Monday, December 26, 2016

வாசிப்பு 2016 - சிறுவர் இலக்கியச் சிந்தனைகள்

சிறுவர்களுக்கான இலக்கியத்தை சிறுவர்களின் வயதிற்கேற்ப‌ இரண்டாக பிரித்தல் வேண்டும் என்று நண்பர் விழியன் அடிக்கடி சொல்வார். எட்டு வயது வரை உள்ள சிறுவர்களுக்கானது "குழந்தை இலக்கியம்" என்றும் , 8 முதல் 14 வரையில் உள்ளவர்களுக்கானது  "சிறுவர் இலக்கியம்" என்றும் பிரித்திடல் வேண்டும். அதே போன்று "தமிழ் விமர்சன" இலக்கியத்தில் "சிறுவர் இலக்கிய விமர்சனம்" என்று தனிப் பிரிவையையும் உருவாக்கிடல் வேண்டும்.அந்த பிரிவில் சேர்க்கப்பட வேண்டியவை தான் கீழே உள்ள புத்தகங்கள். ஆசிரிய‌ர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் மற்றும் சிறுவர்கள் சார்ந்து இயங்கும் நண்பர்களுக்கும் இதனை பரிந்துரை செய்கிறேன். இந்தப் புத்தகங்கள் மூலமாக சிறுவர் இதழ்கள் பற்றின தரவுகள் நிறைய கிடைத்தன‌. அதில் முக்கியமான ஒன்று 1950 களில்,மாதம் 50 தமிழ் சிறுவர் இதழ்கள் வெளியாகியுள்ளன‌ என்பது தான். இன்று எத்தனை இதழ்கள் வெளிவருகின்றது என்ற கேள்வி தான் பஞ்சுமிட்டாய் இதழாக உருமாறியது.

3. தமிழ்க் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும் - சுகுமாரன் 

சென்னையில் எழுத்தாளர் விழியன் இல்லத்தில் சிறுவர் இலக்கியம் சார்ந்து ஒரு நாள் பட்டறை நடந்தது , அப்பொழுது அறிமுகமான புத்தகம் தான் இது . சுகுமாரன் அவர்களும் அங்கு வந்திருந்தார். செம ரகளையான புத்தகம். தமிழ் சிறுவர் இலக்கியத்தின்வளர்ச்சி,அதன் போக்கு,தற்பொழுதைய நிலை,சிறுவர் இலக்கியத்தின் பிரிவுகள்,இதழ்கள் என அனைத்து அம்சங்கள் பற்றியும் விரிவாக பேசுகிறார் சுகுமாரன். ஒரு நல்ல அரசு,சிறுவர்களுக்கான உலகத்தினை கட்டமைப்பதில் என்னென்ன‌ செய்திடல் வேண்டும் என்ற கேள்விக்கு நல்ல நூலகங்கள்,ஒவ்வொரு நூலகங்களிலும் சிறுவர்களுக்கான பிரிவு,சிறுவர்களுக்கான நிகழ்வுகள்,சிறுவர்களுக்கான  திரையரங்குகள் என்று நீண்ட பட்டியலை தருகிறார். இவை அனைத்தும் தமிழகத்தில் இருக்கிறதா,ஏன் அதற்கான எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதைப் பற்றியும் பேசுகிறார்.

தற்பொழுது யார் யார் சிறுவர் இலக்கியத்தில் இயங்குகின்றனர்,சிறுவர் இலக்கியத்தில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு எத்தகையது,உண்மையில் சிறுவர்களுக்கான படைப்புக‌ள் தான் வருகிறதா என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. காலம் மாறுகிறது சிறுவர்களின் ரசனையும் உலகமும் ஏகப்பட்ட மாற்றங்களை சந்தித்துவிட்டன‌ ஆனால் சிறுவர் இலக்கியம் மட்டும் மாறாமல் வள்ளியப்பா ஏற்படுத்திய பாணியிலே பயணிப்பதை சுட்டிக் காட்டுகிறார்.

"குழந்தை இலக்கியத்தில் குழந்தையின் உணர்வுகளும் எண்ணங்களும் செயல்களுமே வெளிப்பட வேண்டும். ஆனால் வெளிப்பட்டதெல்லாம் குழந்தை எழுத்தாளரின் எண்ணங்களும் உணர்வுகளுமே !"

என்று சிறுவர் இலக்கியம் சிறுவர்களிடமிருந்து அன்னியப்படிருப்பதையும் சாடுகிறார்.

4.சிறுவர் இலக்கியச் சிந்தனைகள் - பூவண்ணன்

சிறுவர் இலக்கியம் சார்ந்து வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். தமிழ் சிறுவர் இலக்கியம் எப்பொழுது தோன்றியது, அதன் ஆளுமைகள் யார்,அதன் வளர்ச்சி எத்தகையது, முதல் சிறுவர் இதழ் எது , இதுபோன்ற எண்ணற்ற‌ கேள்விகளுக்கு விடையாக அமையும். பாடல்கள்,கதைகள்,கதைப் பாடல்கள்,விடுகதைகள்,நாடகங்கள்,திரைப்படங்கள் என சிறுவர்கள் இலக்கியத்தின் பிரிவுகளில் தமிழில் வந்த படைப்புகளைப் பற்றின ஒரு விரிவான பார்வை இதில் உள்ளது.
அவ்வையின் ஆத்திச்சூடி உண்மையிலே சிறுவர் இலக்கியமா  அதைச் சார்ந்து நடந்த விவாதகங்கள்,சிறுவர் இலக்கிய எழுத்தாளர் சங்கத்தின் தோற்றம்,அதன் செயல்பாடு,வள்ளியப்பா எனும் ஆளுமையின் பங்கு என தமிழ் சிறுவர் இலக்கியத்தின் வரலாற்றை அழகாக சொல்கிறது. வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் , சில கருத்துக்கள் மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை தருகிற‌து.மற்றபடி சிறுவர் இலக்கியம் பற்றிய‌ புரிதலை தேடுவோருக்கு இது ஒரு சிறந்த புத்தகம்.

5.அழ.வள்ளியப்பா - பூவண்ணன்

அழ.வள்ளியப்பா...சென்ற தலைமுறை தமிழ் பெற்றோர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றின‌ பேச்சுக்கள் எழும் போதெல்லாம் வள்ளியப்பாவின் பாடல்களை
நினைவுகொள்கின்றனர். இந்தத் தலைமுறை பெற்றோர் பல‌ருக்கும் அழ.வள்ளியப்பா யார் என்பதே தெரியவில்லை. 90களில் டிவியின் தாக்கம் அதிகமானது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு  சினிமா அல்லாத சிறுவர்களுக்கான‌ தமிழ் பாடல்கள் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது வள்ளியப்பாவின் பாடல்கள் தான்.  "அணிலே அணிலே ஓடி வா"  , "தோ தோ நாய் குட்டி" , " மாம்பழமாம் மாம்பழம் " போன்ற பாடல்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

வள்ளியப்பா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் , ஆனால் சென்னையில் வங்கி பணியிலிருந்தார். சென்னையில் இருந்துக்கொண்டே புதுக்கோட்டையில் சிறுவர் இதழை கொண்டுவந்திருக்கிறார். அச்சு மட்டும் தான் புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது. அதற்கு முந்தைய வேலைகள் அனைத்தையும் சென்னையிலே செய்திருக்கிறார். மிகவும் மலைப்பாக இருக்கிறது. மாதம் 10 இதழ்கள் வெளிவர உறுதுனையாக இருந்திருக்கிறார். சிறுவர்களுக்கான படைப்புகளை மட்டுமல்ல , பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளார். இந்த வேகத்திலும் , படைப்புகளில் சிறுவர்களை திசை திருப்பும் எண்ணங்கள் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.ஒரு முறை தமிழ் சிறுவர் இலக்கியத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். (அதன் எதிர்ப்பு எப்படி முடிவுற்றது என்பதை தேடிட வேண்டும்.)

