பதிவுகளைத் தொடர்ந்து 2014ல் நான் வாசித்த சில ஆளுமைகள் பற்றின புத்தகங்களைப் பற்றி இதோ..
10.என் கதை - நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞரின் "என் கதை" ஓரு சுயசரிதை புத்தகம் தான்.சுயசரிதை புத்தகம் என்றதும் மொக்கையாக இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றிய புத்தகம் .ஒரு சில பக்கங்களைத் தவிர சுவாரஸ்யங்கள் நிறைந்த புத்தகம் நாவலை படிக்கும் மனநிலை தான் இருந்தது.அவரது சிறு வயது முதல் தொடங்கி , நண்பர்கள், அவரது வேலைத் தேடும் படலம் , அரசியல் ஈடுபாடு,அதன் தொடர்பான பயணம் என்று நகர்கிறது . எனக்கு அதில் மிகவும் பிடித்தது அவர் திருக்குறளுக்கு உரை எழுதும் தருணம் . ஏற்கனவே இருக்கும் உரை சாதாரண மக்களை சேருவதில் மிகுந்த சிரமமாக இருக்கும் நிலையில் தானே எழுத முன்வருகிறார்.அதைப் பற்றின எனது பதிவு இங்கே.
11.கணித மேதை இராமானுஜன் - ரகமி
பொதுவாக எண்கள் தான் ஒரு மனிதனனின் அடையாளமாக இருக்கும்.பள்ளி,கல்லூரியில் ஏன் அலுவலகத்தில் கூட எண்கள் தான் நமது அடையாளம்.ஆனால் 1729 என்ற எண்ணிற்கு ஒரு நபரின் பெயரை அடையாளமாகச் சூட்டியிருக்கிறார்கள்.ஆமாம் ,அந்த எண்ணின் பெயர் ”ராமானுஜன் எண்”. ராமானுஜன் பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 22) , இணையத்தில் சில பகிர்வுகள் வந்தது.அப்பொழுது உலாவியதில் கிடைத்த தகவல்தான் இது.இதைப் படித்ததலிரிந்து இராமானுஜன் பற்றி அறிந்துக் கொள்ள தேடிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது தான் இந்தப் புத்தகத்தின் அறிமுகம் கிடைத்தது.இராமானுஜன் பற்றி முழுமையான தகவல்கள் இருந்தது.ஆசிரியர் மிகைப்படுத்தி சொன்ன தகவல்களை திருத்தியும் கொடுத்திருந்தார்கள்.இராமானுஜன் பற்றி தெரிந்துக்கொள்ளும் அதே நேரத்தில் அவரது மனைவி ஜானகி அம்மாள் பற்றின குறிப்புகள் மிகவும் முக்கியமானது .அவரது தனிமை , இராமானுஜத்தின் இறப்பிற்கு பின்பு அவரது போராட்டம் நிறைந்த வாழ்வினை வாசிக்கும் போது அவர் நம் மனதில் நாயகராக உருமாறுகிறார்.
இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது , அதன் தொடர்பான எனது பதிவுகள் :
1729
M.G.R பற்றி ஒரு துணுக்குச் செய்தி
Congruences
12.நாயகன் பெரியார் - அஜயன் பாலா
முத்துகுமாரின் பெரியார் புத்தகம் தான் முதலில் கிடைத்தது , அதில் பெரியார் பற்றின தகவல்கள் அப்பட்டமாக இருந்ததாக ஒரு உணர்வு.இந்தப்புத்தகம் பெரியாரை நாயகராக மட்டும் சித்தரிக்கிறது .பெரியாரின் பிறப்பு , அவரது வளர்ப்பு தாய் , இளமையின் துள்ளல் , அப்பாவிடம் நடக்கும் சண்டை அதனால் ஏற்படும் அவமானம்,காசி பயணம் அங்கு ஏற்படும் கடவுள் வெறுப்புக்கான காரணங்கள் , அரசியல் அறிமுகம் , ராஜாஜியின் நட்பு , காங்கிரஸிலிருந்து விலகல் , வைக்கம் போராட்டம் , தி.க கட்சி,அண்ணா,வீரமணி , கலைஞர் போன்றோரின் தொடர்பு , தாடியின் ரகசியம்,அவரது இரண்டாவது திருமணம் என தகல்வகளை பகிர்கிறார் ஆசிரியர்.சுருக்கமாக பெரியாரை தெரிந்துக்கொள்ள உதவும் புத்தகம்.அழகான பெரியார் ஓவியங்களும் இதில் உள்ளது.சிறுவர்களுக்கு பெரியார் பற்றின தாககத்தை ஏற்படுத்த இந்தப் புத்தகம் உதவும்.
13.பெரியார் தன் வரலாறு - பெரியார்
[இணையத்தில் கிடைத்தது]பெரியாரே எழுதிய வரலாறு , முழுசாக இருக்கும் என்று ஆசைப்பட்டேன் . ஆனால் அவரது வாழ்வில் நடந்த இரண்டே சம்பவங்களைப் பற்றி தான் சொல்லியிருப்பார்.பெரியார் வாழ்வில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனை என்று சொன்னால் அது அவருக்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய அவமானம் தான்.அவரது தந்தை பொது இடத்தில் பெரியார் மீது காரி உமிழ்ந்து , செருப்பாலும் அடித்திருப்பார்.அதற்கு அஜயன் பாலா புத்தகத்திலும் , முத்துகுமார் புத்தகத்திலும் சொல்லும் காரணங்கள் சரியாக சொல்லவில்லை எனத் தோன்றும்.முத்துகுமார் புத்தகத்தில் ,பெரியாரின் முதல் குழந்தை பிறந்து 6 மாதத்தில் இறந்து விடுகிறது , சோகத்தில் அவர் குடிக்கிறார், வேசி வீட்டிற்கும் செல்கிறார் அதனால் ஆத்திரம் அடைந்து அவர் தந்தை அடித்ததாக வரும். பெரியாரை சமாதணம் செய்யாமல் ஏன் அவரது தந்டை அப்படிச் செய்தார் எனத் தோன்றும்.ஆனால் பெரியாரே சொல்லும் போது அதன் உண்மை நிலை உணர முடிகிறது.பிராமிணர்கள் 200 பெருக்கு விருந்து நடந்துக் கொண்டிருக்கிறது , அப்பொழுது போலிஸ் தேடும் ஒருவனை பெரியார் துரத்திப் பிடிக்கிறார்.அவன் அந்த விருந்து நடக்கும் இடத்தில் ஓடி ஒளிகிறான்.அவர் அங்குச் சென்று அவனை பிடித்து விடுகிறார்.அந்த விருந்தை யாரும் பார்க்க கூடதாம் , இவர் அங்குச் சென்று ஓடி அவனைப் பிடித்ததில் விருந்து முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது.அதனால் அவரது தந்தைக்கு மிகவும் கோபம் , சரமாரியாக அடித்துவிடுகிறார்.
இந்தப் புத்தகத்தில் இரண்டாவதாக அவர் பேசுவது , ராஜாஜியின் நட்புடன் காங்கிரஸில் அவரது செய்ல்பாடுகளைப் பற்றி.அந்தக்கால அரசியல் நிலைப்பாடுகள் என்பதால் நிறைய விஷயங்கள் எனக்குப் புரியவில்லை.
14.வன வாசம் - கண்ணதாசன்
இது ஒரு முக்கியமான புத்தகம் , கண்ணதாசனின் சுய சரிதாம் தான் இது . கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.படிக்கும் போது கண்ணதாசன் வாழ்வை தெரிந்துக் கொள்வதை விட தி.க வின் பிளவைப் பற்றி அறிந்துக்கொள்ள மிகவும் உதவும் புத்தகம்.அவர் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் வாசிப்பது அவசியம்.ஏனென்றால் அவரது தோல்வியைப் பற்றி மட்டும் பேசுகிறார்.டால்மியாபுரம் போராட்டம் கலைஞர் வாழ்வின் ஒரு முக்கியமானது அதைப் பற்றின தகவல்கள்,சம்பத் அவர்களைப் பற்றி,பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் அண்ணாவின் நிலைப்பாடு என பல அரசியல் தலைவர்கள் பற்றின ஒரு விமர்சணமாக இந்தப் புத்தகம் இருக்கிறது. வேகமாக படித்துவிடலாம் , அப்படியொரு எழுத்து நடை.அவரது அந்தரங்கத்தை வெளிப்படையாக சொல்வது வாசகனை தொடர்ந்து வாசிக்கச் செய்கிறது.அதைத்தவிர அதிகம் அவர் கலைஞரை சாடியிருக்கிறார்.ஒரு பக்கம் அவர் கலைஞர் மீது சொல்லும் குற்றச்சாட்டெல்லாம் இவர் தோல்விகளை கண்டதால் மட்டுமே சொல்கிறார் என தோன்றுகிறது.படித்து முடித்துவுடன் கலைஞர்,அண்ணா பற்றிய நமது மேலோட்டமான எண்ணங்கள் மாறும்.
