(சஞ்சிகை இதழில் வெளியானது)
சமூக வலைத்தளங்களில் நடக்கும் இலக்கிய சண்டைகளின் மத்தியில் அவ்வப்போது ஒருவரின் குரல் சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டு ஆனந்தவிகடனின் சிறுவர் இலக்கிய விருதையும் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் குழந்தை இலக்கியத்திற்கான விருதையும் வாங்கிய எழுத்தாளர் விழியனின் குரல் தான் அது. ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கு விதவிதமாக கிடைக்கும் புத்தகங்கள் போல தமிழிலும் கிடைக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.
அவரது சின்ன சின்ன ஆசைகள் தான் இன்று எழுத்துக்களாக உருமாறி “மாகடிகாரம்” , “டாலும் ழீயும்”, “பென்சில்களின் அட்டகாசம்”, “வளையல்கள் அடித்த லூட்டி”, “அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை” என்ற குட்டிஸ் புத்தகங்களாக கிடைக்கின்றன.
அவரது சின்ன சின்ன ஆசைகள் தான் இன்று எழுத்துக்களாக உருமாறி “மாகடிகாரம்” , “டாலும் ழீயும்”, “பென்சில்களின் அட்டகாசம்”, “வளையல்கள் அடித்த லூட்டி”, “அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை” என்ற குட்டிஸ் புத்தகங்களாக கிடைக்கின்றன.
சென்ற தலைமுறையிலிருந்தே பாட்டி கதைகள் மெல்ல மெல்ல மறைய துவங்கிவிட்டன. இன்று ஒரு குழந்தையிடம் “ஏ…எனக்கு ஒரு கதை சொல்லேன்..” என்று கேட்டால் நமக்கு கிடைப்பது மெளனம் மட்டுமே. அதுவே ஒரு சீரியலின் கதையையோ அல்லது ஒரு திரைப்பாடலையோ அவர்களால் முழுவதுமாக சொல்ல முடிகிறது. ஏனென்றால் அவர்களுக்கு தீனியாக இருப்பது தொ(ல்)லைக்காட்சிகள் மட்டும் தான். இந்த நிலை பெற்றோர்களுக்கும் தான் நீதி கதைகள் தாண்டி புது கதைகளை உருவாக்குவது சிரமம் என்பதை மறுப்பதற்கல்ல. எழுத்தாளர் விழியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அடிக்கடி சொல்வது இது தான். குழந்தைகளிடம் அதிகம் உரையாட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு முதலில் நல்ல வாசகனாக மாறிட வேண்டும். இது தான் வழி என்பதல்ல. இதுவும் ஒரு வழி என்பது தான். அப்படி வாசகனாக மாறி நான் படித்த சில சிறுவர்கள் புத்தகங்களில் ஒன்று தான் “மாகடிகாரம்”.
நாளைய கண்டுப்பிடிப்புகளுக்கும், வளமான சமுதாயத்துக்கும் வித்தாக அமைய போவது குழந்தைகளின் கற்பனா சக்திகளே. அவர்களின் கற்பனா சக்திகள் மென்மேலும் வளர இனி பெற்றோர்கள் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு கண்டிப்பாக விழியனின் புத்தகங்கள் உதவியாக இருக்கும்.