Thursday, October 17, 2013

பண்டிகை கொண்டாட்டம்

சஞ்சிகை இதழுக்காக எழுதியது : http://goo.gl/wHwwBW
பண்டிகை கொண்டாட்டம் என்றால் தீபாவளியும் பொங்கலும் தான். தீபாவளி என்றதும் மனம் ஒரு மாதத்திற்கு முன்னமே அதற்கான கனவுகளை காண துவங்கிவிடுவது வழக்கம். புத்தாடை , பலகாரம் , பட்டாசு என ஒவ்வொன்றிற்கும் நாட்கள் குறிக்கப்படும் போது வீட்டிலுள்ள அனைவரும் பண்டிகையின் வாசத்தை நுகர துவங்கிவிடுகின்ற‌னர். யார் வீட்டில் முதல் சரம் வெடிப்பது, பட்டாசு வெடித்த‌ குப்பைகள் யார் வீட்டில் அதிகம் உள்ளது என சிறுவர்கள் மனமும்; புதிய திரைப்படம், நண்பர்கள் வட்டமென இளைஞர்களின் மனமும் கொண்டாட்டங்களில் மூழ்கி விடும். அன்றைய தினம் அதிகாலை முதல் இரவு வரை வீட்டில் நடைபெறும் ஒவ்வொன்றும் அழகிய தருணங்கள். இது போன்ற அழகிய தருணங்களை தரும் நாட்களுக்காக தான் வருடத்தின் அனைத்து நாட்களும் படைக்கப் பட்டதென சில நேரம் மனதினுள் பிம்பங்கள் தோன்றும்.
இதெல்லாம் 10 வருடங்களுக்கு முந்தைய நிலைமை தான். வீட்டிற்கு ஒருவரை மென்பொருள் துறைக்கு நேந்து விட்ட அனைத்து குடும்பங்களின் இன்றைய‌ நில‌மை வேறு. பண்டிகை கொண்டாட்டங்களை மெல்ல மெல்ல தொலைக்காட்சி முன் மறந்தது முந்தைய தலைமுறை என்றால், பண்டிகைகளை முழுவதுமாக தொலைத்துக் கொண்டிருக்கிறது மென்பொருளின் துறையில் இருக்கும் இன்றைய தலைமுறையின் ஒரு பகுதி.
மென்பொருள் துறையில் அதிகமானோர் வெளிநாட்டினர்களுக்காகவே வேலை செய்கின்றனர் குறிப்பாக அமெரிக்காவிற்காக‌. நம்மவர்களின் குறைந்த சம்பளமும் , “around the clock” கிடைக்கும் வேலை நேரமும் அவர்களுக்கு மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. நம்மவர்களின் துணையோடு 24X7 அவர்களுக்கு வேலை நடக்கிறது. மென்பொருள் துறையில் வேலை என்பது கிரிக்கெட் போல தான் , டெஸ்ட் மாட்ச் என்பது முற்றிலும் இல்லாது போயிற்று , அவ்வெப்போது ஒரு நாள் போட்டி இருக்கும் ஆனால் எப்போதும் T20 தான். அனைத்து வேலைகளயும் உடனுக்குடன் முடிப்பதையே அனைவரும் விரும்புகின்றனர். வேகத்திற்கே இங்கு முக்கியத்துவம். வருடத்திற்கு ஒரிரு முறை என்றால் பராவாயில்லை , ஆனால் வருடம் முழுவது இங்கு அதீத ஈடுபாடுகளும், அதீத உழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவன் நாள் ஒன்றிற்கு குறைந்தது 10-11 மணி நேரம் அலுவலகத்தில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் தனது அதிகாரிகளிடம் தகவல்களை பகிர இவை தேவையாக இருக்கிறது. நமக்கு மாலை, அவர்களுக்கு காலை.. நாள் முடிவின் கலைப்பும் நாள் துவக்கத்தின் ஈர்ப்பும் மோதிக்கொள்கிறது. மோதலில் கலைத்தவன் தோற்கிறான். மறுநாள் காலை இங்கு தாமதமாகவே விடிகிறது. காலை உணவும் தவிர்க்கப்படுகிறது. இப்படி ஒரு நாளின் அதிகப்படியான நேரத்தை அலுவலகத்தில் கழித்திட , மீதியை உறக்கத்திலும், போக்குவரத்திலும் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிற‌து. வார நாட்களில் குடும்பம், குழந்தைகள், பொழுதுப்போக்கு, வாசிப்பு என்ற பேச்சுக்குக்கள் செல்லாது போகிறது. அலுவலகத்தில் கிடைக்கும் நேரத்தில் வேண்டுமானால் இனையத்தில் உலா வரலாம். அவ்வளவு தான் முடியும்.
ஒரு நாள் பொழுதில் ஏற்பட்ட இந்த பாதிப்பு மெல்ல நமது பண்டிக்கை கொண்டாட்டங்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. கலாச்சாரம் வேறுபாடுகளை இரு தரப்பில் அறிந்திருந்த போதும் , நமது தியாகிகள் பண்டிகை கொண்டாட்டங்களை அவர்களுக்காக தியாகம் செய்ய துவங்கிவிட்டனர். மதங்கள் தாண்டி கொண்டாடப்பட்ட தீபத்திருநாள் மெல்ல அதன் பொலிவை இழந்துக்கொண்டிருக்கிறது. தீபாவளி என்றதும் ஒரு மாத முன்பே வந்த பண்டிகை உணர்வு இப்பொழுதெல்லாம் தீபாவளி அன்று மட்டும் வந்துப்போகிறது. அமெரிக்காவில் டிசம்பர் மாத இறுதியில் பண்டிக்கை கொண்டாட்டங்கள் அதிகம் இருப்பதால், அப்பொழுது தான் பண்டிகை உணர்வு இங்கு எழுகிறது. சில அலுவலகங்களில் கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளிக்கு விருப்ப விடுமுறை (optional holiday) மட்டுமே தரப்படுகிறது. வருடத்திற்கு மொத்தம் 10 நாட்கள் மட்டுமே பொது விடுமுறை, அதையும் மீறி வரும் பொது விடுமுறை நாட்களை நமது விருப்பபடி இரண்டினை தேர்வு செய்துக் கொள்ளலாம். அதில் தான் தீபாவளி விடுமுறை கொடுக்கப்பட்டிருந்தது. இந்திய சுதந்திர தினத்தினை விட அமெரிக்க சுதந்திர தினத்தில் தான் இங்கு அதிகமானோர் சுதந்திரமாக (விடுமுறையில்) இருக்கின்றனர். அமெரிக்காவின் thanks giving day பற்றி தெரிகிற நம்மவர்களுக்கு நம்மூர் பண்டிகை தினங்கள் பற்றின விவரங்கள் மறக்க துவங்கி இருக்கிறது.
நமது நேரம் , கலாச்சாரம் , உறக்கம், உணவு முறைகள் என்று நாம் பறிகொடுத்த பட்டியலில் பண்டிக்கை கொண்டாட்டங்களும் சேர்ந்துக்கோன்டுவிட்டது. கொண்டாட்டங்கள் இல்லாத ஒரு வாழ்கை முறையை உருவாக்கிக்கொண்டிருக்கிற‌து. பண்டிகை என்பது நமது அடையாளமாக இல்லாமல் வெறும் நினைவுகளாக மட்டும் மாறிக்கொண்டிருக்கிறது.குற்றம் யாருடையது , தீர்வுகள் என்ன என்பதெல்லாம் அடுத்தக்கட்டம்.முதலில் இது போல நடப்பதை உணர்வோம்.

Friday, August 2, 2013

Walletமீகி

சின்ன புள்ளைல கேட்ட கதை ஒன்னு...

ஒரு ஊருல ஒரு களவாளி பய இருந்தானாம்...அந்த ஊரு பக்கத்துல ஒரு காடு.இவன் அந்த காட்ட தாண்டி யாராச்சும் இராவுல கடந்தா அவுங்கள வழி மறைச்சு கொள்ள அடிப்பான்.ஊர்ல இருக்கிறவங்களுக்கு அடையாளம் தெரியாம இருக்க ..மச்சம் , மீசை , தாடி வைக்கிறதுன்னு நம்ம சினிமா மாதிரி அவனும் ஏதேதோ மாறுவேஷம் போட்டுகிட்டாம்.ஊருல யாராலும் கண்டுப்பிடிக்க முடியல.இவனும் நல்லா கொள்ள அடிச்சு அவன் குடும்பத்த காப்பாத்தி வந்தான்.திடிருனு அந்த ஊர்ல recession டைம் போல...யாருகிட்டையும் துட்டு இல்ல..இவனுக்கும் என்ன பண்றதுனு புரியல...அப்போ அந்த காட்டு வழியா ஒரு சாமியார் க்ராஸ் ஆனாரு.நம்ம சாமியார்களுக்கு தான் recession  கிடையாதே...இவனுக்கு கொஞ்சம் உறுத்தலா இருந்தாலும் வேறு வழியில்லன்னு...அவர மறைச்சு...

"கைல இருக்குறத துட்டை கொடுத்துட்டு அப்படியே ஓடிடு..இல்லாட்டி கொண்டே புடுவேன்னு" மிரட்ட...அந்த சாமியார் லைட்டா சிரிச்சாப்ல..இவனுக்கு ஒன்னுமே புரியல..என்னடா இவன் கத்திய பாத்து பயப்படாம சிரிக்கிறானேன்னு ..அப்படியே shock ஆயிட்டான்.

அப்புறம் அந்த சாமியார் அவன்ட..தம்பி..என்கிட்ட இருக்கிறத கொடுத்துட்றேன் ஆனால் நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுன்னு சொன்னாரு..சரின்னு அவனும் ஒத்துக்கிட்டான்..

"நீ யாருக்காக கொள்ள அடிக்கிற"

"எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும்"

"சரி ..நீ தர காசுல பங்குப் போட்ற உன் குடும்பம் .. உன் பாவத்தில பங்கு போட்டுப்பாங்களா"

"ஏன் மாட்டாங்க..எனக்காக எதுனாலும் செய்வாங்க"

"சரி..இந்த காசை வச்சிக்கோ..வீட்டுக்கு போய்..அவுங்கள்ட கேளு..."

அந்த சாமியார் போகும் போது சும்மா போகாமல் இப்படி கொளுத்திப் போட்டு போனதிலிருந்து..இவனுக்கும் ஏதோ உறுத்தலகாவே இருந்தது...

வீட்டிற்கு போனதும் ..காசை கொடுத்துவிட்டு தனியே பெற்றோரிடமும்,மனைவியிடமு,குழந்தையிடமும் பாவத்தின் ஷேர்ஸ் பற்றி கேட்டான்..

பெற்றோர் : உன்னை கஷ்டப்பட்டு வளத்தோம் ..அதுனால காப்பாத்த வேண்டியது உன் கடமை..

மனைவி : நான் உங்கள நம்மி தான் வந்தேன்..என்னை காப்பாத்திறது தான் புருஷ லட்சணம்..

குழந்தை : அதுக்கு ஒன்னும் புரியல..இருந்த போதும் வளர்ப்பது தந்தையிம் கடமையென தோன்றியது அவனுக்கு..

இப்படி பாவ பங்கு என்றதும் அனைவரும் ஜகா வாங்க..நம்ம ஹீரோவுக்கு மண்டைக்கு மேல ஒரு குண்டு பல்பு எரிந்தது..

ஆதங்கத்தில் கடகடவென ஏதோ எழுதினான்..பார்த்தா அது தான் நம்ம இராமாயணம்..அவன் வேறுயாருமில்ல நம்ம வால்மிகி தான்.

ஆக ..இந்த கதையிலிருந்து என்ன சொல்ல வரேன்னா அந்த காலம் முதல் இந்த காலம் வர ..ஆம்புளைங்க ஒரு ஏ.டி.ம் மிஷின் தான்.

சோ..ஏ.டி.ம் மிஷினா இருங்க..இல்லாடி ஒரு நோட்டும் பேனாவும் வாங்குங்க...walletமீகியா...இல்ல...வால்மீகியா..?

குறிப்பு [Original Story] : http://nadanagopalanayaki.blogspot.in/2005/10/blog-post_22.html


Tuesday, July 30, 2013

அந்த மரண அடி

அலுவலகத்தில் dead end ல் நிற்க வைத்து க்ளைண்ட் கொடுக்கும் dead line அடிகள் , வீட்டில் ஒரு பக்கம் அம்மா ; மறுப்பக்கம் மனைவி என்று திடிரென விழும் sentimental  அடிகள், மாதம் 10ம் தேதியானால் துவங்கும் பொருளாதார அடிகள் , சரி இதை மறக்கலாம் என்று  சமூக வலைபக்கம் சென்றால் பிரபலங்களின் சண்டைகளிலும் , இலக்கியவாதிகளின் சண்டைகளிலும் முரண்பட்ட கருத்துக்களால் விழும் comment அடிகள்.விதவிதமான அடிகள் பதமாக விழுந்தாலும் சரி,திடமாக விழுந்தாலும் சரி... நானும் உங்களை போல தான் ; எவ்வளவு அடிச்சாலும் அமைதியாக வாங்கிக் கொண்டு ,விடுகதையா பாடலில் வரும் ரஜினி போல் சிரித்துக் கொள்வேன்.இங்கு நான் எழுத வந்தது இந்த கைப்புள்ள வாழ்வில் வாங்கும் அடிகளை பற்றியத‌ல்ல,சிறுபிள்ளையாய் வெள்ளை சட்டையும் , சிகப்பு டவுசரும் போட்டுத் திரிந்த காலத்தின் போது வாங்கிய ஓர் அடியினை பற்றி.

அந்த பள்ளிப் பருவத்தில் ; தேர்வின் போது விளையாடுவது,விளையாட்டின் போது நண்பர்களுடன் சண்டை பிடிப்பது,ஆர்வ கோளாரில் ஏதாவது பொருளினை உடைத்து விடுவது என வீட்டில் அடிக்கடி அடி வாங்குவதற்கு இதில் ஏதாவது ஒன்று தான் காரணமாக  இருக்கும்.அந்த அடிகளின் நினைவுகள் கூட; அப்பா ஆசையாக வாங்கி வரும் தின் பண்டங்களிலோ ,அம்மாவின் கொஞ்சலிலோ மறந்து போய்விடும்.ஆனால் இந்த பள்ளியில் தேவையில்லாமல் வாங்கிய அடி ...நினைவில் ஓர் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும் .அப்படிப்பட்ட ஓர் அடி எனக்கும் விழுந்திருந்த‌து...

4ம் வகுப்பு 'C' பிரிவில் படித்துக் கொண்டிருந்தேன்', காலாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது.ஆட்டோக்காரர் அன்று வராததால் ;  சைக்களில் அப்பாவுடன் பள்ளிக்கு 8 மணிக்கே வந்துவிட்டேன்.9.30 மணி க்கு தான் தேர்வு.தேர்விற்காக வகுப்பறைகள் யாவும் ஒன்றாக்கப்பட்டிருந்தன.சீக்கரம் வந்ததால் அந்த பெரிய ஹாலில் நான் மட்டும் அமர்ந்திருந்தேன்.அந்தப் பள்ளியில் ஓர் அண்ணன் இருப்பார்,அவர் பெயர் நினைவில் இல்லை ஆனால் அவரது சிரிப்பு மட்டும் நினைவில் இருக்கிறது அது ரஜினியின் சிரிப்பை போல வசீகரமாக இருக்கும்.அவர் அந்த ஹாலின் வாசலில் நின்று கொண்டிருந்தார்.தேர்வுக்காக புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன்.அப்பொழுது 'D' பிரிவிலிருந்த ஓர் மாணவி அங்கு வந்தாள்.அவளைப் பார்த்தவுடன் ஒரு சின்ன புன்னகையுடன் ஏதோ பேச முயன்றேன்.

அவ்வளவு தான் நடந்தது...உடனே வாசலில் இருந்த அந்த அண்ணன் என் பெயரை குறித்துக் கொண்டார்.ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.தேர்வு ஆரம்பிக்கும் வரை ஹாலில் படிக்காமல் பேசுவோர்களை பிடித்துக்  கொடுக்கும் உளவாளி அவர் என்பது பின்னர் தான் எனக்கு புரிந்தது.சரியாக 9 மணிக்கு என்னை "Big sir" அறைக்கு அழைத்துச் சென்றார்.அவரோட முகத்திலிருந்த அந்த வசீகரிப்பு காணாமல் போயிருந்தது.ரஜினி படங்களின் வரும் வில்லன்களாக அவர் தெரிந்தார்.

அந்த பள்ளியின் முதல்வர் Big Sir தான் , அவரை பார்க்கும் போதெல்லாம் சலாம் போடுவேன்.திங்கள் தோறும் நடக்கும் ப்ரேயர் முடிந்ததும் "GOD BLESS YOU" என்று அவரை கடக்கும் போது சொல்லுவார்.இதை தவிரஅவருக்கும் எனக்கும் எந்தவித பேச்சுகள் இருந்ததில்லை.அவரது அறைக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டால் அது அடிக்காக மட்டுமே.அவர் அடியை பற்றி அரசபுரசலாக கேள்விப்பட்டிருக்கேன்.ஆனால் அப்பொழுது தான் முதல் முறையாக அடி வாங்க அவரது அறைக்கு சென்றேன்.மனதிற்குள் அவரிடம் சமாளிக்க வசனங்களை தயார் செய்தேன்..அவரிடம் பேசினால் விட்டுவிடுவார் என்று நினைத்தேன்.அவருக்காக வாசலில் காத்திருந்தோம்.ஆம் அந்த உளவாளி வேறு இருவரையும் கடைசி நிமிடத்தில் பிடித்திருந்தார்(ன்).அறைக்குள் நுழைந்தார்  Big Sir, முதல் ஆளை வரச் சொன்னார்..முதல் ஆள் வேறு யாரு..நான் தான்...

நான் கொஞ்சம் முகத்தை சோகமாக மாற்றிக் கொண்டேன்,மனதிற்குள் பயமும் இருந்தது."sorry sir.."என்று நான் ஆரம்பிக்க.அவரோ என் காதை திருகி , குணிய வைத்து மளாரென்று இரண்டு அடியை முதுகில் போட்டார்.எனக்கு ஏனோ கொஞ்சம் படபடத்தது.சுவாசிக்க சிரமமாக இருப்பது போல் தோன்றியது.என் முகத்தைக் கூட பாராமல் என்னை போக சொல்லிவிட்டு அடுத்தவனை உள்ளே அனுமதித்தார்.எதிரே வரும் அடுத்த மாணவனின் கண்கள் எனக்கு விழுந்த அடியின் சத்தத்தில் கலங்கியிருந்தது.வேறு யாரும் நான் அடி வாங்கியதை பார்க்காத போதும் எனக்கு ஏனோ அவமானமாக இருந்ததுஇது ஓரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும் எனக்கு விழுந்த அடி நியாயமற்றதாகவே தோன்றியது.தேர்வின் போது கூட அதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் , வெறுப்பின் உச்சம் என்று கூட சொல்லலாம்.அந்த தேர்வை சரியாக எழுதவில்லை.."ஒழுங்கா படிக்காததுக்கு இப்படி ஒரு பிட்டா"  என்று நீங்கள் நினைத்தால் அதுக்கு  நான் ஒன்றும் செய்ய முடியாது.

அதன் பிறகு அந்த அண்ண‌ணையும்,Big Sir யும் கடக்கும் போதெல்லாம் வெறுப்பா இருக்கும். எனக்கு அந்த பள்ளியை சுத்தமாக பிடிக்காமலிருந்தது.அடுத்த வருடம் வேறு பள்ளிக்கு மாறிவிட்டேன்.மாறியதற்கு வேறு பல காரணங்களிருந்தாலும் , வாங்கிய அந்த அடியும் ஒரு முக்கிய காரணம்.நண்பர்களை விட்டு பிரியும் சோகத்தை விட , பள்ளியை விட்டு போவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இது தான் நான் வாங்கிய அந்த மரண அடி...அன்று எனக்கு பெரிய அவமாணமாக இருந்தது.அந்த அடிக்காக feel பண்ணது கொஞ்சம் அதிகபடின்னு இப்போ தோன்றினாலும்  Big Sir ன் அடிகளில் நியாய‌ம் ஏதும் இருப்பதாக எனக்கு இன்றும் தோன்ற‌வில்லை.ஆசிரியரின் பார்வையிலே ஓர் அடி என்பது மிகச் சாதரணமாக இருக்கலாம் , ஆனால் ஒரு சிறுவர்வனின் பார்வையில் அது அவனுக்கு பயமும் , அவமானமும்.