இந்தப் புத்தகத்தை வாசித்தப் பொழுது மனதில் ஓடிய எண்ணம் இது தான், "தனி மனிதராய் மனுஷன் எப்படியெல்லாம் இயங்கியிருக்கிறார்!" என்று. நல்ல நண்பர்கள் மட்டும் இருந்தால் போதும் நமது விருப்பங்களை கண்டிப்பாக உருமாற்றிக் கொள்ள முடியும் என்பது தான் வள்ளியப்பாவின் வாழ்வு எனக்கு சொல்வதாக தோன்றுகிறது.

Monday, December 12, 2016

வாசிப்பு 2016 - நீர் அரசியல்

இந்த (2016 ) வருடத்தில் எனது வாசிப்பு சிறுவர் இலக்கியம் சார்ந்தே அதிகமாக இருந்திருக்கிறது. கதை சொல்லல் நிகழ்விற்காக வாசிக்க ஆரம்பித்தது. பின்னர் அதுவே தேடலானது. தமிழ் சிறுவர் இலக்கிய போக்கு,அதன் விமர்சனங்கள்  என புத்தகப் பரிந்துரைகள் கிடைத்துக் கொண்டேயிருந்தன‌. சிறுவர் இலக்கியம் அல்லாது சிலவற்றையும் வாசித்தேன்,அப்படி இப்படியென இந்த வருடம் 40 புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். எனது புத்தகத் தேர்வுகளில் 50 சதவிதம் நண்பர்களின் பரிந்துரைகள் தான். ஆகையால் நானும் வாசித்த புத்தகங்களைப் பற்றிய‌ அறிமுகங்களை இங்கு பதிவு செய்கிறேன். என்னைத் தேடிவந்த புத்தகங்கள் உங்கள் இல்லக் கதவுகளையும் தட்டட்டும்.

முதல் பதிவாக , சமகால நீர் நிலையங்கள் சார்ந்து கடந்த வருடம் வெளியான‌ இரண்டு நாவல்களைப் பற்றி பகிர்கிறேன்.

1.மூன்றாம் நதி - வா.மணிகண்டன்

வா.மணிகண்டன் , பெங்களூரூவாசி . அவரது ப்ளாக் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். 2016ல் அவரது "மூன்றாம் நதி" நாவல் வெளியானது.இது பெங்களூரின் கடந்த 40 ஆண்டுகளின் கதை. நீர் மிகப்பெரிய‌ வியாபாரப் பொருள் இங்கே. அந்த வியாபாரத்தின் அரசியலை ஒரு பெண்ணின் கதை மூலம்

பேசுகிறது இந்த நாவல். நாவலை இரு வேறு பகுதியாக நான் பார்க்கிறேன். முதல் பகுதி IT  நிறுவனங்களின் வரவுக்கு முன்பிலிருந்து துவங்குகிறது.இந்தப் பகுதியில் கதையின் காலம் வேகமாக செல்கிறது. பெங்களூரின் மாற்றத்தை நாயகியின் வளர்ச்சியோடு சொல்கிறது.இரண்டாம் பகுதி மிகவும் நிதானமாக கதையின் மையத்தில் நம்மை உலாவ செய்கிறது.சாலையில் நீரை சிந்திக்கொண்டே செல்லும் தண்ணி லாரியின் காட்சியை கண்டிப்பாக இந்த நாவல் நமக்குக் கொண்டு வரும்.

நான் கல்லூரி முடித்து , சென்னைக்கு முதல் முதலாக வந்தப்பொழுது தண்ணீர் பாக்கெட் வாங்கவே சங்கடமாக இருக்கும்.மனம் வரவே வராது.இன்று அப்பார்ட்மெண்ட் மாத செலவு கணக்கை பார்த்தால் 60% தண்ணீருக்காக இருக்கிறது. போர் போட வசதியும் தொழிநுட்பமும் இருக்கிறது என்பதற்காக நகரத்து மக்களாகிய நாம்  கிடைத்த இடத்தில் எல்லாம் போர் போட்டோம் , ஆனால் சிறிது காலத்திலேயே தண்ணிர் வற்றியது . தண்ணீரை வெளியில் தான் பெரும்பாலான அப்பார்ட்மெண்டுகள் வாங்குகின்றன. அப்படி வாங்கப்படும் தண்ணீர் பற்றின கதையை வாசிக்கும் போது மனதினுள் குற்ற உணர்வு எழாமல் இல்லை.

2.முகிலினி - இரா.முருகவேள்

எனது அப்பார்மெண்டில், வாசிப்பு பழக்கமுள்ள நண்பர்களுடன் மாதம் ஒரு முறை கூடி புத்தகம் பற்றி பேசுவது வழக்கம். அப்படி ஒரு முறை சந்திக்கும் பொழுது எழுத்தாளர் முருகவேள் அவர்களை SKYPE மூலம் இணைத்தோம்.அற்புதமான சந்திப்பு அது.கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக எங்களது உரையாடல் சென்றது.முகிலினி நாவலுக்காக அவர் சந்தித்த சில விஷயங்களை எங்களுடன் பகிர்ந்தார். அவருடனான உரையாடல் முகிலினியை பற்றின ஆர்வத்தை அதிகப்படுத்தியது.500 பக்க நாவல் என்பதால் நல்ல நேரத்திற்காக காத்திருந்தேன். 5 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது.முகிலினியுடன் கைகோர்த்தேன்.

ஆறு , ஏரி என்றதும் இன்றைய நகரத்து சிறுவர்களுக்கு மனதில் வரும் காட்சி எதுவாக இருக்கும் ? கருப்பு நிற சாக்கைடையாகத்தான் கண்டிப்பாக இருக்கும்.பெங்களூர் ஏரிகளின் நகரம் , ஆனால் இன்றோ தினம் தினம் ஏரிகளைக் கடக்கும் போது மூக்கை மூடிக் கொள்கிறோம். பெங்களூர் ஏரிகள் போன்று தான் மோசமான நிலையில் இருக்கிறது பவானி நதியும் .  அதுவும் கண் முன்னே ஒரு நதி பயனற்றதாய் மாறுவதை பார்ப்பது என்பது கொடுமையானது. அப்படி நமது தலைமுறையில் பவானி கரு நிற தார் போன்று மாறி ஓடுயிருக்கிறது. அதற்கு காரணமாயிருந்த டெக்கான் ரேயான் (விஸ்கோஸ்) ஆலையின் தோற்றம் , வளர்ச்சி , மறைவு என ஒரு நூற்றாண்டின் வரலாற்றை பல்வேறு கோணத்தில் சொல்கிறது முகிலினி. இந்த ஆலையத்தை மக்களின் போராட்டங்களை கொண்டே மூடியிருக்கின்றனர்.10 ஆண்டுகளுக்கு முன்னர் தான் நடந்திருக்கிறது. ஆனால் இதைப் பற்றின எந்தவிதத் தகவலும் அறியாமலேயே தமிழனாய் இருந்திருக்கிறேன்.ஊடகங்களின் மூலம் சினிமாவும் க்ரிக்கெட்டும் என்னை வந்து சேர்ந்திருக்கிறது ஆனால் தண்ணீருக்கான மக்களின் இந்த மாபெரும் போராட்டம் என்னை வந்து சேரவில்லை.

சமகால வரலாற்றை வாசித்தது தனி அனுபவமாய் இருந்தது. காமராசர் , நம்மாழ்வார் என நான் அறிந்த நபர்களையும் , இந்தி எதிர்ப்புப் போராட்டம் , இயற்கை உணவின் சந்தையைப் பற்றியும் நாவலில் கடக்கும் பொழுது மனதின் சிந்தனை ஓட்டம் தனி சக்தி பெறுகிறது. ஒரு பெறும் நிறுவனம் மக்களை கையாளும் முறை , நிறுவனத்தை மக்கள் எதிர்க்கும் மனநிலைக்கு மாறிய பின்னனி ,   அதே நிறுவனம் மூடப்படும் போது மக்களின் மனநிலை , ORGANIC என்று மக்களின் பார்வை சற்றே திரும்பியதும் வியாபார அரசியல் எப்படி சிந்திக்கிறது என பல்வேறு தளங்களில் நாவல் செல்கிறது.

முகிலினியை பற்றி தனியாக பதிவு எழுதிட வேண்டும் , இங்கு இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.நண்பர்கள் யாராவது பரிந்துரைகள் கேட்டால் தற்பொழுது நான் முதலில் சொல்வது முகிலினையைத் தான்.இந்த வருடம் நான் வாசித்த சிறந்த புத்தகம் இது.

