Thursday, October 17, 2013

பண்டிகை கொண்டாட்டம்

சஞ்சிகை இதழுக்காக எழுதியது : http://goo.gl/wHwwBW
பண்டிகை கொண்டாட்டம் என்றால் தீபாவளியும் பொங்கலும் தான். தீபாவளி என்றதும் மனம் ஒரு மாதத்திற்கு முன்னமே அதற்கான கனவுகளை காண துவங்கிவிடுவது வழக்கம். புத்தாடை , பலகாரம் , பட்டாசு என ஒவ்வொன்றிற்கும் நாட்கள் குறிக்கப்படும் போது வீட்டிலுள்ள அனைவரும் பண்டிகையின் வாசத்தை நுகர துவங்கிவிடுகின்ற‌னர். யார் வீட்டில் முதல் சரம் வெடிப்பது, பட்டாசு வெடித்த‌ குப்பைகள் யார் வீட்டில் அதிகம் உள்ளது என சிறுவர்கள் மனமும்; புதிய திரைப்படம், நண்பர்கள் வட்டமென இளைஞர்களின் மனமும் கொண்டாட்டங்களில் மூழ்கி விடும். அன்றைய தினம் அதிகாலை முதல் இரவு வரை வீட்டில் நடைபெறும் ஒவ்வொன்றும் அழகிய தருணங்கள். இது போன்ற அழகிய தருணங்களை தரும் நாட்களுக்காக தான் வருடத்தின் அனைத்து நாட்களும் படைக்கப் பட்டதென சில நேரம் மனதினுள் பிம்பங்கள் தோன்றும்.
இதெல்லாம் 10 வருடங்களுக்கு முந்தைய நிலைமை தான். வீட்டிற்கு ஒருவரை மென்பொருள் துறைக்கு நேந்து விட்ட அனைத்து குடும்பங்களின் இன்றைய‌ நில‌மை வேறு. பண்டிகை கொண்டாட்டங்களை மெல்ல மெல்ல தொலைக்காட்சி முன் மறந்தது முந்தைய தலைமுறை என்றால், பண்டிகைகளை முழுவதுமாக தொலைத்துக் கொண்டிருக்கிறது மென்பொருளின் துறையில் இருக்கும் இன்றைய தலைமுறையின் ஒரு பகுதி.
மென்பொருள் துறையில் அதிகமானோர் வெளிநாட்டினர்களுக்காகவே வேலை செய்கின்றனர் குறிப்பாக அமெரிக்காவிற்காக‌. நம்மவர்களின் குறைந்த சம்பளமும் , “around the clock” கிடைக்கும் வேலை நேரமும் அவர்களுக்கு மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. நம்மவர்களின் துணையோடு 24X7 அவர்களுக்கு வேலை நடக்கிறது. மென்பொருள் துறையில் வேலை என்பது கிரிக்கெட் போல தான் , டெஸ்ட் மாட்ச் என்பது முற்றிலும் இல்லாது போயிற்று , அவ்வெப்போது ஒரு நாள் போட்டி இருக்கும் ஆனால் எப்போதும் T20 தான். அனைத்து வேலைகளயும் உடனுக்குடன் முடிப்பதையே அனைவரும் விரும்புகின்றனர். வேகத்திற்கே இங்கு முக்கியத்துவம். வருடத்திற்கு ஒரிரு முறை என்றால் பராவாயில்லை , ஆனால் வருடம் முழுவது இங்கு அதீத ஈடுபாடுகளும், அதீத உழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவன் நாள் ஒன்றிற்கு குறைந்தது 10-11 மணி நேரம் அலுவலகத்தில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் தனது அதிகாரிகளிடம் தகவல்களை பகிர இவை தேவையாக இருக்கிறது. நமக்கு மாலை, அவர்களுக்கு காலை.. நாள் முடிவின் கலைப்பும் நாள் துவக்கத்தின் ஈர்ப்பும் மோதிக்கொள்கிறது. மோதலில் கலைத்தவன் தோற்கிறான். மறுநாள் காலை இங்கு தாமதமாகவே விடிகிறது. காலை உணவும் தவிர்க்கப்படுகிறது. இப்படி ஒரு நாளின் அதிகப்படியான நேரத்தை அலுவலகத்தில் கழித்திட , மீதியை உறக்கத்திலும், போக்குவரத்திலும் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிற‌து. வார நாட்களில் குடும்பம், குழந்தைகள், பொழுதுப்போக்கு, வாசிப்பு என்ற பேச்சுக்குக்கள் செல்லாது போகிறது. அலுவலகத்தில் கிடைக்கும் நேரத்தில் வேண்டுமானால் இனையத்தில் உலா வரலாம். அவ்வளவு தான் முடியும்.
ஒரு நாள் பொழுதில் ஏற்பட்ட இந்த பாதிப்பு மெல்ல நமது பண்டிக்கை கொண்டாட்டங்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. கலாச்சாரம் வேறுபாடுகளை இரு தரப்பில் அறிந்திருந்த போதும் , நமது தியாகிகள் பண்டிகை கொண்டாட்டங்களை அவர்களுக்காக தியாகம் செய்ய துவங்கிவிட்டனர். மதங்கள் தாண்டி கொண்டாடப்பட்ட தீபத்திருநாள் மெல்ல அதன் பொலிவை இழந்துக்கொண்டிருக்கிறது. தீபாவளி என்றதும் ஒரு மாத முன்பே வந்த பண்டிகை உணர்வு இப்பொழுதெல்லாம் தீபாவளி அன்று மட்டும் வந்துப்போகிறது. அமெரிக்காவில் டிசம்பர் மாத இறுதியில் பண்டிக்கை கொண்டாட்டங்கள் அதிகம் இருப்பதால், அப்பொழுது தான் பண்டிகை உணர்வு இங்கு எழுகிறது. சில அலுவலகங்களில் கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளிக்கு விருப்ப விடுமுறை (optional holiday) மட்டுமே தரப்படுகிறது. வருடத்திற்கு மொத்தம் 10 நாட்கள் மட்டுமே பொது விடுமுறை, அதையும் மீறி வரும் பொது விடுமுறை நாட்களை நமது விருப்பபடி இரண்டினை தேர்வு செய்துக் கொள்ளலாம். அதில் தான் தீபாவளி விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது. இந்திய சுதந்திர தினத்தினை விட அமெரிக்க சுதந்திர தினத்தில் தான் இங்கு அதிகமானோர் சுதந்திரமாக (விடுமுறையில்) இருக்கின்றனர். அமெரிக்காவின் thanks giving day பற்றி தெரிகிற நம்மவர்களுக்கு நம்மூர் பண்டிகை தினங்கள் பற்றின விவரங்கள் மறக்க துவங்கி இருக்கிறது.
நமது நேரம் , கலாச்சாரம் , உறக்கம், உணவு முறைகள் என்று நாம் பறிகொடுத்த பட்டியலில் பண்டிக்கை கொண்டாட்டங்களும் சேர்ந்துக்கோன்டுவிட்டது. கொண்டாட்டங்கள் இல்லாத ஒரு வாழ்கை முறையை உருவாக்கிக்கொண்டிருக்கிற‌து. பண்டிகை என்பது நமது அடையாளமாக இல்லாமல் வெறும் நினைவுகளாக மட்டும் மாறிக்கொண்டிருக்கிறது.குற்றம் யாருடையது , தீர்வுகள் என்ன என்பதெல்லாம் அடுத்தக்கட்டம்.முதலில் இது போல நடப்பதை உணர்வோம்.

1 comment: