததால் , தாய்நாடு திரும்ப வாய்ப்பொன்று அமைந்ததும் ஆர்வத்துடன் திரும்பினான்.

ஊருக்கு திரும்பியதும் ஆடு,கோழி,மீன்,வடை,பாயாசம் என தட புடலான உபசரிப்புகள் . இரு தினங்களுக்கு உணவும் , உறக்கமும் தான்.வெளிநாட்டு சாக்லேட் , மின்சாதன பொருட்கள் என வாங்கி வந்தததை  நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பட்டுவாடா செய்தான்.ஒவ்வொருக்கும் பார்த்து பார்த்து வாங்கி வந்திருந்தான் , அதில் மிகவும் யோசித்தது அப்பாவிற்கு வாங்கும் பொழுது தான்.அவரைப் பற்றி தனது மனதிற்குள் காட்சிகளை ஓட்டிய போது, அவர் எழுதிய ஓர் கவிதை வார இதழில் வந்திருந்ததும், அதனை அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்ததும், அத்துடன்  ஓர் பழைய லைப்ரரி கார்ட் இருந்ததும் நினைவிற்கு வந்தது. கண்டிப்பாக அப்பாவிற்கு வாசிப்பு மீது ஓர் பற்று இருந்திருக்கும் ,காலப்போக்கில் அதனை தொடராமல் இருந்திருப்பார் என்று எண்ணி  புத்தகம் படிக்கும் சாதனம் ஒன்றை வாங்கி வந்திருந்தான்.அதனுடன் தான் ரசித்த சில புத்தகங்களை உள்ளூரிலே வாங்கி வைத்திருந்தான்.அனைவருக்கும் பரிசுகளை கொடுத்து விட்டு அப்பாவிற்கு மட்டும் அவரே கேட்கட்டும் என்று கொடுக்காமல் வைத்திருந்தான்.அவரும் பொறுமையிழந்து...

"என்னடா என்னை மறந்திட்டியா..எனக்கு ஒன்னும் வாங்கலையா?" என்று பட்டென கேட்டும்விட்டார்...

"இந்தாங்க.."என்று சில புத்தகங்களையும் ..அந்த சாதனத்தையும் அழகிய வண்ண தாள்கள் சுற்றி ஓரி பரிசாக கொடுத்தான்...

"என்னடா இது ..இதான் ஜபாட் ..?" என்றார்..

"இல்ல பா..இது e-book reader ...புக் படிக்கிறதுக்காக.."

"இங்க யாரு இப்போ புக் படிக்கிறா..இத போய் வாங்கிட்டு வந்திருக்க..காசு தான் தெண்டம்..வாங்குறதுக்கு முன்னாடி என்கிட்ட  ஒரு வார்த்தை கேட்களாம்ல‌" என்றார் சற்று ஏமாற்றத்துடனும் எரிச்சலுடனும்..

"நீங்க வீட்ல இருக்கும் போது படிக்கலாம்ல" என்றான்

"புக்கெல்லாம் யாருடா இந்தக் காலத்துலபடிக்கிறா..யாருக்கு நேரமிருக்கு..ரெண்டு பேருக்கும் பவர் இருக்கு இதுல நாங்க புக் படிக்கிறதெல்லாம் கஷ்டம்.." என்று புத்தக வாசிப்பை தவிர்க்க ஏதேதோ காரணங்களை அடுக்கினார்.

"பேசாம உன் ப்ரண்ட்ஸ்கிட்ட வித்துடேன்" என்றனர்

ரகு ஏதும் பதிலளிக்காமல், சானல்களை மாற்றிக் கொண்டிருந்தான்.வீட்டின் தொலைக்காட்சிப் பெட்டியும் காலத்திற்கு ஏற்ப மாறியிருந்தது.முதல் முதலில் வாங்கிய கருப்பு வெள்ளை சாலிடர் டி.வி பரணியிலும் , அதன் பின் வாங்கிய ஓனிடா கலர் டி.வி கட்டிலிற்கு அடியிலும் ஒடுங்கி போயிருக்க புதிதாக வந்த ல்.சி.டி கம்பீரமாய் வண்ணங்களுடன் பிம்பங்களை பெரிதாய் சிந்திக் கொண்டிருந்தது.ரகு சானல்களை மாற்றிக் கொண்டேயிருந்தான்..

"ரகு.." என்று ஓரு கொஞ்சலும்,கெஞ்சலுமாக இழுத்து இழுத்து அழைத்தார்.அதில் அம்மாவின் தூண்டுதலும் ருந்தது.

"என்ன..சொல்லுங்க"

"அந்த நாடகத்தை வையேன்..இது மட்டும் தான்..அதற்கு அப்புறம் நீயே பார்த்துக்கோ" என்றார்..

கல்லூரி நாட்களில் நாடகம் பார்க்கும் அம்மாவை தன்னுடன் சேர்ந்து கிண்டலும் கேளியும் செய்த அப்பா .. இப்படி நாடகத்தின் மீது ஆர்வம் கொள்வார் என்று சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.ரிமோட்டை அவரிடம் கொடுத்துவிட்டு தனது லாப்டாப்புடன் இடம் பெயர்ந்தான்.மின்னெஞ்சல்,முகப்புத்தகம்,யூடியுப் என்று அப்படி இப்படி நேரத்தை கடிப்பட்டு கழித்துக் கொண்டிருக்க . அவனது தந்தை தன்னை  முழுவதுமாக நெடுந்தொடர்களுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்.10.30 மணிக்கு துவங்கியஅவரது நாடக வாசம் சிறு சிறு இடைவேளைகளுடன்  இரவு 10 மணி ஆகியும் முடிந்தப்பாடில்லை.காலை முதல் ஒப்பாரி சத்தங்களும் , பழி வாங்கும் வீர வசனங்களும் , வசனங்களுக்கு நடுவே "டிஸ்ஸ்.."   என்று வரும்  இரைச்சலும்,கற்பழிப்பு காட்சிகளும் ,கள்ள தொடர்புகளும்நகைச்சுவை என்ற பெயரில் மொக்கைகளும் , நல்லவர்களின் சோகமும் , கெட்டவர்களின் சுக வாழ்வும் என நெடுந்தொடர்கள் யாவும் ஒரே மாவை அரைத்துக் கொண்டிருந்த.

