Saturday, December 3, 2016

சிகாகோவில் ஆடிப்பெருக்கு…

மலைகள் இதழில் வெளியான எனது கட்டுரை - http://malaigal.com/?p=7406
வழக்கமான காலை தான்,தங்கும் இடத்திலிருந்து அலுவலகம் நடக்கும் தூரம் என்றாலும் அந்தக் குளிர் 4 அடிகள் எடுத்து வைப்பதற்குள் எனது எழும்புகளையும் காது மடல்களையும் தொட்டு இம்சை செய்துக் கொண்டிருந்தது.டிசம்பர் மாத குளிருக்கு இந்த மார்ச் மாதம் பரவாயில்லை.சிகாகோ நதி உரையாமல் அன்ன நடை போட துவங்கியிருந்தது.அன்றைய தினம் அலுவலகம் செல்லும் வழியில் இரண்டு மூன்று இடங்களில் செயற்கை நீருற்று புதிதாக முளைத்திருந்தது.அதுவும் பச்சை வண்ண நீருற்று.
“இப்போ தான் குளிரு லேசா குறைஞ்சிருக்கு,அதுக்குள்ள இவனுங்க அட்டகாசம் தாங்கல” என்ற மனதில் சிகாகோ வாசிகளை கடிந்துக் கொண்டே கடந்துச் சென்றேன்.மறுநாள் தான் உண்மை விளங்கியது.தனிமை ஒரு வரம் என்று சொல்ல நான் படைப்பாளி அல்ல.அது எனக்கு சாபமே.இருந்தும் புத்தகம்,திரைப்படம் ,அவ்வப்பொழுது நண்பர்கள் வீட்டில் விருந்து,ஒன்றாக வெளியே செல்வது என சமாளித்துக் கொண்டிருந்தேன்.அந்த மாதிரி தான் மறுநாள் காலை நண்பர் ஒருவர் 
“பாஸ்..காலையில் 9.30 மணிக்கு சிகாகோவுல ST. PATRICK’S DAY EVENT.வாங்க போகலாம் ” என்று அழைத்தார்.என்ன ஏதுவென புரியாமல் நானும் வரேன் என்று சொல்லிவிட்டேன். 
சரியாக 10 மணிக்கு கிளம்பினோம்,வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் தூரத்தில் சிகாகோ நதி.அங்கு தான் ஏதோ விசேசம் என்பதை தெருவிற்கு வந்ததும் புரிந்தது.அங்கும் இங்குமாக மக்கள் கூட்டம் அதுவும் பச்சை நிற அரை குறைஆடையில்.கூட்ட நெரிசலில் நுழைந்து நதியை நன்றாக பார்வையிடும் இடத்தில் நின்றுக் கொண்டோம்.அப்பொழுது தான் நண்பர் விளக்கம் சொன்னார்.“வருடத்திற்கு ஒரு முறை சிகாகோ நதியில் பச்சை வண்ண நிறத்தை கலக்குவார்கள்.நகரத்தின் எல்லைக்குள் உள்ள ஆற்றின் பகுதி முழுதும் பார்க்க பச்சை வண்ணமாக மாறிவிடும்.பார்க்க அழகாக இருக்கும்” என்றார்.அவர் சொன்னது போல் அந்த நிகழ்வு பார்க்க அழகாக இருந்தது.ஆற்று பாலத்திலும்,கரை ஒரங்களிலும் மக்கள் நிற்க , படகில் வந்த அந்தக் குழு 5 நிமிடத்தில் பச்சை வண்ண சாயத்தை ஆற்றில் முழுவதுமாக‌ கலந்துவிட்டார்கள்.இந்த தினத்தை RIVER DYEING DAY என்றும் கூறுகிறார்கள். 
10-15 நிமிடம் வேடிக்கை பார்த்துவிட்டு , அப்படியே வரலாற்று சான்றுகளுக்காக புகைப்படங்களை இப்படி அப்படியென எடுத்துக் கொண்டோம்.கூட்டத்தில் ஆங்காங்கே சில நிறுவனங்கள் இலவசமாக yogrut , salad களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.”சரி காலை சிற்றுண்டிக்கு ஆச்சு” என வாங்கிக் கொண்டு நகர்ந்தோம்.ஒருவர் ஏதோ மாத்திரைகளை கொடுத்துக் கொண்டிருந்தார்,என்னவென்று விசாரித்தால் மது அருந்தி தலை சுற்றினால் அதற்காக hangover மாத்திரையை இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 
