Wednesday, February 3, 2016

இதுக்காக சென்னை போறீங்களா?

"இதுக்காக சென்னை போறீங்களா?" , எழுத்தாளர் விழியன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கதை சொல்லிகளின் பட்டறை நிகழ்வுக்கு செல்கிறேன் என்றதும் நான் எதிர்கொண்ட கேள்வி இது மட்டுமே.கதை சொல்வதின் முக்கியத்துவம் நமது சமூகத்தில் அவ்வளவே! என்று சாட்சியாகவே இந்தக் கேள்வி என்முன் நிற்கிறது.ரி அதை விடுங்க...விழியனின் இல்லத்தில் சென்ற வாரம் தான் இந்த நிகழ்வு நடந்தது.வேறு மாநிலத்திலிருந்த வருபவர் பட்டியலில் நான் மட்டுமிருக்க எனக்கு துனையாக மும்பையிலிருந்து தோழி ஒருவர் வந்திருந்தார்.எங்களைப் போன்ற ஆட்களால் தான் தமிழகத்தினுள் நடக்கும் நிகழ்வுகள்  தேசியமயமாக்கப்படுகிறது என்று நாங்கள் மனதினுள் பெருமைப்பட்டுக்கொண்டோம்.இந்த நிகழ்விற்கு  கதை சொல்லிகள்,ஆசிரியர்கள்,பள்ளி முதல்வர்கள்,எழுத்தாளர்கள்,பாரம்பரிய விளையாட்டுகளை தேடுவதில் ஆர்வம் கொண்ட நண்பர்கள்,இளம் இயக்குனர்,நடிகர்,பொம்மலாட்டம் நிபுனர்,பெற்றோர்கள் என வெவ்வேறு துறைசேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

தனியொருவனாக மகளுக்கு கதை சொல்லத் துவங்கி , பின்னர்  அப்பார்ட்மெண்டில் சில நண்பர்களுடன் 10-12 சிறுவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.கதை சொல்வதில் எங்களுக்கு சில சிக்கல்களும் சந்தேகங்களும் ஏற்பட்டிருந்தது,
  •  பலதரப்பட்ட வயதினர் இருக்கும் இடத்தில் அனைவருக்கும் பிடித்தவாறு எவ்வாறு கதை சொல்வது
  • கதைக்களுக்கு நடுவில் விளையாட்டுகளை எவ்வாறு சேர்ப்பது , என்னென்ன விளையாட்டுகள் இருக்கிறது
  • நீதிப்போதனைகள் தாண்டி எவ்வாறு கதை சொல்வது.
  • ஆர்வமுள்ள அனைவரையும் எவ்வாறு  கதை சொல்ல வைப்பது
  • பெங்களூர் என்பதால் , தமிழை சிறுவர்கள் படிப்பதில்லை.அதற்கு ஏதாவது செய்ய முடியுமா?
  • சிறுவர்களை எவ்வாறு கதைச் சொல்ல தூண்டுவது (ஆர்வம் இருப்பின்)
என எங்கள் பட்டியல் நீள்கிறது.இதுப் போன்ற பட்டியல் கதை சொல்ல துவங்கியிருக்கும் ஒவ்வொரிடமும் இருக்கிறது என்பதை இந்தப் பட்டறை மூலம் தெரிந்துக் கொண்டேன்.இந்தக் கேள்விகளுக்கு விடைகாணும் விதமாகவே இந்தப் பட்டறை அமைந்தது.

சிறுவர்களுக்கு கதைகள் தேவையா ? தேவையென்றால் எதற்காக ? என்று சனி மாலை துவங்கிய கலந்துரையாடல் அடுத்த மாதம் கதை சொல்லிகளுக்காக பயிற்சி பட்டறை நடத்தலாம் என்ற முடிவுடன் ஞாயிறு மாலை நிறைவுப்பெற்றது.கலந்துரையாடலுக்கு மிகவும் உறுதுனையாக இருந்தது நண்பர்கள் இறக்குமதி செய்ததிண்பண்டங்கள்.கமர்கட்டு,புளிப்பு மிட்டாய்,மும்பையிலிருந்து ஜவ்வரசி வத்தல்,பிஸ்கட் பாக்கெட்டுகள்,முருக்கு,பழங்கள்,தேனீர் என அசத்தியிருந்தார்கள்.வெவ்வேறு திசையில் விவாதஙள் செல்லும் போது அனைவரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்தது இவையே.

தமிழ்நாட்டிலுள்ள கதை கேட்கும் ஆர்வமுள்ள சிறுவர்கள் சில ஆயிரம் இருப்பர் என்று கணக்கிட்டோம்.அந்த சில ஆயிரம் சிறுவர்களை நோக்கி நாம் பயணிப்போம் என்பதில் அனைவரும் தெளிவாக இருந்தோம்.எழுத்தாளர் சுகுமாரன் அவர்கள் இந்தப் பயணத்தில் நூலகத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.தமிழகத்தில் இதுவரை ஏன் சிறுவர்களுக்காக தனி நூலகம் அமையவில்லை? ஏற்கனவே நடைபெறும் நூலகத்திலும் ஏன் சிறுவர்களுக்காக தனியிடம் ஒதுக்கப்படுவதில்லை?சிறுவர்களின் மேம்பாட்டில் எந்தவித கவனமும் செலுத்தாமால் நாட்டின் முன்னேற்றேத்தைப் பற்றி பேசுவது எவ்வாறு சாத்தியமாகும்.இவ்வாறு எங்கள் பேச்சு சூடுப்பிடித்தது.

எங்கள் சூட்டை தணிக்க , நிகழ்விற்கு வந்திருந்த சிறுவன் கதையொன்றை சொன்னான்,சொன்னான் என்பதைவிட‌ கதையினுள் எங்களை இட்டுச்சென்றான் என்றே சொல்ல வேண்டும்.கதை ஒருவனின் கற்பனையை எங்கெல்லாம் இட்டுச்செல்லும் என்பதற்கு அவனே அங்கு சாட்சியாக அமர்ந்திருந்தான்.அவனது மொழியும்,அவனது கதை நிகழ்வும்,அந்த கதையின் முடிவும் எங்களை கட்டிப்போட்டது.அந்த சுட்டியின் கதையை தொடர்ந்து வந்திருந்த அனைவரும் கதைச் சொல்லத் துவங்கினோம்.நாம் காலம் காலாமாக அரைத்துக் கொண்டிருக்கும் காக்கா கதையை எவ்வாறு வேறுவிதமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லலாம் என் நண்பர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தார்கள்.
முக்கியமாக வடையின் பார்வையில்,காக்காவின் பார்வையில் சொன்ன‌  கதைகள் இன்னும் மனதில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

மலர்விழி அக்கா சொன்ன வவ்வாள் கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.அவர்களது மொழி மழலையர்களுக்காகவே உருவானது."ஒரு குட்டி பாப்பா" , "துட்டு எடுத்துன்னு வா" என்ற வார்த்தைகளை அவர்கள் மழலை மொழியில் சொல்லும் அழகை கேட்டு நான் அங்கணமே அவரது ரசிகனாகிவிட்டேன்.

அடுத்து பொம்மலாட்டம் கலைஞர் கலைவாணன் அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்,சிறுவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,பள்ளிகளின் மெத்தப் போக்கு எனமெய்சிலிர்க்க வைக்கும் பேச்சாக அது அமைந்தது.மதிய உணவு முடிந்ததும் ஒரு துடிதுடிப்பான பாடலை பாடி அனைவரையும் கலகலக்க வைத்தார்.அவரது அனுபவங்களை தனி பதிவாக எழுதலாம்,அவர் சொன்ன மாங்காய் தோட்டகதை , அப்பாவிற்கு சட்டை அளவு எடுத்துட்டாங்க கதை போன்றவை நிஜ வாழ்வின் அப்பட்டங்களை கண் முன் நிறுத்தியது.

பஞ்சாயத்து தலைவரா (உடையிலும்) விழியனும் , வாத்து ராஜா புகழ் விஷ்ணுபுரம் சரவணனும் இந்த நிகழ்வை அழகாக நடத்திச் சென்றனர்.சரவணன் ஒவ்வொரு தலைப்பிலும்  தனது கருத்தையும் , பேச வேண்டியதையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.வெவ்வேறு வயது சிறுவர்கள் இருக்கும் இடத்தில் கதை சொல்லிகளுக்கு என்ன விதமான இடைஞ்சல்களை சந்திக்க நேரிடும்,அதை எவ்வாறு சமாளிப்பது போன்ற அனுபவங்களை பகிர்ந்தார்.தொடர் கதை சொல்லும் முறை அனுபவங்கள் மூலமாக சிறுவர்களின் கற்பனை திறன் பற்றி பேசினார்.தொடர்ந்து கதை சொல்லும் போது அதில் எவ்வாறு சிறு சிறு அறிவியல் விளக்கங்களை சேர்ப்பது பற்றியும் விவாதித்தோம்.அறிவு அதை செயல்வடிவமாகவே அங்கு செய்துகாட்டினார்.அனைவரையும் தனது பேச்சாலும்,முக பாவனைகளாலும் கட்டிப்போட்டார்.அதைப்போன்று இனியன் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி பேசினார்.ஜாதிய வேறுபாடுகளை விளையாட்டு மூலம் குறைக்கலாம் என்ற தனது அனுபவங்களை பகிர்ந்தார்.