Saturday, December 3, 2016

சிகாகோவில் ஆடிப்பெருக்கு…

மலைகள் இதழில் வெளியான எனது கட்டுரை - http://malaigal.com/?p=7406
வழக்கமான காலை தான்,தங்கும் இடத்திலிருந்து அலுவலகம் நடக்கும் தூரம் என்றாலும் அந்தக் குளிர் 4 அடிகள் எடுத்து வைப்பதற்குள் எனது எழும்புகளையும் காது மடல்களையும் தொட்டு இம்சை செய்துக் கொண்டிருந்தது.டிசம்பர் மாத குளிருக்கு இந்த மார்ச் மாதம் பரவாயில்லை.சிகாகோ நதி உரையாமல் அன்ன நடை போட துவங்கியிருந்தது.அன்றைய தினம் அலுவலகம் செல்லும் வழியில் இரண்டு மூன்று இடங்களில் செயற்கை நீருற்று புதிதாக முளைத்திருந்தது.அதுவும் பச்சை வண்ண நீருற்று.
“இப்போ தான் குளிரு லேசா குறைஞ்சிருக்கு,அதுக்குள்ள இவனுங்க அட்டகாசம் தாங்கல” என்ற மனதில் சிகாகோ வாசிகளை கடிந்துக் கொண்டே கடந்துச் சென்றேன்.மறுநாள் தான் உண்மை விளங்கியது.தனிமை ஒரு வரம் என்று சொல்ல நான் படைப்பாளி அல்ல.அது எனக்கு சாபமே.இருந்தும் புத்தகம்,திரைப்படம் ,அவ்வப்பொழுது நண்பர்கள் வீட்டில் விருந்து,ஒன்றாக வெளியே செல்வது என சமாளித்துக் கொண்டிருந்தேன்.அந்த மாதிரி தான் மறுநாள் காலை நண்பர் ஒருவர் 
“பாஸ்..காலையில் 9.30 மணிக்கு சிகாகோவுல ST. PATRICK’S DAY EVENT.வாங்க போகலாம் ” என்று அழைத்தார்.என்ன ஏதுவென புரியாமல் நானும் வரேன் என்று சொல்லிவிட்டேன். 
சரியாக 10 மணிக்கு கிளம்பினோம்,வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் தூரத்தில் சிகாகோ நதி.அங்கு தான் ஏதோ விசேசம் என்பதை தெருவிற்கு வந்ததும் புரிந்தது.அங்கும் இங்குமாக மக்கள் கூட்டம் அதுவும் பச்சை நிற அரை குறைஆடையில்.கூட்ட நெரிசலில் நுழைந்து நதியை நன்றாக பார்வையிடும் இடத்தில் நின்றுக் கொண்டோம்.அப்பொழுது தான் நண்பர் விளக்கம் சொன்னார்.“வருடத்திற்கு ஒரு முறை சிகாகோ நதியில் பச்சை வண்ண நிறத்தை கலக்குவார்கள்.நகரத்தின் எல்லைக்குள் உள்ள ஆற்றின் பகுதி முழுதும் பார்க்க பச்சை வண்ணமாக மாறிவிடும்.பார்க்க அழகாக இருக்கும்” என்றார்.அவர் சொன்னது போல் அந்த நிகழ்வு பார்க்க அழகாக இருந்தது.ஆற்று பாலத்திலும்,கரை ஒரங்களிலும் மக்கள் நிற்க , படகில் வந்த அந்தக் குழு 5 நிமிடத்தில் பச்சை வண்ண சாயத்தை ஆற்றில் முழுவதுமாக‌ கலந்துவிட்டார்கள்.இந்த தினத்தை RIVER DYEING DAY என்றும் கூறுகிறார்கள். 
10-15 நிமிடம் வேடிக்கை பார்த்துவிட்டு , அப்படியே வரலாற்று சான்றுகளுக்காக புகைப்படங்களை இப்படி அப்படியென எடுத்துக் கொண்டோம்.கூட்டத்தில் ஆங்காங்கே சில நிறுவனங்கள் இலவசமாக yogrut , salad களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.”சரி காலை சிற்றுண்டிக்கு ஆச்சு” என வாங்கிக் கொண்டு நகர்ந்தோம்.ஒருவர் ஏதோ மாத்திரைகளை கொடுத்துக் கொண்டிருந்தார்,என்னவென்று விசாரித்தால் மது அருந்தி தலை சுற்றினால் அதற்காக hangover மாத்திரையை இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 
“அடப் பாவி மக்கா..” என்று நினைத்துக் கொண்டோம்.வழி நெடுக்க நிறைய இளைஞர்கள் கூட்டம்.30 சதவிதம் நன்றாக குடித்திருந்தார்கள்.ஆனால் யாரையும் தொந்தரவு செய்யவில்லை.நாங்கள் அப்படியே பொடி நடையாக  ST. PATRICK’S DAY PARADE பார்க்க சென்றோம்.PARADE  ஒன்றும் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை.ஆனால் அங்குள்ள மக்கள் அதனை குதூகலமாக கொண்டாடினர்.அதையும் முடித்துவிட்டு வீடு திரும்பினோம்.வந்ததும் கூகுள் ஆண்டவரிடம் இதைப் பற்றி கேட்டேன்.அவர் சொன்ன கதையை அப்படியே உங்களுக்கு சொல்லுகிறேன் கேளுங்கள். 
1960 வாக்கில் சிகாகோ ஆற்றங்கரையிலுள்ள சில கட்டிடங்களிலிருந்து கழிவுகள் ஆற்றில் கலந்திருக்கிறது.அதனை  fluorescent  திரவத்தின் உதவியோடு plumber கள் குழு கண்டுப்பிடித்திருக்கின்றனர்.அதன் பக்க விளைவாக ஆறு முழுதும் பச்சை வண்ணமாக மாறியதை கண்டதும் அதனையே ஒரு நிகழ்வாக மாற்றலாம் என யோசித்தனர்.பச்சை வண்ணத்தின் ஒரு ரகம் Shamrock green (Irish green). Shamrock  என்பது ஒரு செடி வகை , அதன் இலை அயர்லாந்தின் சின்னமாக கருதப்படுகிறது அதனை புனிதமாகவும் கருந்துகின்றனர். அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் நினைவு நாளை கத்தோலிக்க சமயத்தினர் ஆண்டுதோறும் மார்ச் 17 அன்று  புனித பேட்ரிக்கின் நாள் என கொண்டாடுகின்றனர்.ஆகையால் பச்சை வண்ணத்தையும் , புனித பேட்ரிக்கின் நாளையும் தொடர்பு செய்து சிகாகோவில் மார்ச் 17 ஐ தொடர்ந்து வரும் சனிக்கிழமையில் Saint Patrick’s Day\River dyeing day யாக கொண்டாடுகிறார்கள். 
“இப்படி சாயத்தை கலப்பது நல்லதா?” என்று நான் கேட்கும் முன்பே. 
“Fluorescent ஆற்றில் கலப்பது நீரில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தானவை,ஆகையால் அரசாங்கம் இயற்கையான முறையில் சாயத்தை தயார் செய்தது.அதன் சூத்திரம் இன்று வரை ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.பல் வேறு நாடுகளில் முயற்சிகளை மேற்கொண்டும் இவர்களின் அந்த பச்சை வண்ண ரகத்தை யாராலும் செய்ய முடியவில்லை” என்றார் கூகுளாண்டவர். 
தஞ்சையில் சிறு வயதில் ஆடிப்பெருக்கிற்கு உற்றாருடன் ஆத்தங்கரைக்கு செல்வோம்,காலத்தின் மாற்றம் பின்பு கிணத்தடியில் கொண்டாடினோம்,பின்பு அதுவும் முடிந்தது வீட்டுக்குள்ளேயே ஆடிப்பெருக்கு சுருங்கியது.வேலைத் தேடி நகரம் நோக்கி நகர்ந்ததும் ஆடிப்பெருக்கே மறந்திருந்தது.அப்பொழுது தான் பொன்னியின் செல்வன் வாசிக்க சந்தர்ப்பம் கிட்டியது.முதல் அத்தியாயமே ஆடிப்பெருக்கு நிகழ்வு தான்.எனது சிறுவயது ஆற்றங்கரை ஆடிப்பெருக்கு காட்சி மனதில் ஓடியது.கையில் மஞ்சள் கயிறு,ஊதுபத்தியில் செய்த அந்த வளையம்,மஞ்சள் கலந்த அரிசி,பேரிக்காய் என‌ ஆற்றில் விட்ட அந்தக் காட்சி ஓடியது.பொன்னியின் செல்வன் வாசித்தப் பொழுது ஏற்பட்ட அதே உணர்வு சிகாகாவில் மீண்டும் கிடைத்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

ஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு

மலைகள் இதழில் வெளியான எனது கட்டுரை - http://malaigal.com/?p=8130

“1813-ன் கல்வி சாசனம் தனது நான்காவது ஷரத்தாக ஒரு முக்கிய அறிவிப்பைக் கொண்டிருந்தது.இன்றைய நமது வகுப்பறைகளின் உயிர்நாடி அதுதான்:

‘இந்திய மக்களுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு துறைகளில் வேலை பார்க்க சாதி மத அந்தஸ்து எதுவும் தேவையில்லை.கல்வித் தகுதி அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும்.’

இந்தக் கல்வித்தகுதி ஆங்கிலப் பள்ளி வழிக் கல்வி!”

‍ – இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.

1813 ல் போடப்பட்ட விதை,இந்த 200 வருடங்களில் பெரும் மரமாய் நம்முன் நிற்கின்றது.சென்ற தலைமுறையில் எப்படி ஆங்கில வழிக்கல்வி அத்தியாவசிய‌மாய் நினைக்கப்பட்டதோ , இந்தத் தலைமுறை;ஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பை அத்தியாவசிய‌மாய் எண்ணத் துவங்கிருக்கிறது.முக்கியமாக பெரு நகரங்களில். ‘What do you want டா செல்லம்’ ‘Dont go there அம்மு’ போன்ற வசனங்களை மிக எளிதாகக் கேட்க முடிகிறது.அன்பையும்,பாசத்தையும் வெளிக்காட்ட மட்டும் தாய்மொழியை கொஞ்சம் ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்கின்றனர்.

இரண்டு ஆண்டிற்கு முன் நடந்த நிகழ்வு , எனது தோழி தனது இரண்டு மகன்களுடன்(சிறுவர்கள்) தனியே அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்தார்.அவரது இரண்டாவது மகனிற்கு 3 வயது இருக்கும்.அமெரிக்காவில் பிறந்தவன் அவன் , முதன்முதலாக இந்தியாவிற்கு வருகின்றான்.அவனைக் காண பெரும் ஆர்வத்துடன் தாய் வழி மற்றும் தந்தை வழி தாத்தா இருவரும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.இரவெல்லாம் உறங்காமல் பிஞ்சுகளுடன் கொஞ்சிப் பேசக் காத்திருந்தனர்.சிறுவர்களைப் பார்தததும் கட்டி அணைத்து ஆராவாரத்துடன் பேசினால் , மொழி நடுவே பெரும் முட்டுக்கட்டையாக நிற்கின்றது.எதுவுமே பேச முடியாமல் தவித்த காட்சி இன்றும் எனது நினைவில் இருக்கிறது.

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நிலை இதுவென்றால், தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கும் நம்மவர்களின் நிலை வேறு மாதிரி இருக்கிறது.பெங்களூரில் வேலை பார்க்கும் பெரும்பாலோர் தங்களது குழந்தைகளிடம் ஆங்கிலமே பேசுகின்றனர்.பல்வேறு கலாச்சாரமும் , பல்வேறு மொழிபேசுவோரும் இங்குக் கலந்து இருப்பதால் ஆங்கிலத்தைத் தங்களது தாய்மொழியாய் மாற்றிக்கொள்ளவே ஆசைப்படுகின்றனர்.இந்த ஆசைக்கு
மேலும் நீர் ஊற்றி வளர்க்கும் வகையில் , 3 வயது சிறுவர்களுக்கே – “வீட்டில் ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று பள்ளி நிர்வாகம் பரிந்துரைக்கிறது.குழந்தை வளர்ப்பில் ஆசிரியர்களை கடவுள் நிலையில் வைத்திருக்கும் நம்மவர்கள் , எதற்காக இப்படி பரிந்துரைக்கின்றனர் என்று சிறிதும் சிந்திக்காமல் இது போன்று சொன்னதும் வீட்டில் சூழலை தலைகீழாய் மாற்றிவிடுகின்றனர்.வீட்டிலுள்ள அனைவருமே ஆங்கிலத்தில் சிறுவர்களிடம் பேசுவது தான் நல்லது என்று நம்பத் துவங்கிவிடுகின்றனர்.”எஞ் சாமி..சாப்பிட்றா” என்று கொஞ்சிய தாய் இதற்கு இனையான வார்த்தகளை ஆங்கிலத்தில் தேடிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