“அடப் பாவி மக்கா..” என்று நினைத்துக் கொண்டோம்.வழி நெடுக்க நிறைய இளைஞர்கள் கூட்டம்.30 சதவிதம் நன்றாக குடித்திருந்தார்கள்.ஆனால் யாரையும் தொந்தரவு செய்யவில்லை.நாங்கள் அப்படியே பொடி நடையாக  ST. PATRICK’S DAY PARADE பார்க்க சென்றோம்.PARADE  ஒன்றும் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை.ஆனால் அங்குள்ள மக்கள் அதனை குதூகலமாக கொண்டாடினர்.அதையும் முடித்துவிட்டு வீடு திரும்பினோம்.வந்ததும் கூகுள் ஆண்டவரிடம் இதைப் பற்றி கேட்டேன்.அவர் சொன்ன கதையை அப்படியே உங்களுக்கு சொல்லுகிறேன் கேளுங்கள். 
1960 வாக்கில் சிகாகோ ஆற்றங்கரையிலுள்ள சில கட்டிடங்களிலிருந்து கழிவுகள் ஆற்றில் கலந்திருக்கிறது.அதனை  fluorescent  திரவத்தின் உதவியோடு plumber கள் குழு கண்டுப்பிடித்திருக்கின்றனர்.அதன் பக்க விளைவாக ஆறு முழுதும் பச்சை வண்ணமாக மாறியதை கண்டதும் அதனையே ஒரு நிகழ்வாக மாற்றலாம் என யோசித்தனர்.பச்சை வண்ணத்தின் ஒரு ரகம் Shamrock green (Irish green). Shamrock  என்பது ஒரு செடி வகை , அதன் இலை அயர்லாந்தின் சின்னமாக கருதப்படுகிறது அதனை புனிதமாகவும் கருந்துகின்றனர். அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பேட்ரிக்கின் நினைவு நாளை கத்தோலிக்க சமயத்தினர் ஆண்டுதோறும் மார்ச் 17 அன்று  புனித பேட்ரிக்கின் நாள் என கொண்டாடுகின்றனர்.ஆகையால் பச்சை வண்ணத்தையும் , புனித பேட்ரிக்கின் நாளையும் தொடர்பு செய்து சிகாகோவில் மார்ச் 17 ஐ தொடர்ந்து வரும் சனிக்கிழமையில் Saint Patrick’s Day\River dyeing day யாக கொண்டாடுகிறார்கள். 
“இப்படி சாயத்தை கலப்பது நல்லதா?” என்று நான் கேட்கும் முன்பே. 
“Fluorescent ஆற்றில் கலப்பது நீரில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தானவை,ஆகையால் அரசாங்கம் இயற்கையான முறையில் சாயத்தை தயார் செய்தது.அதன் சூத்திரம் இன்று வரை ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.பல் வேறு நாடுகளில் முயற்சிகளை மேற்கொண்டும் இவர்களின் அந்த பச்சை வண்ண ரகத்தை யாராலும் செய்ய முடியவில்லை” என்றார் கூகுளாண்டவர். 
தஞ்சையில் சிறு வயதில் ஆடிப்பெருக்கிற்கு உற்றாருடன் ஆத்தங்கரைக்கு செல்வோம்,காலத்தின் மாற்றம் பின்பு கிணத்தடியில் கொண்டாடினோம்,பின்பு அதுவும் முடிந்தது வீட்டுக்குள்ளேயே ஆடிப்பெருக்கு சுருங்கியது.வேலைத் தேடி நகரம் நோக்கி நகர்ந்ததும் ஆடிப்பெருக்கே மறந்திருந்தது.அப்பொழுது தான் பொன்னியின் செல்வன் வாசிக்க சந்தர்ப்பம் கிட்டியது.முதல் அத்தியாயமே ஆடிப்பெருக்கு நிகழ்வு தான்.எனது சிறுவயது ஆற்றங்கரை ஆடிப்பெருக்கு காட்சி மனதில் ஓடியது.கையில் மஞ்சள் கயிறு,ஊதுபத்தியில் செய்த அந்த வளையம்,மஞ்சள் கலந்த அரிசி,பேரிக்காய் என‌ ஆற்றில் விட்ட அந்தக் காட்சி ஓடியது.பொன்னியின் செல்வன் வாசித்தப் பொழுது ஏற்பட்ட அதே உணர்வு சிகாகாவில் மீண்டும் கிடைத்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

1 comment: