முதன்முதலாக எங்களது கதை சொல்லல் நிகழ்வை திட்டமிட்டு நடத்தினோம்.ஐந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து , நிகழ்வை எப்படி நடத்தலாம் , சென்ற சிறுவர் இதழ் உண்மையாகவே சிறுவர்களை சென்றடைந்ததா ? , இதழ் வேலைகளை கதை சொல்லல் நிகழ்வோடு எவ்வாறு இனைக்கலாம் என்று விவாதித்து; ஞாயிறு கதை சொல்லல் நிகழ்வை எவ்வாறு நடத்தலாம் என்று திட்டமிட்டோம்.அதன்படி சென்ற இதழில் வெளிவந்த விழியன் அவர்களின் "மயிலிறகு குட்டிப் போடுமா" என்ற கதையினை வாசித்து நிகழ்வை துவங்கினோம்.முதலில் மயிலிறகு என்றால் என்ன என்பதில் துவங்கி , "அது குட்டிப்போடும், அது தெரியுமா உங்களுக்கு?" என்று சின்ன அறிமுகத்தை தந்தப்பின்னர் வாசிப்பை துவங்கினேன்.வாசித்தது, சிறுவர்களுக்கும் இதழிற்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்திய மன நிறைவு தந்தது.அதன் பின்னர் "Magic Crayon" என்ற கதையை சொல்லத் துவங்கினேன்.
"கோடைவிடுமுறையில் உங்களைப் போன்று அந்தச் சிறுவனும் அவனது தாத்தா ஊருக்கு சென்றான்.அவனுக்கு வரைவது என்றால் மிகவும் பிடிக்கும்,எங்கு சென்றாலும் அவனது க்ரேயான்களை எடுத்துச் செல்வான்.ஆனால் தற்பொழுது ஊருக்கு செல்லும் போது க்ரேயான்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டான்.தாத்தா ஊர் மிக அழகாக இருந்தது , அங்கு பார்ப்பதையெல்லாம் வரையவேண்டுமென்று அவனுக்கு மிகவும் ஆசை.ஆனால் வரைய க்ரேயான்கள் கிடைக்கவேயில்லை.அந்த ஊரில் ஒரே ஒரு கடை தான் அந்த கடையிலும் க்ரேயான்கள் இல்லை.மிகவும் கவலையானான்.தாத்தாவிடம் அழுதுக்கொண்டே தனக்கு க்ரேயான் வேண்டுமென்றான்.தாத்தா அவனை ரகசியமாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்.அங்கு ஒரு மரப்பெட்டி இருந்தது.அதிலிருந்து "கரி" ஒன்றை எடுத்து தந்து..இது "மந்திரக் கரி" என்றார்.அவனுக்கு புரியவில்லை.சிறிது யோசித்துவிட்டு .."ஓ...Magic Crayon ஆ" என்றான்.ஆமாம்..ஆமாம் அதே தான். இதை வைத்து வரைந்தால் அது நிஜ உலகத்திற்கு அப்படியே வந்துவிடும் , ஆதலால் இதை பத்திரமாக வைத்துக்கொண்டு வரையவேண்டும் என்று சொல்லிவிட்டு அவனிடம் தந்தார்.அதை வாங்கியதிலிருந்து அவனுக்கு மிகுந்த ஆர்வம்,என்ன வரையலாம் என்று யோசித்துக்கொண்டேயிருந்தான்." என்று சொல்லிவிட்டு இளங்கோ அவர்கள் மொழிப்பெயர்த்த கதையினை சொல்லத் துவங்கினேன்.
கதையை அவர்கள் முழுவதுமாக மகிழ்ந்தார்கள்.அதனை மேலும் தூண்டும் விதமாக திட்டமிட்டப்படி , "இப்போ அந்த Magic Crayon உங்களுக்கு கிடைத்தான் என்ன வரைவிங்க " என்றதும் ஒரு சிறுவன் டைனோசர் என்றான்.சரி நீங்க வரைங்க நான் பாக்குறேன்" என்ற ஒதுங்கிக்கொண்டேன்.சிறுவர்களுக்கு பெற்றோர்கள் உதவ வேண்டாம்,அவர்களை சுதந்திரமாக வரையட்டும் என்று சொன்னோம்.15 நிமிடத்தில் அழகான ஓவியங்கள் உருவானது.சிறுவர்கள் தங்களது ஓவியத்திற்கு சிறு விளக்கமும் தந்தனர்.சிறுவர்களே ஓவியங்களை வைத்து கதை சொல்ல வைப்பது தான் எங்கள் திட்டம்.ஆனால் சிறுவர்களுக்கு சின்ன சின்ன கூச்சங்கள் இருந்தது.ஆதலால் எங்களால் அதை செய்ய முடியவில்லை.இந்த யோசனை எனக்கு உருவாக்கி தந்தது நண்பர் விஷ்ணுபுரம் சரவணன்.அவர் இதுப்போன்று நிகழ்வினை நடத்தியிருக்கிறார்.இங்கு அதுப்போன்று செய்ய எத்தனித்தோம் , ஆனால் அதை செய்ய முடியவில்லை.ஆதலால் சிறுவர்களுக்கு ஒரு உதாரணமாக நிகழ்வினை மாற்றினோம்.நண்பர் ராஜேஷ் இந்த ஓவியங்களை வைத்து அழகான கதையினை அதே இடத்தில் உருவாக்கினார்.தங்களது ஓவியங்கள் கதையினுள் எப்படி மாறுகிறது என்பதை கேட்க சிறுவர்களுக்கு மிகுந்த ஆர்வம்.கதையினை ரசித்தனர்.அது மன நிறைவாக அமைந்தது.எங்களது அடுத்த இதழுக்கு; அருமையான ஓவியங்களும்,அற்புதமான கதையும் கிடைத்தது.அவரது கதையிலும் மயிலிறகும் , "Magic Crayon" -னும் இடம்பெற்றது.
வெறும் 4 கதைகளை வைத்துக்கொண்டு எந்தவித அனுபவமில்லாமல் கதை சொல்வதை துவங்கினேன்.ஆனால் தற்பொழுது கதை சொல்லவும்,நிகழ்வினை தொடர்ந்து நடத்த நண்பர்களும் தயாராக இருக்கின்றனர்.3 மாத காலத்தில் நிகழ்விற்கு நல்ல உருவம் கிடைத்திருக்கிறது.மனமும் ஆர்வமும் மட்டும் இருந்தால் போதும் எதையும் செய்யலாம் என்று எனக்கு நானே நிருபித்ததுப்போல் இருக்கிறது.
No comments:
Post a Comment