அடிகள் தவறு செய்ததற்கு என்ற போது என் மனது (சிறுவனாக இருந்தபோதும்) அதனை ஏற்றுக் கொண்டது அதுவே தேவையில்லாத போது கசப்புணர்வாகவும் , சுற்றியுள்ளோர் மீது வெறுப்பாகவும் மாறியதை அன்று என்னால் தவிர்க்கவே முடியவில்லை.இன்றைய கால கட்டங்களில் பள்ளியில் யாரும் அடிப்பதில்லை என்று நினைக்கிறேன்.ஆனால் அதற்கு பதிலாக இது அது என்று பாடசுமைகள் அதிகமாக்கப் ப‌ட்டிருப்பதாக உணர்கிறேன்...தஞ்சையில் என் எதிர் வீட்டு சிறுமி U.K.G படிக்கிறாள்..ஓர் சனிக்கிழமையில் ..அவளிடம் .. பாப்பா வந்திருக்கா விளையாட வரியா என்று கேட்டதற்கு..tuition,special class இருக்கு என்கிறாள்...நான் அந்த வயதில் இந்த இரு வார்ததைகளையும் கேள்வி பட்டிருந்ததாகக் கூட ஞாபகமில்லை.

இப்படி நான் பள்ளி நினைவுகளை பகிர்வதற்கும் , பள்ளிகளை பற்றிப் பேசுவதற்கும் காரணம்..ஓர் வித்தியசமான பள்ளியை பற்றி தெரிந்துக் கொண்டதால் தான்...

அந்த பள்ளியை பற்றி .."ஜன்னலில் ஓர் சிறுமி" என்ற புத்தகத்தில் படித்தேன்.அதனால் தான் என் பள்ளியின் நினைவுகள் மீண்டும தலை தூக்கியது.சின்ன புத்தகம் தான்...கதையின் போக்கு அங்கு பயின்ற ஒர் சிறுமியின் பார்வையில்அமைந்திருக்கும்.சிறுமியின் பார்வையில் அந்த பள்ளியில் நடக்கும் நிகழ்வுகள் , அவளது பயணங்கள், வேற்பட்ட மனிதர்கள்,நண்பர்கள்,பேய் கதைகள் , வருமை என கதை பல இடங்களில் பயணிக்கும்.படிக்கும் போது  குழந்தைகளாக நாம் செய்தது யாவும் நினைவில் வரும்.அதுமட்டுமில்லாது ,அடுத்த தலைமுறையின் வளர்ச்சியில் நாம் கவனிக்க வேண்டிய‌ விஷயங்கள் நிறைய இருப்பதாகவும் தோன்றும்.சரி feelings ஜ இங்கேயே நிறுத்திட்டு கதைக்கு வருவோம்...

அந்தப் பள்ளியின் அமைப்பே வித்தியசமானது , ரயில் பெட்டிகளைக் கொண்டு வகுப்புறைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும்,மாணவர்கள் சுதந்திரமாக உலாவினர்.பொறுமையாக உண்டனர் இன்னும் பல அதிசிய நிகழ்வுகள்...அங்கு நடந்தது. அனைத்து விஷயங்களையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் , அந்தப் பள்ளி மாணவர்களுக்காக எவ்வளவு நுண்ணியமாக ஒவ்வொரு விஷயங்களையும் அனுகியுள்ளதை நினைத்து வியக்காமல் இருக்க முடியாது.அந்த சிறுமி சின்ன சின்ன தவறுகள் செய்தபோதும் , முந்தைய பள்ளியிலிருந்து  அவளை நிறுத்திய போதும் அந்த சிறுமியின் அன்னை ;தனது மகளின் தன்னம்பிக்கை கெடாமல் பாத்துக்கொள்வார்.(இங்கு ஓர் வருத்தமிருந்தது அப்பாக்களை out of focus லே வைத்திருப்பார்கள்).பள்ளியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் வீட்டிற்கு தெரிவிக்கப்படும் , அவை அனைத்தையும் புரிந்துக்கொள்ளும் ஆளாக அந்த சிறுமியின் அன்னையிருந்தாள்.

அந்த பள்ளியில் தினமும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உண்பது வழக்கம்.முதல்வரும் தான்.முதல்வர் அவர்களைப் பார்த்து  "கடலிருந்து கொஞ்சம் , மலையிலிருந்து கொஞ்சம்" எடுத்து வந்தீர்களா ? என்று கேட்பார்.ஒவ்வொருவரும் தங்களது உணவை பற்றி சொல்ல வேண்டும்.அது கடலிலிருந்து வந்ததா (அதாவது மீன் போன்ற கடல் உணவுகள்) இல்லை மலையிலிருந்து வந்த்தா(கிழங்கு வகைகள்) என்று சொல்ல வேண்டும்.குழந்தைகளுக்கு உணவை தெரியாத பட்சத்தில் முதல்வர் அந்த உணவைப் பற்றியும்,செய்த முறைப் பற்றியும் விவரிப்பார்.இது மாணவர்களுக்கு உணவின் மீது ஒரு ஈடுப்பாட்டினை உருவாக்கியது.உணவிற்கு பிறகு யார் முதல்வர் முதுகில் உப்பு மூட்டை ஏறுவதென பெரிய போட்டி இருக்குமாம்..இது ஒரு பக்கமிருக்க ; கதையின் மற்றொரு  இடத்தில் , மாணவன் ஒருவன் பெற்றோர்களின் கட்டாயத்தால்  பள்ளியை விட்டு வெளியேறுகிறான், அப்போ அவன் அந்த பள்ளியின் முதல்வர் முதுகில் ஏறிக்கொண்டு பெற்றோரிடம் செல்ல‌ மறுக்கிறான்.

அதை பற்றி படித்த போது எனக்கு என் முதல்வர் என் முதுகை உரித்த கதை தான் ஞாபகம் வந்தது..(எப்படி முதுகை link கொடுத்து ரெண்டு கதையையும் sync பண்ணோம் பாத்தீங்கள‌..).அதன் விளைவு தான் இந்த போஸ்ட்...

ஒவ்வொரு பெற்றோரும் , ஆசிரியரும் படிக்க வேண்டிய புத்தகம் கண்டிப்பா படிங்க..அந்த சிறுமியின் பார்வையில் கதை நகரும் போது நமக்கும் பள்ளியின்  நிகழ்வுகள் ஞாபகத்தில் வரும்.

இதை படித்த அந்த பள்ளியில் உடனே அடிமிஷன் கிடைக்குமானு கேட்காதீங்க...அந்த பள்ளி நமது நாட்டிலுமில்லை,நமது காலத்திலுமில்லை...ஜப்பானில் இரண்டாம் உலக யுத்தம் நடந்த போது அங்கிருந்த ஓர் பள்ளி அது...

இந்த புத்தகத்தை படித்த பிறகு எனக்கு ஏனோ taree zameen par பார்க்க தோனியது , தங்க மீன்கள் trailer பாக்கவும் வாய்ப்பு கிடைத்தது.இரண்டிலும் common ஆக ஒரு  காட்சி இருந்தது .பள்ளி புத்தகத்தை அதீதமான வெறுப்பில் தூக்கி எறிவது போலவும்...தூக்கி எறிந்ததும் ஓர் முகமலர்ச்சி அடைவது போலவும் இருக்கும்...செம க்ளாஸா இருக்கும்...

Pdf in tamil : http://blog.balabharathi.net/wp-content/uploads/2012/10/totto-tamil.pdf
pdf in English : http://www.arvindguptatoys.com/arvindgupta/Tottochan.pdf
About Author : http://en.wikipedia.org/wiki/Tetsuko_Kuroyanagi

Thursday, July 11, 2013

தத்கல்

வேகம்,விவேகம் யாவும் தோற்றது
உன் முன்னால்....
3 பேர் கொண்ட குழு
ஒவ்வொருவரும் 2-3 லாகின்
விவரங்களை தானாக நிரப்பும் வகையில் ஏற்பாடு என‌
உனக்கு ஆட்டம் காட்ட‌
போடாத திட்டங்கள் இல்லை

பயபக்தியுடனும் , பசியுடனும்
1மணி நேரமாக  உன் முன்...
வேண்டுகிறேன் உன்னை,
இனி இப்படி உனை கேட்க மாட்டேன்
இம்முறை மட்டும்...
இந்த பக்தன் மீது கருணை கொள்...
உனக்காக வெள்ளி அன்று
முகப்புத்தகம்  துறந்து
விரதம் இருப்பேன்

இப்படியே நான் புலம்ப
நூற்று சொச்சத்திலிருந்த தத்கல்
ஏதேதோ காரணம் சொல்லி
என் முயற்சிகளை முறித்து
பூஜியத்திற்கு வந்தது..

Thursday, July 4, 2013

யார் நீ..?

இரை தேடும் உன்னை
சிறை பிடிக்க எவருக்கும் துணிவில்லை

என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்...

என் மீதும் நீ உண்ணிப் போல் ஒட்டிக் கொண்டதை
நான் அறியாமல் ஒன்றுமில்லை
உனை எதிர்க்க துணிவின்றி
தினம் உனை தவிர்க்கவே முயல்கிறேன்

தேசியம்,மொழி,கல்வி என வெவ்வேறு அடையாளங்கள்
எனக்கு..நீயும் தான் அதில் உண்டு.
உனை தவிர,ஒவ்வொன்றையும்
விரும்பியே ஏற்றுக் கொண்டேன் .

என்ன செய்தாய் என உனக்கு இவ்வளவு கர்வம்....

சிறுவன் தலையில் செருப்பு வைத்தாய்
சிலரது முதுகெலும்பை வளைத்தாய்
பேரூந்து கண்ணாடிகளை கற்களுக்கு பரிசளித்தாய்
விபத்தை கண்டு அஞ்சாத‌
ஓட்டுநரையும் உன் உருவும் காட்டி கவசம் அணிய செய்தாய்
மக்களை பயணத்திலும் பயம் கொள்ள செய்தாய்
வீடுகளை எரித்தாய்
காடுகளை அழித்தாய்
வரிபணத்தை கரியாக்கினாய்

இத்தனை பாவத்திலும் அடங்கவில்லையா உன் தாகம்

சமுதாய நன்மை போராட்டங்களை கண்டால்
புறமுதுகை காட்டி ஓடும் நீ...
அப்பாவிகள் அகப்பட்டால்
ஏன் இப்படி
வருஞ்சிக் கட்டிக்கொண்டு வருகிறாய்....

ஆளவும் அடிப்பணியவும் தான்
கற்று தருவாயோ..?
சமமாக வாழ்ந்தால்
உனக்கு அரிப்பு எடுத்து விடும்

 "அவன் நம்மாளா"
என்ற வார்த்தைகளை உதிர்த்துவிடுவாய்..
உடனே சமூகத்தை பிரித்துவிடுவாய்

உனை வாழ வைக்கும் வார்த்தைகள்..
உனக்கு போதை தரும் வார்த்தைகள்....
இவை தானே....

இதை கொண்டு தான் என் நட்பில் கூட‌
சிறு விரிசல் போட துணிந்தாய்...
நானும் கண்டும் காணாது விட்டுவிட்டேன்..

இருந்தும் உன் போதை அடங்கவில்லை

என் வாழ்கை துனையை தேர்வு செய்ய
நீயே நிற்கிறாய் முன்னே...
காதல் கீதல் செய்யாமலிருந்ததால்..
நானோ இன்று உயிர் பிழைத்தேன்...

இல்லையெனில் எனது புகைப்படத்துடன் வந்திருக்கும்
ஓர் தற்கொலை செய்தி...............

19 வயதில் காதல்..அது காதலில்லை ... காமம்..இது தானே உன் வாதம்..

சரி ..

திருமண வயதில் காதலித்தால் நீ முன் நின்று நடத்திருப்பாயோ..?

அதை விடு...

இன்று இல்லாத அந்த இரு உயிர்களுக்கு தான் பதில் என்ன...

உனக்கு உசிரெல்லாம்
சலூனில் வெட்டும் மசிரோ ..?

இரு மரணத்திற்கு காரணம்

தற்கொலை எனில் கோழகளை நீ உருவாக்கினாய்
கொலை எனில் தீவிரவாதிகளை நீ உருவாக்கினாய்

இது தான் நீ....சாதி என்ற நீ....

உன் பலம் யாதென அறிந்துக் கொண்டேன்..
தலைமுறை தாவல் தான் உன் பலம்...
என்னுடன் நீ இருந்தாலும்
எனது அடுத்த தலைமுறைக்கு உனை மறைப்பேன்
உன் பலம் குறைப்பேன்....

உன் வேட்டையில்
இரைகள் சிந்திய இரத்த கறைகளை
என் மொழிக் கொண்டு துடைக்கிறேன்
என் ஆதங்கம்,கோபம்,சோகம் யாவையும்
என் எழுத்துக் கொண்டு குறைக்கிறேன்
வேறு வழியின்றி..!

Wednesday, July 3, 2013

கனவில் மரணம்

இந்த சினிமால தான் குடும்பத்துல யாரு செத்தாலும் அடுத்த செகண்ட்ல டூயட் பாட முடியும்..ஆனா நிஜ வாழ்கையில கனவுல ஏதாச்சும் மரணம் சம்மந்தமா வந்தால் கூட அன்றைக்கு கொஞ்சம் disturbed  ஆ இருக்கும்...கொஞ்ச நேரத்திற்காவது...அப்படி தான் ஒரு நாள்....


அலுவலக தேனீர் இடைவேளையின் போது ...புதிதாக நியமித்த coffe day தானியங்கி இயந்திரத்தில் விஜய் காலையிலிருந்து 10 வது முறையாக அங்கு காபி பிடித்துக்கொண்டிருந்தான்...

என்ன தம்பி , "எத்தனாவது கப்.." என்று கேட்க...

"இன்னைக்கு கம்மி தான் ணா..இந்த CCTV camera recording மட்டும் யாராச்சும் பார்த்தாங்க...என்னை இனிமே இந்த காபி மெஷின் பக்கமே விடமாட்டாங்க ணா.." ..என்றான் என்னிடம்..

அவன் எதிர்ப்பார்த்த reaction ஏதும் நான் கொடுக்காததால்..."என்ன ணா வீட்ல அண்ணிக்கூட சண்டையா..ரொம்ப டல்லா இருக்கீங்க..?"..என்றான்.

"ஆமாம் தம்பி ..காலைல ஒரு கனவு கண்டேன்..அதுனால தான் பிரச்சனையே"..என்று என கனவால் வந்த சண்டையை பற்றி விவரிக்க ஆரம்பித்தேன்...


தஞ்சை பெரிய ஆஸ்பத்திரிக்கு நானும் என் நண்பன் சுந்தரும் வண்டியில் செல்ல....அங்கு என் தெரு மக்கள் ராஜி அக்காவும் , அவர்களுது அம்மாவும்,சுரேஸ் அம்மாவும் மற்றும் சிலர் அமர்ந்திருக்க ..சற்றே தூரத்தில் எனது பாட்டியும் அமர்ந்திருந்தார்கள்.மாலை பொழுது போலும் , வெளிச்சம் குறைவாகவே இருந்தது.யாருக்கோ உடல் நிலை சரியில்லை,அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.நான் விசாரிக்க வந்ததை நினைத்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.இவர்களுக்கு சுந்தர் அறிமுகமில்லாததால் அவன் வாசலில் காத்திருந்தான்.நான் சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு கிளம்பினேன்.அப்போது , ஏதோ அவர்களுக்கு பணப் பிரச்சனை.என்னிடம் தயங்கி தயங்கி பணம் கேட்க முயன்றனர்.அவர்கள‌து தயக்கம் எனக்கு புரிந்தது.அப்பொழுது எனது பர்ஸில் 1000ரூ இருந்தது.இது தான் என்னிடம் இருக்கு என்று அவர்களிடம் நீட்ட , அவர்களும்  பண முடைக்கு ஏதோ காரணம் சொல்லிவிட்டு என்னிடமிருந்து வாங்கி கொண்டனர்.அப்பொழுது அங்கிருந்த ஒருவன் (இவர்களுக்கு தெரிந்தவன் போல) .... "பணம் கொடுத்ததுக்கு ஏதாச்சும் ரசீது மாதிரி வாங்கிக்குங்க" என்று சொன்னான்..

அவனது பேச்சுக்கு மற்றவர்களும் ஆமாம் சாமி போட , எனக்கு ஏனோ தயக்கமாகவே இருந்தது.எனக்கு தெரிஞ்சவங்க தான் என்று நான் சொல்ல முயன்றும் அதனை யாருமே பொருட்படுத்தேவேயில்லை.ஒரு வெள்ளை தாளில்  எழுதி வாங்கிக் கொண்டனர்.நான் கிளம்பி வெளியே வந்துவிட்டேன்.சுந்தரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது.."டேய் எனக்கு ஏதோ doubt ஆ இருக்கு டா"என்றேன்.அப்போது அந்த ஆசாமியும் அங்கு வந்தான்.அந்த இடம் ஆஸ்பத்திரியாக இல்லாமல் ஏதோ பஜார் போல தோற்றம் அளித்தது.சற்று பகல் போல வெளிச்சம் இருந்தது.அந்த ஆசாமியை நிறுத்தி , அந்த ரசிதை திருப்பிக் கேட்டேன்.அவன் முதலில் ஏதேதோ மழுப்பினான்.எங்களுக்குள் வாக்குவாதம் சூடேறியது."யோவ் நீ வட்டிக்கு என்கிட்ட வாங்கி அந்த அம்மாவுக்கு கொடுத்திருக்க ..ஒழுங்கா வட்டியோட பணத்தை கொடுத்திட்டு இந்த பேப்பரை வாங்கிக்கோ"என்று இரண்டு மூன்று கெட்ட வார்த்தைகளுடனும் அடியாட்களுடனும் சொன்னான்.

அருகில் சுந்தர் இருக்கும் தைரியத்தில்  நான் கை ஓங்கிவிட்டேன்....சுந்தரும் களத்தில் இற‌ங்கிவிட்டான்..சிங்கம் மீசையோடு என்னை பின்னால் அடிக்க வந்த ஒருவனை பலார் என்று அடித்தான்.திடிரென ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர்.ஒருவன் அருவாளுடன் என்னை வெட்ட வர,சுந்தர் அருகிலிருந்த பெரிய டயரை உருட்டிவிட்டு என்னை காப்பாற்றினான்.அரிவாள் வெட்டு அந்த டயருக்கு விழுந்தது.

எங்களால் சிறிது நேரம் தான் தாக்குபிடிக்கு முடிந்தது...சுந்தர் சற்று தூரத்தில் ஒருவனை அடித்துக் கொண்டிருக்க.என்னை ஒருவன் அரிவாளால் வெட்டினான்...

"இதான் நடந்தது ..அப்போ தான் நீ போன் பண்ண" என்று பொறுப்புடன் ஊரிலிருந்து என்னை எழுப்பிவிட்ட மனைவியிடம் நான்  சொல்ல...

"உங்களுக்கு காலையில எழுப்பிவிடறதுக்கு ஒரு ஆளு..அலாரம் வைச்சு எழுந்துருக்க வேண்டியது தானே..இப்படி ஏன் செவ்வாய் கிழமை அதுவுமா சாவு அது இதுனு சொல்லிறீங்க" என்று கோபத்தில் பட்டென போனை வைத்தாள்.

என்று எனது flashback விஜயிடம் சொல்ல..

"அண்ண..உங்க கனவுல பிழை இருக்கு .." என்றான்

"என்னடா சொல்ற..போன தடவை மாதிரி ..இது கனவே இல்லை ...subconscious நு ஏதாச்சும் சொல்ல போறியா?" என்றேன்

"கனவுல நமக்கு சாவே வராது.." என்றான்...

அவன் சொன்ன பிறகு தான் எனக்கு என் கனவின் climax ஞாபகம் வந்தது.அந்த அரிவாள் வெட்டிற்கு பிறகு நான் சுந்தராக மாறினேன்...சுந்தர் கதாபாத்திரத்தில் நான்..நான் இறந்ததிற்காக அழுகிறேன்..அப்பொழுது தான் போன் வந்து என்னை எழுப்பிவிட்டது.

மதனின் மனிதனும் மர்மங்களும் புத்தகத்தில் கனவை எழுந்தவுடன் re-call பண்ணுங்க முடிஞ்சா ஒரு நோட்,பேனா பக்கத்துல வைச்சிக்கிட்டு தூங்குங்க.எழுந்த உடனே எழுதிடுங்கன்னு சொல்லுவார்.சரி நாம யாருகிட்டையாச்சு சொல்லி வைப்போம் என்ற உயரிய நோக்கத்தில் தான் அதை வீட்டில் சொன்னேன்...எதனால் அந்த கடைசி காட்சியை நான் மறந்தேன் என்று தெரியவில்லை.

கனவின் அடிப்படை

சுந்தர் ஊரிலிருந்து வந்திருந்தான் , நானும் ஆவனும் தஞ்சையில் "master check-up" பற்றி விசாரிக்க சில ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தோம்

ராஜி அக்கா , சுரேஸ் அம்மா பற்றி வீட்டில் அம்மா சொல்லி கொண்டிருந்தார்கள்

முதல் நாள் தான் நான் ஏ.டி.ம் யில் 1000 எடுத்திருந்தேன்..


சரி போஸ்ட் ரெடி பண்ணியாச்சு..இதை வைச்சு தான் வீட்ல சமாதானாம் செய்ய முயற்சி பண்ணனும்..ஒரு கனவால எவ்வளவு confusion.

Monday, July 1, 2013

சிங்கள நாச்சியார் கோவில் - பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழரி என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது "ஈழத்து ராணி" என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காக தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார்.அது சில காலம் "சிங்கள நாச்சியார் கோவில்" என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது.நாளடைவில் அதன் பெயர் திரிந்து "சிங்காச்சியார் கோவில்" என்று ஆயிற்று.

என்று கல்கி பொன்னியின் செல்வன் 5ம் பகுதியில் சொல்லுகின்றார்.அவர் சாதரணமாக இதை சொல்லி இருந்தால் கூட எனக்கு ஒன்றும் தோன்றிருக்காது...

"இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் சிங்காச்சியார் கோவில் என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சைக்கு செல்லுகிற‌வர்கள் விசாரித்துத் தெரிந்துக் கொள்ளலாம்."

என்று சொல்லி அந்த பத்தியை முடித்திருக்கிறார்.இந்த வரி நானும் தஞ்சையை சேர்ந்தவன் என்ற முறையில் ஒரு சின்ன உறுத்தலை ஏற்ப‌டுத்தியது...

நான் மும்பையில் இருக்கும் போது படித்ததால்..எனது ஆர்வத்தை சற்று silent mode ல் போட்டிருந்தேன்.பின்னர் பெங்களூர் பக்கம் வந்த பிறகு தான் தஞ்சை செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைத்தது.நானே தேடினேன் என்று சொல்வதை விட , நான் ஊர் சுற்றும் போது கடக்கும் கோயில்களின் பெயர்களை பார்த்துக் கொள்வேன்.அதுவரை கோயில் பெயர்களை படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

அப்பொழுது தான் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே ஒரு கோயிலைப் பார்த்தேன் "செங்கமல நாச்சியார்" கோயில் என்றிருந்தது.அதுவரை நான் மனதில் நினைத்திருந்த கோயில் போல அல்ல அது.சரி எதற்கும் உள்ளே சென்று பார்த்தேன்.கோயில் பூசாரி இல்லாததால் உள்ளே இருந்த சாமியை பார்க்க முடியவில்லை.கோயினுள் கோழி,ஆடு எல்லாம் இருந்தது.நேந்துவிட்டது போல் இருந்தது.ராஜராஜ சோழன் தன் அன்னைப் போல் பாவித்த ஈழத்து ராணி கோயில் இப்படி இருக்காது எனவும் , இந்த கோயில் சமீக காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என என்ணி கிளம்பிவிட்டேன்.

காலம் சிறிது கடந்தது...facebook ல் தஞ்சைக்கென ஒரு க்ரூப் ..அங்கு கேட்டுப்பார்ப்போம் என ஒரு post போட்டேன்.அங்கும் தேவையான பதில்கள் கிடைக்கவில்லை...மீண்டும் 1 வருட காலம் கடந்தது.தஞ்சை க்ரூப்பில் தற்பொழுது பல தரப்பட்ட மக்கள் இருந்தனர்.மீண்டும் பதிவு செய்தேன்.நான் ஏறகனவே பார்த்த கோயில் தான் அது என சில நண்பர்கள் சொல்ல..இல்லை என நானும் மற்றும் சிலரும் சொல்ல...சரி நேரே சென்று பார்ப்பதென முடிவானது.இது போன்ற facebook முடிவுகள் facebook ஓடு முடிந்து விடும்.

அதில் இரு நண்பர்கள் எனது பள்ளி நண்பர்கள் என்பதாலோ என்னவோ இந்த‌ முறை அப்படி முடியவில்லை...தஞ்சைக்கு சென்ற‌ போது நண்பன் ஒருவனை "போய்வருவோமா" என்று  கேட்க உடனே கிளம்பினோம்.மற்றொரு நண்ப‌னையும் பிடித்துக் கொண்டு மூவரும் சென்றோம்...


கோயில் உள்ளே சென்றதும் , பூசாரி எங்களை பார்த்ததும் உள்ளே வந்து சாமிக்கு தீபம் காட்டினார்.சிறிய அம்மன் சிலைப் போல இருந்தது.கால மாற்றத்தில் கோயில் தனது அடையாளங்களை மாற்றிக் கொண்டது போலும்.சோழன் தனது அன்னைக்கு நிகரான ஒருவளுக்கு கட்டிய கோயில் என்று சொல்லும் எந்தவித அடையாளமும் இல்லை.தீபத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டிருந்தோம்...அப்போது நண்பன்.."கோயிலை பற்றி தெரிஞ்சக்கனும்னா யாருக்கிட கேட்கனும்"என்று பூசாரியிடம் கேட்க...அவரோ பொன்னியின் செல்வன்ல ஒரு குறிப்பு வரும் என பட்டென்று எனது சந்தேகத்தை தீர்த்தார்...

Click to see in Google maps

பிறகு நண்பர்களுடன் சில நேரம் கதைகள்  பேசிவிட்டு வீட்டிற்கு வந்தேன்...எனது அன்னையிட கோயிலை பற்றி கேட்க வேண்டும் என்று தோன்றியது..காரணம் அம்மா படித்தது குந்தவை கல்லூரியில் தான்...ஆனால் அவர்களுக்கும் தெரியவில்லை.

கால மாற்றத்தில் எதையெல்லாம் மறந்திவிடுகிறோம்.நமது அடையாளங்கள் இவை.அதனை தெரிந்துக் கொண்டதிலும்,அதனை மற்றவர்களோடு பகிரும் போது ஒரு வித மகிழ்ச்சி , ராஜராஜ சோழன் இந்த கோயிலை கட்டி முடித்ததும் அவன் கொண்ட மகிழ்ச்சி.இரண்டும் ஒன்றோ..?

குறிப்பு : இதிலுள்ள தகவல்கள் ஏதேனும் தவறாக இருப்பின் தயவு செய்து தெரிவிக்கவும்


Thursday, June 27, 2013

கொடுத்தேன்

8ரூ குளிர்பாணத்திற்கு 10ரூ கொடுத்தேன்
15ரூ தண்ணி பாட்டிலுக்கு 20ரூ கொடுத்தேன்
கறுவேப்பிலைக்கு கூட 3ரூ கொடுத்தேன்
1கரண்டி மாவில் செய்த‌ தோசைக்கு 40ரூ கொடுத்தேன்
3மணி நேர சினிமாவுக்கு 300ரூ கொடுத்தேன்
பைக்கில் சென்ற கொடுமைக்கு 50ரூ கொடுத்தேன்
வாடகை வீட்டிற்கு சில‌ஆயிரம்  கொடுத்தேன்
அது இது என வீடு கட்டும் பில்டருக்கு எது வென புரியாமல் பல ஆயிரங்கள் கொடுத்தேன்


கொடுத்தேன் கொடுத்தேன் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன்...

சில்லறை முதல் ஆயிரங்கள் வரை....

உழைத்து நான் நிரப்பும் பையில்
ஓட்டைகள் தான் எத்தனை...

ஒட்டைகளை அடைக்காமல் இன்னும்
பையை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கிறேன்

Friday, June 14, 2013

கனவில் கலர் வருமா

நண்பர் மதி எழுதிய முதல் போணி நூலில் "கனவில் கலர் வருமா" என்று ஒரு சிறுகதை....ஒரு அறிவியல் புத்தகத்தில் (http://en.wikipedia.org/wiki/The_Interpretation_of_Dreams) கனவில் வண்ணங்கள் வராது என்று படிக்கிறார்....அதனை பற்றிய சிந்தனைகள் அவர் மனதில் பதிந்துவிட ...சில நாட்களுக்கு பிறகு அவர் கனவில் , அவருக்கு பிடித்த பெண்  ஒருத்தி கனவில் வருகிறாள்..அவரது அம்மாவிடம் ,இவள் தான் என் காதலி என்று அறிமுகம் செய்கிறார்...கனவு கலைகிறது....கனவில் வந்த அம்மாவின் நெற்றி குங்குமம்,காதலியின் பச்சை சுடிதார் என்ற வண்ணங்கள் யாவும் அவர் ஞாபகத்தில் வர..ஒரு வேளை கலர் (பெண்) வந்தால் கனவில் கலர் வருமோ ...அதோடு வண்ணங்கள் பற்றின நினைப்பு தான் அவ்வாறு செய்ததோ  என்று முடிக்கிறார்...

இதனை படித்ததிலிருந்து..எனக்கு ஒரு குற்ற உணர்வு..கனவில்லா தூக்கமே எனக்கு மிகவும் குறைவு..அதுவும் வகுப்பில் உறங்கும் பழக்கம் 11ம் வகுப்பில் துவங்கியது..அந்த‌ பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து எனது கல்லூரியில் "வகுப்பில் உறங்கும் கலை"க்கு தனியாக பட்டம் பெற்றிருக்கிறேன்...வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்த துவங்கிய 5வது நிமிடத்தில் உறங்கி ..அதே வாத்தியார் என் கனவில் வந்து நடத்திய‌ பாடத்தினை நோட்ஸ் எடுத்துள்ளேன்....இந்த சாதனையை கின்னஸ் ரிகார்டில் பதிய முடியமா என்று தெரியவில்லை ஆனால் இது போன்று கனவு காண்பதில் பல சாதனைகள் செய்த எனக்கு..கனவில் கலர் வருமா?என்ற‌ கேள்வி ஓர் பெரிய உறுத்தலாகவே இருந்தது...

கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு பிறகு இந்த‌ கேள்விக்கு விடையாக ஓர் கனவு வந்தது இரு தினங்களுக்கு முன்பு....

அன்று...காலையில் 6.30க்கு எழுந்தேன்..சே..6.30 தான் ஆகுது ஒரு 7 மணி வரைக்கும் தூங்கலாம் என்று மீண்டும் உறங்க....கனவில்....

தஞ்சையில் என் வீட்டு பலா மரத்தில் ஏறி , ஓர் பலாப் பழத்தை பறிக்கிறேன்.அப்பொழுது அருகிலிருந்த மற்றொரு பழம் கீழே விழுந்து உடைகிறது..அதன் சுளைகள் சில‌ மண்ணில் விழுகிறது...சரி அதை கழுவிக்கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்கிறேன்..வீட்டிற்கு வந்து நான் பறித்த பலாவை அறுக்கிறேன்...சுளைகள் அனைத்தும் பச்சை நிறத்தில் கொய்யா வடிவத்தில் இருந்தது..என்னடா ஆச்சரியமா இருக்கு என்று அருகிலிருந்த அம்மாவிடம் கேட்கிறேன்..அம்மா எந்தவித ஆச்சரியமும் இல்லாமல் ,"சாப்பிடு நல்லா இருக்கும்" என்கிறாள்.அதன் தோல் கொஞ்சம் கடினமாக இருப்பதை உணர்கிறேன்..."அம்மா, 50 சுளை எடுத்து வை..ஊருக்கு எடுத்திட்டு போறேன்.."என்று சொல்கிறேன்....

