Monday, December 12, 2016

வாசிப்பு 2016 - நீர் அரசியல்

இந்த (2016 ) வருடத்தில் எனது வாசிப்பு சிறுவர் இலக்கியம் சார்ந்தே அதிகமாக இருந்திருக்கிறது. கதை சொல்லல் நிகழ்விற்காக வாசிக்க ஆரம்பித்தது. பின்னர் அதுவே தேடலானது. தமிழ் சிறுவர் இலக்கிய போக்கு,அதன் விமர்சனங்கள்  என புத்தகப் பரிந்துரைகள் கிடைத்துக் கொண்டேயிருந்தன‌. சிறுவர் இலக்கியம் அல்லாது சிலவற்றையும் வாசித்தேன்,அப்படி இப்படியென இந்த வருடம் 40 புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். எனது புத்தகத் தேர்வுகளில் 50 சதவிதம் நண்பர்களின் பரிந்துரைகள் தான். ஆகையால் நானும் வாசித்த புத்தகங்களைப் பற்றிய‌ அறிமுகங்களை இங்கு பதிவு செய்கிறேன். என்னைத் தேடிவந்த புத்தகங்கள் உங்கள் இல்லக் கதவுகளையும் தட்டட்டும்.

முதல் பதிவாக , சமகால நீர் நிலையங்கள் சார்ந்து கடந்த வருடம் வெளியான‌ இரண்டு நாவல்களைப் பற்றி பகிர்கிறேன்.

1.மூன்றாம் நதி - வா.மணிகண்டன்

வா.மணிகண்டன் , பெங்களூரூவாசி . அவரது ப்ளாக் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். 2016ல் அவரது "மூன்றாம் நதி" நாவல் வெளியானது.இது பெங்களூரின் கடந்த 40 ஆண்டுகளின் கதை. நீர் மிகப்பெரிய‌ வியாபாரப் பொருள் இங்கே. அந்த வியாபாரத்தின் அரசியலை ஒரு பெண்ணின் கதை மூலம்

பேசுகிறது இந்த நாவல். நாவலை இரு வேறு பகுதியாக நான் பார்க்கிறேன். முதல் பகுதி IT  நிறுவனங்களின் வரவுக்கு முன்பிலிருந்து துவங்குகிறது.இந்தப் பகுதியில் கதையின் காலம் வேகமாக செல்கிறது. பெங்களூரின் மாற்றத்தை நாயகியின் வளர்ச்சியோடு சொல்கிறது.இரண்டாம் பகுதி மிகவும் நிதானமாக கதையின் மையத்தில் நம்மை உலாவ செய்கிறது.சாலையில் நீரை சிந்திக்கொண்டே செல்லும் தண்ணி லாரியின் காட்சியை கண்டிப்பாக இந்த நாவல் நமக்குக் கொண்டு வரும்.

நான் கல்லூரி முடித்து , சென்னைக்கு முதல் முதலாக வந்தப்பொழுது தண்ணீர் பாக்கெட் வாங்கவே சங்கடமாக இருக்கும்.மனம் வரவே வராது.இன்று அப்பார்ட்மெண்ட் மாத செலவு கணக்கை பார்த்தால் 60% தண்ணீருக்காக இருக்கிறது. போர் போட வசதியும் தொழிநுட்பமும் இருக்கிறது என்பதற்காக நகரத்து மக்களாகிய நாம்  கிடைத்த இடத்தில் எல்லாம் போர் போட்டோம் , ஆனால் சிறிது காலத்திலேயே தண்ணிர் வற்றியது . தண்ணீரை வெளியில் தான் பெரும்பாலான அப்பார்ட்மெண்டுகள் வாங்குகின்றன. அப்படி வாங்கப்படும் தண்ணீர் பற்றின கதையை வாசிக்கும் போது மனதினுள் குற்ற உணர்வு எழாமல் இல்லை.

2.முகிலினி - இரா.முருகவேள்

எனது அப்பார்மெண்டில், வாசிப்பு பழக்கமுள்ள நண்பர்களுடன் மாதம் ஒரு முறை கூடி புத்தகம் பற்றி பேசுவது வழக்கம். அப்படி ஒரு முறை சந்திக்கும் பொழுது எழுத்தாளர் முருகவேள் அவர்களை SKYPE மூலம் இணைத்தோம்.அற்புதமான சந்திப்பு அது.கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக எங்களது உரையாடல் சென்றது.முகிலினி நாவலுக்காக அவர் சந்தித்த சில விஷயங்களை எங்களுடன் பகிர்ந்தார். அவருடனான உரையாடல் முகிலினியை பற்றின ஆர்வத்தை அதிகப்படுத்தியது.500 பக்க நாவல் என்பதால் நல்ல நேரத்திற்காக காத்திருந்தேன். 5 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது.முகிலினியுடன் கைகோர்த்தேன்.

ஆறு , ஏரி என்றதும் இன்றைய நகரத்து சிறுவர்களுக்கு மனதில் வரும் காட்சி எதுவாக இருக்கும் ? கருப்பு நிற சாக்கைடையாகத்தான் கண்டிப்பாக இருக்கும்.பெங்களூர் ஏரிகளின் நகரம் , ஆனால் இன்றோ தினம் தினம் ஏரிகளைக் கடக்கும் போது மூக்கை மூடிக் கொள்கிறோம். பெங்களூர் ஏரிகள் போன்று தான் மோசமான நிலையில் இருக்கிறது பவானி நதியும் .  அதுவும் கண் முன்னே ஒரு நதி பயனற்றதாய் மாறுவதை பார்ப்பது என்பது கொடுமையானது. அப்படி நமது தலைமுறையில் பவானி கரு நிற தார் போன்று மாறி ஓடுயிருக்கிறது. அதற்கு காரணமாயிருந்த டெக்கான் ரேயான் (விஸ்கோஸ்) ஆலையின் தோற்றம் , வளர்ச்சி , மறைவு என ஒரு நூற்றாண்டின் வரலாற்றை பல்வேறு கோணத்தில் சொல்கிறது முகிலினி. இந்த ஆலையத்தை மக்களின் போராட்டங்களை கொண்டே மூடியிருக்கின்றனர்.10 ஆண்டுகளுக்கு முன்னர் தான் நடந்திருக்கிறது. ஆனால் இதைப் பற்றின எந்தவிதத் தகவலும் அறியாமலேயே தமிழனாய் இருந்திருக்கிறேன்.ஊடகங்களின் மூலம் சினிமாவும் க்ரிக்கெட்டும் என்னை வந்து சேர்ந்திருக்கிறது ஆனால் தண்ணீருக்கான மக்களின் இந்த மாபெரும் போராட்டம் என்னை வந்து சேரவில்லை.

சமகால வரலாற்றை வாசித்தது தனி அனுபவமாய் இருந்தது. காமராசர் , நம்மாழ்வார் என நான் அறிந்த நபர்களையும் , இந்தி எதிர்ப்புப் போராட்டம் , இயற்கை உணவின் சந்தையைப் பற்றியும் நாவலில் கடக்கும் பொழுது மனதின் சிந்தனை ஓட்டம் தனி சக்தி பெறுகிறது. ஒரு பெறும் நிறுவனம் மக்களை கையாளும் முறை , நிறுவனத்தை மக்கள் எதிர்க்கும் மனநிலைக்கு மாறிய பின்னனி ,   அதே நிறுவனம் மூடப்படும் போது மக்களின் மனநிலை , ORGANIC என்று மக்களின் பார்வை சற்றே திரும்பியதும் வியாபார அரசியல் எப்படி சிந்திக்கிறது என பல்வேறு தளங்களில் நாவல் செல்கிறது.

முகிலினியை பற்றி தனியாக பதிவு எழுதிட வேண்டும் , இங்கு இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.நண்பர்கள் யாராவது பரிந்துரைகள் கேட்டால் தற்பொழுது நான் முதலில் சொல்வது முகிலினையைத் தான்.இந்த வருடம் நான் வாசித்த சிறந்த புத்தகம் இது.

1 comment: