Monday, November 7, 2016

தனி ஒருவர்....அழ.வள்ளியப்பா!

அழ.வள்ளியப்பா...சென்ற தலைமுறை தமிழ் பெற்றோருக்கு நன்கு பரிச்சயமான பெயர். சிறுவர் பாடல்கள் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் சிறு வயதில் கேட்ட வள்ளியப்பா பாடல் ஒன்றை சொல்கின்றனர். இந்தத் தலைமுறை பெற்றோர் பல‌ருக்கு (எனை சுற்றியுள்ள) அழ.வள்ளியப்பா யாரென தெரியவில்லை. 90களில் டிவியின் தாக்கம் அதிகமானது ஒரு பெரிய காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு  "அணிலே அணிலே ஓடி வா"  , "தோ தோ நாய் குட்டி" , " மாம்பழமாம் மாம்பழம் " போன்ற பாடல்கள் நன்கு அறிந்திருக்கின்றனர் . அவர்களுக்கு  , சினிமா அல்லாத சிறுவர்களுக்கான‌ தமிழ் பாடல்கள் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது வள்ளியப்பாவின் பாடல்கள் தான்.

குழந்தை வளர்ப்பில் எப்படி சிறுவர் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டோ , அதே போன்று தான் தமிழ் சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சியில் வள்ளியப்பாவிற்கு பெரும் பங்குண்டு.அவர் இன்றி சிறுவர் இலக்கியம் உரு பெற்றிருக்காது என்று சொல்லலாம். தமிழ் சிறுவர் இலக்கியத்தின் பொற்காலம் எனும் கூறப்படும் 1950ம் ஆண்டு வள்ளியப்பா வாழ்ந்த காலம் தான். அந்த ஆண்டில் தான் குழந்தை எழுத்தாளர்கள் சங்கத்தை அமைத்தார். இதில்
குழந்தைக்களுக்கான படைப்புகளை உருவாக்கும் அனைவரையும் ஒன்று திரட்டினார் . அதன் செயல்பாடுகளின் ஒன்றாக , "குழந்தை எழுத்தாளர் யார் எவர்?" என்று ஒரு தொகுப்பை 1961ல் உருவாக்கியுள்ளனர் .  சங்கத்தின் சார்பில் தொடர்ந்து மாநாடுகள் நடந்திருக்கின்றன.

வள்ளியப்பா புதுக்கோட்டையை சேர்ந்தவர் , ஆனால் சென்னையில் வங்கி பணியிலிருந்தார் . சென்னையிலிருந்துக்கொண்டே புதுக்கோட்டையிலிருந்து சிறுவர் இதழ் வெளிவர அனைத்து வகையிலும் இயங்கியிருக்கிறார் . அச்சு வடிவத்திற்கான முன்னாலுள்ள அனைத்து வேலைகளையும் முடித்து புதுக்கோட்டைக்கு அனுப்பிவைத்துள்ளாராம். கிட்டத்தட்ட மாதம் 10 இதழ்களை கொண்டு வர ஈடுப்பட்டிருந்திருக்கிறார். இப்படித் தான் அவரது சிறுவர் இதழியலுக்கான பணி இப்படித் தான் சில ஆண்டுகள் சென்றிருக்கிறது. சிறுவர்களுக்கான பல படைப்புகள் மட்டுமல்ல , பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளார்.

சிறுவர்களுடன் நெருங்கி பழகும் போது தான் புரிகிறது , அவர்கள் முற்றிலும் பெரியவர்களை கவனமாக பின்பற்றுகிறார்கள் என்பது. அதுப்போல் அவர்களுக்கான படைப்புகளும் மிக முக்கியமான இடத்தை பெருகிறது. படைப்புகளில் சிறுவர்களை திசைத் திருப்பும் எண்ணங்கள் எதுவும் வந்துவிட கூடாது என்பதில் வள்ளியப்பா கவனமாக இருந்திருக்கிறார்.ஒரு முறை தமிழ் சிறுவர் இலக்கியத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியிருக்கிறது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். (அதன் எதிர்ப்பு எப்படி முடிவுற்றது என்பதை தேடிட வேண்டும்.) வள்ளியப்பா தான் மட்டும் இயங்காமல் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தையும் பெரிதாக உருவாக்கியுள்ளார். அவர் வாழ்ந்த காலம் வரை சிறுவர் இலக்கிய மாநாடுகள் தொடர்ந்து நடந்திருக்கிறது. அவர் இறக்கும் போது சிறுவர் இதழான கோகுலத்திற்கு ஆசிரியராக இருந்துள்ளார்.

பூவண்ணன் எழுதிய வள்ளியப்பா பற்றின சிறு நூலை வாசித்தப் பொழுது மனதில் ஓடிய எண்ணம் இது தான் , தனி மனிதராய் மனுஷன் எப்படியெல்லாம் இயங்கியிருக்கிறார். நமது விருப்பங்களை நல்ல நண்பர்கள் கொண்டு கண்டிப்பாக உருமாற்றிக் கொள்ள முடியும் என்று வள்ளியப்பாவின் வாழ்வு எனக்கு சொல்வதாக இருந்தது.

இன்று நவம்பர் 7 , வள்ளியப்பா பிறந்த தினம் , வள்ளியப்பாவின் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் . அவரது நினைவாக சற்று டிவி யை அனைத்துவிட்டு வள்ளியப்பா பாடல்களை பிள்ளைகளுக்கு பாடி , சிறுவர்களை ஆட்டம் போட செய்வோம் . சிறுவர்களின் சிரிப்பொலியில் நன்றிகள் பல சிந்த செய்வோம்.

வள்ளியப்பாவின் படைப்புகள் மின்நூலாக : http://thamizhagam.net/nationalized%20books/Azha%20Valliyappaa.html

மலரும் உள்ளம் முதல் தொகுதியில் துவங்குகள் !

3 comments: