Monday, January 12, 2015

2014 - வாசிப்பு - இத்தோடு நிறுத்திக்கலாம்

33.மரம் - ஜீ.முருகன்


இந்த நாவலைப் பற்றி இரு வேறு கருத்துக்கள்  என்னிடன் இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை கடவுள் பாதி மிருகம் பாதி தான்.நாவல் திருவண்ணாமலையில் நடக்கிறது , காலத்தால் அங்கு நடைபெறும் மாறுதல்களை கதாப்பாத்திரங்கள் பேசுகிறது , உறவுகள் , பந்தங்கள் , அதன் முரண்பாடுகளும் என நகர்கிறது.நாவலில் முக்கியமாக இரண்டு நபர்களைப் பற்றி பேச்சு அடிக்கடி வருகிறது , அதில் ஒருவர் கோபாலர் எனும் சந்நியாசி(இந்த கதாப்பாத்திரம் ரமணரைத் தான் சொல்கிறாரா என்று தெரியவில்லை) மற்றும் நீட்ஷேவின் வார்த்தைகள்.கோபாலர் ஆசிரமம் அடிக்கடி இதில் வரும் , அவர் அங்குள்ள மரத்தில் தூக்குமாட்டி இறந்தவிடுகிறார் என்று சொல்லப்படுகிறது ஆதலால் அந்த மரத்தை மக்கள் கோபாலராக நினைக்கின்றனர்.அவரது இறப்பிற்கு பிறகு அந்த ஆசிரமத்தின் வேறுபாடுகளும் பேசப்படுகிறது.அத்தோடு பொருளாதார சந்தை எப்படி ஆன்மீகத்தையும் வியாபரமாக மாற்றுகிறது என கதாப்பாத்திரங்கள் உரக்கப் பேசுகிறது.அந்த ஆசிரமத்தின் ஒரு விஞ்ஞானி ஒருவரும் வந்து சேருகிறார் , அவர் மூலம் எப்படி விஞ்ஞானத்தின் மீதும் சாடுகிறார்கள்.தவிர்க்கமுடியாத வார்த்தகளாக அவை நம் மனதில் வாசிக்கும் போது பதியத்தான் செய்கிறது.மேலும் முதன்மையாக உறவுகளையும் அதிலுள்ள சிக்கல்களையும் பேசுகிறது.நாவல் செம என்று சொல்லும் தருணத்தில் நாவலின் வரும் ஏற்றுக்கொள்ளப்படாத(என்னால்) விஷயம் மனதை வதைக்கிறது. கலாச்சாரம் எனும் போர்வையில் சிக்க விரும்பாத மனிதர்களின் கதை என்றாலும் அவர்களும் தங்களது வாழ்வில் மிகுந்த மன உலைச்சலுக்கே ஆளாகின்றனர் என்றே தோன்றுகிறது.கலாச்சாரத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கும் அதை மீறுபவர்களுக்கும் குறைந்தப்பட்ச வித்தியாசமே தெரிகிறது.அவர்களது வாழ்வு சுதந்திரம் நிறைந்ததாக தெரிந்தாலும் அது வெறும் பிம்போமோ என தோன்றுகிறது.முருகனின் எழுத்து நடை ரசிக்க வைத்தாலும் நாவலை முடிக்கும் போது ஒரு குழப்பமான மனநிலையே என்னிடம் இருந்தது.குறிப்பு : இதில் A விஷயங்கள் நிறைந்திருக்கிறது.


34.பூமியின் பாதிவயது - அ.முத்துலிங்கம்


வாசிப்பில் அதிகம் சோகம் கலந்திருப்பதாகவே இருக்கிறது.மகிழ்வை பதிவு செய்யும் இலக்கியம் மிகவும் குறைவே.அப்படி பதிவு செய்வதில் அ.முத்துலிங்கத்திற்கு எப்பொழுதும் ஒரு இடமிருக்கும்.அவரது 3 நூல்கள் படித்திருக்கிறேன்.அதில் அனைத்திலும் நான் ரசித்த மிகவும் சாதரண நிகழ்வை அழகாக பதிந்திருப்பார்.அந்த வகையை சார்ந்தது தான் இந்தப் புத்தகம்.இது அவர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே.20 சதவித கட்டுரைகள் எனக்கு புரியவில்லை , அதை தவிர்த்து மற்றவை அனைத்தும் செம என சொல்ல வைத்தது.GPS device வைத்து technical விவரம் இல்லாது 2 பக்க கட்டுரை எழுதியிருக்கிறார்.ஒரு எளியவன் முதன் முதலாக அந்த சாதனைத்தை பார்ப்பதிலிருந்து அதை முழுவதுமாய் உப்யோகமாய் பயண்படுத்தும் வரை.ஒரு கருவி அவனது வாழ்வில் எப்படி அங்கமாய் ஆகும் வரை என சொல்லலாம்.நான் மிகவும் ரசித்த கட்டுரை அது.அதேப் போன்று தமிழ் யுனிகோட் பற்றி ஒரு கட்டுரை , ஆவண செய்யவேண்டிய விஷயம்.இது மாதிரி பல ருசிகர கட்டுரைகள் இருக்கின்றது.கொஞ்சம் பொறுமையாக படித்தால் மிகவும் ரசிக்கலாம்.மொழிப்பெயர்ப்புகள் என்ற தலைப்பில் வரும் சில கதைகளும் , சில புத்தகங்கள் பற்றி வரும் கட்டுரைகளும் புரியாமல் சலிப்பை ஏற்படுத்தியது.மற்ற அனைத்தும் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது.

35.அகம் புறம் - வண்ணதாசன்


இந்தப் புத்தகம் ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கியது . ஏனென்றால் வண்ணதாசனின் எழுத்துக்கள் போதுமான நேரம் கிடைத்தால் தான் என்னால் படிக்க முடியும்.ஆதலால் தக்க நேரத்திற்காக காத்திருந்தேன்.தனிமையில் இரண்டு நாள் கிடைத்தது.சரியென வண்ணதாசனுக்கு அதை கொடுத்துவிட்டேன்.ரொம்ப பொறுமையாகவும் , ரசித்தும் வாசித்தேன்.அவரது சின்ன சின்ன அனுபங்களை அழகாக பதிந்திருந்தார்.அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றியே அதிகம் இருந்தது.விதவிதமான மனிதர்களைப் பற்றி அவர் பேசும் போது நமது நினைவின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் நபர்கள் நினைவிற்கு வருகின்றனர்.திங்கள் கிழமை மனிதர்கள் என அவர் சில இடங்களில் கிழமைகளை முன்னிறுத்தி மனிதர்களை குறிப்பிடுவது ரசிப்பதாக இருந்தது.வாசிக்கும் போது சண்டையிட்ட நண்பருடனோ ,ரொம்ப நாளாக பேசாம இருந்திருக்கும் உறவிடனோ பேச வேண்டும் என தோன்றும் . (எல்லாம் சொந்த அனுபவம் தான்).


36.அறம் - ஜெ மோ


ஜெ மோ வின் மிகச் சிறந்த படைப்பென அனைவரும் சொல்லும் புத்தகம்.எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.நாயகராக வாழ்ந்த சில மக்களின் வாழ்வினை சொல்லும் புத்தகம்.இந்தப் புத்தகத்தினைப் பற்றி யாருடனாவது பேசினாலும் அவர்கள் சொல்லும் முதல் கதை "யானை டாக்டர்" தான்.இணையத்திலும் கிடைக்கிறது.ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் பற்றின கதை தான் . மிக முக்கியமான கதையிது.யானைகளுக்காக , அதன் உரிமைக்காக , அதற்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடி , தன்னால் முடிந்த உரிமைகளை அதற்கு கிடைக்கச்செய்த ஒருவரின் கதை.யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடக்கச் செய்தது இவரது உழைப்பு தான்.இன்னொறு கதையில் உலக பாஸ்போர்ட் என அமைப்பும் அதிலிருந்த ஒரு வெளிநாட்டவர் இந்தியாவிலே இருக்கிறார்.அமெரிக்காவில் எல்லாமே ரகசியமாய் உலவு பார்க்கப்படுகிறது , இந்தியாவில் தான் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறேன் என்று வரும்.இந்த வரிகள் சற்றே யோசிக்க வைக்கிறது , தற்பொழுது நம்ம ஊரில் இந்த வரிகள் ஒற்றுவருமென தோன்றவில்லை.காலம் நம்மை எவ்வாறு மாற்றிகிறது என்றே தோன்றுகிறது.வாசித்த சில மாதங்கள் ஆகிவிட்டன , இன்னும் இந்தப் புத்தகத்தின் நிறைய கதைகள் நினைவில் இருக்கிறது.

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் என பட்டியல் ஒன்றை தயாரித்தால் , இந்தப் புத்தகத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.