வீட்டு வேலைகளுக்கு நடுவே தான் ரகுவின் அம்மா பார்ப்பாள்,ஆனால் அவனது அப்பாவிற்கு வெளியே செல்லும் வேலையும் ஏதுமில்லாததால் முழு நேரமும் டி.வி தான்.30 நிமிட செய்திகள் கூட 5 நிமிட தலைப்பு செய்திகளாக அவரது அட்டவனையில் மாறியிருந்தது.ரசித்து பார்த்த கிரிக்கெட்டை கூட மறந்திருந்தார்.அம்மாவிற்குக் கூட சில நேரங்களில் வரிசையாக வரும் நெடுந்தொடர்களின் கதாப்பாத்திரங்கள் குழம்பிவிடும் ஆனால் அவரோ அனைத்தையையும் கரைத்துக் குடித்திருந்தார்.தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட எந்த நாடகத்தில் யார் யாருடைய காதலர்,இவளோட திருமணம் நிற்க என்ன சதி செய்யப்பட்டது,சிறையில் அவள் எப்படியெல்லாம் துன்புற்றாள்அவனுக்கு யாருடன் கள்ளத்தொடர்பு இருந்தது   என்று சரியாக சொல்லிவிடுவார்.அது அந்த தொடர்களின் இயக்கர்களுக்குக் கூட தெரிந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

ரகுவிற்கு அவை அனைத்தும் எரிச்சலாக இருந்தது.மண்டைக்குள் கெண்டை மீன் ஓடுவது போல் இருந்தது. பள்ளி , கல்லூரியில் ஆசிரியர் நடத்திய பாடங்களிக் கூட அவன் தலை இவ்வளவு கனத்தது இல்லை ஏனோ சீரியலகளின் சத்தம் கேட்டே வெகுவாய் கனத்தது.இந்த நெடுந்தொடர்களின் அதிர்வலையில் அவன் அதிர்ந்து போயிருந்தான்.அவன் வாங்கிக் கொடுத்த புத்தகங்களும் , அந்த கருவியும் அதே இடத்தில் இருந்தது , என்ன புத்தகங்கள் என பார்க்கக் கூட பெற்றோருக்கு நேரமில்லாமல் நெடுந்தொடர் எனும் மாயவலையில் முழுவதுமாக சிக்கியிருந்தனர் .அந்த புத்தகங்கள் ரகுவின் கண்களில் படவும் , மீண்டும் "டிஸ்ஸ்.." என்ற இரைச்சல் காதை குடையவும் , சினம் சிரத்தின் உச்சத்தை சீண்டவும் சரியாக இருந்தது.

"ஏதோ கொஞ்ச நேரம் டி.வி பாத்தீங்களானு இல்லாம..இப்படி பொழுதனைக்கும் எப்படி தான்  டி.வி பாக்குறீங்க...புக் படிச்சா கண்ணு எரியும் அது இதுன்னு சொல்லிட்டு ..நாள் முழுதும் டி.வி முன்னாடி தான் உட்கார்ந்திருக்கீங்க..நான் வாங்கி வந்தத என்ன ஏதுன்னு பாத்தீங்களா..அது வைச்ச இடத்துல அப்படியே தூங்குது..எனக்கென்ன ஒன்னுமில்லாத இந்த சீரியல பொழுதனைக்கும் பாருங்க.." என்று நெடுந்தொடர்களை பற்றி ஏசிவிட்டு ஆவேசத்துடன் அவன் அறைக்குள் மீண்டும் சென்றுவிட்டான்.

தொலைகாட்சி அனைக்கப்பட்டது ... பெற்றோரின் நினைவு பின்நோக்கி ஓடியது...

அங்கு காலங்கள்  மாறியது , கதாப்பாத்திரங்கள் இடம் மாறின ,காட்சி மட்டும் மாறாதிருந்தது.


9 comments:

 1. இது கற்பனை கதை போல் தெரியவில்லை...அனுபவம் போல் தெரிகிறது...நல்ல தமிழ்..அருமையான கதை சொல்லும் திறன்...

  ReplyDelete
 2. Nice da. Arumaiyana nadai.orunimisam life ah rewind panni parthamathiri irunthuchu

  ReplyDelete
 3. ஒட்டுமொத்த தமிழகத்தின் வேதனையை நீயே பதிவு செய்திருக்க வாழ்த்துகள்!ஆனாலும் விடாதுகருப்பு!!

  ReplyDelete
 4. very nice , i remind my life once again, thanks...

  ReplyDelete
 5. அருமையான கதை ... பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, மீண்டும் நினைவுக்கு கொண்டு வர வைத்து விட்டீர்கள்...நன்றிகள்..!!!!!

  ReplyDelete
 6. Machi very nice.. a quick flash back of our life.....

  ReplyDelete