Thursday, April 26, 2012

சாலை


                        சாலை



இன்னைக்காவது பஸ்ல போயேன் டீ.இந்த வெயில்ல ஏன் சைக்கிள் ல போற?அக்னி நட்சத்திரம் வேற ஆரம்பிக்கப் போகுது.சொன்னா கேளேன்"

"அது ஆரம்பிக்கட்டும் , அப்போ பாத்துக்கலாம் மா!"

"அப்புறம் கறுத்துப் போய்ட்டா , ஓருத்தவனும் கட்ட வர மாட்டான்.ஏங்க நீங்களாச்சும் சொல்ல கூடாதா? இவள் மத்தியானம் காலேஜ்லேந்து வரும் போது ஏதோ ஒட்டடை குச்சிக்கு சுடிதார் போட்ட மாரி இருக்கு.சரியாவும் சாப்ட மாட்டரா!"

"அம்மா .. ! ஆரம்பிச்சிட்டியா ! ..மே மாசத்துலேந்து  பஸ் ல போறேன் .. ஒகே வா ?"

"ம்ம்ம்ம்...."

"சரி ... என்ன டிபன் ? காலேஜ்க்கு நேரம் ஆச்சு மா...! "

"உப்புமா தான் செஞ்சேன் ! நீங்களும் வாங்க புள்ளையோட சேந்து உட்காந்து சாப்டுங்க ! "

"யாருப்பா இந்த உப்புமா வ கண்டுப்பிடிச்சா ? "

"கண்டிப்பா உங்க அம்மா வோட பூர்வீகமா தான் இருக்கும்"

"ஆமாமா .... சொல்லிக்கிட்டாங்க .... ! பேசாம ரெண்டு பேரும் சாப்டுங்க !"

"அம்மா .. ! நான் கிளம்புறேன் ; அப்பா .. வரும் போது வெஜ்.  பப்ஸ் வாங்கிட்டு வாங்க!"

"சரி பத்திரமா போயிட்டு வா .." சமையல் அறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது"

அது என்னமோ தெரிய‌ல , காலேஜ்கு சைக்கிள் ல போறது தான் பிடிக்குது.அது அப்பாவுக்கும் தெரியும்.அத‌னால தான் அப்பா எதுவுமே சொல்லலே.பிடிச்சதுக்கு முக்கியமான காரணம் இந்த ரோடு தான்.நானும் பஸ் ல  ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணி பாத்தேன் .சரியான போர்.கச கசன்னு இருக்கும் , மெதுவா ஊர்ந்து போகும் வேற.அப்பா வண்டிலையும் போய் பாத்தாச்சு,அப்பா சீக்கிரமே கிளம்பிடுவாங்க.நான் மட்டும் தனியா காலேஜ் ல உட்காந்திருக்கனும்.எனக்கு சைக்கிள் தான் சரி.இப்டி எனக்கு நானே பேசிக்கிட்டு போனேன்,மெயின் ரோடு வந்திடுச்சு.
இவ்வுளவு அமைதியா இருந்த சாலை திடீர்னு கூப்பாடு போட ஆரம்பிச்சிடுச்சு.திருவாரூர் , வேளாங்கண்ணி , பட்டுக்கோட்டை ரூட் பஸ்லாம் தஞ்சாவூர்க்கு நுழையற‌ இடம்.வேகத்த குறைக்காம வருவங்க,எனக்கு கொஞம் பயமா தான் இருக்கும்.ஏன் இப்டி வராங்களோ... ? ஸ்பீட் ப்ரேக்கரையும் மதிக்காம வரத பாக்கும் போது கோவமா வரும்.அதுவும் ஹாரன் சத்தம் காதையே பிச்சிடும்.தொம்பங்குடிசையிலேந்து ரயிலடி வரைக்கும் பஸ் கூடவே போக வேண்டியதா இருக்கும்.ரோடு குண்டு குழியுமா இருக்கும்.இந்த ரோட பல முறை சரி செஞ்சும் திரும்பி அதே நிலைமை தான்.எவ்வளவு  fair & lovely போட்டும் வெள்ளையாகாத முகம் மாதிரி தான் இதுவும்.

இந்த வண்டிக்கார தெருவோட speciality ஒன்னு இருக்கு.இந்த மெயின் ரோடுக்கு நிறையா சந்து ரோடு சேரும்.கடையும் நிறையா.ரோடும் சின்னது.மக்கள் கூட்டம் எப்போதும் அதிகம்.அதுனால கன்னாபின்னானு க்ராஸ் பண்ணுவாங்க..
என் வண்டிக்கு முன்னாடி எத்தனை பேரு குறுக்க  போனாங்கனு எண்றது தான் என் வேலை.இன்னைக்கு கம்மி , 8 பேரு தான்.

ரயிலடி வந்தாச்சு , தூங்கி எழுந்து , லக்கேஜ்யோட பஸ்டாப் தேடி நிறைய புது முகங்கள்.வரவங்களுக்காக காத்திருக்கும் சொந்தகாரங்க.ரயில பிடிக்க வழக்கம் போல் ஓடும்  சில பேர்.இந்த கூட்டத்துல ஊருக்க புதுசா வரவங்கள‌ சுலபமா கண்டுப்பிடிச்சுருவேன்.ரெயிலடி வழியா காலேஜ் போறது சுத்து ; இருந்தாலும் அப்டி போனா மேம்பாலத்தை ஏறி எறங்கலாம்;பெரியக்கோயிலப் பாக்கலாம்.இந்த 2 விஷயத்துக்காக எப்போதும் இந்த வழியா போறது.அதுவும் மேம்பாலத்திலிருந்து பெரியக்கோயிலப் பாக்கும் போது பிரமிப்பு கொஞ்ச‌ம் அதிகமாவே இருக்கும்.
ஆனா மேம்பாலாம் ஏறும் போது தான் மூச்சு வாங்கும்.இனிமே இந்த வழியா வரக்கூடாதுனு தோனும்.ஆனா இறக்கத்துல போகும் போது அந்த எண்ணமெல்லாம் காத்தோட் போயிடும்.அப்டி இறங்கும் போது சின்னப்புள்ளைல சருக்கு மரத்துல இறங்குற மாறியே இருக்கும்.மேம்பாலதுக்கு கீழ ரயில்வே லைன்;இன்னைக்கு ரயில் போகுது ; ஒரு அப்பா பிள்ளைக்கு
ரயில் காட்டுறாரு , அந்த குழந்தை அழகா டாட்டா காட்டுது;அதை பாக்கும் போது நானும் சிரிக்கிறேன் என்னை அறியாமலே.அப்டியே ப்ரகத்தீஸ்வரர்க்கு ஒரு வணக்கம் போட்டுட்டு , கொஞ்சம் ப்ரேக்கையும் போட்டு ரோட்ட க்ராஸ் பண்ணேன்.

ஸ்டேடியம் தாண்டி முதல் லப்ட் எடுத்தா காலேஜ் ரோடு .மேம்பாலாம் -  ஸ்டேடியம் ரோட்ல‌ அநாதை இல்லம் , ரெட் கிராஸ் , காதுக கேளாதோர் பள்ளி , கண் தெரியாதோர் பள்ளி, ஒரு அரசு பள்ளியும் இருக்கும் .இது எல்லாம் ஏன் ஒரே இடத்தச் சுத்தி இருக்குனு அக்டிகடி  யோசிப்பேன்.அநாதை இல்லம் கடக்கும் போது வழக்கம் போல சைக்கிளை ஏறி மிதிச்சு எட்டிப் பாத்தேன் ஒரு சோகமான அமைதி  இன்னைக்கும் இருந்துச்சு. ஸ்டேடியம் கிட்ட ப்ஸ் ஸடாப் , ஸ்கூல் பிள்ளைங்க கூட்டம் நிறையா இருக்கும் .அதுவும் பிள்ளைங்க "அக்கா  அக்கா இருங்கன்னு" சொல்லி ரோட்டக் கிராஸ் பண்ணுங்க .தினமும் அந்த பிள்ளைங்க பஸ் லேந்து இறக்கி விடறதுக்குக் கண்டக்டர்  பட்ற பாடு ...பாவுமா இருக்கும் .ஒரே சத்தமா இருக்கும் ; இருந்தாலும் அந்தச் சத்தம் நல்லாவே இருக்கும் .இப்போ ஸ்கூல் லீவ் ,  அந்த இடமே வெறிச்சோடியிருந்தத்து. 

காலேஜ் ரோடு வந்துடுச்சு.சில பேரு நடந்தும் , சில பேரு ஸ்கூட்டிலயும் வருவாங்க .என்ன மாதிரி சைக்கிள்ல‌ வந்த என் ப்ரண்ட்ஸ் கூட சேந்துக்கிட்டேன் .வெளிப் போக்குவரத்து அதிகமில்லாத சாலை,கொஞ்சம் குண்டும் குழியுமாயிருந்தாலும் ;இது எங்க ரோடுன்னு உரிமை  கொண்டாடலாம்.ஆமாம் சாலை பூராவும் அதிகமாப் போறது எங்க காலேஜ் பொண்ணுங்க தான் .ஏதோ அரட்டை அடிச்சிட்டு காலேஜ்க்குள்ள நுழைஞ்சேன் .

எனக்காக அது வரை துணை வந்த சாலை , மீண்டும் என் வரவுக்காக வாசலிலே காத்துக் கொண்டிருந்தது.!