Saturday, August 30, 2014

கோபல்ல கிராமம் - கி.ரா

ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்த புத்தகம் தான் கோபல்ல கிராமம்.நீண்ட முன்னுரை படித்தலிருந்து , இந்தப் புத்தகத்தை படிக்க தொடர்ந்து நேரம் கிடைத்தால் தான் முடியும் என்ற‌ பிம்பம் மனதில் உருவாகியிருந்தது . அப்படியொரு நேரம் கிடைக்குமென , "உனக்கு அடுத்த முறை நல்ல சம்பள உயர்வு வாங்கித் தரேன்" என மேனஜரின் சொல்லை நம்பி அடுத்த முறைக்காக காத்திருக்கும் ஐ.டி இளைஞன் போல நானும் காத்திருந்தேன்.அந்த நல்லவிதமான அடுத்த முறை வரவேயில்லை.

பொறுத்தது போதுமென சென்ற வாரம் கையில் இந்தப் புத்தகத்தை எடுத்துவிட்டேன்.ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களின் அறிமுகங்கள் ,ஆரம்பத்தில் சற்று தடுமாற வைத்தது.முதல் சில பக்கங்களில் ஏகப்பட்ட தெரியாத வார்த்தைகள் வேறு.

கிடை,உடை மரங்கள்,சிள் வண்டு,கூகை,கரிச்சான்,தண்ணிர் கோழி,கதுவாலிப் பறவை,ஊருணி,குரவை மீன்,மர நாய்கள்,வெருகுப்  பூனை, பாம்படங்கள்(தோடு?), லேஞ்சி(வேட்டி?), பைதாக்கள், ஓணி, கவனை(அருவாள்?), லஞ்சை(வெட்கம்?), தொரட்டி(மூக்குத்தி?), புல்லாக்கு,மேழி(மண்)பொடுதலை இலை ...

என பட்டியல் நீள்கிறது[என்னிடமுள்ள அகராதியிலும் சிக்கவில்லை,தெரிந்தவர்கள் சொல்லவும்] ,சரி இதுவும் கடந்து போகுமென பட்டியலை மட்டும் குறித்துவைத்துவிட்டு தொடர்ந்த வாசிப்பு போகப்போக ரெக்கை கட்டிப் பறந்தது.கதாப்பத்திரங்களின் பிம்பங்களோடு கிராமத்தை கண்டிப்பாக நம் கண்முன்னை வார்த்தைகளின் வழியாக வரைந்து விடுகிறார் கி.ரா.நாம் அறியாமல் புன்னைகை சிந்தும் இடமும் உண்டு கண்களை கசங்க வைக்கும் இடமும் உண்டு.கதையினை பற்றி சொல்லாமல் இந்நாவலை மேலும் விவரிப்பது சிரமம் என்பதால் எனக்குப் பிடித்த சில வரிகளையும் , வார்த்தைகளையும்  இங்கே பகிர்கிறேன்.....

//
அவர்கள் சூரியோதத்தைப் பார்த்ததும் அப்படியே நின்று விட்டார்கள்!இந்தச் சூரியோதயம் ஒன்றை எத்தனை தரம் பார்த்தாலும் சலிப்பதில்லை,அது ஒருநித்தப்புதுமை,அன்றலர்ந்த மலர்போல.இந்த கண் கூசாத சூரியனை,பூப்படையாத மங்கையைப் பார்ப்பது போல கூசாமல் பார்க்கலாம்.!
//

//
கோபல்ல கிராம‌மும் சுற்றுப்புறமும் கும்பினியின் ஆட்சிக்குக் கீழே வந்து பல வருஷங்கள் ஆகியும் எந்தவித மாறுதலும் உண்டாகிவிடவில்லை.மாறுதல் என்று ஒன்றைச் சொன்னால்வேண்டுமானால் அப்போது ஆகாயத்தில் தோன்றிய வால் நட்சத்டதிரத்தை வேண்டுமானல் சொல்லலாம்.
//

ருசிக்கல் - சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு உப்பு என்று சொல்ல கூடாதாம்.

அத்தாளம் -  dinner desserts

அரவ தேசம் - தமிழ்நாடு

ஏணி நாற்காலி - படிவைச்ச ஸ்டூல் [நீளமுள்ள‌ கூந்தலை உணர்த்திக்கொள்ள உதவும்]

நல்ல நாவல்.வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படிக்கவும்.

No comments:

Post a Comment