Tuesday, October 24, 2017

குழந்தைகளை தேவையில்லாமல் திட்டாதீர்கள்

குறிப்பு : நேற்றைய வா.மணியின் குழந்தைகளைத் திட்டுங்கள்
 பதிவிற்கு எதிர்வினையாகவே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

"ஐந்தில் வளையாதது ஐம்பில் வளையாது" , "அடி உதவுது போல் அண்ணன் தம்பி உதவதில்லை" இந்த இரண்டு பழமொழிகள் தான் தமிழக பெற்றோருக்கு தாரக மந்திரம். குழந்தைகளுக்கு கண்டிப்பு தேவையென்பதே அனைவரின் வாதம். ஆம் கண்டிப்பு தேவை தான், இல்லை என்று யாரும் மறுக்கவில்லை. ஆனால் கண்டிப்பு பற்றின புரிதல் ஒவ்வொருக்கும் வேறுபடுவதே இங்கு பிரச்சனையாக கருதுகிறேன்.


  • லேசான முறைப்பு
  • குரல் உயர்த்தி பேசுவது
  • திட்டுவது
  • வேண்டாம் என்பதை அழுத்தமாக சொல்லுவது. அன்புடன் நிராகரிப்பது என்று வைத்துக்கொள்ளலாம்.
  • மிரட்டுவது
  • அடிப்பது - இந்த அடிப்பதில் கூட பல வகைகள் உண்டு.


இவை அனைத்துமே கண்டிப்பு என்ற ஒரே போர்வையில் தான் உள்ளது. அடுத்து எதற்காக கண்டிக்கிறோம் லேசான குறும்பு முதல் உயிர் போகும் ஆபத்து வரை அனைத்து செயலுமே இதில் மேம்போக்காக அடங்குகிறது. இவை அனைத்தையும் வகைப்படுத்தி பேச வேண்டும். ஆனால் நேற்றைய வா.மணியின் பதிவு மிகவும் மேலோட்டமானதாக தோன்றியது. அதனால் என்ன? என்று கேட்கலாம். வா.மணியின் பதிவு சரியானது என்று பல பெற்றோர்கள் அவரது முகப்புத்தக கமெண்டுகளிலும் , பல வாட்ஸ்-ஆப் குழுமங்களிலும் பேசுவதை கவனிக்க முடிந்தது. ஆதலால் தான் இந்தப் பதிவு என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.

அவரது பதிவை ஏன் மேலோட்டமானது என்று சொல்கிறேன்?

1. //இப்பொழுது ஐரோப்பிய தேசமொன்றில் மனோவியல் ஆலோசகராக இருக்கிறார். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனிக்கட்டை.

எப்பொழுதாவது இந்தியா வந்து போகிறார். ‘தற்கால இந்தியக் குழந்தைகளின் மனநிலை’ குறித்து ஓர் ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறாராம். அதற்கு தோதாகக் கடந்த சில நாட்களாகச் சேகரித்த செய்திகள் அவை. //

மன ஆலோசகரின் வாதத்தை மையமாக வைத்தே மணி நேற்று பேசியிருந்தார். ஆனால் அவரது பெயர்,வேலை தவிர வேறு எந்த தகவலையும் நமக்கு தரவில்லை. அதுவும் இந்திய மண்ணில் தற்பொழுது அவர் இல்லை. ஆனால் இந்திய குழந்தைகள் பற்றி ஆராய்ச்சி செய்பரவாக குறிப்பிட்டிருந்தார். குழந்தைகளோடு பழகாமல் எப்படி குழந்தைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய முடியும். இந்த நில சூழலை ஆராய வேண்டுமென்றால் அவர் இங்கு தானே இருக்க வேண்டும். இந்தக் குழந்தைகளோடு பழகி தான் அவர் ஆராய வேண்டும். அது தானே இந்தத் துறைக்கு சரியானதாக இருக்கும்?

எங்கோ அமர்ந்துக் கொண்டு செய்தித்தாள்களின் துண்டுகளை வைத்து பேச முடியுமா. செய்தி தாள்களில் வரும் செய்திகள் முழுமையானதா ? களப்ப‌ணி தானே இங்கு முக்கியம். அப்படி செய்திகளை  முழுமையாக நம்பலாம் என்றால் நானும் ஒரு செய்தி பகிர்கிறேன். கண்டிப்பால வந்த வினை என்று இதனை எடுத்துக்கொள்ளலாமா?



2.//குழந்தைகளைத் திட்டுவதில்லை என்பதை பல பெற்றோர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. நானும் கூட அப்படித்தான்.//

குழந்தைகளை திட்ட வேண்டாம் என்று சொல்வோரை பெருமையாக சொல்பவர்கள் என்று ஏன் குற்றம் சுமத்தம் வேண்டும். அதன் அவசியம் என்ன. திட்ட வேண்டும் என்று சொல்வதைப் போன்று திட்ட வேண்டாம் என்று சொல்வதும் ஒரு புரிதலாக இருக்கலாம் அல்லவா? ஒரு வில்லன் கதாப்பாத்திரத்தை வடிவமைத்தாக இருந்தது இந்த வரி.

3. உங்க தலைமுறையில் இப்படி இருந்தீங்களா?

ஒரு தற்கொலையை திட்டுவதுடன் முடிச்சுப்போட்டு அப்படியே தலைமுறையுடம் சேர்த்துவிட்டார். சென்று தலைமுறையில் நாம் எப்படி இருந்தோம் என்பதை முழுவதுமாக ஆராய வேண்டும். நாம் வீட்டில் இருந்ததை விட வீதிகளில் திரிந்தது தான் அதிகம். ஆண்-பெண் பேதமில்லாமல் திரிந்திருப்போம் என்று இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அதிகமாக சக வயதினோரோடு விளையாடி இருப்போம். அண்ணா-அக்கா விளையாட்டுகளில் உப்புக்-சப்பாணியாக சேர்ந்து விளையாடிருப்போம். அதில் எவ்வளவு கற்றல் உள்ளது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். விளையாட்டுகளை பெற்றோர்கள் கற்றுக் கொடுத்ததை விட சக வயதினோரோ அல்லது 2-3 வயது மூத்தவர்கள் கற்றுக் கொடுத்ததோ தான் அதிகமாக இருக்கும். அங்கு வெற்றி-தோல்வி சகஜமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு சமீபத்தில் நான் நேரில் கண்ட ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன். [சென்னையில் வேலு சரவணன் அவர்கள் நடத்திய விளையாட்டு-அவரிடம் கூட இதைப் பற்றி பேசி பார்க்கலாம். கிட்டத்தட்ட 60 சிறுவர்கள் இருந்தனர்]

சிறுவர்களுக்கான Treasure hunt நிகழ்வை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சிறுவர்களுக்கு புரியும் வகையில் Clueக்கள் அமைந்திருத்தார்கள். எளிமையான தமிழ் வார்த்தைகள் , சற்றே சிந்திக்கும் வகையிலும் இருக்கும் சிறிய இடத்தில்  யோசித்து யோசித்து  Clueக்களை மறைத்து வைக்கும் இடத்தினை தேடி அழகாக‌ அமைத்திருந்தார்கள். ஆனால் விளையாட்டு துவங்கியதும் அருகிலிருந்த பெற்றோர்கள் Clueக்களுக்கான விடைகளை தங்களுக்கு பிள்ளைகளை அழைத்து சொல்லிவிட்டனர். "பெற்றோர்கள் தயவு செய்து உதவ வேண்டாம்" என்று பல முறை குழுவினர் கத்தியும் அதை பெற்றோர்கள் பொருட்படுத்தவேயில்லை. ரகசியமாக தங்களது பிள்ளைகளுக்கு உதவுவதிலே ஆர்வம் காட்டினர்...பேசாமல் பெற்றோர்களை இந்த விளையாட்டிற்கு அழைக்காமல் வேறு இடத்தில் அமர வைத்திருக்கலாம் என்று குழுவினர் யோசிக்கும் அளவிற்கு பெற்றோர்கள் ப‌டுத்திவிட்டனர்.

இந்தச் சம்பவம் என்ன சொல்கிறது. ஒரு சகஜமான விளையாட்டில் கூடு தனது பிள்ளைகள் முன்னோக்கி நிற்க வேண்டும் என்ற ஆசையை குழந்தைக்கு கடத்தியது யார் என்பதை யோசிக்க வேண்டும். நாம் தான் வெற்றிகளை தூக்கி தலையில் வைத்து கொண்டாடியதால் தான் தோல்வியை கண்டு துவண்டுப் போகிறார்கள்.