15.மன வாசம் - கண்ணதாசன்
திமுகவில் தான் இருந்ததை வன வாசமாக சொன்ன கண்ணதாசன் காங்கிரஸில் தனது நிலையை மன வாசமாக சொல்கிறார்.ஆனால் எனக்கு அவர் இதில் அதிகம் பொலம்பியதாக தோன்றியது.அவர் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்துக் கொண்டேயிருந்தார்.காமாராசரையும் விட்டு வைக்கவில்லை.காமராசர் தன்னை விட யாரும் மேலும் வளராமல் பார்த்துக்கொள்வார் என விமர்சிக்கிறார்.இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை.ஆனால் அடி மனதில் இந்த வார்த்தை பதிந்து விட்டது.வன வாசத்தை விட சிறிய புத்தகம் தான் ஆனால் கடைசி சிலப் பக்கங்கள் நம்மை சலிப்படையச் செய்கிறது.அவரது வெளிநாட்டுப் பயணம் , கலைஞர்களோடு சில விழாக்களுக்கு செல்வது , அது இதுவென செல்கிறது.படிக்க முடியாமல் வைத்துவிட்டேன்
16.பகத் சிங் துப்பாக்கி விடு தூது - முத்துராகவன்
ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை ஒன்று படித்தேன்.சிறையில் பகத் சிங் எழுதிய 4 புத்தகங்கள் நமக்கு கிடைக்காமல் போன தகவல்களை வைத்து எழுதிய கதை.பகத் சிங் வாழ்வை படிக்க வைத்த கதை.பகத் சிங்கின் பிறப்பு , அவரது விடுதலை உணர்வு.அவரது நண்பர்கள்.முக்கியமாக ராஜ குரு என நண்பர்.அவருக்கு பகத் சிங் மீது இருந்த சிறு பொறாமை என நுட்பமான தகவல்களை இந்தப் புத்தகம் தருகிறது.லாலா லஜுபது ராயின் மரணம் தான் பகத் சிங் வாழ்வின் ஒரு திருப்புமுனை என சொல்வேன்.அதற்கு பழிவாங்கும் நடவடிக்கைகள் தான் அவரை முழு போராளியாக மாற்றியது.சுக்தேவ் , சந்திரசேகர்,Ashfaqulla Khan என அவரது குழுவினரைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது.டெல்லியில் குண்டு வீசி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறார்.அதற்கு அவர் தயாராகும் நிலைப் பற்றியும் , அதன் பின் அவரது சிறை வாழ்வு அங்கு நடக்கும் உண்ணாவிரத போராட்டம் , அதில் இறக்கும் நண்பர்.அங்கு தொடரும் அவரது வாசிப்பும் எழுத்தையும் பற்றி பேசிவிட்டு தூக்கு மேடையுடன் முடிகிறது
அவரது இறப்பிலும் சில ரகசியங்கள் மறைந்திருப்பதாக தகவல்கள் இருக்கின்றன.அதைப் பற்றியும் இந்தப் புத்தகம் பேசுகிறது.காந்தியைப் பற்றி எவ்வளவு உயரிய எண்ணங்கள் மனதில் இருந்தாலும் , காந்தி நினைத்திருந்தால் பகத் சிங்கை காப்பாற்றி இருக்கலாம் என்ற வரி மட்டும் மனதில் அவரது பிம்பத்தை உடைத்துக் கொண்டேயிருக்கிறது.
பகத் சிங் பற்றித் தெரிந்துக்கொள்ள உதவும் நல்ல புத்தகம் இது.
மற்ற புத்தகங்களைப் பற்றின பதிவும் மேலும் தொடரும்.....
No comments:
Post a Comment