எழுகிறேன்...கனவின் பிம்பங்கள் சிதற....அதற்குள் அனைத்தையும் நினைவுக்குள் கொண்டு வந்தேன்...

கனவில் கீழே விழுந்த மஞ்சள்  நிற‌ பலா சுளைகளும் ,விழுந்தபோது சுளைக‌ளில் ஒட்டிய மண்ணும் , ஆச்சரியம் தந்த பச்சை நிற சுளைகளும் உறுதி செய்தது கனவில் கலர் வருமென்று....கலா மட்டுமில்லை பலா வந்தால் கூட கனவுல கலர் வரும் என்று எதுகை மோனையா ஒரு facebook status யோசிக்க...

சரி...என் கனவின் அடிப்படையாக இருந்தது என்ன என்று சற்று எனது யோசனையை மாற்றினேன்

1.உற‌ங்குவதற்கு முன்  , எஸ்.ரா வின் "எனக்கு ஏன் கனவு வருது" என்ற சிறுவர் நூல் ஒன்றை படித்தேன்
2.ஊரில் என் வீட்டில் பலா காய்த்து, அப்பா அதனை அறுத்திருந்தார்
3.அடுத்த முறை அலுவலக நண்பர்களுக்கு பலா சுளை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது
4.முதல் நாள் வீட்டில் சமைக்கும் போது செளசெள சாம்பார் செய்கிறேன்..அதற்கு குக்கரில் எத்தனை விசில் வைக்க வேண்டும் என்று தெரியவில்லை..1 விசிலில் நிறுத்தி எடுக்க..அதனை தொட்டு பார்த்தேன்...கொஞ்சம் கடினமாக இருந்தது
5.சென்ற முறை ஊருக்கு சென்ற போது , என் மகளுக்கு கொய்யா பழம் பறித்து விளையாட தந்தேன்...

இதை பற்றி அலுவலக நண்பன் ஒருவனிடம் தேனீர் இடைவேளையில் சொல்ல..

"அண்ண,நீங்க கண்டது கனவேயில்லை அது உங்க subconscious mind..."என்று அவன் எனக்கு ஏதோ பதில் சொல்ல...

"தம்பி ..இத்தனை வருசமா கனவு காண்றோம் எங்களுக்கு தெரியாதா..வா..ரெண்டு பேரும் ரொம்ப நேரமா மொக்கை போட்டது போதும்..போய் பொழ‌ப்ப பாப்போம் வா.."என்று கிளம்ப...

எனக்குள் மீண்டும் ஓர் புது கேள்வி எழும்பியது...அப்போ நான் கண்டது கனவேயில்லையா..?

Wednesday, May 22, 2013

என் தனிமை


"மணியாச்சு கிளம்பினீயா இல்லையா"..என்று வீட்டுக்குள் நுழைந்தேன் சாக்ஸை கூட கழட்டாமல்...

"உங்களுக்கென்ன ஆபிஸ்லேந்து வந்தவுடனே கிளம்பு கிளம்புன்னு  சொல்வீங்க.இந்த குட்டீஸை வெச்சுகிட்டு என்னால எதுவுமே எடுத்து வைக்க முடியல.கொஞ்ச நேரம் இவளை பாத்துகோங்க  நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன். "என்றாள் என் வீட்டு எஜமானி...

"சரி சரி..எடுத்து வை"....என்றதோடு ..சிறிது நேரத்தில் எடுத்து வைக்க வேண்டிய அனைத்தையும் சரி பார்த்துவிட்டு ரோலிங் பேகோடு கிளம்பினோம்.

ரயிலடிக்கு இரண்டு பேருந்துகள் மாறி போக வேண்டும்.பேருந்திற்காக காத்திருந்தோம்.ஏனோ பெங்களூரில் ஏ.சி ப‌ஸ் தான் அதிகம் இருக்கிறது.நாங்களும் இரண்டு பேருந்தை விட்டு பார்த்தோம் சாதா பேருந்து வருவதாக தெரியவில்லை.

"ம்ஹூம் ..இதல்லாம் சரியா வராது போல .. பேசாம ஏ.சி பஸ்லேயே போயிடலாம்" என்றாள்..

"இதை தான் நான் அப்பவே சொன்னேன்..எங்க கேட்ட..." என்றேன் அவளிடம் பொய் கோபத்துடன்..அடுத்து வந்த ஏ.சி பேருந்தில் ஏறினோம்...

நகர பேருந்து ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது ஏதாவது சொல்லி தர தவறுவதில்லை....என் ஒரு வயது அழகிய தேவதை இப்பொழுது தான் வெளி ஆட்களை கண்டாள் சிரிக்கிறாள்.என் மனைவியும்,குழந்தையும் அமர நான் அவர்கள் அருகில் நின்று பையை காலால் பேலன்ஸ் செய்து கொண்டுருந்தேன்.என் மகள் அருகில் அமர்ந்த ஒருவரின் முகத்தினை பார்த்து அழகாக சிரித்தாள்.அவரோ அதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.அது என்னவோ தெரியவில்லை , சிறுப்பிள்ளைக்களுக்கு தன்னை கண்டுகொள்ளாதவரை தான் அதிகம் பிடிக்கும் போலிருக்கிறது.அவரை தனது கையால் சீண்டி அழைக்கிறாள்.அப்பொழுதும் அந்த டிப்டாப் ஆசாமி கண்டுகொள்ளவேயில்லை.அவளும் அந்த பேருந்தில் தன்னை சுற்றி இருக்கும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்ச்சித்து முயற்ச்சித்து தோற்றே போகிறாள்.சிறுப்பிள்ளையின் சிரிப்பில் இல்லாதது அப்படி என்னதான் அந்த ஸ்மார்ட் போனில் இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.

சென்ற முறையும் இப்படி தான் ; காலை வேலை ஊரிலிருந்து ரயில் விட்டிறங்கி வீடு திரும்பி கொண்டிருந்தோம் ஏசி பஸ்ஸில்.அதிகாலையிலே சிரலாக்(cerelac) ஊட்டியிருந்தோம்.தொடர் பயணத்தினால் செறிக்கவில்லை போலும் ;பேருந்தில்  என் மீது முழுவதுமாக வாந்தி எடுக்க , உதவிக்கு ஒருவர் கூட வரவில்லை.நானும் என் மனைவியும் தட்டுத் தடுமாறி அனைத்தையும் சரி செய்தோம்.அருகில் இருப்போரிடம்"ஏன்டா இப்படி இருக்கீங்க?"என்று கேட்க வேண்டுமென்று தோனியது.அன்று நடத்துநர் மட்டும் ஏசி பக்கத்தில் அமர வைக்காதீர்கள்;குழந்தைக்கு ஒத்துக்காது என்று கன்னடத்தில் சொல்ல.கன்னடத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாத போதும் அதை புரிந்துக்கொண்டேன். அவர் சொன்னவுடன் ... ஒரு ஆளாச்சும் கண்டுக்கொள்ள‌ இருக்காரே என்று சற்றே சமாதானம் அடைந்தேன்.இவ்வாறு சென்ற முறை நடந்தவை என் மனதிற்குள் ஓட அதற்குள் நாங்கள் இறங்கும் இடம் வந்தது.இறங்கி அடுத்த பேருந்திற்காக காத்திருந்தோம்.அந்த இடத்திற்கு சாதா பேருந்து மட்டும் தான் செல்லும்.சற்று நேரத்தில் வந்ததும் ஏறினோம்.இங்கு என் தேவதைக்கு தோல்வியே இல்லை.பொருளாதார தகுதிக்கும் ; யதார்த்த அன்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற எனது நம்பிக்கை ஒரு கேள்விகுறியானது.

இறுதியாக ரயிலடிக்கு வந்து சேர்ந்தோம்.இன்னும் சிறிது தாமதமாக கிளம்பியிருக்கலாம் என்று எனது நேரக் கனிப்பினை குறை சொல்லிக்கொண்டிருந்தாள் என் மனைவி.போக்குவரத்து நெரிசலில் இதுவரை சிக்காத‌ அவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல்.அவள் பேசுவதை கேட்டும் கேளாதவாறு ஆண்கள் பொதுவாக கையாளும் யுக்தியை பயண்படுத்திக் கொண்டிருந்தேன்.

சின்ன ஸ்டேஷன் என்பதால்,என் குட்டி தேவதை தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தாள்.அனைவரும் இவளது சேட்டையை ரசித்தவாறு இருந்தனர்."ஊருக்கு போய் முதல்ல சுத்தி போடனும் " என்ற என் மனைவியின் மனக்குரல் எனக்கு கேட்க...ஒரு மெல்லிய புன்னகை சிந்தினேன்.திடீர் புன்னகைக்கு காரணம் என்னவென்று அவள் கண் அசைவால் எனைக்கேட்க.நான் ஒன்றுமில்லை என்று தலை அசைத்தேன்.

நானும் என் மகளுடன் சிறிது நேரம் நடை பழக;திடிரென பசியில் அவள் சினுங்கினாள்,அவள் அன்னை பால் ஆற்றும் வரை நான் விளையாட்டு காட்ட அவளை தூக்கி முதல் முறையாக நிலவை காட்டி  "நிலா பாரு" என்று அவள் கவனத்தை திசை திருப்பினேன். என் ஒரு வயது நிலவு;நிலவை கண்ட அதிசியத்தில் கையை உயர்த்தி "ஊஊ..." என்று அர்த்தமில்லா சொற்களை சிந்த...எங்களுக்கு அவளது செய்கைகள் அதிசயமாக இருந்தது.அன்று முதல் "நிலா எங்கே?" என்று கேட்டால் உடனே வானத்தை பார்ப்பாள்.இது போல் அவள் செய்யும் ஒவ்வொன்றையும் அருகில் இருந்து ரசித்திட வேண்டும் என்று என் மனதில் தோன்றிய மறுகனம் இப்பொழுது ஊருக்கு செல்வதே அவளை இரண்டு வாரத்திற்கு அவளது  தாத்தா பாட்டியிடம் விட்டு வருவதற்காக தான் என்பதை உணர்ந்தேன்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் பணி புரிகிறோம்,அவள் தஞ்சையில் , நான் பெங்களூரில்.அவள் இதுவரை விடுப்பில் இருந்தாள்.இன்னும் ஓரிறு  மாதங்களில் பணியில் சேர வேண்டும்.பெங்களூருக்கு பணி இடம் மாற்றம் கிடைக்கும் வரை,இருவரும் இங்கும் அங்குமாக பயணம் செய்ய நேரிடும்.ஆதலால் எங்களது பெற்றோர்களிடம்  இருக்கும் அளவுக்கு என் மகளை பழக்கம் செய்ய வேண்டுமென்று , ஊரில் விட்டுவர எண்ணினோம்.அதற்காகத் தான் இந்த இரு வார ஒத்திகை.இதை பற்றி மேலும் சிந்திக்க ;அதற்குள் ரயில் வந்தது....