சிறுவர்களை வெளி உலகுடன் பழக செய்ய வேண்டும்,அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அவர்களே விடை தேட வைக்க வேண்டும். அது தான் முக்கியமென நான் கருதுகிறேன்.

4. //பள்ளிகளிலும் கண்டிப்புகள் இருப்பதில்லை. அம்மா அப்பாவும் செல்லம் என்ற பெயரிலும் தடித்த சொற்களைப் பயன்படுத்துவதில்லை//

சமீபத்தில் இதேப் போன்று ஒரு செய்தியை ஒரு ஆசிரியர் பகிர்ந்திருந்தார். பிரம்பால் அடிக்காததால் தான் மாணவர்கள் தவறான வழியில் செல்வதாக. ஆனால் உண்மை அதுவா என்று யோசிக்க வேண்டும். கண்டிப்பு என்பது கற்றலுக்கு எதிரானது என்று பல கல்வியாளர்கள் சொல்லியிருப்பதை கவனிக்க முடிக்கிறது.

[நான் வாசித்த சிலப் புத்தகங்கள்]


  • குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் - ஜான் ஹோல்ட்
  • பகல் கனவு
  • ஜன்னலில் ஒரு சிறுமி
  • எனக்குறிய இடம் எங்கே - ச.மாடசாமி
  • என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா - ச.மாடசாமி
  • குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் - பெ.தூரன் (https://archive.org/stream/orr-3197/KuzhanthaiManamumAthanValarchiyum?ui=embed#page/n0/mode/2up )
  • இறுதிச் சொற்பொழிவு
  • இது எங்கள் வகுப்பறை -சசிகலா


இந்தப் புத்தகங்கள் அனைத்திலும் பல சம்பவங்கள் உள்ளது. பள்ளியிலும் வீட்டிலும் கிடைத்த  அன்புகள், தவிர்க்கப்பட்ட தேவையில்லாத‌ கண்டிப்புகள் பலரது வாழ்வில் பெரிய மாற்றங்களை உருவாக்கியது என்று பல உதாரணங்கள் உண்டு. குறிப்பாக இது எங்கள் வகுப்பறை புத்தகத்தில் ஜட்டி போடாமல் ஆறு வய‌து சிறுமி வருவாள். பல கண்டிப்புகளுக்கு மாறாத அவள் ஆசிரியர் ஒருவரின் அன்பான விசாரிப்புக்கு மாறுவாள். அதேப் போல் மாடசாமி ஐயா அவர்களின் புத்தகங்களிலும் அன்பாக பேசியதால் வகுப்பில் கற்றல் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை விரிவாக பேசியிருப்பார்.

மற்றுமொரு முக்கியமான விடயம் , செல்லம் என்பதை திட்டுவதற்கு எதிர்பதமாக மணி உபயோகித்திருக்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல. திட்டாமல் இருப்பது வேறு செல்லம் கொடுப்பது வேறு என்பதை நாம் தெளிவாக வேறுப்படுத்தி பார்க்க வேண்டும்.

5. //வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் போது ஒரு முறை அழைத்துப் பார்த்தால் குழந்தைகளின் கவனம் நம் பக்கம் திரும்பவில்லையெனில் ‘டேய்’ என்று சற்றே அதட்டுவதில் தவறொன்றுமில்லை.//

இங்கும் சிலப் புரிதல்கள் வேண்டும். நாம் அழைத்தால் குழந்தைகள் ஏன் திரும்பிப் பார்ப்பதில்லை. இதை மூன்று வகையாக நான் பார்க்கிறேன்.

  • அவர்கள் மும்முரமாக வேறு வேலையிலோ-விளையாட்டிலோ ஈடுப்பட்டிருக்கலாம்
  • அவர்கள் அழைத்தப் போது நாம் திரும்பாமல் இருந்திருக்கலாம்,அதையே அவர்கள் திரும்பி செய்யலாம்.
  • வேண்டுமென்றே திரும்பாமல் இருக்கலாம்


சிறுவர்களுக்கு முக்கியமாக எந்த வேலையும் கிடையாது என்று நாம் நினைக்கிறோம். நமக்கு நமது வேலைகள் போன்று அவர்களுக்கு அவர்களது வேலைகள். அவர்களது வேலையின் முக்கியத்துவத்தை நாம் கவனித்திருக்கோமா?அவர்கள் அழைத்து நாம் எத்தனை முறை திரும்பாமல் இருந்திருப்போம்.?