சென்னையில் வாழும் எழுத்தாளர் விழியன் தனது முகப்புத்தகத்தில் இப்படிப் பதிந்திருக்கிறார் ,
“அடுத்த தலைமுறையினருக்கு குறைந்தபட்சம் தமிழ் பேசவும் தமிழை வாசிக்கவுமாவது கற்றுத்தர வேண்டும். ஐந்தாம் வகுப்பில் தமிழ் மூன்றாம் பாடமாக வருகின்றது, வேற வழியே இல்லாமல் தமிழ் படிக்க வைக்க வேண்டும் என்ற சலிப்பு ஒரு புறம். என் பையனுக்கு ஏற்கனவே படிப்பு சுமை, இதில் தமிழை வேற திணிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்னு ஒரு சப்பைக் கட்டு. தன் தாய்மொழியை கற்க வைப்பது திணிப்பில் வருமா?
உங்கள் குழந்தைக்குத் தமிழ் தெரியாமல் போனால் அந்த சந்ததியே தமிழ் கற்காமல் போகும் வாய்ப்பு உள்ளதை நீங்கள் அறிவீர்கள் தானே?”

ஆக சென்னையிலும் நிலை இது தான்.அட்டவனை போட்டு சிறுவர்களின் உலகை சுருக்கிவிட்டு , தமிழ் என்றதும் சுமை , திணிப்பு என பாச மழை பொழியத் துவங்கிவிடுகின்றனர் இன்றைய பெற்றோர்கள்.நாட்டுப்பற்றை க்ரிக்கெட்டிலும் , மொழிப்பற்றை சினிமாவிலும் காட்டிக் காட்டி பழகிவிட்ட நமக்கு இவையெல்லாம் சுமையாகத் தான் தெரியும்.

சிறுவர்கள் என்றும் தாய்மொழியை சுமையாக நினைப்பதில்லை , எனது தெருவிலுள்ள சிறுவர்களிடமும் , கதை சொல்லும் நிகழ்விற்கு வரும் சிறுவர்களிடமும் நான் பேசிப்பழகும்பொழுது இதை நன்கு உணர முடிகின்றது.அவர்களுடன் தமிழில் பேசினால் அவர்களும் தமிழில் தான் பேசுகின்றனர்.நமது ஆங்கில அறிவை நிரூபிப்பதால் தான் அவர்கள் ஆங்கிலத்திற்கே மாறுகின்றனர்.அவர்களது சூழலில்; தமிழ் பேச்சு இயல்பாக இருந்தால் அவர்களும் தமிழில் தான் பேசுவார்கள்.அவர்களது சூழலில் ; தமிழ் வாசிக்கும் நபர்களைப் பார்க்கும்பொழுது அவர்களும் தமிழை வாசிக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள்.

“தமிழ் பேசுனா புரிஞ்சிப்பாள்/ன் , ஆனா தமிழ்ல பேச வராது” ,”தமிழ் பேசத் தெரியும்,ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது” என்ற வார்த்தைகளை ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு மறுபக்கம் தமிழர் என்று பெருமிதம் கொள்வதில் அர்த்தம் ஏதுமில்லை.முதலில் பிள்ளைத் தமிழின் சுவையை ருசிப்போம், பின்னர் தமிழன் என்றும் தமிழச்சி என்றும் மார்தட்டிக் கொள்வோம்.