"நல்ல ஆட்டம் போட்டிருக்கா சீக்கிரம் தூங்கிடுவா" என்ற என்னவளின் கனிப்பை பொய் ஆக்கினாள் என் மகள்.சேலையில் தொட்டில் கட்டி , செல்போனில் பாட்டு போட்டு;விளக்குகளை சீக்கிரம் அனைத்து என்று நாங்கள் ஏதேதோ செய்ய ; அவளோ இருட்டில் கூட விளையாடிக் கொண்டிருந்தாள்.

அருகிலிருந்த ஒருவர்.."குழந்தைங்களை நாம‌ வளர்க்கிறதுல தாங்க இருக்கு..நீங்க தினமும் லேட்டா வந்து விளையாடி பழக்கப் படுத்தியிருப்பீங்க.அதனாலதான் தூங்க மாட்டேங்குது.நீங்க தினமும் சீக்கிரமே லைட்டைலாம் அனைச்சிட்டு தூங்கப் போட்டு பழக்குங்க.." என்று எனக்கு அறிவுரை செய்ய....நான் ஏதும் சொல்லாமல்.."எங்க தூங்க முடியாம போய்விடுமோ.." என்று அவர் கண்களில் தெரிந்த பயத்தினை பார்த்துக்கொண்டிருந்தேன்.என்னைப்போல் இரண்டு மூன்று அப்பாக்கள் கதவருகே உலாவ.நானும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டேன்.அனைவரும் பிள்ளைகளின் பெருமைகளை  ஆசை தீர பேசி தீர்த்தோம்.அப்படி இப்படி என 1 மணியானது அவள் உறங்க.கலைப்போடு இருந்த போதும் அவ்வெப்போது எழுந்து பார்த்துகொண்டே  உறங்கினேன்.ரயில் சற்றே தாமதமாக தஞ்சை வந்து சேர்ந்தது.

அன்று மாலை ; நெருங்கிய உறவனரின் திருமண அழைப்பு;முதல் நாள் திருமணத்திற்கு செல்லாததால் சீக்கிரமே சென்றுவிட்டோம்.திருமண அழைப்பு முடிந்ததும் எனது மாமாவும் அத்தையும் எனது மகளை அழைத்து போக திட்டமிட்டிருந்தனர்.நான் பந்தியில் பறிமாரிக் கொண்டிருந்த வேலையில் ; அவர்கள் எனது மகளை அழைத்துச் சென்றிருந்தனர்.எனது மனைவியோ பிரிவின் வலியை தாளாமல் கண்கள் களங்க அமர்ந்திருக்கிறாள்.அனைவரும் சுற்றி இருந்த போதும் யாரும் கவனிக்கவில்லை.நான் யதார்த்தமாக அங்கு செல்ல ; என்னை கண்டவுடன் அடை மழையென அழத் துவங்கினாள்....அனைவரும் ஒன்று கூடிவிட்டனர்.ஒவ்வொருவிடமும் நிலைமையை எடுத்துச்சொல்ல‌ எனக்கு அறிவுரைகள் வந்தவண்ணமிருந்தது.

"இதோ பத்து நிமிஷம்.... உங்க வீடு வந்துடும் ஏன் இப்படி அழற""என்று ஆறுதல் செய்து வண்டியில் அழைத்து சென்றேன்..கொஞ்ச தூரத்திலே தொடர் செல் அழைப்பு.நிறுத்தி பேச;"பாப்பா ரொம்ப அழுவுது சீக்கிரம் வாங்க"என்றார் மாமா.ரயில் பயணத்தின் கலைப்பு;இடம் மாற்றம்;பல கைகள் தூக்கியது ; என பல்வேறு சிற‌மங்களால் அவள் அழுதிருக்கலாம்.நாங்கள் விரைந்து சென்றோம்.எங்களை கண்டவுடன் சிறிது அமைதியானாள்.இங்கும் நிலவினை காட்டித்தான் அவள் அழுகையை நிறுத்தினேன்.மறுநாள்.....

இரண்டு வாரத்தில் பணியில் திரும்ப சேருவதே சரி என்று ஓர் திடிர் முடிவை என் மனைவி எடுக்க;தாயும் சேயும் ஊரிலே தங்க நான் மட்டும் பெங்களூர் திரும்புவதாக முடிவாயிற்று.இப்பொழுது என் மனம் கலங்க துவங்கியது.அவள் வேலைக்கு சேர்ந்த பிறகு நாங்கள் பிரியத்தான் வேண்டும்.ஆனால் அதனை நான் திடிரென எவ்வாறு எதிர்கொள்வது என்று அறியாது தடுமாறினேன்.யாரிடமும் காட்டிக் கொள்ளாமல்.

ஆணிற்கு பிரிவுகளும் , தனிமையும் சகஜமென்றும் ; அது புருஷ லட்சணமாகவும் கருதப்படும் சமூகத்தில்;நான் அதனை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறேன்.எனது தனிமை பற்றின கவலை மற்றவர்களால் உணவு பூர்வமாக மட்டும் கருதப்படுகிறதே தவிற உணர்வுப்பூர்வமாக அது கறுதப்படுவதேயில்லை.வெளிநாடுகளில் பிள்ளையை விட்டுப் பிரிந்து தனியே வாழ்போரை எடுத்துகாட்டி ஆறுதல் சொல்வோரிடம்.....ஆணிற்கும்,பெண்ணிற்கும் பிள்ளை விட்டு பிரியும் வலி ஒன்றுதான்;பெண் அழ தெரிந்தவள் ; ஆண் அழ தெரியாதவன் என்பதே ஒரே வித்தியாசம் என்று நினைத்ததை சொல்லாமல் எனக்கு இதெல்லாம் பிரச்சனை இல்லையென்று ஒரு பொய்யான முகமூடியை அணிந்து கொண்டேன்.வெறும் மெளனத்துடன் இரவு ரயில் ஏறி சற்று என் சுற்றம் உணரும் போது;என் அருகில் மகனை ரயில் ஏற்றிவிட வந்த தந்தை ;அவனிடம் "தம்பி இப்படி ஏன்யா தனியா கஷ்டப்பட்ற நீ உம் நு ஒரு வார்த்தை சொல்லு உடனே உனக்கு பொண்ணுப் பாத்துடலாம்" என்றார்...

எனக்கு என் ப்ளாஷ்பேக் ஞாபகம் வந்தது......

Friday, February 22, 2013

புத்தகம் : ஸ்ரீரங்கத்து தேவதைகள்...


புத்தகம் : ஸ்ரீரங்கத்து தேவதைகள்...

ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 75 [14 கதைகள்]
ஒரு வரியில் : சுஜாதாவின் ஸ்ரீரங்கத்தின் வாழ்வை மையமாக கொண்ட‌  சிறுகதை தொகுப்பு
செலவிட்ட நேரம் : 5 மணி நேரம்.

சுஜாதா தனது ஸ்ரீரங்கத்து வாழ்வின்(பள்ளி மற்றும் கல்லூரி) நினைவுகளை அழகிய சிறுகதைகளாக வழங்கியுள்ளார்.ஒரு கதையில் நான் சிறு வயதில் விளையாடிய "கவட்டை" (ஹாக்கி போல அனவரிடமும் குச்சி இருக்கும் , ஒருவனது குச்சியை அனைவரும்    தள்ளிக் கொண்டே போக வேண்டும், அவன் வந்து குச்சியை மீட்க வேண்டும்.மற்றவர்கள் குச்சியை..pass  செய்து அவனை முடிந்த வரை ஒட விட வேண்டும்.)  பற்றி இதில் வரும் (வேறு பெயரில்)...அது என்னை மிகவும் கவர்ந்தது.

நிறைய இடங்களில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து சிறு பத்திரிக்கையில்(கையால் எழுதி) எழுதிய அனுபங்கள் இருக்கும்.அவரது எழுத்து பயணத்துக்கு அடிதள‌மாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.எனக்கு மிகவும் பிடித்த கதை என்றால் .. பேப்பரில் பேர்,சின்ன ரா,கடைசியில் உள்ள இரு பாட்டி கதை (ம்று,காதல் கடிதம்)...

எளிய நடை நம்மை அவரோடு பயணம் செய்ய வைக்கும்...

Thursday, February 14, 2013

புத்தகம் : கொலையுதிர் காலம்


புத்தகம் : கொலையுதிர் காலம்
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 360
ஒரு வரியில் : டிடக்டிவ் கதை -[கனேஷ் , வசந்த்].பிசாசு நம்பிக்கை vs விஞ்ஞானம்...முடிவு யாரின் பக்கம்..இதான் கதை...
செலவிட்ட நேரம் : 5-6 மணி நேரம்

நிர்வாண நக‌ரம் (http://idaivaellai.blogspot.in/2013/01/blog-post_29.html)  பற்றி எழுதிய போது   நண்பர் ஒருவர்..கொலையுதிர் காலம் படிங்க ரக‌ளையா இருக்கும்னு சொன்னார்.அவர் சொன்னது உண்மை தான்.எனது தஞ்சை - சென்னை ரயில் பயணத்தின் போது ப்டித்தேன்.சோழன் எக்ஸ்ப்ரசை விட வேகமாக சென்றது.முன்னுரையின் போதே சுஜாதா இதன் முடிவு பல பேருக்கு விருப்பமில்லாமல் போகலாம் என்று எழுதிருந்தார்.ஆதலால்,நான் கொஞசம் உஷாராகவே இருந்தேன்.மொட்டையாக முடிய போகுது என்று எதிர்பார்த்தே படித்தேன்.

1980'ல் லேசர் பற்றி பேசுகிறார்.3டி உருவம் பற்றி பேசுகிறார்.படிக்கும் போது பிரமிப்பாக இருந்தது.

பி.கு : நான் வாங்கிய புக்கில் சில எழுத்துக்கள் அச்சிடாமல் இருந்தது.[மூன்று - மூ இருக்காது]

Monday, February 4, 2013

புத்தகம் :சிவகாமி சபதம்


படிமம்:Sivakamiyin.jpg
புத்தகம் :சிவகாமி சபதம்
ஆசிரியர் : கல்கி
பக்கங்கள் : 4 பாகம்
ஒரு வரியில் : சரித்திர நாவல்,சுவாரசியமாக இருந்தது.
செலவிட்ட நேரம் : 5-6 மாதம் [என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனதால்]

மீண்டும் கல்கியிடம் புத்தகம் மூலம் அறிமுகமாகிறேன் அதே கலத்தில்[சரித்திர நாவல்]...சில புத்தகங்கள் படிக்கும்  போது அதன் சம்பந்தமான் நிகழ்வுகள் தானா நடக்கும்.அப்படி தான் போல நான் அஜந்தா,எல்லாரோ வை சுற்றி பார்த்தது.இந்த கதையின் முக்கிய அம்சமாக அஜந்தா வின் ஓவிய ரகசியம் இருந்தது.

