Wednesday, May 22, 2013

என் தனிமை


"மணியாச்சு கிளம்பினீயா இல்லையா"..என்று வீட்டுக்குள் நுழைந்தேன் சாக்ஸை கூட கழட்டாமல்...

"உங்களுக்கென்ன ஆபிஸ்லேந்து வந்தவுடனே கிளம்பு கிளம்புன்னு  சொல்வீங்க.இந்த குட்டீஸை வெச்சுகிட்டு என்னால எதுவுமே எடுத்து வைக்க முடியல.கொஞ்ச நேரம் இவளை பாத்துகோங்க  நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன். "என்றாள் என் வீட்டு எஜமானி...

"சரி சரி..எடுத்து வை"....என்றதோடு ..சிறிது நேரத்தில் எடுத்து வைக்க வேண்டிய அனைத்தையும் சரி பார்த்துவிட்டு ரோலிங் பேகோடு கிளம்பினோம்.

ரயிலடிக்கு இரண்டு பேருந்துகள் மாறி போக வேண்டும்.பேருந்திற்காக காத்திருந்தோம்.ஏனோ பெங்களூரில் ஏ.சி ப‌ஸ் தான் அதிகம் இருக்கிறது.நாங்களும் இரண்டு பேருந்தை விட்டு பார்த்தோம் சாதா பேருந்து வருவதாக தெரியவில்லை.

"ம்ஹூம் ..இதல்லாம் சரியா வராது போல .. பேசாம ஏ.சி பஸ்லேயே போயிடலாம்" என்றாள்..

"இதை தான் நான் அப்பவே சொன்னேன்..எங்க கேட்ட..." என்றேன் அவளிடம் பொய் கோபத்துடன்..அடுத்து வந்த ஏ.சி பேருந்தில் ஏறினோம்...

நகர பேருந்து ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது ஏதாவது சொல்லி தர தவறுவதில்லை....என் ஒரு வயது அழகிய தேவதை இப்பொழுது தான் வெளி ஆட்களை கண்டாள் சிரிக்கிறாள்.என் மனைவியும்,குழந்தையும் அமர நான் அவர்கள் அருகில் நின்று பையை காலால் பேலன்ஸ் செய்து கொண்டுருந்தேன்.என் மகள் அருகில் அமர்ந்த ஒருவரின் முகத்தினை பார்த்து அழகாக சிரித்தாள்.அவரோ அதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.அது என்னவோ தெரியவில்லை , சிறுப்பிள்ளைக்களுக்கு தன்னை கண்டுகொள்ளாதவரை தான் அதிகம் பிடிக்கும் போலிருக்கிறது.அவரை தனது கையால் சீண்டி அழைக்கிறாள்.அப்பொழுதும் அந்த டிப்டாப் ஆசாமி கண்டுகொள்ளவேயில்லை.அவளும் அந்த பேருந்தில் தன்னை சுற்றி இருக்கும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்ச்சித்து முயற்ச்சித்து தோற்றே போகிறாள்.சிறுப்பிள்ளையின் சிரிப்பில் இல்லாதது அப்படி என்னதான் அந்த ஸ்மார்ட் போனில் இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.

சென்ற முறையும் இப்படி தான் ; காலை வேலை ஊரிலிருந்து ரயில் விட்டிறங்கி வீடு திரும்பி கொண்டிருந்தோம் ஏசி பஸ்ஸில்.அதிகாலையிலே சிரலாக்(cerelac) ஊட்டியிருந்தோம்.தொடர் பயணத்தினால் செறிக்கவில்லை போலும் ;பேருந்தில்  என் மீது முழுவதுமாக வாந்தி எடுக்க , உதவிக்கு ஒருவர் கூட வரவில்லை.நானும் என் மனைவியும் தட்டுத் தடுமாறி அனைத்தையும் சரி செய்தோம்.அருகில் இருப்போரிடம்"ஏன்டா இப்படி இருக்கீங்க?"என்று கேட்க வேண்டுமென்று தோனியது.அன்று நடத்துநர் மட்டும் ஏசி பக்கத்தில் அமர வைக்காதீர்கள்;குழந்தைக்கு ஒத்துக்காது என்று கன்னடத்தில் சொல்ல.கன்னடத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாத போதும் அதை புரிந்துக்கொண்டேன். அவர் சொன்னவுடன் ... ஒரு ஆளாச்சும் கண்டுக்கொள்ள‌ இருக்காரே என்று சற்றே சமாதானம் அடைந்தேன்.இவ்வாறு சென்ற முறை நடந்தவை என் மனதிற்குள் ஓட அதற்குள் நாங்கள் இறங்கும் இடம் வந்தது.இறங்கி அடுத்த பேருந்திற்காக காத்திருந்தோம்.அந்த இடத்திற்கு சாதா பேருந்து மட்டும் தான் செல்லும்.சற்று நேரத்தில் வந்ததும் ஏறினோம்.இங்கு என் தேவதைக்கு தோல்வியே இல்லை.பொருளாதார தகுதிக்கும் ; யதார்த்த அன்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற எனது நம்பிக்கை ஒரு கேள்விகுறியானது.