37.கனவுத் தொழிற்சாலை - சுஜாதா


சினிமா உலகத்தினைப் பற்றின நாவல்.ஒரு சினிமா நாயகன்-சினிமா நாயகி.அவர்களின் காதல் , திருமணம் .நாயகனின் காதல் அதலால் ஏற்படும் மனக்கசப்பு என நாம் தமிழ் சினிமாவில் பார்த்த கதை தான்.காலம் கடந்து நான் படிப்பதால் அனைத்தும் ஏற்கனவே திரைப்படங்களில் பார்த்தவையாகவே இருந்தது.ஆனால் சுஜாதாவின் வரிகள் பக்கங்களை பறக்கச் செய்கிறது.நாவலில் எந்த பக்கமும் சலிப்பில்லாமல் செல்கிறது.சினிமா உலகின் பற்றின படைப்பு என வரும்போது அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள் என்ற நூலும் , இந்த நூலும் இலக்கிய உலகில் சொல்லபடுவது.ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த நூல் சினிமா உலகில் நாயனாகவும் , நாயகியாகவும் கொடிக்கட்டி பறக்கும் நபர்களைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறது.அவர்களுக்குள் நடக்கும் மனப் போராட்டங்களையும்,வெற்றியையும், தோல்வியையும் பற்றி பேசுகிறது.ஒரு கிளைக் கதையாகத் தான் துனை நடிகை ஒருவர் வருகிறார்.அத்தோடு சினிமாவை உண்மையாக நேசிக்கும் ஒருவரும் வருகிறார்.இன்னும் நிறைய சினிமாவைப் பற்றி பேசியிருக்கலாமோ என்று தான் தோனியது.


39.சுமித்ரா - கல்பட்டா நாராயணன் [தமிழில் : கே.வி.ஷைலஜா]


முகப்புத்தகத்தைப் பற்றி எவ்வளவு வசைப்பாடினாலும் , அவ்வப்போது சில அரிய நூல்களை இதுத்தான் எனக்கு அறிமுகப்படுத்துகிறது .அப்படி எனக்கும் அறிமுகமான நூல் தான் இந்த சுமித்ரா(மலையாள மொழிப்பெயர்ப்பு). இறப்பு என்பது ஒரு முடிவு என்பதாலோ என்னவோ 2004ல் நான் வாசடித்த கடைசி நாவலாக இது இருந்திருக்கிறது.ஏனென்றால் இந்த நாவல் ஒரு இறப்பை தான் கதைக் களமாக வைத்திருக்கிறது.சுமித்ராவின் இறப்புத் தான் இந்த நாவல்.இறந்ததும் அவளை இறுதியாக காண வந்தவர்களின் மன ஓட்டத்தைத் தான் சொல்கிறது.அவளது கணவன்,மகள்,அவளிடம் நகை கொடுத்த வைத்தவள்,பாத்திரம் விற்கும் வியாபாரி,மகளின் தோழி,கல்லூரி தோழி,பக்கத்து வீட்டு பையன் என ஒவ்வொருவரின் மனதில் ஓடும் காட்சிகளின் தொகுப்பே இந்த நாவல்.அவள் இறந்ததை ஒவ்வொருவரையின் மன ஓட்டத்தில் மீண்டும் நாம் நினைவுப்படுத்திக் கொள்ள முடியும்.இறந்த வீடு எப்போதும் எவ்வளவு சத்தமாக இருந்தாலும் இறந்தவரின் கட்டுப் போட்ட முகத்தையோ,அந்த கால் கட்டை விரலையோ,சலனமில்லாத கைகலையோ பார்க்கும் போது மனம் அவரது நினைவலைகளை எல்லையற்று கடல் போல உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.இறந்தவரோடு பேசிய வார்த்தைகள் நினைவில் ஆழத்தில் இருந்தாலும் எப்படியோ உயிர் பெற்று அந்த ஒரு நிமிடத்தில் அவரோடான உறவை மீட்டெடுத்து விடுகிறது.இந்த நாவலிலும் அப்படித்தான் ஒவ்வொருவரும் சுமித்ராவை நினைவுகளில் மீட்டெடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.அவரோடு நட்புடனோ அல்லது பகையுடனோ.வாசிக்கும் போது நினைவில் நான் சந்தித்த மரணங்கள் வந்துக் கொண்டேயிருக்கிறது.வாசித்து முடித்ததும் மரணத்தை , ஒரு இழப்பை இப்படி உருவகப் படுத்த இலக்கியத்தால் மட்டுமே முடியுமென தோன்றுகிறது.

இன்னும் சில புத்தகங்கள் இருக்கின்றன,ஆனால் அவை அனைத்தும் நினைவில் இல்லை.அந்தப் புத்தகங்களுக்கு அருகிலும் நான் தற்பொழுதில்லை.ஆதலால் 2014 நான் வாசித்த நூலின் பற்றின பகிர்வுகளை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.


மற்றப் பதிவுகள்






4 comments:

  1. ரொம்ப நல்ல பகிர்வு; கூடவே பதிப்பகங்களின் பெயரையும் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் :)

    ReplyDelete
  2. மிக அருமையான முயற்சி - ஒரு மாரத்தான் போல உங்கள் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து விட்டிருக்கிறீர்கள் :-) பலரையும் இது இன்னும் வாசிக்க ஊக்கப்படுத்தும். அதே நேரம் எங்கே ஆரம்பிப்பது என்று குழப்பம் வந்தாலும் கை கொடுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Thanks Mathi . சுமித்ரா is from ur review.

      Delete