கண்டிப்பு என்ற‌ இந்தத் தலைப்பில் மிகவும் விரிவாக விவாதிக்க வேண்டும். எந்த வயதினருக்கு என்ன மாதிரி கண்டிப்புகள் எந்த விடயங்களுக்கு என்று யோசிப்பதில் தவறேதுமில்லை. மணியின் பதிவில் கமெண்டுகளை படித்தால் பதறுகிறது. மணி சொல்வதை ஆதரவு செய்து தங்களது வீட்டிலும் கண்டிப்பு உண்டு சில நேரங்கள் அடிப்போம் என்று கூட எழுதியிருந்தார்கள். சிலர் ஐந்து வயது சிறுவர்களுக்கு கண்டிப்பதாக சொல்லியிருந்தார்கள். இவை அனைத்துமே விவாதிக்க வேண்டிய விடயம் தான்.

ஒரு நாளில் நமது பிள்ளைகளின் செயல்களை எத்தனை திருத்தங்கள் செய்கிறோம் என்று கவனித்துப் பாருங்கள். அவர்களின் செயல்பாடுகளில் சுயமாக செய்யவிடாமல் எத்தனை தடைகள் போடுகிறோம் என்று எட்ட நின்னு பார்க்க வேண்டும். இவை அனைத்துமே குழந்தைகளை நல்வழிப்படுத்துவதின் ஒரு அம்சமே. அதே அம்சம் தான் இந்தக் கண்டிப்புக்கும் உள்ளது.

ஆகையால் தேவையில்லாமல் குழந்தைகளைத் திட்டாதீர்கள். 

1 comment:

  1. பிரபு,
    அவர் இந்தியாவில் இருந்து குழந்தைகளிடம் பழகி ஆய்வு செய்யவேண்டும் என்ற வரி சரியே!

    பிள்ளைகளை கூப்பிடும் பொழுது திரும்பவில்லை என்றா அதட்டுங்கள் என்ற வரிக்கு நீங்கள் எழுதிருக்கும் வரிகளை கண்டிப்பாக அனைவரும் சிந்திக்கவேண்டும் .

    குறிபிட்டுள்ள மூன்று எடுத்துகாட்டில் முதல் வாக்கியம்தான், அதிகம் இப்பொழுது நம் பிள்ளைகளிடம் பார்க்க முடியும். அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை கவனம் அவர்கள் விளையாட்டின் மீது இருப்பதால் அவர்கள் நடவடிக்கை அப்படி இதை நாம் ஜென் துறவிகளுடன் குழந்தைகளை ஒப்பிடலாம். நானும் இதை நிறைய தடவை பார்த்துள்ளேன் என் மகனிடம் கவனம் அவன் செயல்பாட்டிலேயே இருக்கும்.

    நீ திரும்பவில்லை என்றால் நானும் திரும்ப மாட்டேன் என்று பெரியவர்கள் சொல்வது நிறைய தடவை ஒரு நாளில்நடக்கிறது அதையே குழந்தைகள் பின்பற்றி வருகிறது என்பது நிஜம்.குழதைகள் உருவாக்கிய வரி இல்லை என்பது பெரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    கேள்விகள்:
    தேவையில்லாமல் திட்டாதிர்கள் என்றால் அப்போ எவையெல்லாம் தேவையான திட்டுகள்?

    குழந்தைகள், அவர்களே பிரச்சனைக்கு தீர்வு காணவிடுங்கள் என்ற இந்த வாக்கியம்- எதுவரை ? அவர்கள் தீர்வை கண்டுபிடிக்கும் வரையா? அப்படி என்றால் அணைத்து குழந்தைகளுக்கும் அவை சாத்தியம் இல்லை என்று நினைக்கிறன்.

    பெற்றோர் வழிக்காட்டுதல் என்பது இருத்தல் எதுவரை வேண்டும் ? அல்லது முழுவதும் குழந்தைகள் முடிவுக்கே விடுவது எந்த அளவு சரி ?

    ReplyDelete