இறுதியாக ரயிலடிக்கு வந்து சேர்ந்தோம்.இன்னும் சிறிது தாமதமாக கிளம்பியிருக்கலாம் என்று எனது நேரக் கனிப்பினை குறை சொல்லிக்கொண்டிருந்தாள் என் மனைவி.போக்குவரத்து நெரிசலில் இதுவரை சிக்காத‌ அவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல்.அவள் பேசுவதை கேட்டும் கேளாதவாறு ஆண்கள் பொதுவாக கையாளும் யுக்தியை பயண்படுத்திக் கொண்டிருந்தேன்.

சின்ன ஸ்டேஷன் என்பதால்,என் குட்டி தேவதை தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தாள்.அனைவரும் இவளது சேட்டையை ரசித்தவாறு இருந்தனர்."ஊருக்கு போய் முதல்ல சுத்தி போடனும் " என்ற என் மனைவியின் மனக்குரல் எனக்கு கேட்க...ஒரு மெல்லிய புன்னகை சிந்தினேன்.திடீர் புன்னகைக்கு காரணம் என்னவென்று அவள் கண் அசைவால் எனைக்கேட்க.நான் ஒன்றுமில்லை என்று தலை அசைத்தேன்.

நானும் என் மகளுடன் சிறிது நேரம் நடை பழக;திடிரென பசியில் அவள் சினுங்கினாள்,அவள் அன்னை பால் ஆற்றும் வரை நான் விளையாட்டு காட்ட அவளை தூக்கி முதல் முறையாக நிலவை காட்டி  "நிலா பாரு" என்று அவள் கவனத்தை திசை திருப்பினேன். என் ஒரு வயது நிலவு;நிலவை கண்ட அதிசியத்தில் கையை உயர்த்தி "ஊஊ..." என்று அர்த்தமில்லா சொற்களை சிந்த...எங்களுக்கு அவளது செய்கைகள் அதிசயமாக இருந்தது.அன்று முதல் "நிலா எங்கே?" என்று கேட்டால் உடனே வானத்தை பார்ப்பாள்.இது போல் அவள் செய்யும் ஒவ்வொன்றையும் அருகில் இருந்து ரசித்திட வேண்டும் என்று என் மனதில் தோன்றிய மறுகனம் இப்பொழுது ஊருக்கு செல்வதே அவளை இரண்டு வாரத்திற்கு அவளது  தாத்தா பாட்டியிடம் விட்டு வருவதற்காக தான் என்பதை உணர்ந்தேன்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் பணி புரிகிறோம்,அவள் தஞ்சையில் , நான் பெங்களூரில்.அவள் இதுவரை விடுப்பில் இருந்தாள்.இன்னும் ஓரிறு  மாதங்களில் பணியில் சேர வேண்டும்.பெங்களூருக்கு பணி இடம் மாற்றம் கிடைக்கும் வரை,இருவரும் இங்கும் அங்குமாக பயணம் செய்ய நேரிடும்.ஆதலால் எங்களது பெற்றோர்களிடம்  இருக்கும் அளவுக்கு என் மகளை பழக்கம் செய்ய வேண்டுமென்று , ஊரில் விட்டுவர எண்ணினோம்.அதற்காகத் தான் இந்த இரு வார ஒத்திகை.இதை பற்றி மேலும் சிந்திக்க ;அதற்குள் ரயில் வந்தது....

"நல்ல ஆட்டம் போட்டிருக்கா சீக்கிரம் தூங்கிடுவா" என்ற என்னவளின் கனிப்பை பொய் ஆக்கினாள் என் மகள்.சேலையில் தொட்டில் கட்டி , செல்போனில் பாட்டு போட்டு;விளக்குகளை சீக்கிரம் அனைத்து என்று நாங்கள் ஏதேதோ செய்ய ; அவளோ இருட்டில் கூட விளையாடிக் கொண்டிருந்தாள்.

அருகிலிருந்த ஒருவர்.."குழந்தைங்களை நாம‌ வளர்க்கிறதுல தாங்க இருக்கு..நீங்க தினமும் லேட்டா வந்து விளையாடி பழக்கப் படுத்தியிருப்பீங்க.அதனாலதான் தூங்க மாட்டேங்குது.நீங்க தினமும் சீக்கிரமே லைட்டைலாம் அனைச்சிட்டு தூங்கப் போட்டு பழக்குங்க.." என்று எனக்கு அறிவுரை செய்ய....நான் ஏதும் சொல்லாமல்.."எங்க தூங்க முடியாம போய்விடுமோ.." என்று அவர் கண்களில் தெரிந்த பயத்தினை பார்த்துக்கொண்டிருந்தேன்.என்னைப்போல் இரண்டு மூன்று அப்பாக்கள் கதவருகே உலாவ.நானும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டேன்.அனைவரும் பிள்ளைகளின் பெருமைகளை  ஆசை தீர பேசி தீர்த்தோம்.அப்படி இப்படி என 1 மணியானது அவள் உறங்க.கலைப்போடு இருந்த போதும் அவ்வெப்போது எழுந்து பார்த்துகொண்டே  உறங்கினேன்.ரயில் சற்றே தாமதமாக தஞ்சை வந்து சேர்ந்தது.

அன்று மாலை ; நெருங்கிய உறவனரின் திருமண அழைப்பு;முதல் நாள் திருமணத்திற்கு செல்லாததால் சீக்கிரமே சென்றுவிட்டோம்.திருமண அழைப்பு முடிந்ததும் எனது மாமாவும் அத்தையும் எனது மகளை அழைத்து போக திட்டமிட்டிருந்தனர்.நான் பந்தியில் பறிமாரிக் கொண்டிருந்த வேலையில் ; அவர்கள் எனது மகளை அழைத்துச் சென்றிருந்தனர்.எனது மனைவியோ பிரிவின் வலியை தாளாமல் கண்கள் களங்க அமர்ந்திருக்கிறாள்.அனைவரும் சுற்றி இருந்த போதும் யாரும் கவனிக்கவில்லை.நான் யதார்த்தமாக அங்கு செல்ல ; என்னை கண்டவுடன் அடை மழையென அழத் துவங்கினாள்....அனைவரும் ஒன்று கூடிவிட்டனர்.ஒவ்வொருவிடமும் நிலைமையை எடுத்துச்சொல்ல‌ எனக்கு அறிவுரைகள் வந்தவண்ணமிருந்தது.

"இதோ பத்து நிமிஷம்.... உங்க வீடு வந்துடும் ஏன் இப்படி அழற""என்று ஆறுதல் செய்து வண்டியில் அழைத்து சென்றேன்..கொஞ்ச தூரத்திலே தொடர் செல் அழைப்பு.நிறுத்தி பேச;"பாப்பா ரொம்ப அழுவுது சீக்கிரம் வாங்க"என்றார் மாமா.ரயில் பயணத்தின் கலைப்பு;இடம் மாற்றம்;பல கைகள் தூக்கியது ; என பல்வேறு சிற‌மங்களால் அவள் அழுதிருக்கலாம்.நாங்கள் விரைந்து சென்றோம்.எங்களை கண்டவுடன் சிறிது அமைதியானாள்.இங்கும் நிலவினை காட்டித்தான் அவள் அழுகையை நிறுத்தினேன்.மறுநாள்.....

இரண்டு வாரத்தில் பணியில் திரும்ப சேருவதே சரி என்று ஓர் திடிர் முடிவை என் மனைவி எடுக்க;தாயும் சேயும் ஊரிலே தங்க நான் மட்டும் பெங்களூர் திரும்புவதாக முடிவாயிற்று.இப்பொழுது என் மனம் கலங்க துவங்கியது.அவள் வேலைக்கு சேர்ந்த பிறகு நாங்கள் பிரியத்தான் வேண்டும்.ஆனால் அதனை நான் திடிரென எவ்வாறு எதிர்கொள்வது என்று அறியாது தடுமாறினேன்.யாரிடமும் காட்டிக் கொள்ளாமல்.

ஆணிற்கு பிரிவுகளும் , தனிமையும் சகஜமென்றும் ; அது புருஷ லட்சணமாகவும் கருதப்படும் சமூகத்தில்;நான் அதனை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறேன்.எனது தனிமை பற்றின கவலை மற்றவர்களால் உணவு பூர்வமாக மட்டும் கருதப்படுகிறதே தவிற உணர்வுப்பூர்வமாக அது கறுதப்படுவதேயில்லை.வெளிநாடுகளில் பிள்ளையை விட்டுப் பிரிந்து தனியே வாழ்போரை எடுத்துகாட்டி ஆறுதல் சொல்வோரிடம்.....ஆணிற்கும்,பெண்ணிற்கும் பிள்ளை விட்டு பிரியும் வலி ஒன்றுதான்;பெண் அழ தெரிந்தவள் ; ஆண் அழ தெரியாதவன் என்பதே ஒரே வித்தியாசம் என்று நினைத்ததை சொல்லாமல் எனக்கு இதெல்லாம் பிரச்சனை இல்லையென்று ஒரு பொய்யான முகமூடியை அணிந்து கொண்டேன்.வெறும் மெளனத்துடன் இரவு ரயில் ஏறி சற்று என் சுற்றம் உணரும் போது;என் அருகில் மகனை ரயில் ஏற்றிவிட வந்த தந்தை ;அவனிடம் "தம்பி இப்படி ஏன்யா தனியா கஷ்டப்பட்ற நீ உம் நு ஒரு வார்த்தை சொல்லு உடனே உனக்கு பொண்ணுப் பாத்துடலாம்" என்றார்...

எனக்கு என் ப்ளாஷ்பேக் ஞாபகம் வந்தது......

13 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. Finishing touch sema :) last para romba rasichu padichen :) arumaya ezhuthi irukeenga thozhare :) typing mistake konjam iruku, atha correct pannidunga. ungal thanmayin vali unara mudinthathu.

  ReplyDelete
 3. tnx mathi and SHiva..u ppl are making me to write more...

  ReplyDelete
 4. I love the last para, it is soo true...

  ReplyDelete
 5. குடும்ப வாழ்கையின் முதல் பத்தியில் இருக்கிறாய் நண்பா நான் எப்போதும் சொல்வதுபோல் நீ பதிந்த இந்த உண்மை கதை பதிவு என்னையும் தந்தையாக்கி பார்க்கிறது நானே அதை உணர முடிந்தது என் நினைவு இப்போ என் அண்ணன் மகள் ரித்துவிடம் சென்றுள்ளது.........

  ReplyDelete
 6. I liked it Prabhu,the incident was narrated very precise.. Enna ulagamada ithu??? The pain is not only for you Prabhu, its even your parents, who expect their son & his family to be at home with them. We miss everything for one reason - Kasu, Panam, Thutu, Money.....

  ReplyDelete
 7. Prabhu an awesome story....
  A very good self-illustrated story.
  The story explores the theme of personal responsibility. Simple thoughts and language used does not make the story difficult to read.

  There is a sense that this actually happened . The language and the characters’ suggest this.
  One nice touch is that author sees himself in a regular mirror and barely recognizes the person. This sets up the reader to value responsibilities in life.

  This is a classic story for me. It is a collection of memories, of thoughts of a young, yet real, man- Human. The story presents a tough point of view about daily life , you had one of the most strong opinions I have ever read. I specially enjoyed the dynamics of the story and the inner emotions and thoughts, daily activities, encounters and facts about the pain of parents.

  In my personal opinion, Can improve in description of the places, dialogues and the sequence of actions.

  ReplyDelete
 8. சுவாரஸ்யமான சம்பவங்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்டு இருந்தது.. தாய் பாசத்துக்கும் , தந்தையின் பாசத்துக்கும் இடையேயான வேறு பாடு சப்டெக்ஸ்டாக இருந்தது அருமை..சொல்ல வந்த கருத்தும் அருமை,,,எல்லோருக்கும் பொருந்த கூடிய கரு

  ஆனால் இன்னும் கொஞ்சம் உரையாடல்கள் ,சிந்தனையோட்டங்கள் , விவரிப்புகள் தேவை.. சில இடங்களில் ( வெகு சில இடங்களில் ) கட்டுரைபோன்ற தொனி தெரிகிறது..இதை தவிர்க்க வேண்டும்

  ReplyDelete