பல்லவ காலத்தின கதை...அதுவும் முக்கியமாக மாமல்லபுரம் [Mahabalipuram]   சிற்பங்களை மற்றும் சரித்திர போர் நிகழ்வுகளையும் மையமாக கொண்டவை...நான் சென்னையில் இருந்த 1.5 வருசத்தல .. ஒரே ஒரு தடவை தான் மாமல்லபுரம் போயிருக்கேன்.அதுவும் அந்த சிற்பங்களை எல்லாம் கவணிக்கவே இல்லை...ஆனால் இதை படிக்கும் போது , மாமல்லபுரம்  சென்று நன்றாக சுற்றி பார்த்தேன்.

அஜந்தா , எல்லோரா.....
இந்த கதையில நம்ம பல்லவ ராஜாவின் முக்கிய எதிரி புலிகேசி தான்...புலிகேசியின் வாதாபியின் நகரத்தில் உள்ளவைதான் இந்த இடம்.

அஜந்தா , எல்லோரா சிலைகளுக்கும் , மாமல்லபுரத்தின் சிலைகளுக்கும் நிறைய ஒற்றுமை காணப்பட்டது.அதன் சில புகைப்பட்ங்கள் இங்கே......



Buddha.JPGRock cave temple 9 Mahabalipuram.jpg


Ajantha.JPGElephant_,_(2444512448).jpg

இதை பற்றி எஸ்.ரா விடம் மின்னஞ்சலில் கேட்ட போது..
அன்பு பிரபு

உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி
அஜந்தா குடைவரைக் கோவில் பாதிப்பில் உருவானது தான் மாமல்லபுர சிற்பங்கள்
ஆகவே நெருங்கிய தொடர்பு இருக்கவே செய்கிறது
மிக்க அன்புடன்
எஸ்ராமகிருஷ்ணன்


இது சம்மந்தமா வேறு புத்த்கம் இருக்கானு தெரில...தெர்ஞா சொல்லுங்க...சரி கதைக்கு வருவோம்..கதாபாத்திரங்கள் பற்றி சின்னதா ஒரு குறிப்பு...




பரஞ்சோதி தான் கதையை துவங்குவார்.அவருடைய போக்கில் கதை நகரும்.காஞ்சியில் அவருக்கு ஏற்படும் சிக்கல்கள் , அவர் செய்ய்ம் வீர தீர செயல்கள் அவரை பல்லவ தளப‌தியாக மாற்றும்.

ஆயனார் -  இவருடைய கலை திறமை இன்றும் அவர் புகழ் பாடுகிறது.அவருடைய மகள் சிவகாமி.[இவளின் நடனம் தான் சிறப்ப‌மாக மாறியது..பரதத்தின் அகராதி என கல்கி குறிப்பிடுகிறார்.

இளவரசர் , சிவகாமி காதல் வசம் படும் நிகழ்வு கல்கியின் எழுத்துகளில் நம்மை அழகாக கற்பனை செய்ய வைக்கும்.

புலிகேசி யின் படையெடுப்பு....கலை,காதல் வசமிருந்த கதையின் போக்கை முற்றிலும் மாற்றும்.போர் வராமல் இருவரும் சமாதானாம் அடைந்து புலிகேசி வாதாகபி திரும்பும்  போது சிவகாமி கடத்த படுகிறாள்.இதுவே பல்லவனின் வீரத்தை கேள்வி குறியாக மாற்றுகிறது.புலிகேசியிடம் சிக்கி வாதாபியில் சில இன்னல்களை சந்திக்க்றாள்.அதற்கு பழி தீர்க்க சபதம் கொள்கிறாள்.

அந்த சிவகாமி சபதம் நிறைவேறியது எப்படி,புத்த பிஷு யார்..?ஆயனாரின் கலை சேவை,பல்லவனின் கலை ஆர்வம்,புலிகேசியின் வில்லதனம்,சிவகாமியின் மீது யார் கொண்டிருந்த காதல் வெற்றியடைகிறது போன்ற முக்கிய அம்சங்கள் கதை படிப்போரை எங்கும் நகரவிடாமல் வைத்திருக்கும்.

கண்டிப்பா நீங்களும் படிங்க...



Tuesday, January 29, 2013

புத்தகம் : நிர்வாண நகரம்


புத்தகம் : நிர்வாண நகரம்

ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 100 [குத்துமதிப்பா]
ஒரு வரியில் : டிடக்டிவ் கதை -[கனேஷ் , வசந்த்]
செலவிட்ட நேரம் : 3 நாட்கள் .[2-3 மணி நேரத்தில் படிக்கலாம்]

இது சுஜாதாவின் இரண்டாவது புத்தகம் எனக்கு.சில பக்கங்கள் தாண்டியதும் ஏனோ அந்நியன் படத்தின் சில காட்சிகள் ஞாபகம் வந்தது.ஜன கூட்டம் அதிகமுள்ள நகரத்தில் தான் அதிமகமாக‌ மனிதர்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்று FBல் ஒரு status நேற்று பார்த்தேன்.இந்த‌ கதையின் நாயகனும் அப்படிப்பட்ட தனிமையில் தான் இருக்கிறான்.நகரத்தின் மீது வெறுப்பு கொண்டு மொத்த கவனத்தினையும் தன் மீது  திருப்ப சில த‌வறுகள் செய்கிறான்.அவன் போடும் முடிச்சுகளை கனேஷ் , வசந்த் அவிழ்ப்பது சுவார்சியமாக அமைந்திருக்கும்.[இதற்கு மேல் இந்த கதை சொன்னால் படிக்கும் போது சுவாரசியமாக இருக்காது.]க‌தை சொல்லும் விதம் நம்மை புத்த்கத்தை விட்டு நகர விடாது.ஆனால் கதையின்  முடிவை கணிக்க முடிந்தது.

இதனை படித்த பிறகு ... நண்பர் ஒருவர் பரிந்துரை படி அடுத்து கொலையுதிர் காலம் படிப்பதற்காக‌ காத்திருக்கிறேன்.[யாராவது வைச்சிருந்தா சொல்லுங்க]

குறிப்பு : டைரக்டர்  வசந்த் இந்த பெயரை  கனேஷ் , வசந்த்  கதைகளின் தாக்கத்தினால் வைத்ததாக சமீபத்தில் படித்தேன்.

Wednesday, January 9, 2013

புத்தகம் :ஜல தீபம்.



புத்தகம் :ஜல தீபம்.

ஆசிரியர் : சாண்டில்யன்
பக்கங்கள் : 3 பாகம்
ஒரு வரியில் : சரித்திர நாவல்,சுவாரசியமாக இருந்தது.
செலவிட்ட நேரம் : 3-4 மாதம் [என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனதால்]

கனோஜி ஆங்கரே(1698–1729) : இவர் தான் முக்கியம்.


நம்ம தலைமுறை அறியாத சரித்திர நாயகன்.குறிப்பாக தமிழ் மக்கள் அறியாத தலை சிறந்த வீரன்.அவரை பற்றின சில குறிப்புகள்....
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14094:2011-04-11-14-11-16&catid=26:india&Itemid=135%7C


மராத்திய பகுதிதியின் கடல் தளபதி (கடல் கொள்ளையன் என்று கூட அழைக்கப்பட்டாராம்).இவரால் தான் ,  ஆங்கில அரசால்அவ்வளவு சுலபமாக மராட்டிய அரசுக்குள் நுழைய முடியவில்லையாம்.

http://en.wikipedia.org/wiki/Kanhoji_Angre

File:Kanhoji Angre.jpg



 சாண்டில்யன் , கனோஜியின் சரித்திரத்தை படித்த பிறகு .கனோஜி பற்றி தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவல் பெரிதாய் இருந்தது.அவருடைய 10 வருட முயற்சியில் உருவானது தான் இந்த  ஜல தீபம்.


நான் மும்பையில் 3-4 வருடம் இருந்தது எனக்கு படிக்கும் போது மேலும் சுவாரசியத்தை தந்தது.நமக்கு(தமிழர்களுக்கு) ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்பத்ற்காகவோ என்னவோ இந்த கதையின் நாயகனை [இதயசந்திரன் - கற்பனை கதாபாத்திரம்]  தமிழனாக வைத்திருந்தார்.இந்த கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் [ கனோஜி தவிர] யாவும் கற்பனையே.ஆனால் சரித்திர நிகழ்வுகளுடன் அழகாக சேர்த்திருப்பார்.

நான் சுற்றிய பல சுற்றுலா தளங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.முக்கியமாக , ஜச்ஞீரா [Janjira fort ],இதன் சிறப்பு கடல்கரையிலிருந்து சற்று உள்ளிருக்கும்.கரையிலிருந்து பார்த்தால் இதன் நுழைவுவாயிலை காண முடியாது.









மேலே குறிப்பிட்ட இடங்களின் சில புகைப்பட தொகுப்புகள்
http://www.shivchhatrapati.com/showgal.php?gid=16&act=next&max=150

[படிக்கும் போது , ரத்ன‌கிரிக்கு செல்லும் வாய்பை நான் ஒரு முறை தவறுவிட்டது தான் எனக்கு வருத்தம் தருகிறது]


தானே,கல்யான் .. மும்பை சுற்றியுள்ள இடங்கள் [நம்ப தாம்பரம் மாதிரி].நான் அடிக்கடி அந்த இடங்களுக்கு செல்வதுண்டு. அந்த இடங்கள் இந்த கதையில் வரும்போது ஒரு பெருமிதம் வந்துதான் போகிறது.


நான் படித்த சரித்திர கதைகளில் யாராவது ஒரு துறவி இருப்பார் , முக்கிய கதாபாத்திரமாக.இங்கும் அப்படி பிரும்மேந்திர சுவாமிகள் இருக்கிறார்.

3 நாயகிகள் , வர்ணனைக்கு பஞ்சமில்லை.சாண்டில்யன் பாணி தனி பாணி தான் [கிட்டதட்ட வைரமுத்து மாதிரி - இது என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்] .மூவரும் நாயகனுடன் காதலில் மயங்குவது  கொஞ்சம் அதிகமோ என்று தோனிய‌து.

படிக்கும் போது , சுவாரசியமாக வரலாற்று நிகழ்வுகள் நம்  கண்முன்னே கண்டிப்பாக வந்து போகும்.