Friday, February 12, 2016

தீனபந்து

கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

- பாரதி

இந்தப் பாடல் பிஜி தீவில் அவதிப்படும் இந்தியப் பெண்களின் நிலையைக் கண்டு என் தல (அதான்பா பாரதி) புதுச்சேரி கடலில் இரவெல்லாம் உறக்கமின்றி தவித்து மனம் வருந்தி பாடிய பாடல்.ஆங்கிலேய ஆட்சியிலிருந்த விலை அடிமை முறைக்கு எதிர்ப்பு வரவே , அவர்கள் அதனை ஒழித்துவிட்டதாகக் கூறு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தனர்.அதன் பெயர் ஒப்பந்த முறை திட்டம்.ஒப்பந்த முறையில் (Contract) நம்மவர்கள் வெளிநாட்டிற்கு அடிமைகளாய் அனுப்பப்பட்டனர்.அனுப்பப்பட்டனர் என்று சொல்வதை விட கடத்தப்பட்டனர் என்று சொன்னால் பொறுத்தமாக இருக்கும்.அதற்காக கங்கானிகள் இருந்தனர்.பொய் சொல்லி மக்களை கவர்ந்து அவர்களை அடிமைகளாய் நாடு கடத்துவது தான் இவர்களது வேலை.அப்படித் தான் பிஜி தீவிலுள்ள சக்கரை ஆலைகளுக்கு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்.அவர்களது துயரத்தை கேட்டுத் தான் பாரதி இவ்வாறு பாடியுள்ளார்.

பாரதியின் மனதில் இவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு நமது தீனபந்துவிற்கு(அதானே நம்ம தலைப்பு) ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.காந்தி அடிமைத்தனத்தை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் போராட்டம் நடத்த , அதனைத் தொடர்ந்து கோகுலே இந்தியாவில் போராட்டத்தை துவங்குகிறார்.நிதி திரட்ட பல்வேறு இடங்களில் பேசுகிறார்.அப்படி அவரது பேச்சினை கேட்ட ஆங்கிலேயர் ஒருவர் தனது எதிர்கால சேமிப்பெல்லாம் இந்த போராட்டத்திற்கு உதவட்டும் என்று கொடுக்கிறார்.1915ல் கோகுலே இறக்க , அந்தப் போராட்டத்தை தனது கையில் எடுக்கிறார்.அவர் தான் நம்ம தீனபந்து.ஆங்கிலேயருக்கு தீனபந்து என்ற பெயரா? என்று வியக்க வேண்டாம்.அவரது இயற்பெயர் C.F.Andrew , அவரது உள்ளத்தினை அறிந்த காந்தி அவருக்கு தீனபந்து என்று பெயர் வைக்கிறார்.தீனபந்து என்பதற்கு ஏழைகளின் நண்பன் என்று பொருள்.

பிஜி தீவில் ஒப்பந்த கூலிகளாக சென்றவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்பதை  C.F.Andrews & W.W.Pearson இருவரும் நேரில் ஆய்வு 
C.F.Andrews
செய்தனர்.மக்களிடம் பேசி திரும்பியதும் உடனே அதனை "Report on Indentured Labour in Fiji - An independent Enquiry" புத்தகமாக வெளியிடுகின்றனர்.இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது.400+ பக்கங்கள் , முதல் 50 பக்கங்களை கடந்திருக்கிறேன்.கங்கானிகள் மூலம் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்,அவர்களின் மனநிலை,ஏமாற்றம் என அங்குள்ள மக்களைப் பற்றின தகவல்களும் , தங்களது ஆய்வின் கருத்துகளையும் பதிந்திருக்கின்றனர்.இதனை வாசிக்கும் பொழுது எரியும் பனிகாடு  நாவலும் , 12 years a slave திரைப்படமும் ஏற்படுத்திய தாக்கம் நினைவிற்கு வந்தது.நான் வாசித்த வரை அதில் பிஜி தீவில் நமது மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது,அங்கு நடக்கும் குற்றங்களுக்கு என்ன காரணம்,அதனை பிஜி அரசாங்கம் எப்படி பார்க்கிறது,அங்கு நம் மக்கள் நல்லபடியாக வாழ என்ன வழி பற்றி அவர்களது ஆய்வு பேசுகிறது.

பிஜி தீவில் வட இந்தியர்களே முதலில் அதிகம் சென்றிருக்கின்றனர்,காலப்போக்கில் அவர்களது எண்ணிக்கை குறைய 
தென் இந்தியர்கள் சென்றிருக்கின்றனர்.ஹிந்துஸ்தானி தெரிந்தவர்களிடம் அதிகம் பேசியுள்ளனர் , ஹிந்துஸ்தானி தெரிந்த தமிழர்களுடனும் பேசியுள்ளனர்,ஹிந்துஸ்தானி தெரியாததால் தமிழர்களிடனும் மற்ற‌ தென் இந்தியர்களுடனும் பேச முடியாமல் போகிறது.இந்திய நிலப்பரப்பில் மதராஸ் மாநிலத்தில் தான் குறைந்த அளவு தற்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் ஆனால் பிஜி தீவில் தற்கொலையில் அதிகமான எண்ணிக்கையில் மதராஸ் மாகாணத்தை சேர்ந்தவர்கள் இருந்திருக்கின்றனர்.இந்த ஆய்வில் எனக்கு மிகவும் முக்கியமாக‌ தோன்றியது இந்த வரிகள்...

under the existing system of indian labour immigration there is a great disproportion between number of males and females.That this disproportion is mostly responsible for the abnormal number of murders and kindred crimes among Indians.That the majority of those found guilty of such crimes are otherwise quite and law abiding;and the murders for which they are condemned to death,are not due to any murderous instinct in them,but really to sexual jealousy.

பாலியல் வறட்சியால் ஏற்படும் பொறாமையே அங்கு நடக்கும் குற்றங்களுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம் என்று ஆய்வில் சொல்கின்றனர்.இதை வாசிக்கும் போது தற்பொழுது நமது தேசத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க தோன்றுகிறது.அதோடு மட்டுமில்லாமல் மக்கள் தங்களது மதத்தை கைவிட்டதே இதற்கு மிக முக்கிய காரணமாக சொல்கின்றனர்.ஒருவனுக்கு ஒருத்தி என்பதே அங்கு இல்லை,அடிமைத் தனத்திலிருந்து வெளியில் வந்தவர்களும் அதனை பின்பற்றவில்லை, இதற்கெல்லாம் காரணம் மக்கள் இழந்த மத நம்பிக்கைகளே என்று கூறுகின்றனர்.ஆதலால் பிஜி அரசாங்கத்திற்கு மக்களின் மத நம்பிக்கைகள் மீது கவனம் செலுத்த சொல்கின்றனர்.இந்துக்களை கசாப்பு கடைகளுக்கு அனுப்புவதை தவிர்த்துவிடுங்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.ஒப்பந்த ஊழியர்கள் நலமாக வாழ கல்வி,மதம்,ஆண்-பெண் எண்ணிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்கின்றனர்.இவர்களது ஆய்வு ஆங்கிலேயர் மற்றும் பிஜி அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது. 

மக்களுக்கு அங்கு உதவ போதுமான மருத்துவ வசதிகள் இல்லை , மதம் சம்மந்தமான எந்தவித தொடர்பும் இல்லை ஆதலால் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் . கல்வி என்றதே அங்குள்ள சிறுவர்களுக்கு கிடையாது ஆங்காங்கே கல்விற்கு உதவ சில கிறுத்துவ அமைப்புகள் செயல்பட்டிறுக்கின்றன ஆனால் அவை மக்களை அவரவர் மதத்தினை பின்பற்ற தடையாக இருக்கலாம்,ஆதால் பிஜி அரசாங்கம் இம்மக்களின் கல்வியினைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது .மக்களின் சுய நெறிமுறைகளை மீட்டெடுப்பதின் அவசியத்தையும் அதற்கு ஒரே வழியாக அமைய மக்கள் தங்களது மதத்தினை பின்பற்ற வேண்டும் என்று வழியுறுத்துகிறார்கள்.பெரியார் ஒருப்பக்கம் மதம் மனிதனை வளர்க்கவில்லை என்று குற்றம் சாட்டுக்கின்றார் , மறுப்பக்கம் மனிதன் தனது நிலைப்பாட்டை இழந்து தவிப்பதற்கு காரணமாக மதமில்லாததை கூறுகின்றது வரலாறு.

தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கு வரலாறு ஒரு சிறந்த ஆடுகளமாகவே இருக்கிறது.பாரதிப் பற்றி வாசிக்க ஆரம்பித்தேன் அது என்னை தீனபந்துவிடம் வந்து சேர்த்திருக்கிறது.வரலாற்றை தாறுமாறாக பள்ளி வயதில் திட்டியவன் நான் , ஆனால் தற்பொழுது வரலாற்றுடன் தொடந்து பயணம் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்.

வெறும் 50 பக்கம் வாசித்துவிட்டு தீனபந்துவைப் பற்றி இன்று அவசர அவசரமாக எழுத காரணமிருக்கிறது.இன்று தீனபந்துவின் பிறந்தநாள்.No comments:

Post a Comment