கதைக்கு நீதி போதனை அவசியமா , என்ற தலைப்பிலும் விவாதித்தோம்.பெற்றோருக்கு தனது பிள்ளைகளை நல்வழிப்படுத்தவும்,ஆசிரியர் பார்வையில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவும்,சில நற்பண்புகளை அவர்களுக்குள் ஏற்படுத்தவும் அவை தேவை என்றும்.ஆனால் ஒரு கதைக்கு நீதி போதனை அவசியமானதாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை என்றும்.கதையின் போக்கில் அவை இருந்தால் போதும் , அதற்காக கதையை உருவாக்குவதை தவிர்க்கலாம் என்றும் பேசினோம்.ஒவ்வொரு முறை கதை சொல்லி முடித்துவிட்டு சிறுவர்களுக்கு "இதிலிருந்து நாம் என்ன தெரிஞ்சிக்கிட்டோம் " என்று சொல்ல அவசியமில்லை.அவர்களே அதை சிந்திக்கும் இடத்தினை நாம் அவர்களுக்கு தர வேண்டும் என்றும் எங்கள் பேச்சு சென்றது.இத்துடன் அனுபவமிக்க கதை சொல்லிகளான நவீன்,சதீஸ்,சக்தி (மேலும் சில நண்பர்கள் ..மன்னிக்கவும் பெயர் நினைவில் இல்லை) கதை சொல்லும் போது அனைவரது கவனத்தை பெற என்னென்ன யுக்திக்களை பயன்படுத்தலாம் என்று சொன்னார்கள்.கோமாளி வேஷமிடுவது,முகத்தில் சாயம் பூசுவது, சிற்சில செயல்பாடுகள் செய்வது எனது செய்துக்காட்டினர்.

சிறுவர்களுக்கு பாடல்கள் மீது இருக்கும் விருப்பத்தைப் பற்றியும் .அழ.வள்ளியப்பாவை தாண்டி நம்மிடம் என்னென்ன பாடல்கள் இருக்கின்றது என்றும் பேசினோம்.பாவேந்தர் பள்ளி வெற்றிச் செழியன் அவர்களது நூலிருந்து சில பாடல்களை அவரே பாடிக் காட்டினார்.வந்திருந்த அனைவரிட‌த்திலும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமையை கவனிக்க நேர்ந்தது , அனைவரும் வாசிப்பின் மீது தீரா காதல் கொண்டவர்கள்.எஸ்.ராவின் கிறுகிறு வானம்,கி.ரா வின் நாட்டுப்புற கதைகள் மூலம்  சிறுவர்களுக்கு கதைகளை உருவாக்கிய அனுபங்களை நண்பர்கள் பகிர்ந்தனர். 

சனி இரவு விழியனின் தந்தை எங்களில் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டார்.அவரது முதல் கேள்வியே இவ்வாறு அமைந்தது.."சென்ற முறையும் இவ்வாறு பேசினோம் , ஆனால் ஏதாவது செயல் உருவம் பெற்றதா?இந்த முறை அதை கவனத்தில் கொண்டு உங்கள் நிகழ்வை துவங்குங்கள் " என்றார்.எங்கள் மனதில் அவரது கேள்வி ஆழமாக பதிந்திருந்தது.ஆதலால் தான் எங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை உடனே திட்டமிட்டோம்.காவேரி மாணிக்கம் தனது இரண்டாவது "ஒரே ஒரு ஊரிலே" கதை சொல்லும் நிகழ்வே நடத்த அங்கையே திட்டமிட்டார்.(வரும் 6ம் தேதி மாலை 5-7 மணிக்கு பெரியார் திடலில் நடக்கயிருக்கிறது).கதை சொல்லிகளுக்கான ஒரு கூட்டு பயிற்சிப் பட்டறை மார்ச் மாதத்தில் நடத்தவும் முடிவு செய்தோம்.அத்துடன் நிகழ்வை முடித்துக்கொண்டு சங்கத்தை கலைத்தோம்.வீடு திரும்பினோம்.



பெங்களூர் திரும்புகையில் , சமீபத்தில் நான் வாசித்த ரேன்டி பாஷின் "இறுதிச் சொற்பொழிவு" என்ற நூலில் இடம்பெறிருந்த இவ்வார்த்தைகளுடன்  நிகழ்வின் அனுபங்களை மனம் ஒப்பிட்டுக்கொண்டேயிருந்தது.

[Virtual reality துறையில் பேராசிரியராக இருக்கும் ரேன்டி தனது மாணவர்களுக்காக பட்டறை ஒன்றை உருவாக்கிய அனுபவங்களை இவ்வாறு விவரிக்கிறார்.]

"ந‌டிகர்கள்,ஆங்கிலத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள்,சிற்பிகள்,பொறியியலாளர்கள்,கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்திருந்தவர்கள்,கணினித் துறையைச் சேர்ந்த அறிவுஜீவிகள் ஆகியோர் எங்கள் பயிற்சித் திட்டத்தில் பங்கு கொண்டனர்.இத்திட்டம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் , இம்மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கான வாய்ப்பு இவர்களுக்கு ஒருபோதும் வாய்த்திருக்காது,அவர்கள் அவரவர் வேலைகளில் மூழ்கியிருப்பார்கள்.நாங்கள் இவர்களை சிறு சிறு குழுக்களாக்கினோம்.தனியொருவராகச் சாதிக்க முடியாதவற்றை மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் கட்டாயத்திற்கு இவர்கள் ஆளானார்கள்." 

No comments:

Post a Comment